என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்து வைத்து மிரட்டிய போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருதாச்சலம் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜவேல் மனைவி கீதா (வயது 41). ராஜவேல், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கீதாவின் முகநூலில், மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் (26) என்பவர், கீதா கொடுத்திருந்த முகநூல் முகவரி பக்கத்தில் நண்பராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுள்ளார்.

    பின்னர் முகநூல் பக்கத்தில் ஆனந்தகுமாரை நண்பராக கீதா ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று ஆனந்த குமார் முகநூலில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது தான், குற்றப்பிரிவு போலீசில் வேலை பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கடந்த 8-ந்தேதி போன் செய்து வீடியோ காலில் வந்து நீ அழகாக இருக்கிறாய் என பேசியுள்ளார். அப்போது ஆபாசமான முறையில் கீதாவை செல்போனில் ஸ்கிரீன் ஷாட் எடுத்ததாக தெரிகிறது. ஸ்கிரீன் ஷாட் போட்டோவை வைத்து கொண்டு தொடர்ந்து கீதாவை ஆனந்தகுமார் மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் பல பெண்களை ஆனந்தகுமார் மிரட்டி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் கைதான ஆனந்த குமாரிடம் இருந்து ஏராளமான செல்போன்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
    நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீட் தேர்வு முடிவு குறித்த பயத்தால் மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    நீட் தேர்வு

    நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த மாணவி கனிமொழி பிளஸ் 2 வில் 600க்கு 562.28 மதிப்பெண் எடுத்திருந்தார்.

    10 வகுப்பில் 500க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து தனியார் பள்ளியில் கனிமொழி முதலிடம் பிடித்திருந்தார்.

    ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில் இப்போது அரியலூர் மாணவி கனிமொழி  தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    நூதன முறையில் மணல் கடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை 7 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் மருதையாறு ஓடுகிறது. அந்த ஆற்றில் இருந்து பெரிய டாரஸ் லாரி‌ மூலம் மணல் கடத்தி அங்கிருந்து திருச்சி மாவட்டம் லால்குடி பகுதிக்கு நேற்று அதிகாலை கடத்திக்கொண்டு செல்ல கும்பல் ஒன்று திட்டமிட்டுள்ளனர். கீழப்பழுர் போலீசாருக்கு இந்த ரகசிய தகவல் கிடைத்தையடுத்து கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கிப்பிடிக்க சென்றனர்.

    ஆனால் மணல் கடத்தி வந்த லாரி சுண்டக்குடி சாலை வழியாக மாற்றுப்பாதையில் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பின்தொடர்ந்து மடக்க முயற்சித்து வந்துள்ளனர். லாரியை பின் தொடர்கையில் லாரியின் முன்பு ஒரு காரும் அதிவேகத்தில் சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர்.

    சுமார் 7 கிலோ மீட்டர் விரட்டிச்சென்று மேலப்பழுவூர் கிராமத்தில்‌ உள்ள ஒரு பெரிய வேகத்தடையை ஏறி இறங்க லாரியின் வேகத்தை குறைத்தபோது அதனை சரியாக பயன்படுத்திய போலீசார் கார் மற்றும் லாரி இரண்டையும் மடக்கிப் பிடித்தனர். பிறகு அங்கு வந்த மேலப்பழுவூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மணல் கடத்தல் தொடர்பாக புகார் கொடுத்தார்.

    பிறகு அங்கிருந்து லாரி மற்றும் காரை பறிமுதல் செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பணங்கூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பா மகன்கள் ரமேஷ்(வயது30) மற்றும் ராஜேஷ்(34), ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் மருதமுத்த(25), கீழ காங்கியனூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமதாஸ்(24), சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் கார்த்திகேயன்(21), பணங்கூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் ராஜ்குமார்(37) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ராஜ்குமார் மாற்றுத்திறனாளி ஆவார்.

    காரில் மாற்றுத்திறனாளி ராஜ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாதது போல் போலீசாரிடம் நடிப்பதற்காக மாற்றுத்திறனாளியை அழைத்து வந்துள்ளனர்.

