என் மலர்tooltip icon

    அரியலூர்

    குன்னம் பகுதியில் விளைந்துள்ள பரங்கிக்காய்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    குன்னம்:

    குன்னம் மற்றும் மருவத்தூர் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கத்தரி, வெண்டை, பாகல், புடலை, பூசணி, பரங்கிக்காய் உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். சித்தளி, பேரளி, கவுள்பாளையம், குன்னம், வரகூர், அருமடல், பில்வாடி, சிறுகுடல், செங்குணம் உள்ளிட்ட பகுதியில் வருடா வருடம் பல ஏக்கர் நிலப்பரப்பளவில் பரங்கிக்காய் பயிர் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குன்னம், மருவத்தூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பரங்கிக்காய்கள் சேகரிக்கப்பட்டு விற்பனைக்காக திருச்சி, நாகர்கோவில், சென்னை, திருநெல்வேலி, மதுரை ஆகிய ஊர்களுக்கு லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் மழை பொய்த்து போனதால் பரங்கிக்காய்களின் வளர்ச்சி குறைந்து சிறுத்து காணப்பட்டதால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.2 முதல் 4 வரையே மொத்த விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பரங்கிக்காய்களை வாங்க வியாபாரிகள் பலர் முன்வரவில்லை.

    இதுகுறித்து பேரளியை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறியதாவது:-

    குன்னம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பரங்கிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு பரங்கிக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம். பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். நோய் எதிர்ப்பு சக்திமிக்கதாக உள்ளதால், பரங்கிக்காயை மக்கள் விரும்பி உண்கின்றனர். 60 நாள் பயிரான பரங்கிக்காயை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். ஏக்கருக்கு சாகுபடி செலவு ரூ.15 ஆயிரம் ஆகும்.

    இந்த ஆண்டு மழை பொய்த்து போனதால் பரங்கிக்காயின் அளவு பெரிய அளவில் இல்லாமல் சிறிய அளவிலேயே உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து தற்போது ஒரு கிலோ ரூ.3-க்கு விற்கப்படுகிறது. அப்படி விற்றாலும் பரங்கிக்காய்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. மேலும் பராமரிப்பு செய்த செலவுக்கு கூட காய் விற்கவில்லை. சரியான வளர்ச்சி இல்லாமல் மிகவும் சிறிய அளவில் உள்ள பரங்கிக்காய்களை மாட்டிற்கு உணவாகக்கொடுக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அரியலூர் அருகே இன்று ஜீப் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் திருச்சி டி.எஸ்.பி., காயம் அடைந்தார்.

    அரியலூர்:

    தமிழகம் முழுவதும் நாளை காவலர் பணிக்கான தேர்வு நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்வு கண்காணிப்பு பணியில் திருச்சி டி.எஸ்.பி.குணசேகர் ஈடுபடுகிறார். இதற்காக அவர் இன்று திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு போலீஸ் ஜீப்பில் சென்றார்.

    அரியலூர் சடைக்கன் பட்டி கிராமம் அருகே செல்லும் போது முதியவர் ஒருவர் சைக்கிளில் குறுக்கே சென்றார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் சிவா,ஜீப்பை ஒரு பக்கமாக திருப்பினார். இதில் ஜீப் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிரைவர் சிவா மற்றும் டி.எஸ்.பி. குணசேகர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அரியலூர் எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி. இளஞ்செழியன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியதுடன்,மருத்துவ சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    செந்துறை அருகே உள்ள நல்லப்பா கோவில் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான குத்துவிளக்குகள் மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற நல்லப்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் முதல் திங்கட்கிழமை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த திங்கட்கிழமை இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. 

