என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் மாயமானது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அபிநயா (வயது 20) இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கினார். பின்னர் காலையில் பார்த்த போது அவரை காணவில்லை.

    இதை தொடர்ந்து முருகேசன் தனது மகளை அவரது தோழிகள் மற்றும் உறவினர் வீட்டில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அபிநயா கிடைக்கவில்லை. இதுகுறித்து முருகேசன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.
    பள்ளிகள் திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    அரியலூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

    ஆங்காங்கே தொற்று பரவல் அபாயத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலை இருந்தது. இருந்தபோதிலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து கல்வி போதிக்கப்பட்டு வந்தது.

    தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. முன்னதாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கொடுத்திருந்தது.

    கோப்புப்படம்

    கட்டாய முக கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்டவை அதில் மேற்கோள்காட்டப்பட்டு இருந்தன. இதனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை தென்னூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள், பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகள் திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


    ஜெயங்கொண்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாததால் மனவேதனை அடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் மணல் மாட்டு வண்டி ஓட்டி அன்றாடம் வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாட்டுவண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால் தொழில் இல்லாமல் பாஸ்கர் மிகவும் வறுமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில் அவரது மாட்டுவண்டியை தா.பழூர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாதது குறித்து பாஸ்கர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டு சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான பாஸ்கர் உதயநத்தம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர். ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அரியலூரில் பள்ளிக்கு வருவதற்கான பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடம் அளித்தனர்.
    அரியலூர்:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்காக தமிழக அரசு அறிவிப்பின்படி இன்று(புதன்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. இதையொட்டி அரியலூர் நகரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், மாணவ-மாணவிகள் காத்திருக்கும் அறை, ஆசிரியர்களின் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும், பள்ளிக்கு வருவது குறித்து பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி பெற்றோர்களுடன் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து தாங்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு, எழுதி வைத்திருந்த வினா-விடை தொகுப்புகள் மற்றும் தாங்கள் பள்ளிக்கு வருவதற்கான பெற்றோரின் ஒப்புதல் கடிதங்களை ஆசிரியர்களிடம் கொடுத்தனர்.

    ஒரு சில மாணவ, மாணவிகள் தங்களது உடல் நிலையைக் கருதி பள்ளிக்கு வர முடியாது என்று கடிதம் கொடுத்தனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் வரும் நிலையில், அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டு, வகுப்புகளில் இடைவெளிவிட்டு அமர வைக்கப்படுவார்கள் என்று ஆசிரியர்கள் கூறினர்.இந்நிலையில் நேற்று அரியலூர் மற்றும் கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்து, 100 சதவீத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றை முறையாக சுத்தம் செய்யவும், பள்ளி மாணவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை சமைக்கவும், போதுமான அளவில் உணவுப்பொருட்களை இருப்பு வைத்திடவும் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, கோவிந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார். ஆய்வின்போது அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பஸ் நிலையம் அருகே 2 பேர் ஏரிக்கரையில் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்த வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல்கள் வந்தன.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பஸ் நிலையம் அருகே 2 பேர் ஏரிக்கரையில் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை புகைத்துக் கொண்டிருந்த 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் கீழத் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் வல்லரசு (22) மற்றும் கீழக்குடியிருப்பு அடிப்பள்ளத் தெருவைச் சேர்ந்த இதயத்துல்லா மகன் உவைஸ் அகமத் (18) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 20 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமானூர் அருகே செங்கல்களால் மறைத்து மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏலாக்குறிச்சி மெயின்ரோட்டில் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக செங்கல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சில செங்கல்களை அகற்றி டிராக்டருக்குள் பார்த்தபோது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரித்தபோது, அவர் சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணதாசனின் மகன் சிவசங்கர்(வயது 19) என்பதும், டிராக்டரின் உரிமையாளர் சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பதும், அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமானூர் ஒன்றிய துணை தலைவராக இருப்பதும், பல நாட்கள் இது போன்று டிராக்டரின் மேல்பகுதியில் செங்கல்களை வைத்து மணல் கடத்தியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் கலியபெருமாளை தேடி வருகின்றனர்.