    யாருக்கும் சந்தேகம் இல்லாமல் மணலை ஏற்றி தார்ப்பாய் போட்டு மூடி லாரிக்கு முன் காரில் மாற்றுத்திறனாளியை வைத்து அழைத்துக்கொண்டு போலீசார் மறித்தால் மாற்றுத்திறனாளிக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி ஏமாற்றலாம் என திட்டம் போட்டு இதுபோல் பலமுறை குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்த முறை பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது போல் கீழப்பழுவூர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு கம்பி என்னும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களை 7 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசாருக்கு பாராட்டுகள் தற்போது குவிந்து வருகின்றன.
    தா.பழூர் அருகே மணல் குவாரி அமைக்கக்கோரி தீக்குளித்த மாட்டுவண்டி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 40). மாட்டுவண்டி தொழிலாளி. நீண்ட நாட்களாக மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க இப்பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். அவர்களது பிழைப்புக்கு வேறு வழி இல்லாததால் அரசு அனுமதியின்றி அவ்வப்போது மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்து விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில் பாஸ்கரின் மாட்டு வண்டி தா.பழூர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து திடீரென கடந்த 1-ந் தேதி அவரது வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பாஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாஸ்கர் உருக்கமாக பேசிய ஒரு ஆடியோ வெளியாகி, மாட்டு வண்டி தொழிலாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் நேற்று மாலை அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பாஸ்கருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தீக்குளித்த பாஸ்கர் இறந்தது அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி-சிதம்பரம் சாலையில் வசிக்கும் பிரியா ராஜா என்ற இல்லத்தரசி தயாரித்துள்ள பொன்வண்டு விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    இந்துக்களின் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகரை வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக விநாயகர் சிலைகள் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடை வீதியில் திருச்சி-சிதம்பரம் சாலையில் வசிக்கும் பிரியா ராஜா என்ற இல்லத்தரசி தயாரித்துள்ள பொன்வண்டு விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    விநாயகர் சிலைகள்

    கைவினைப்பொருட்கள் மற்றும் அழகு கலையில் ஆர்வம் கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் போது வித்தியாசமாக விநாயகர் சிலைகளை வடிவமைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    கடந்த 2008-ல் கொட்டை பாக்கு விநாயகரை தயாரித்து பிள்ளையார் சுழி போட்டார். பின்னர் ஆண்டுதோறும் நவதானிய விநாயகர், பென்சில் துகள் விநாயகர், மாத்திரை விநாயகர், சங்குப்பூ விநாயகர், மக்காச்சோளம் விநாயகர் என விதவிதமாக வடிவமைத்து வழிபட்டார். நடப்பு ஆண்டில் பிரியாவின் எண்ணத்தில் உதித்ததே பொன்வண்டு விநாயகர்.

    பொதுவாக விவசாய நிலங்களில் பயிர்களை பாழ்படுத்தும் பூச்சிகளை இந்த பொன் வண்டு தின்றுவிடும். ஆனால் இந்த வண்டு பயிர்களின் இலைகளை தின்பது கிடையாது.

    ஆகவே விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் இந்த பொன் வண்டை நாம் பாதுகாத்து இயற்கை விவசாயத்திற்கு நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே பொன் வண்டு விநாயகரை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இந்த சிலையை வடிவமைக்க கடந்த ஒரு மாத காலமாக தனது குழந்தைகள் உதவியுடன் களி மண்ணை திரட்டி 1,008 எண்ணிக்கையில் பொன் வண்டு உருவம் பதித்து சுமார் 5 கிலோ எடை கொண்டு முழு விநாயகர் சிலை தயாரித்துள்ளேன். நாளை பூஜை செய்ய இருக்கிறேன். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பொன் வண்டு விநாயகருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.


    இதையும் படியுங்கள்...விநாயகர் சதுர்த்தியையொட்டி சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை
    தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உதயநத்தம் ஊராட்சியில் உள்ள கோடாலி பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும், இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றும் குடிநீர் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கோடாலி கிராமத்தில் சிலால் -அணைக்கரை சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டது.

    பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த தா.பழூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் பொதுமக்களிடத்தில் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சிலால் அணைக்கரை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டத்தில் இன்று அதிகாலையில் தனியார் பார்சல் சர்வீஸ் லாரியில் ஏற்பட்ட தீயில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
    ஜெயங்கொண்டம்:

    திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் மூலம் சரக்குகள் கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவில் ஜெயங்கொண்டம் வரும் அந்த லாரியில் இருந்து அதிகாலையில் லோடுமேன்கள் மூலம் சரக்குகள் இறக்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ஜெயங்கொண்டம் அண்ணாசிலை அருகே பெருமாள் கோவில் அருகே பார்சல் சர்வீஸ் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் லோடுமேன்கள் உட்பட 5 பேர் அந்த லாரிக்கு உள்ளேயே படுத்து தூங்கியுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென லாரியின் ஒரு பகுதியில் இருந்து புகை கிளம்பியது. அடுத்த வினாடி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் லாரியில் வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்கள், மருந்து, ஜவுளி, இருசக்கர வாகன உதிரிபாக பொருட்கள் எரிந்தது. மேலும் அந்த லாரியில் பட்டாசு கிப்ட் பாக்சுகளும் இருந்ததால் தீயானது வேமாக பரவி வெடித்து சிதறியது.

    இந்த திடீர் தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. முன்னதாக லாரிக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்த டிரைவர் உள்பட லோடுமேன்கள் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீக்காயம் அடைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் வேன் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    போலீசார் நடத்திய விசாரணையில் தீக்காயம் அடைந்தவர்கள் அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமம் காலனித் தெருவைச் சேர்ந்த லோடுமேன்கள் இளங்கோவன் (வயது 19), விஜயக்குமார் (21), பகவதி (18), மணிகண்டன் (18) மற்றும் திருச்சியை சேர்ந்த பார்சல் சர்வீஸ் லாரி டிரைவர் சபரி (26) என்பது தெரியவந்தது.

    விபத்தில் காயம் அடைந்தவர்களில் மணிகண்டன் தவிர மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்ட இந்த பார்சல் சர்வீஸ் லாரி தீவிபத்து ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் லாரிக்குள் படுத்திருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொசுவர்த்தி பற்ற வைத்து இருந்ததாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
    விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கீழநத்தம் மெயின்ரோட்டை சேர்ந்த பரிமளா(வயது 37) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பரிமளாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் அருகே கார் டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து புதுச்சாவடியை சேர்ந்தவர் அபிபுல்லா. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மூத்த இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் மனைவி மற்றும் இளைய மகளுடன் வசித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அபிபுல்லா, தற்போது ஜெயங்கொண்டத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு மிகப்பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்த போது, 3 பெட்ரோல் பாட்டில்களும் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீட்டின் மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அபிபுல்லா இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஜெயங்கொண்டம் அருகே வயலில் ஆடுமேய்ந்த தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா. இவர் தனது வயலில் ஆடு மேய்ந்து விட்டதாக கூறி திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கவிதா தன்னை திட்டுவதாக கூறி தமிழரசன் மனைவியிடம் சண்டை போட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கவிதாவின் கணவர் சக்திவேல், அவரது மகன் அருண், மகாதேவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து சந்தியாவின் வீட்டிற்கு வந்து சந்தியாவை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சந்தியா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையில் இருந்தவாறு சந்தியா இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தகராறில் ஈடுபட்ட சக்திவேல், அருண், மகாதேவன், கவிதா ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 48). விவசாயி. இவரது மகன் சுதாகர்(19). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வயிற்றுவலி சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் வீட்டில் கடலை செடிக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) சுதாகர் எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுதாகர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசில் சுதாகரின் தாய் உஷாராணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தா.பழூர் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒருவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 58). இவருக்கும், சிலால் கிராமத்தில் வசிக்கும் ராஜகோபாலின் மகன் ராஜசேகருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜசேகர், ராஜதுரையை தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும், இதில் ராஜதுரையின் பல் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தடுத்தபோது ராஜதுரைக்கு, ராஜசேகர் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜதுரை, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    ×