என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஆற்றின் கரையை தொட்டுக் கொண்டு வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
    • கோவில் மூலவர் சன்னதியில் தண்ணீர் புகுந்து விடும் சூழல் காணப்படுகிறது.

    கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையில் கடந்த 2 நாட்களாக 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தா.பழூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கரையை தொட்டுக்கொண்டு வெள்ள நீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருமழபாடியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் உள் பிரகாரத்திலும், தண்ணீர் புகுந்தது. வாசலிலும் நீர் சுவற்றில் இடையே உள்ள துளைகள் போன்றவற்றின் வழியாக தண்ணீர் புகுந்து வருகிறது.

    மேலும் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தால், கோவில் மூலவர் சன்னதியிலும் தண்ணீர் புகுந்து விடும் சூழல் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின. கோவில் சுவரில் உள்ள ஒரு துளையில் இருந்து கோவிலுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பட்டு வருகின்றன.

    • குழந்தையுடன் பெண் மாயமானார்.
    • வீட்டைவிட்டு வெளியே சென்றவர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் தினக்குடி பகுதியை சேர்ந்தவர் இளந்தமிழன் (வயது 30). இவரது மனைவி கோகிலா (21). இவர்களுக்கு வன்னிமலர் (1½) என்ற பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கோகிலா தனது குழந்தையை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து இளந்தமிழன் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

    • ஜெயங்கொண்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம், தா.பழூர் உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், தபொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், (வடக்கு/ தெற்கு) தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சாமிதுரை தெரிவித்து உள்ளார்.

    • பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • வீட்டில் தனியாக இருந்தபோது நடந்த விபரீதம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உத்திரக்குடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மஞ்சுளா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கட்டண உயர்வை திரும்ப பெற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஜனநாயக கட்சி சார்பில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அரிசி, பருப்பு, பால், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, வரி உயர்வை திரும்ப பெற கோரியும், பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் கதிர் கணேசன், மாவட்ட பொருளாளர் வெற்றிச்செல்வன், அருள்கணேசன், ஒன்றிய தலைவர்கள் அரியலூர் கோவிந்தராஜ், திருமானூர் குமாரசாமி, செந்துறை சுந்தரமூர்த்தி, செய்தி தொடர்பாளர் அழகுசங்கர், மகளிர் அணி பச்சையம்மாள், சுமதி, பார்க்கவலம் முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் கலியமூர்த்தி, பச்சமுத்து, பன்னீர்செல்வம், குமார் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • புகையிலை ஒழிப்பு குறித்து நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கீழப்பழூவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ ஆலோசகர் பிரியா, சமூக பணியாளர் வைஷ்ணவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாார ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்று புகையிலைப் பொருட்களால் ஏற்படும் நோய்கள், பொருளாதார சீரழிவு, சமூக பாதிப்புகள், மனநல பாதிப்புகள், தண்டனை சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். ெதாடர்ந்து புகையிலை ஒழிப்போம் என அனைவரும் உறுதிெமாழி ஏற்றுக் கொண்டனர். 

    • பலத்த மழை காரணமாக தென்னை மரம் சரிந்து விழுந்தது.
    • 2 மணி நேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூரில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பவுண்டு தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 50 அடி உயரமுள்ள தென்னை மரம் நேற்று சாய்ந்து கீழே விழுந்தது. மேலும் அருகே இருந்த மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. அந்த நேரத்தில் சாலையில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதன் பின்பு பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு தென்னை மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    • கோவிலில் அம்மன் நககைள் திருடப்பட்டுள்ளது.
    • கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியல் மற்றும் அம்மன் நகை உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தொட்டிக்குளம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து வழக்கம் போல, பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார். தொடர்ந்து காலை கோவிலுக்கு வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியல் மற்றும் அம்மன் நகை உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளிட ஆற்றில் ஆடிப்பெருக்கு கோலாகலமாக நடைபெற்றது
    • புதுமண தம்பதிகள் குவிந்தனர்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட ஆற்றில் ஆடி18 முன்னிட்டு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மன்னர்கள் காலம் தொட்டே காவிரிக்கரையோர மாவட்டங்களில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    தென்மேற்குப் பருவமழை ஆனி மாதம் துவங்கியதும், குடகு மழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழ மண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும்.

    ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே ஆடிப்பெருக்கு' விழா.

    திருமானூர் கொள்ளிட ஆற்றங்கரையில் நீர் பெருக்கெடுத்து வருவதால் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் போலீஸ் காவலர்கள் துணையோடு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொள்ளிட ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க எச்சரிக்கை விடுத்து திருமானூர் காவல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோயில்கள், நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • ஆடிப்பெருக்கு முன்னிட்டு நடைபெற்றது

    அரியலூர்:

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள கோயில்கள் மற்றும் நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ஆடிப்பெருக்கை யொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவையொட்டி கோயில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர் நகரில் உள்ள சிவன் கோயில், பெருமாள் கோயில், மாரியம்மன் கோயில், செட்டிஏரி விநாயகர் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் ஆடிப் பெருக்கையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடிப்பெருக்கை முன்னிட்டு அரியலூர் நீதிமன்றம் அருகேயுள்ள அகோர வீரப்பத்திரசுவாமி கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, பால்குடம், தீச்சட்டி, அலகுகாவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதே போல் திருமானூர், ெஜயங்கொண்ட ம், செந்துறை, தா.பழூர், பொன்பரப்பி, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதியிலுள்ள அனைத்து கோயிலில்களிலும் சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது.

    • விதிமுறைகளை மீறும் தனியார் உர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஊராட்சி ஒன்றியத்தில் தனியார் உரவிற்பனை நிலையங்களை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில், தனியார் உரவிற்பனை நிலையங்களில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு, உரங்களின் விலை, உரங்கள் இருப்புப் பதிவேடு, விற்பனைப் பதிவேடு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை ரசீது, உரங்களின் சரியான எடை அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தும், பதிவேடுகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

    விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் உரவிற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட வேளாண் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதனைத்தொடர்ந்து, தா.பழூர் ஒன்றியம், உல்லியக்குடி ஊராட்சி அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமினையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூடத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்டு வரும் உணவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    • சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 31-ந்தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    அரியலூர்:

    தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதற்கும், இதேபோல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்னையின மாணவ-மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை திட்டத்திற்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகைக்கு மாணவ-மாணவிகள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரையிலும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவல் அரியலீர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ×