என் மலர்tooltip icon

    அரியலூர்

    • இணைய மோசடி மூலம் இழந்த ரூ.3 லட்சத்தை அரியலூர் காவல் துறையினர் மீட்டு உரியவரிடம் மீண்டும் ஒப்படைத்தனர்
    • காவல் துறையினர் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூரைச் சேர்ந்தவர் சூரியகலா (வயது 34). இவரது கணவர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது தனது மகளுடன் அம்மன் சன்னதி வசித்து வரும் இவர், அஞ்சல் துறையில் உள்ள செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்துவதற்காக ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை எண்ணை தேடியுள்ளார். அப்போது ஒருவர், சூரியகலா கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலமாக லிங்க் ஒன்றை அனுப்பி, அதன் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.பின்னர் அவர், சூரியகலா பதிவிட்ட வங்கி பயனர் ஐ.டி. பாஸ்வேர்டு எண்ணை தெரிந்துக் கொண்டு சூரியகலா கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை அபகரித்துக்கொண்டார்.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதனை உணர்ந்த சூரியகலா அரியலூர் இணைய குற்ற காவல் நிலையத்தில் கடந்த 3.6.2023 அன்று புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, இணைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்) ஆகியோர் கொண்ட போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பணத்தை அபகரித்தவரின் வங்கி கணக்கை உடனே முடக்கம் செய்து, மனுதாரர் இழந்த ரூ.3 லட்சத்தை திரும்ப பெற்று, சம்மந்தப்பட்டவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், சூரியகலாவை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வரவழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, அவரிடம் ரூ.3 லட்சம் பணத்தை ஒப்படைத்தார்.

    • ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு விவசாயி திடீர் தீக்குளிக்க முயற்சி செய்தார்
    • தகவல் அறிந்து வந்த போலீசார் சட்டரீதியாக அவரது பிரச்சினையை அணுக அறிவுரை வழங்கினர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 60). தென்னூர் கிராமத்தில் அவருக்கு சொந்தமான பூர்வீகமான இடத்தில் வீடு கட்டி அருகில் உள்ள வயல்வெளிகளை பராமரித்துக் கொண்டு வருகிறார். அவரது மூதாதையர்கள் வழியில் வந்த அந்த சொத்தை கடந்த 1980-ம் ஆண்டு தனது மகனுக்கு அவர் தான செட்டில்மெண்ட் அளித்துள்ளார். இந்த இடம் தொடர்பாக அவர்களது உறவினர்களான குஞ்சிதபாதம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 7-ந்தேதி கந்தவேல் அவரது மகனுக்கு அளித்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு ஆட்சேபனை இருந்தால் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஞ்சிதபாதம் போலி ஆவணங்கள் மூலம் அவரது மகனுக்கு தான செட்டில்மெண்ட் அளித்து அதனை ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கந்தவேல் பிரச்சனைக்குரிய சொத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் எப்படி பத்திர பதிவு செய்து கொடுத்தீர்கள் என்று சார்பதிவாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படாததால் மன உளைச்சல் அடைந்த கந்தவேல் பெட்ரோல் வாங்கி வந்து சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீதும் அவர் மனைவி மீதும் தண்ணீர் ஊற்றி அவர்களை காப்பாற்றினர். தகவல் அறிந்து வந்த போலீசார் சட்டரீதியாக அவரது பிரச்சினையை அணுக அறிவுரை வழங்கினர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் அமைச்சரை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்
    • இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    செந்துறை,

    அரியலூரில் அரசு சிமெண்ட் ஆலை, சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக, கடந்த 1982ம் ஆண்டு ஆனந்தவாடி என்ற கிராமத்தில் 161 விவசாயிகளிடம் 400 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு 2300 ரூபாய் கொடுக்கப்பட்டது. அப்போது அந்த நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு ஆலையில் வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    ஆனால் வேலை வழங்காமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி சுரங்கங்கள் வெட்ட முயற்சி செய்தனர். அதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அப்போதைய தொழில்துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில் 50 பேருக்கு தினக்கூலி வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மீதமுள்ள 70 பேருக்கு வேலை வழங்காத காரணத்தினாலும் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த வாரம் மேலும் ஒரு சுரங்கம் அமைக்க நடைபெற இருந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த விடாமல் ஆனந்தவாடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அரசு சிமெண்ட் ஆலை ஆய்வுப் பணிக்காக வந்தார். இதனை அறிந்த ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் ஆலை வாயிலில் காலையிலேயே குவிந்தனர். இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு அமைச்சர் வெளியே வந்தார்.

