என் மலர்tooltip icon

    அரியலூர்

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள அனிதா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, போட்டி யில் வெற்றிப் பெற்ற வீரர்கள் 1,800 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றி தழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகை யில், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு உரிய முறையில் நிறைவேற்றித்தரும் என்று அவர் பேசினார்.

    மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டப் மன்ற உறுப்பினர் சின்னப்பா, கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மை மருத்துவர் முத்து கிருஷ்ணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, அரியலூர் நகர துணை காவல் கண்கா ணிப்பாளர் சங்கர்கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருமானூரில் சி.பி.எம். பேரவை கூட்டம் நடைபெற்றது
    • கட்சி உறுப்பினர்களுக்கு எம்.எல்.ஏ. மாரிமுத்து அடையாள அட்டை வழங்கினார்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் தனியார் மண்டபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ., மாரிமுத்து கொடியேற்றி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன் பின்னர் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், ராமநாதன், தண்டபாணி, கனகராஜ், ஜீவா, மருதமுத்து உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • இளம்பெண் மாயமானதால் தந்தை போலீசில் புகார் செய்தார்
    • புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிகாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவர் குடும்பத்துடன் அயன்ஆத்தூரில் உள்ள மாமனார் வீட்டில் 7 வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேசின் மூத்த மகள் மகள் சரண்யா (18) ஆனந்தாவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று சரண்யா வீட்டில் இருந்துள்ளார். தந்தை ரமேஷ் மளிகை கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது சரண்யாவை காணவில்லை. பின்னர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் சரண்யா கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்.

    • மகன் கண் முன்னே தாய் பலியானார்
    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் தா.பழூர் வானியன்கேணி பகுதியில் வசித்து வருபவர் கலியமூர்த்தி மனைவி தனலட்சுமி(வயது 55). இவர் தனது மகன் கலைச்செல்வனுடன் மயிலாடுதுறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கோடாலி கருப்பூர் கிராமம் ஆயிபாளையம் ரேஷன் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் நிலை தடுமாறிய இருவரும் சாலையில் விழுந்துள்ளனர். சம்பவத்தில் தலையில் காயம் ஏற்பட்ட தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகன் கலைச்செல்வன் தன் கண் முன்னாடியே தனது தாய் இறந்த அதிர்ச்சியில் மயக்க நிலையில் இருந்துள்ளார். சம்பவம் குறித்து தனலட்சுமியின் கணவர் கலியமூர்த்தி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மேலகுடியிருப்பு பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சரியான நேரத்திலும் தொடர்ந்து தயார் செய்து வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு, அவர் உத்தரவிட்டார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட மேலக்குடியிருப்பு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் விரிவுப்படுத்தப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார். காலை உணவுத் திட்டத்துக்கு தயாரிக்கப்படும் உணவின் தரம், உணவு பொருள்கள் இருப்பு மற்றும் அவற்றின் தரம், சரியான நேரத்திற்கு உணவினை பள்ளிகளுக்கு கொண்டு செல்லுதல் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினையும் சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் பரிசோதித்தார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சரியான நேரத்திலும் தொடர்ந்து தயார் செய்து வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு, அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் துரை, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • சொத்து தகராறில் தாத்தாவை அடித்துக் கொன்ற பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (வயது 86). விவசாயியான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சின்னப்பிள்ளை பெயரில் உள்ள சொத்துகளை பிரித்து தரக்கோரி குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சின்னப்பிள்ளையின் மூத்த மகனான கோவிந்தசாமியின் மகன் இளவரசன்(30), சொத்துகளை பிரித்து தரக்கோரி தாத்தா சின்னப்பிள்ளையிடம் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சின்னப்பிள்ளையிடம் இளவரசன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது சின்னப்பிள்ளையை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இளவரசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார் அங்கு சென்று சின்னப்பிள்ளையின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளவரசனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜெயங்கொண்டத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் வார்டில் அ.தி.மு.க. நகர கழக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை, முன்னாள் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் கலந்தாய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு உறுப்பினர் படிவம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும், பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தொண்டர்களும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று கூறினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், மாநில நிர்வாகி அறிவு, செங்குந்தபுரம் வார்டு கவுன்சிலர்கள் தங்கபாண்டியன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணபட்டது
    • 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில், 68 கிராமங்களுக்கு நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 1,082 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 552 மனுக்கள் விசாரணை செய்து தீர்வு காண அனுப்பப்பட்டுள்ளது. தாசில்தார் கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பசுபதி, வருவாய் ஆய்வாளர்கள் முருகன், கவிதா, வனிதா, விஜயா, வசந்தா, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார், சீனிவாசன், ராஜ்குமார், ராயர், தலைமையிடத்து நிலஅளவை பிரிவு அலுவலர் வெற்றிசெல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஜமாபந்தி நிறைவு பெற்றதை தொடர்ந்து, விவசாயிகள் மாநாடு நடைபெற்றது, ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் நியாய விலைக்கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை தொடங்கபட்டது
    • விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் கூட்டுறவு நியாய விலைக்கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், இது பற்றி அவர் கூறும்போது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 465 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் நகர்ப்பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் வரவேற்பினைப் பொறுத்து கிராமபுறங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, துணைப்பதிவாளர் அறப்பளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் துரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செந்துறையில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாடபட்டது
    • விழாவிற்கு செந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அண்ணா சிலை அருகே ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செந்துறை வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் கட்சி துணை தலைவர் டாக்டர் மணிரத்னம் கலந்து கொண்டு செந்துறை ஒன்றியத்தில் உள்ள 15 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், மாணவர்களை கல்வியே முன்னேற்றம் செய்யும். ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் கிடைக்கும். இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை கொடுத்துள்ளேன். எனது வாழ்நாளில் 60 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று உறுதி ஏற்று உள்ளேன் என்று பேசினார். முடிவில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட கோரி தீர்மானம்
    • உடையார்பாளையம் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்து, தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என கூறினார்.துணை தலைவர் கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பல வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள டி ஏ உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    • ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட மன்றத்திற்கு கலைஞர் பெயர் வைக்க கோரிக்கை
    • ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

    ஜெயங்கொண்டம், ஜூன்.20-

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம், எம்.ஜி.ஆர். கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ரவிஷங்கர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் , துணைத் தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்து பேசினார்.கூட்டத்தில் மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் மாலதி வாசித்தார். மேலும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை முன்வைத்து பேசினார்கள் அதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பணிகள் செய்வதற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் இதுவரை சிறப்பு நிதி ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒதுக்கப்படவில்லை அதை உடனடியாக வழங்க வேண்டும்,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கீழ்பகுதியில் எம்ஜிஆர் கூட்ட அரங்கம் என பெயர் வைத்தது போல் மேல்பகுதியில் உள்ள கூட்ட அரங்கிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் கூட்டரங்கம் என பெயர் சூட்ட வேண்டும் என திமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்கும் வகையில் ஒன்றிய தலைவர் ரவிசங்கர் ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் அனுமதி பெற்று நிறைவேற்றி வைப்பதாக அறிவித்தார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன் நன்றி கூறினார்.

    ×