என் மலர்
அரியலூர்
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயார் பெரியம்மா என்பவருடன் வந்து வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் வாக்கு எந்திரங்கள் பழுதாகி உள்ளது. சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் அதிகாரிகள் இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இன்று ஒரு நாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #thirumavalavan
அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அனைத்து சிமெண்டு ஆலை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசியதாவது:-
பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு சக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் சென்று பிரசாரம் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இயங்கும் லாரிகள் ஒவ்வொன்றின் வேகத்தை கண்டறிய கருவி பொருத்தபட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைக்க வேண்டும். தொழிற்சாலைகளில் லாரிகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் தான் பணி கொடுக்க வேண்டும்.
விபத்துகளை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். சாலை விபத்தில் அடிபட்ட நபர்கள் மற்றும் இறந்தவர்களின் உடலை 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக எடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். விபத்துகளை தடுக்க சிமெண்டு ஆலை, நெடுஞ்சாலை துறையினர், போலீசார் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை நேற்று அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கணினி மூலம் குழுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேப்பர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. பேலட் பேப்பரில் 13 வேட்பாளர்கள் மற்றும் 1 நோட்டா என மொத்தம் 14 பெயர்கள் உள்ளது. இந்த பணிகளை பெல் நிறுவன பொறியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும், அவர்கள் ஆய்வு செய்து முடித்த பின்னர் மீண்டும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட பாதுகாப்பு அறையில் அவை வைக்கப்படும். பின்னர், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17-ம் தேதி வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படும் என்றார்.
இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாலாஜி, தாசில்தார் குமரய்யா மற்றும் மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செந்துறை:
செந்துறை-உடையார் பாளையம் சாலையில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் முன்பு செந்துறை சித்தேரி கரையில் வசித்தனர். ஏரியில் அதிக அளவில் நீர் வந்ததையடுத்து உடையார் பாளையம் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் பட்டா வழங்கவில்லை, இதனால் மின்சாரம் பெற முடியாமல் உள்ளனர். அரசின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கிடைத்தும் அதனை பயன்படுத்த மின் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் மின் வசதி கேட்டு செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையுடன் பெண்கள், சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் செந்துறை இன்ஸ் பெக்டர் ராஜ்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் செந்துறை -உடையார்பாளையம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரம் தனி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 1,445 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 290 வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றவுள்ள 1,409 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது. இதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பினை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி பார்வையிட்டார்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி, தாசில்தார் குமரய்யா, மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும், மற்றும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து கண்காணிக்கவும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நேரடியாக புகார் தெரிவிக்க ஏதுவாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலியை தங்களது ஸ்மார்ட் போனில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம். இந்த புகாரை அளிக்கும் பொதுமக்கள் குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் ரகசியமாக வைக்கப்படும். புகார் அளிப்பவரின் விவரங்கள் ஏதுமில்லாமலும், புகார் அளிக்கலாம்.
இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக புகார்களை அனுப்ப வசதியாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் வட்டத்தில் உள்ள மார்டன் கலை அறிவியல் கல்லூரியில் ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்க சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதையொட்டி கல்லூரி முகப்பில் ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலியின் ‘லோகோ’வை வரைந்து அதன் முன்பு மாணவிகள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் கோமதி, ‘சி-விஜில்’ என்ற செல்போன் செயலி குறித்து விரிவாக எடுத்துக்கூறி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சரகத் துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ் ‘சி-விஜில்’ செயலியின் செயல்பாடுகளை பயன்படுத்துவது எப்படி என்று விளக்கினார். பின்னர் அந்த செயலியை பயன்படுத்துவோம் என்று 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முகாமில் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், கல்லூரியின் துணை முதல்வர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையம் வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2019 முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, அரியலூர் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து சிறப்பு அஞ்சல் அட்டைகளை பொதுமக்களுக்கு வீட்டுக்கே சென்று தபால் பணியாளர்கள் மூலம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தொடங்கி வைத்தார்.
மேலும், பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி தேர்தல் ஆணையம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மேற்கொண்டு வருகிறது. இதில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் வாக்களிப்பது குறித்து கிராமங்களில் தேர்தல் சம்மந்தமான குறும்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 18 வயது நிரம்பிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் மூலம் நூதன பிரசுரங்களும் செய்யப்படுகின்றன. தற்போது, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி சிறப்பு அஞ்சல் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து, விவரம் இடம் பெற்றுள்ளது. இந்த அஞ்சல் அட்டைகளை அஞ்சல் துறையின் தபால் பணியாளர்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கும் வழங்க உள்ளனர். குறிப்பாக மக்களை அவர்களது வசிக்கும் இடங்களுக்கு தேடிச்சென்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு சிறப்பு அஞ்சல் அட்டைகளை அரியலூர் நகராட்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் ஒவ்வொருவரும் தேர்தலின் மாண்பை அறிந்து, 100 சதவீதம் பங்கேற்று வாக்களிக்க முன்வரவேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கதிரவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, துணை அஞ்சலக அலுவலர் டோம்னிக்ராஜ், தபால்காரர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