    இதேபோல் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி மெயின்ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை சாலையிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனை கண்ட போலீசார் அந்த சரக்கு வேனில் பார்த்தபோது, மணல் மூட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டத்தில் டீக்கடைகாரர் வீட்டு பூட்டை உடைத்து பணம்-நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் அரசு பாங்க் அருகில் டீக்கடை நடத்தி வருபவர் கண்ணன் (வயது 45). இவரது மனைவி சிவகாமி சுந்தரி. இவர் ஜெயங்கொண்டத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவரது சொந்த வீடு ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ளது.

    இந்நிலையில் கண்ணன் உட்கோட்டை கிராமத்தில் அவருடைய உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சிக்கு குடும்பதோடு போனதாகவும் அங்கே இரவு தங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள கண்ணன் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து கண்ணன் மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். விசாரணையில் வீட்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கீழப்பழுவூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன்(வயது 60). தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை(50). இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். அர்ச்சுணன் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொத்துக்களை விற்றுவிட்டு அவரது மனைவி ஊரான சுண்டக்குடி கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன வருத்தத்தில் இருந்த அவர் அவ்வப்போது மது குடித்து விட்டு புலம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் குடிபோதையில் இருந்த அர்ச்சுணன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துள்ளார். இதனால் வாந்தி எடுத்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லாரியில் தூங்கிய டிரைவர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    தஞ்சை மாவட்டம் வெண்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் ராஜசேகர்(வயது 36). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜசேகர், லாரியில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இயங்கி வரும் ஒரு தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து சுண்ணாம்பு கற்களை இறக்கிய பின்னர், ராஜசேகர் லாரியில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது அவர் லாரியில் இருந்து கீழே விழுந்ததில், நெற்றியில் அடிபட்டு கிடந்தார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மறைத்து வைத்து லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜா(வயது 52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    வாரணவாசியில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அாியலூர் மற்றும் பெரம்பலூா் மாவட்ட பகுதிகள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தது. காலநிைல மாற்றங்களால் கடல் உள்வாங்கிய நிலையில், கடல்வாழ் உயிரினங்கள் மண்ணில் புதைந்து படிமங்களாக மாறின. இதைத்தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் பல அரியலூர் மாவட்டத்தில் கிடைத்தன. மேலும் டைனோசர் முட்டை கல்லாக மாறிய படிமமும் கண்டுபிடிக்கப்பட்டது. 

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாத்தனூர் பகுதியில் கல் மரம் உள்ளது. இதுபோன்ற படிமங்கள், புவியியல் மாணவர்களின் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அரியலூர் அருகே உள்ள வாரணவாசியில் தமிழக அரசு சார்பில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் புவியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அரியலூர் பகுதிக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்வார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, அங்குள்ள பொருட்களை கண்டு ஆச்சரியமடைவது உண்டு.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக அந்த அருங்காட்சியம் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை தொடர்ந்து, அந்த அருங்காட்சியம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏராளமான மாணவ, மாணவிகள் அருங்காட்சியகத்திற்கு வருவார்கள் என்று அருங்காட்சியக பொறுப்பாளர் தெரிவித்தார்.
    தா.பழூர் அருகே சொத்து தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் ரெங்கநாதன் (வயது 70). விவசாயி. இவரது தம்பி பஞ்சநாதன் (53). இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பிரச்சினைக்கு உரிய வயலில் கள்ளி வேலி அமைக்கும் பணியில் பஞ்சநாதன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் (23) ஆகியோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ரெங்கநாதன், இடத்தை அளந்து எல்லை பிரிப்பதற்கு முன்பு ஏன் வேலி அமைக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதையடுத்து பஞ்சநாதன், விக்னேஷ் ஆகியோர் ரெங்கநாதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி, அருகில் கிடந்த கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கநாதனை அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டனர். இதையடுத்து அவரை, உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் ரெங்கநாதன் கொடுத்த புகாரின்பேரில் பஞ்சநாதன், விக்னேஷ் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×