என் மலர்
உள்ளூர் செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் முகாம்
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது
- நிகழ்ச்சியை கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிகழாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்க்கல்வி பெறுவதற்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார். முகாமிற்கு அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலை வகித்தார். அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் வருவாய்த் துறையின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், முதல் வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிட சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய் சான்று மற்றும் தேவையான இதரச் சான்றுகள் பெரும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் மேற்படிப்பு மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வங்கிகளின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான கல்விக்கடன் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர், ஆசிரியர் கல்விப்பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






