என் மலர்
அரியலூர்
- கூலிதொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்
- கீரை உதிர்ந்து வீட்டு தோட்டத்தில் கொட்டிய சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 49). கூலித்தொழிலாளி. இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் சங்கர் (40). இந்நிலையில் மதியழகனின் வீட்டு தோட்டத்தில் இருந்த முருங்கை மரத்தில் இருந்து கீரை உதிர்ந்து சங்கர் வீட்டு தோட்டத்தில் கொட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மதியழகனிடம் சங்கர் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். முருங்கை மரத்தை வெட்டி விடுவதாக மதியழகன் கூறியபோதும், சங்கர் மதியழகனை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மதியழகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மதியழகன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நடந்தன.
- 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்
அரியலூர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரியலூர் மாவட்டம், அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவிசை, நடனம், காட்சிகலை மற்றும் தனிநபர் நடிப்பு என்னும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2023-24-ம் கல்வி ஆண்டின் போட்டிகள் நேற்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டிமடம் கிளை சார்பாக பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பி.எட் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து அவமதிப்பதை கண்டித்து கண்டன போராட்டம், ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டார தலைவர் மோகன் தாஸ் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளரும், வட்டாரத் துணைத் தலைவருமான பவுலின் மேரி, மாவட்ட செயற்குழு வட்டாரத் துணைச் செயலாளர் ஜெயசீலி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நளகீர்த்தி, ராமன், அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக வட்டாரத் துணைச் செயலாளர் செல்வகுமார் வரவேற்றுப் பேசினார். வட்டார செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் வேல்மணி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் அசோகன் கோரிக்கையை விளக்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ஜான்சன் நன்றி கூறினார்.
- வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
- பாலியல் தொந்தரவு வழக்கில்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பெண்ணுக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிம ன்றம் தீர்ப்பளித்தது.
உடையார்பாளையம் அருகேயுள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா(வயது25). கடந்த 2021 ஆம் ஆண்டு இவரை, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழக்கி ல் ஜெயங்கொண்டம் அனை த்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற த்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி இளையராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும், ரூ.5,000 அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி இளையராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ஞர் ம.ராஜா ஆஜராகினார்.
- அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது
- 11 -ந் தேதி நடைபெறுகிறது.
அரியலூர்:
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டின் முதுகலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 11 -ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம் எம்.எஸ்சி., கணிதம் இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் தங்களுடைய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வகுப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், அசல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும்.
மேற்கண்ட பாடங்களில் சேரும் மாணவர்களுக்கு 13-ந் தேதி முதல் முதல் வகுப்புகள் நடைபெறும்
- விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாப்பாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58), விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்கோளாறால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த செல்வராஜ் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்
அரியலூர்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு குறைதீ்ர் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 8 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
- பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- இருகுடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி பெரிய தெருவை சேர்ந்தவர் மாயவன். இவருடைய மனைவி கண்ணகி (வயது 42). அதே தெருவை சேர்ந்தவர் தர்மதுரை. இவருடைய மனைவி ஜோதி (48). இந்தநிலையில் கண்ணகி மகள் அனிதாவை, ஜோதியின் மகன் திருமணம் செய்து கொண்டதால் இருகுடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் கண்ணகியை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோதி கீழே கிடந்த கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆடுகள் திருடும் கந்தர்வகோட்டை கும்பலை போலீசார் கைது செய்தனர்.
- 19 ஆடுகள் மீட்கப்பட்டன
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் சிலர் ஆடுகளை திருடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையத்தை சேர்ந்த ஷேக்ரசூல் (வயது 60), தத்தனூர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (52) ஆகியோர் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையில் ஜெயங்கொண்டம் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த அழகப்பன் (54), முருகேசன் (43), தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த மகேந்திர வர்மன் (41) அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அரியலூருக்கு காரில் வந்து ஆடுகளை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19 ஆடுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- ஆடி கிருத்திகையையொட்டி
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆடி கார்த்திகையையொட்டி வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளி அருள்பாலித்தார்.
- துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
அரியலூர்
அரியலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பிரிவில் பல்வேறு ஊழல்கள் நடப்பதை கண்டித்தும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அளவுக்கு அதிகமான பணிகளை ஒதுக்குவதை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- மன உளைச்சலில் இருந்தவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் தேடி வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தொட்டிக்குளம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் உஷா (வயது 43). இவரது கணவர் அருள். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் அருளுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த அருள் திடீரென மாயமானார். இதுகுறித்து உஷா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருளை வலைவீசி தேடி வருகிறார்கள்.






