என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவாட்டு ஓடை பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்ற காட்சி.
    X
    கருவாட்டு ஓடை பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்ற காட்சி.

    ஜெயங்கொண்டம் பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளம்

    ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால், கிராம மக்கள் தவித்தனர். ஆகவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்யும்போது வடிகாலாக கருவாட்டு ஓடை பிராஞ்சேரி வழியாக வெள்ளம் சென்று ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரி என்கிற சோழகங்கம் பொன்னேரியில் கலக்கிறது. அதிகளவு மழை பெய்யும்போது இந்த ஓடையில் 2 நாட்கள் வரை வெள்ளம் கரை புரண்டு ஓடும். பொதுமக்களின் நலன்கருதி கருவாட்டு ஓடையின் குறுக்காக பிராஞ்சேரி என்ற கிராமத்திற்கு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டம் பகுதியில் 65 மி.மீட்டர் மழை பெய்ததால் கருவாட்டு ஓடையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் பிராஞ்சேரி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு மேலே சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வெள்ளத்தின் காரணமாக கிராமமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை ஏற்பட்டது. தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பிராஞ்சேரி, பூவாய்குளம், விழப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை. அதிக மழை பெய்யும் போதெல்லாம் இந்நிலை ஏற்படுகிறது.

    ஆகவே, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பிராஞ்சேரி கிராமத்திற்கு அருகில் உள்ள தரைப்பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் கட்ட வேண்டும். கருவாட்டு ஓடை நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×