என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் மேலத்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 74). விவசாயியான இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு கடந்த 19-ந் தேதி சென்றார்.

    பின்னர் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்குள்ள 4 பீரோக்கள், 2 பெட்டிகள் ஆகியவையும் உடைக்கப்பட்டிருந்தன.

    மேலும் அவற்றில் இருந்த 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாதநேரத்தில் யாரோ மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    மீன்சுருட்டி அருகே சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டபோது, மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடங்க நல்லூர் புளியந்தோப்பு கிராமத்தில் சிலர் சூதாடுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது சுண்டிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பிரித்திவிராஜ்(வயது 30), துரைராஜ்(30), உத்திராபதி(36), கங்கவடங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்த பாலையா(52), தமிழ்நாதன்(47), சுந்தரவடிவேல்(40), மும்மூர்த்தி(30), கொல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வம்(45) ஆகியோர் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.400-ஐ பறிமுதல் செய்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற நிலக்கரி நிறுவன ஊழியர் வீட்டில் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 65). இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் செல்வராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து தமிழ்ச்செல்விக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வி, உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து தமிழ்ச்செல்வி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் கடப்பாரையால் முன்பக்க கதவு பூட்டை உடைத்ததுடன், கடப்பாறையால் கதவை நெம்பி உள்ளே புகுந்துள்ளனர். அங்கு அறையில் இருந்த 2 பீரோவையும் உடைத்து அதில் இருந்த விளக்குகள், டம்ளர், தட்டுகள் உள்ளிட்ட ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர் துர்காதேவி வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தார்.

    மேலும் செல்வக்குமார், ஸ்ரீநாத் ஆகியோருடன் மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் செல்வராஜ் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி செங்குந்தபுரம் பஸ் நிறுத்தம் வரை சென்று, மீண்டும் வீட்டிற்கு வந்து படுத்து கொண்டது. பின்னர் மீண்டும் மோப்ப நாய், செல்வராஜ் வீட்டில் இருந்து செங்குந்தபுரம் காலனி தெருவிற்கு ஓடி மீண்டும் திரும்ப வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    செல்வராஜ், தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்ததால் நகைகள் தப்பின. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். மெயின்ரோட்டில் உள்ள வீட்டில் நள்ளிரவில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிர் கூறுகையில், வெளியூர் செல்லும்போது வீட்டின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியும், பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்தால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உதவலாம். அதையும் செய்ய தவறி விடுகின்றனர். பொதுமக்கள் விழிப்பாக இல்லாததே இதற்கு காரணம். இதனை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் தெரியவந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
    பேக்கரியில் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பேக்கரியில், நேற்று டீ குடிக்க 2 பேர் வந்தனர். அப்போது கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவர் எழுந்து சிறிது தூரம் சென்றிருந்த நேரத்தில், திடீரென 2 பேரும் சேர்ந்து கல்லாவில் இருந்த பணத்தை திருடி உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அவர்களை பிடித்து கீழப்பழுவூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டம் மேட்டு ரத்னாபுரம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரையின் மகன் அழகுதுரை(வயது 28), கீழப்பழுவூரை சேர்ந்த இப்ராஹிம் சேட்டின் மகன் சாதிக்பாட்சா (23) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3-ம் அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    அரியலூர்:

    பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன்படி கரூரில் 5,798, தஞ்சாவூரில் 5,448, புதுக்கோட்டையில் 3,268, திருவாரூரில் 2,873, பெரம்பலூரில் 2,798, அரியலூரில் 2,416, மயிலாடுதுறையில் 2,009, நாகையில் 1,756, திருச்சியில் 1,721 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இனி வரும் காலங்களில் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

    மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா 3-ம் அலையில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கீழப்பழுவூர் அருகே லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தங்கவேலின் மகன் மணிகண்டன்(வயது 30). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க தனது மோட்டார் சைக்கிளில் கீழப்பழுவூர் நோக்கி சென்றார். திருமானூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கிழே விழுந்த மணிகண்டன் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பழூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் டெல்டா பகுதி விவசாயிகள் பொன்னாற்று பாசனம் மூலம் சுமார் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் ஒவ்வொரு ஆண்டும் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக அரசால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தா.பழூர் விவசாயிகள் பயனடையும் வகையில் பொன்னாற்றிலும் தூர்வாரப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தற்போது வரை திறக்கப்படவில்லை. இருப்பினும் ஆடி பட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பாரம்பரிய நாற்றங்கால், பாய் நாற்றங்கால் ஆகியவை தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இதற்காக தா.பழூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மானிய விலையில் சி.ஆர்.1009 நெல் ரகம் மற்றும் உயிர் உரங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு போதிய அளவு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    விவசாயிகள் தங்கள் விதை நெல் தேவைக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக தா.பழூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் அசோகன் கேட்டுக்கொண்டார். இதுவரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து 20 டன் விதை நெல் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயனடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
    கஞ்சா வைத்திருந்த சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியலூர் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 2 சிறுவர்கள் சிறிய பொட்டலங்களில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, திருச்சியில் இருந்து செல்போன் கடைகளுக்கு உதிரிபாகங்கள் விற்பதற்கு வந்தபோது, கஞ்சாவும் கொண்டு வந்தது, தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஜெயங்கொண்டத்தில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 70). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கீழக்குடியிருப்பு கிராமம் பஸ் நிறுத்தத்தில் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சுந்தரேசன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் சம்பவஇடம் சென்று சுந்தரேசனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.

    முந்திரிக்காட்டில் 60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாருக்கு முந்திரிக்காட்டில் சாராய ஊறல் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடையார்பாளையத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆதி என்ற சாமிநாதனுக்கு(வயது 47) சொந்தமான முந்திரிக்காட்டில் 4 பேரல்களில் 60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சாமிநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.
    மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதால் வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில், 100 அடி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மீன்சுருட்டி கடைவீதியின் இருபுறமும் 75 அடி மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க போதுமான இடம் இல்லாததால் வடிகால் வாய்க்கால் அமைக்காமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பெய்த மழையால் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் சென்று வருவதாலும், பொதுமக்கள் மழைநீரை மிதித்து கொண்டு செல்வதாலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிேயாடு மீன்சுருட்டி கடைவீதி பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால், கிராம மக்கள் தவித்தனர். ஆகவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்யும்போது வடிகாலாக கருவாட்டு ஓடை பிராஞ்சேரி வழியாக வெள்ளம் சென்று ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரி என்கிற சோழகங்கம் பொன்னேரியில் கலக்கிறது. அதிகளவு மழை பெய்யும்போது இந்த ஓடையில் 2 நாட்கள் வரை வெள்ளம் கரை புரண்டு ஓடும். பொதுமக்களின் நலன்கருதி கருவாட்டு ஓடையின் குறுக்காக பிராஞ்சேரி என்ற கிராமத்திற்கு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம் பகுதியில் 65 மி.மீட்டர் மழை பெய்ததால் கருவாட்டு ஓடையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் பிராஞ்சேரி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேலே சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வெள்ளத்தின் காரணமாக கிராமமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை ஏற்பட்டது. தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பிராஞ்சேரி, பூவாய்குளம், விழப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை. அதிக மழை பெய்யும் போதெல்லாம் இந்நிலை ஏற்படுகிறது.

    ஆகவே, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பிராஞ்சேரி கிராமத்திற்கு அருகில் உள்ள தரைப்பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் கட்ட வேண்டும். கருவாட்டு ஓடை நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    ×