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்தனர். அதன் பின்னர் கோவிலுக்குள் இருந்த செம்பு குத்துவிளக்கு 16 மற்றும் அதன் அருகில் உள்ள மற்றொரு நல்லப்பா கோவிலில் இருந்த 23 செம்பு குத்து விளக்குகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த கோவிலுக்கு விசாரணை மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து அரியலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முடிந்த பின்னர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவது அப்பகுதி பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்தி கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் மருதூர் பெரியசாமி கோவில், ராயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் செந்துறையில் உரக்கடை ஒன்றிலும் நேற்று ஒரே நாள் நள்ளிரவில் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
    அரூர் அருகே மானை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
    அரூர்

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன், வாதாப்பட்டி பிரிவு வனவர் வேடியப்பன், வனக்காப்பாளர்கள் திருப்பதி, வசந்தராஜ், காளியப்பன், வனக்காவலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் அரூர் அருகே வாதாப்பட்டி பிரிவு செல்லம்பட்டி பீட் பொய்யப்பட்டி காப்புக்காடு கரடிதடம் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காப்புக்காட்டில் ஒரு நபரை பார்த்து அவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவர் முத்தானூர் கிராமத்தை சேர்ந்த ஜடையகவுண்டர் மகன் தங்கம் (வயது 37) என்று தெரியவந்தது. அவர் காப்புக்காட்டில் வேட்டை நாயை விட்டு மானை கடிக்க செய்து மானை கொன்று அதனை எடுத்துச் சென்றுள்ளார். அதனை அருகிலுள்ள பாறையின் மீது போட்டு தோலினை உரித்து ஒரு பக்கத்திலும், தலையை வெட்டி மற்றொரு பக்கத்தில் வீசிவிட்டு அதன் உடல் பாகத்தை துண்டுதுண்டாக வெட்டி கறியாக்கியுள்ளார்.

    அந்த கறியை 10 பொட்டலங்களில் கட்டிவைத்துள்ளார். சுமார் 2 கிலோ கறியை பாத்திரத்தில் வைத்து சமைத்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது வனத்துறையினர் வரும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கிருந்து தப்பிக்க நினைத்து ஓடியபோது வனத்துறையினரால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் தங்கத்தை கைது செய்து வனத்துறையினர் அரூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
    உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரியலூர் மாவட்ட புகைப்படக்காரர் மற்றும் வீடியோ கிராப்பர்கள் நலச்சங்கம் சார்பில் உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் போது புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர்களுக்கு ஹெல்மெட் வழங்கி கலெக்டர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் புகைப்படத்தை ஊக்குவிப்பதற்காகவும், உலகெங்கிலும் உள்ள புகைப்பட கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு புகைப்படத்தை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது.

    உலக புகைப்பட தினம் புகைப்பட சகோதரத்துவத்தால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புகைப்பட கலைஞர்கள் தங்களது உள்ளடுகளை பல இணையத்தளங்களில் சமர்ப்பித்து சிறப்புகளை வெளிக் கொண்டு வருகின்றனர்.

    கட்டிடக்கலை, வனவிலங்கு, படைப்பாற்றல், இயற்கை, பயணம், தெரு புகைப்படம் எடுத்தல் போன்ற வகைகளில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தை பதிவு செய்து சமர்ப்பிக்க உலக புகைப்பட அமைப்பு உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களை அழைக்கிறது. அவற்றில் சிறந்த புகைப் படங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர்கள் நலச்சங்கம் சார்பில் 75 புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர் களுக்கு ஊர் காவல் படை மண்டல தளபதி சார்பில் ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    செந்துறையில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதில் வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர்.
    செந்துறை:

    செந்துறை மற்றும் அதனை சுற்றி உஞ்ஜினி, பொன்பரப்பி, சிறுகடம்பூர், குழுமூர், மாத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால் குளங்களில் தண்ணீர் நிறைந்தன. 

    இந்த மழையால் உஞ்ஜினி கிராமத்தில் காலனி தெருவில் வசித்துவரும் கணேசன் என்பவரது வீட்டின் ஒருபகுதி சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீடு இடிந்து வெளிபுறமாக விழுந்ததால் வீட்டின் உள்ளே தூங்கி கொண்டு இருந்த கணேசன் அவரது மனைவி இந்திராகாந்தி இருவரும் தப்பித்தனர். அருகில் உள்ளவர்களின் உதவியுடன் இடிந்த சுவர் அகற்றப்பட்டது.
    கோவில்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    மேலும் ஆண்டிமடம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பச்சைஅம்மன் கோவில் உண்டியலையும் உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கூத்தூர் தொகுப்பு துணை மின்நிலையத்தில் இருந்து செல்கின்ற மின் பாதைகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் நிறுத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் மாவட்ட கூத்தூர் உதவி செயற்பொறியாளர் செல்லப்பாங்கி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கூத்தூர் தொகுப்பு துணை மின்நிலையத்தில் இருந்து செல்கின்ற மின் பாதைகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே கூத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும், அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர், நமங்குணம், புதுவேட்டக்குடி, கோவில்பாளையம், கீழப்பெரம்பலூர், துங்கபுரம், குழுமூர் மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    மங்களமேடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மங்களமேடு:

    மங்களமேடு அருகே உள்ள வடக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அரசமங்களம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதையடுத்து ஊராட்சி சார்பில் வாரத்திற்கு ஒரு முறை டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை பழைய அரசமங்களம் கிராமத்தில் வேப்பூரில் இருந்து லப்பைக்குடிக்காடு செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தினமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வேப்பூர்- லப்பைக்குடிக்காடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள விழுப்பணங்குறிச்சியில் தனியார் உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நல்லநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 10) 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் இடைவேளை நேரத்தில் மாணவர்களுடன் கழிவறைக்கு சென்றான். அப்போது அவன் மேல் கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. உடனே மாணவன் சந்தோஷ்குமார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கிய சந்தோஷ்குமாரை மீட்டனர். இந்த திடீர் விபத்தில் சந்தோஷ் குமார் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சந்தோஷ்குமார் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த விபத்தில் மாணவனின் தலை, கால் மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    மீன்சுருட்டி அருகே சாலை மராமத்து பணியின்போது பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
    மீன்சுருட்டி,:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார் வெட்டு கிராமம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியதால் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

    இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த சாலையில் மராமத்து பணி நடைபெற்றது. பணியாளர்கள் குண்டும், குழியுமான சாலையில் சிமெண்டு கலந்த கலவையை போட்டு கொண்டு வந்த போது கிராம மக்கள் இந்த சாலையை தார் மூலம் தான் மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி லாரியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    கீழப்பழுவூர்:

    சென்னை நங்கநல்லூரை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சசிகுமார்(வயது 27). இவர் கடந்த சில மாதங்களாக சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்து தான் போலீஸ் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர், கிராம மக்கள் சிலரை அணுகி தான் சென்னையில் போலீசாக வேலை பார்த்து வருவதாகவும், தனது அண்ணன் சுங்கத்துறையில் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார். 

    தன்னிடம் பணம் கொடுத்தால் எல்.இ.டி. டி.வி, குளிர்சாதன பெட்டி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பாதி விலையில் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதை உண்மை என்று நம்பிய அப்பகுதியை சேர்ந்த 4 பேர் தனித்தனியாக ரூ.47 ஆயிரம், ரூ.85 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என அவரிடம் கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்ட சசிகுமார் தான் சென்னை சென்ற பிறகு உங்களை தொடர்பு கொண்டு பொருட்களை அனுப்பி வைக்கிறேன் எனக்கூறி அறையை காலி செய்துவிட்டு சென்று விட்டார்.

    அவர் சென்று 4 நாட்களுக்கு மேலாகியும் சசிகுமாரை தொடர்பு கொள்ள முடியாததால் பணத்தை கொடுத்த 4 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் கொடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் சசிகுமாரை கைது செய்தனர். அவரிடம் பணமோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×