என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு விவசாயி திடீர் தீக்குளிக்க முயற்சி
- ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு விவசாயி திடீர் தீக்குளிக்க முயற்சி செய்தார்
- தகவல் அறிந்து வந்த போலீசார் சட்டரீதியாக அவரது பிரச்சினையை அணுக அறிவுரை வழங்கினர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தென்னூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 60). தென்னூர் கிராமத்தில் அவருக்கு சொந்தமான பூர்வீகமான இடத்தில் வீடு கட்டி அருகில் உள்ள வயல்வெளிகளை பராமரித்துக் கொண்டு வருகிறார். அவரது மூதாதையர்கள் வழியில் வந்த அந்த சொத்தை கடந்த 1980-ம் ஆண்டு தனது மகனுக்கு அவர் தான செட்டில்மெண்ட் அளித்துள்ளார். இந்த இடம் தொடர்பாக அவர்களது உறவினர்களான குஞ்சிதபாதம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி கந்தவேல் அவரது மகனுக்கு அளித்த தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்கு ஆட்சேபனை இருந்தால் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஞ்சிதபாதம் போலி ஆவணங்கள் மூலம் அவரது மகனுக்கு தான செட்டில்மெண்ட் அளித்து அதனை ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தவேல் பிரச்சனைக்குரிய சொத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் எப்படி பத்திர பதிவு செய்து கொடுத்தீர்கள் என்று சார்பதிவாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படாததால் மன உளைச்சல் அடைந்த கந்தவேல் பெட்ரோல் வாங்கி வந்து சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவர் மீதும் அவர் மனைவி மீதும் தண்ணீர் ஊற்றி அவர்களை காப்பாற்றினர். தகவல் அறிந்து வந்த போலீசார் சட்டரீதியாக அவரது பிரச்சினையை அணுக அறிவுரை வழங்கினர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