    அப்போது செந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ் தலைமையில் அமைச்சர் காரை நிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கூறினர். இதனைக் கண்ட அமைச்சர் ராஜா காரில் இருந்து இறங்கி வந்து முற்றுகையிட்ட விவசாயிகளிடம் பேசினார். அப்போது நிலம் கொடுத்தவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை நிர்வாகத்தில் பேசி உள்ளேன். ஆகையால் விரைவில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    • தமிழக கவர்னரை பதவி நீக்கம் செய்யக்கோரி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
    • கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அரியலூர்,

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில், மதிமுக மாவட்டச் செயலர் க.ராமநாதன், மாநில விவசாய அணிச் செயலர் வாரணவாசி கி.ராஜேந்திரன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணைச் செயலர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை க.சொ.க.கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்டச் செயலர் மு.கோபால், ஏஐடியுசி மாவட்டச் செயலர் தண்டபாணி, வி.சி.க தொகுதி செயலர் மருதவாணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கையெழுத்திட்டனர். கையெழுத்து பெற்றப்பட்ட இந்த மனு, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    • சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 4-ம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், முதலில் விக்னேஸ்வர பூஜையுடன் கடம் வைத்து யாகம் நடைபெற்றது. பின்னர் சவுந்தரநாயகி உடனுறை பசுபதீஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

    அதுபோல் கோவிலில் உள்ள பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும், எழுந்தருளிய தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர்-சிவகாமி அம்பாளுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    வருடாபிஷேகத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதற்காக கிராமத்தினர் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின்னர் வைதீக முறைப்படி சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அம்பாளுக்கு மாங்கல்யதாரணம் செய்யப்பட்டபோது பக்தர்கள் பக்தி சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலையில் சுவாமி, அம்பாள், விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான், சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜ பெருமான் ஆகிய உற்சவ மூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கயிலை வாத்தியம் முழங்க சிறப்பு வீதி உலா வந்தனர். வீடுகள்தோறும் பக்தர்கள் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை செய்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற வீதி உலா காட்சி மீண்டும் கோவிலில் விடையாற்றி வைபவத்துடன் நிறைவடைந்தது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    • அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • தெருநாய்கள் இரவு நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் பூக்கார மாரியம்மன் மற்றும் கீரைக்கார தெருவில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இரவு நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கயர்லாபாத் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற ஜெயராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆறுமுகம்(வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டேங்கர் லாரி வெடித்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் மொத்தமாக சிமெண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இங்கு ஏராளமான டேங்கர் லாரிகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று ஒரு டேங்கர் லாரி சிமெண்டு லோடு ஏற்ற வந்துள்ளது. சிமெண்டு ஏற்றுவதற்கு முன்பு கடலூர் மாவட்டம் ஊத்தாங்கால் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ராஜா என்பவர் டேங்கரை காற்றை நிரப்பி சுத்தம் செய்துள்ளார். அப்போது அதிகப்படியான காற்று நிரப்பப்பட்ட நிலையில் திடீரென லாரியில் பொருத்தப்பட்ட டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ராஜா படுகாயம் அடைந்தார். இதனைக்கண்ட ஆலை நிர்வாகத்தினர் அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • ஆனி திருமஞ்சன சிறப்பு வீதியுலா நடைபெற்றது.
    • விழாவில் சிவனடியார்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, புத்தாடை உடுத்தி ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக கயிலாய வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது. பின்னர் வீதியுலா மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த சிறப்பு வீதியுலா சிவ தல யாத்திரை குழு திருக்கூட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிவனடியார்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.



    • பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
    • சின்னதுரையின் மனைவி பாமா தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் சின்னதுரை (வயது 40). அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் வேலை செய்து வந்த நிலையில் நாகப்பட்டினம் பணிமனைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் பணிமனையில் பணிகள் சேர்ந்த சின்னதுரை கடந்த மே 6-ம் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். சின்னதுரையின் மனைவி பாமா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்கு பதிவு செய்து சின்னதுரையின் பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து சின்னதுரை இறந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

    • ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கண்ணன், சின்னப்பா ஆகியோர் மாணவர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

    ஜெயங்கொண்டம்,

    தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கான தேர்வு போட்டியும், சாம்பியன்ஷிப் போட்டியும் செங்கல்பட்டு மாவட்டம் மேல கோட்டையூர் தமிழக அரசு விளையாட்டுக் கல்லூரியில் உள்ள இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் மாணவர்கள், கிக் பாக்ஸிங் தலைவர் சென்சாய் ரங்கநாதன், மாவட்ட செயலாளர் சத்யராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் ரிஷிகா, மகாலட்சுமி, ரித்திகா, அஷ்யா, முகுந்தன், ராஜ்கிரன், ரேவன் பெட்ரிக் ஆகியோர் ஆகஸ்ட் மாதம் ராஞ்சியில் நடைபெறும் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கண்ணன், சின்னப்பா ஆகியோர் மாணவர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி ஊக்கப்படுத்தினர். மேலும் அகில இந்திய போட்டிக்கு செல்லும் போக்குவரத்து செலவை அமைச்சர் வழங்குவதாக கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.இந்நிகழ்வில் ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரங்கமுருகன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அவிலாதெரசாள், ஆசிரியர்கள் கிருஷ்ண லீலா, பாலகுமாரன், அமைச்சூர் கிக் பாக்சிங் மாவட்டச் செயலாளர் சத்யராஜ், துணைத்தலைவர் நிர்மலா மேரி, தேசிய நடுவர் ரவிகுமார், ஆண்டிமடம் பயிற்சியாளர்கள் பிரிதிவிராஜ், செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உடையார்பாளையத்தில் பைக் மோதி சிறுவன் படுகாயம் அடைந்தான்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ராஜவீதி இலியாஸ் மகன் பார்கன்(வயது 8). இவர் இவரது தாய் ரிகானாவுடன் நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ராஜ வீதியில் வேனில் இருந்து இறங்கி சாலை கடந்து சென்றனர். அப்போது அதே வீதியில் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன்(25)ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக பார்கன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பார்கன் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் எஸ் ஐ சுமதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×