என் மலர்tooltip icon

    அரியலூர்

    அாியலூரில் கோர்ட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
    அரியலூர்:

    அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள குடும்பநல கோர்ட்டு, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கோர்ட்டில் தலைமை நிர்வாகியாக வேலை பார்த்து வந்தவர் நெடுஞ்செழியன்(வயது 58). இவரது சொந்த ஊர் கீழ பெரம்பலூர் ஆகும். நேற்று வழக்கம்போல் கோர்ட்டுக்கு வந்து அவர் வேலை பார்த்தார். மாலை 4 மணி அளவில் அவர் தனது அறைக்குள் சென்று, கதவுகளை பூட்டி உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார்.

    இதையடுத்து மற்ற ஊழியர்கள் அறைக்கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் இது பற்றி நீதிபதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஊழியர்கள் அறைக்கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் நெடுஞ்செழியன் பிணமாக தொங்கியதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அங்கு விரைந்து வந்த போலீசார் கோர்ட்டு வாசலில் காவலுக்கு நின்றனர். மேலும் மாவட்ட அமர்வு கோர்ட்டில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த அறைக்குள் சென்று, நெடுஞ்செழியனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நெடுஞ்செழியனின் உடைகளை சோதனை செய்தபோது, அவருடைய சட்டைப்பையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில், கடந்த 2004-ம் ஆண்டு எனக்கு உடல்நிலை முதலில் பாதிக்கப்பட்டது. பின்னர் வாகன விபத்தில் சிக்கி மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறினேன். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்தது. அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தேன். உடல் எடை குறைந்து கொண்டே வருவதால், எனக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்குமோ என்று நினைக்கிறேன். மேலும் வைத்திய செலவு செய்து கொண்டிருந்ததால் எனது குடும்பத்தினருக்கும், எனக்கும் வேதனை தருகிறது. எனது குடும்பத்தினர் என்னை நல்ல நிலையில்தான் பார்த்துக்கொண்டனர். இருப்பினும் மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்தேன், என்று கடிதத்தில் நெடுஞ்செழியன் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து நெடுஞ்செழியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர். அவரது முகம் தெரியாத அளவுக்கு உடல் முழுவதும் வெள்ளை துணியால் மூடப்பட்ட நிலையில் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினார்கள். அப்போது நீதிமன்றத்தில் நெடுஞ்செழியனுடன் வேலை பார்த்த சக ஊழியர்கள், அவரது முகத்தை பார்க்க வேண்டும் என்று கதறி அழுதபடி கூறினர். ஆனால் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து, அவர்களுக்கு முகத்தை காட்டாமல் எடுத்துச்சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கோர்ட்டு கட்டிடம் உள்ள பெருமாள் கோவில் தெரு தினமும் ஏராளமானவர்கள் சென்றுவரும் பகுதி என்பதால், கோர்ட்டு வளாகத்தில் மக்கள் அதிகமாக கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். அதனால் போக்குவரத்து வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டது. கோர்ட்டு கட்டிடத்தில் உள்ள அறையில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூரில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மாவட்டத்தில் புதிதாக 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியிலும், வெளிமாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,644 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 48 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,563 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 343 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,235 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 2 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 379 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    வெவ்வேறு விபத்துகளில் அரசு பஸ் கண்டக்டர்- தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமழபாடி காந்திநகரை சேர்ந்தவர் ஒப்பில்லாமணி(வயது 50). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் சாத்தமங்கலம் கிராமத்தில் இருந்து சொந்த ஊரான திருமழபாடிக்கு வந்தார். அரண்மனைக்குறிச்சியை அடுத்துள்ள தில்லை காளியம்மன் கோவில் அருகே வந்தபோது, சாலையின் ஓரத்தில் கரும்புகள் ஏற்றப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்த டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஒப்பில்லாமணியை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வடுகர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(45). மரத்தாலான பொருட்கள் செய்யும் தச்சு தொழிலாளியான இவர், நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் கல்லாத்தூரில் உள்ள மரப்பட்டறைக்கு சென்றுவிட்டு மீண்டும் வடுகர்பாளையத்துக்கு ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ஜெயங்கொண்டத்தை அடுத்த கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றது. இதனால் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு, பெட்ரோல் விற்பனை நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது சென்னையில் இருந்து அரியலூர் நோக்கி வந்த அரசு பஸ், தட்ணாமூர்த்தி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தட்சிணாமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த தட்சிணாமூர்த்திக்கு மலர்விழி என்ற மனைவியும், ஆகாஷ், தனுஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
    திருமானூர் அருகே சொத்து பிரச்சனையில் தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சன்னாவூர் கிராமத்தை சேர்ந்தவர் வைரம். இவருடைய மனைவி தனம்(வயது 70), மகன் உதயகுமார்(47). வைரம் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதனால் தனம், உதயகுமாருடன் வசித்து வந்தார். உதயகுமார் விவசாயம் செய்து வருகிறார். சொத்து பங்கீடு தொடர்பாக தனத்துக்கும், உதயகுமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி தனம் விஷம் குடித்து இறந்துவிட்டதாக வெங்கனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தனத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தற்கொலை என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் தனத்தின் சாவில் போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்தது.

    இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு தனம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தனத்தை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வாயில் விஷத்தை ஊற்றி, விஷம் குடித்து இறந்து விட்டார் என்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, உதயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
    அரியலூர் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    கல்லக்குடி:

    அரியலூர் மாவட்டம் சாணக்கியாபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால்(வயது 55). விவசாயியான இவர், கல்லக்குடி அருகே கல்லகம் கிராமத்தில் உள்ள அவருடைய வயலுக்கு வந்து விட்டு, மொபட்டில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூரில் இருந்து பாடாலூருக்கு சரக்கு ஏற்ற சென்ற டிப்பர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழந்தார்.

    இது குறித்து கல்லகம் கிராம நிர்வாக அதிகாரி லியோடேனியல் கொடுத்த தகவலின்பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெயபால் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குடவாசல் வட்டம் சர்குணேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த சாலமனின் மகன் ராபினை(40) கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
    அரியலூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் சூரக்குழி மேலத்தெரு மற்றும் கூவத்தூர் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கூவத்தூர் தோப்புத்தெருவில் ஆரோக்கியம்மாள்(வயது 28), சூரக்குழி மேலத்தெருவில் கொளஞ்சி (59) ஆகியோர் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆண்டிமடம் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சாத்தனப்பட்டு கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் மகாலட்சுமி(வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி படிப்பு இரண்டாமாண்டு படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

    இது குறித்து நாகராஜ் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மகாலட்சுமியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் திருமானூரில் வயிற்று வலி காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தியின் மகன் சத்யராஜ்(வயது 26). இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டத்தில் புத்தாண்டையொட்டி அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று மது பிரியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க மைதானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை, பள்ளியில் விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் விளையாடுவது வழக்கம். தற்போது விடுமுறை நாட்களில் இளைஞர்கள், சிறுவர்கள் மைதானத்தில் விளையாடி வருகின்றனர். மேலும் பல்வேறு போட்டிகள் இந்த விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த மைதானத்தை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் நடைபயிற்சி செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டையொட்டி ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான மதுபிரியர்கள் இரவில் அந்த மைதானத்தை மது அருந்தும் கூடம்(பார்) போன்று பயன்படுத்தியுள்ளனர்.

    மேலும் போதையில் உணவு பொட்டல எச்சில் இலைகள், பிளாஸ்டிக் பைகள், பீர் பாட்டில்கள், பிராந்தி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அப்பகுதியில் வீசியுள்ளனர். மைதானத்தில் பாட்டில்கள் உடைந்த நிலையில் கிடக்கின்றன.

    இதனால் மைதானத்தில் நடைபயிற்சி செல்லவோ, விளையாடவோ முடியாத சூழ்நிலை உள்ளது. நேற்று முன்தினம் மைதானத்தில் நடைபயிற்சி சென்றவர் காலில் உடைந்த பாட்டிலின் கண்ணாடி குத்தியதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் சமூக நலன் கருதி மைதானத்தில் கிடந்த உடைந்த பீர் பாட்டில்கள், பிராந்தி பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை அகற்றி தூய்மைப்படுத்தியுள்ளனர்.

    உடையாத பாட்டில்களை சிலர் சேகரித்து, மூட்டையாக கட்டி தூக்கிச்சென்றனர். இந்நிலையில் மைதானத்தை பார் போன்று பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் உயரமாக சுற்றுச்சுவர் அமைப்பதுடன், அதன்மீது கம்பிவேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருமானூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அந்த கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை கோவில் நிர்வாகத்தினர் வந்து பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இது குறித்து திருமானூர் போலீசில் புகார் அளித்தனர். உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரத்துக்கு மேல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமியின் மகன் சுரேஷ்குமார்(வயது 30), கோவிந்தராஜின் மகன் செல்லதுரை. இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கடந்த 26-ந் தேதி இரவு திருமானூரில் இருந்து திருவெங்கனூருக்கு சென்றனர். திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே சென்றபோது எதிரே அரியலூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்லதுரை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 2,33,739 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2,500 மற்றும் பச்சரிசி உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அவர்கள் பொருட்கள் வாங்க வேண்டிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வருகிறவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கன்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுச்செல்லலாம்.

    பொங்கல் பரிசு தொகுப்பு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது. விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகார்கள் இருப்பின் அரியலூர் வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை 9445000274 என்ற செல்போன் எண்ணிலும், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை 9445000275 என்ற எண்ணிலும், செந்துறை வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை என்ற 9445000276 எண்ணிலும், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு வட்ட வழங்கல் அலுவலரை 9095950353 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இதேபோல் செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9444527019 என்ற எண்ணிலும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9443180786 என்ற எண்ணிலும், தா.பழூர் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9597870496 என்ற எண்ணிலும், திருமானூர் வட்டாரத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளரை 9786605942 என்ற எண்ணிலும் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04329-228165 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    ×