என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை போனது
    • தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் கருப்பாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் கருப்பாண்டவருக்கு பூஜை செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அந்த கோவில் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை பக்கத்து வயலில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.

    இன்று காலை அந்த பகுதியில் ஆடு மேய்க்க வந்தவர்கள் கோயிலின் கேட் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே ஆண்டிமடம் சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் உண்டியலையும் மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்ற தகவல் கிடைத்தது.இந்த கோவிலிலும் உண்டியலை பெயர்த்து எடுத்து வெளியே கொண்டு வந்து பணத்தை திருடி விட்டு கோவிலின் பின்பகுதியில் அந்த உண்டியலை வீசி உள்ளனர்.

    இங்கு வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை அந்த கோவிலின் பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வார். இதனால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள். ஆகவே உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்திருக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்தும் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது
    • நிகழ்ச்சியை கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிகழாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்க்கல்வி பெறுவதற்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். முகாமிற்கு அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலை வகித்தார். அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் வருவாய்த் துறையின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய் சான்று மற்றும் தேவையான இதரச் சான்றுகள் பெரும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது.

    மேலும் இம்முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் மேற்படிப்பு மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வங்கிகளின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான கல்விக்கடன் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர், ஆசிரியர் கல்விப்பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
    • ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஓலிப் பெருக்கி மற்றும் இதர உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமியிடம் வழங்கினார்.

    அரியலூர்,

    அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர் ஜெயக்குமார் பள்ளிக்கு தேவையான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஓலிப் பெருக்கி மற்றும் இதர உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமியிடம் வழங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், இணைச் செயலர் குணா, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் வேலுச்சாமி நன்றி தெரிவித்தார்.

    • அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அரியலூர்,

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர், அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை பணியாளர்கள் கோரிக்கைகளை ஆண்டு கணக்கில் நிறைவேற்றாமல் இருக்கும், கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்ள கருவி, பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை சாலை பராமரிப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொலைதூரப் பணிகள் மேற்கொள்ள பயணப்படி வழங்க வேண்டும்.

    சாலை பணியாளர்களின் பொது சேமநல கணக்கிலிருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்ச ங்கத்தின் மாவட்ட த்தலைவர் பெ.காமராஜ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். கோட்டச் செயலர் எம்.சிவகுமார், மாநிலத் துணைத் தலைவர் ச.மகேந்திரன், மாநிலச் செயலர்பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் நகர் மன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன
    • கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் நகர்மன்ற அலுவலக கூட்ட மன்றத்தில் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன்தலைமையில், துணை தலைவர் கலியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது, நகராட்சி கமிஷனர் (பொ)தமயந்தி அலுவலக மேலாளர் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் சத்தியன் கண்ணன், ரேவதி,மகாலெட்சுமி, இன்பவள்ளி, முகமது இஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி, ஜெயந்தி ஜீவா, புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர், நகர்மன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • விக்கிரமங்கலம் அருகே காவலாளி தற்கொலை செய்து கொண்டார்
    • காரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(வயது 37). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மழவராயநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த முனியப்பனிடம், அவரது மனைவி தமிழரசி சம்பள பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழரசியை திட்டி தாக்கிவிட்டு விக்கிரமங்கலம் வந்த முனியப்பன், அங்கு விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து முனியப்பனை அவரது நண்பர் வல்லரசு உள்ளிட்டோர் விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்ததாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற தமிழரசி மற்றும் உறவினர்கள், முனியப்பனை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் தமிழரசி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலி டாக்டர் கைது செய்யப்பட்டனர்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பாசிக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் கிளீனிக் வைத்து நடத்தி வருகிறார். இங்கு அவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து பெரம்பலூர் சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் இளவரசன் மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று அந்த கிளீனிக்கிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் இல்லாமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்துறை அருகே பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
    • காரை சோதனையிட்ட போது அதில் சைக்கிள் செயின், கம்பி பாறை மற்றும் ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீஸ் ரஜினி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் நின்றது. காரில் 5 மர்ம நபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த போது அதில் ஒருவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் பல்வேறு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்தது. அவரைத் தொடர்ந்து மற்றவர்களை விசாரிக்க முற்படும்போது 4 பேரும் அந்த பகுதியில் இருந்து ஏரிக்குள் புகுந்து தப்பி ஓடினர். துரிதமாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கூடுதல் போலீசாரை வரவழைத்து ஏரியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டையில் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன், பெரம்பலூர் மாவட்டம் பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அதனை தொடர்ந்து காரை சோதனையிட்ட போது அதில் சைக்கிள் செயின், கம்பி பாறை மற்றும் ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆனந்தவாடி டாஸ்மாக் கடையை கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் ரூ.3.88 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    செந்துறை,

    தமிழக அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகள் அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி இலங்கைசேரி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இலங்கைசேரி கிராம சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தும், அதனைத்தொடர்ந்து கீழமாளிகை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கீழமாளிகை அங்கன்வாடி கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.

    மேலும் அங்கன்வாடிக்கு வருகைதந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியில், மத்துமடக்கி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் வீராக்கன் முதல் பொன்பரப்பி வரை சாலை அமைக்கும் பணியினையும், அதனைத் தொடர்ந்து கழுமங்கலம் கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.6 லட்சம் மதிப்பீட்டில் கழுமங்கலம் சாலை அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.

    அதேபோல் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான பொருட்களைக் கொண்டு முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் செந்துறை தாசில்தார் பாக்கியம் விக்டோரியா மற்றும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் அரசு அலுவலகங்கள் கலந்துகொண்டனர்.

    • கீரனூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
    • மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்

    கீரனூர்,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் முனைவர் செந்தில் தலைமையேற்று மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கீரனூர் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளம், ஆசிரியர்கள் ரமேஷ், பாலகுமார், கபிரியேல், சோலைமுத்து மற்றும் மரமடக்கி பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும்் மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டனர்.

    • ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி பா.ம.க.வினர் மனு அளித்தனர்
    • இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்

    ஜெயங்கொண்டம்,

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இராணியிடம் மனு அளித்தார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் வினோத் ராஜ்குமார், அருண் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே எம்.சி.சி. நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் மாணவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர்
    • தூய்மை பணியாளர்கள் காய்கறி கழிவு, பழத்தோல், பூக்கழிவுகள் ஆகியவற்றைக்கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதை விளக்கி செய்து காட்டினர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் பரப்ரஹ்மம் பவுண்டேசன் சார்பில் செங்குந்தபுரம் எம்.சி.சி. நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகராட்சி மேலாளர் அன்புசெல்வி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் ரமேஷ், மணிகண்டன், உமாதேவி, கலையரசி, ரேகா, ஜோதி, அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் காய்கறி கழிவு, பழத்தோல், பூக்கழிவுகள், முட்டை ஓடு, காய்ந்த ஓடுகள் ஆகியவற்றைக்கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதை விளக்கி செய்து காட்டினர்.

    மேலும் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிக்கலாம் என்றும், மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை, சுகாதார கழிவுகள் போன்றவற்றை வீட்டிலேயே பிரித்து வைத்து தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்றனர். இந்நிகழ்வில் பரப்ரஹ்மம் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முத்துக்குமரன், பள்ளி முதல்வர் தனலட்சுமி, துணை முதல்வர் தாரணி, நர்சிங் கல்லூரி ஆசிரியர் பாரதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக களப்பணி உதவியாளர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் குணா நன்றி கூறினார்.

    ×