search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அரியலூரில் தனியார் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா

    பள்ளிகள் திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    அரியலூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தது. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

    ஆங்காங்கே தொற்று பரவல் அபாயத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலை இருந்தது. இருந்தபோதிலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தொடர்ந்து கல்வி போதிக்கப்பட்டு வந்தது.

    தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. முன்னதாக தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து கொடுத்திருந்தது.

    கோப்புப்படம்

    கட்டாய முக கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்டவை அதில் மேற்கோள்காட்டப்பட்டு இருந்தன. இதனை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை தென்னூர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள், பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆகியோருக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகள் திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


    Next Story
    ×