என் மலர்tooltip icon

    அரியலூர்

    • நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு அரியலூர் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செல்ல பிராணிகளுக்கு நடந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாமினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,850 வெறி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4,500 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடையே வெறி நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும், என்றார். இதில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீது அலி, கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வினாத்தாள்கள் தாமதத்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்
    • அதிகாரிகள் தரப்பில் அக்கறையின்மையை காட்டுகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு 28 ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து படித்து, புதன்கிழமை காலை தேர்வு எழுதச் சென்றனர். காலை 9.30 மணிக்கு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் பள்ளி வகுப்பறையில் தனித் தனியே அமர்ந்திருந்த நிலையில், பிற்பகல் 1 மணி கடந்தும் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை. பிற்பகல் 2 மணிக்கு மேல் தான் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன.

    காலையில் தேர்வு எழுதுவதற்கு ஆர்வத்துடன் சுறுசுறுப்பாக வந்த மாணவ, மாணவிகள் வினாத்தாள் தாமதமாக கிடைக்கப் பெற்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

    இதுகுறித்து கல்வி மாவட்ட அலுவலர்களிடம் கேட்ட போது, அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் ஒட்டுமொத்தமாக அச்சடிக்கப்பட்டு தேர்வு தொடங்குவதற்கு முதல் நாளிலேயே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இது போன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்காது.

    ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் வினாத்தாள்களை தேர்வு நடைபெறும் அன்று காலை சென்று பெற்று வருவதால் வினாத்தாள்களில் பிழைகள் ஏதாவது உள்ளனவா, வினாத்தாள்கள் சரியான எண்ணிக்கையில் இருக்கிறதா என உறுதி செய்ய முடிவதில்லை என்றனர்.

    எனவே சிறுவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில் கூட அதிகாரிகள் தரப்பில் அக்கறையின்மையை காட்டுகிறது. வினாத்தாள் வழங்குவதில் முறையான நடைமுறையயை பின்பற்றவேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் 76 பேருக்கு 4.33 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 71 பயனாளிகளுக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமை வகித்து, அனைத்து துறைகள் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 270 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பிற நபர்கள் சுய தொழில் செய்து முன்னேறும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சுயதொழில் செய்ய விரும்புவோர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி கடன் பெறலாம். இதனை படித்த இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் பெண்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கியுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக அவர், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா, ஊராட்சித் தலைவர் காட்டுராஜா, மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தனர்.

    • ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேர்வு வருகிற டிசம்பர் 3-ந்தேதி நடைபெறவுள்ளது

    அரியலூர்

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டேராடூனில் உள்ள ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் அடுத்த ஆண்டு ஜூலை 2023 மாத பருவத்தில் சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் 3-ந்தேதி அன்று நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்வுகள் சென்னை நகரிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவை கொண்டதாக இருக்கும். எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை "கமாண்டன்ட், ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248003" என்ற முகவரிக்கு காசோலை அனுப்பி அல்லது ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரி இணைய வழியாக பொது பிரிவினர் ரூ.600-ம் செலுத்தியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-ம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம். விண்ணப்பதார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 1.7.2023-ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600003 என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in ல் பார்க்கவும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

    • கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சிலால் நால்ரோடு பகுதியில் அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் ராமஜெயம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது, அரசு அனுமதி இல்லாமல் 2 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு சுரங்கத்துறை அதிகாரி ராமஜெயம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்து கூழாங்கற்கள் கடத்திவரப்பட்ட டிப்பர் லாரியை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்"

    • விவசாயி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கடன் தொல்லையால் விபரீத முடிவு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 55), விவசாயி. இவர் கடன் தொல்லையால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக மணி, மன வேதனையில் இருந்து உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வெள்ளூர் ரெயில்வே கேட் அருகே வந்த மணி, ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் துண்டு துண்டாகியது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாம்பு கடித்து பெண் பலியானார்.
    • கடலைச் செடி பறித்து கொண்டிருந்தார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த நாயகணைப்பிரியாள் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி சுலோச்சனா (வயது 35). இவர் கடந்த 20-ந் தேதி நாயகணைப்பிரியாள் கிராமத்தில் உள்ள முருகானந்தம் என்பவரது நிலக்கடலை வயலில் கடலைச் செடி பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கடலை செடிகளுக்கு இடையே இருந்த பாம்பு அவரை கடித்து விட்டது. இதில் மயங்கி விழுந்த சுலோச்சனாவை சக தொழிலாளர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசு பள்ளி மாணவிகள் 50 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
    • ரூ.1,000 செலுத்தி புரவலராக சேர்ந்தனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முழுநேர நூலகத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாவை சங்கரை மாவட்ட நூலகர் சண்முகநாதன் பாராட்டி சால்வை அணிவித்தார். கவாஸ்கர் மற்றும் ஆசிரியைகள் மாரியம்மாள், தமிழரசி ஆகியோர் நூலகத்தில் தலா ரூ.1,000 செலுத்தி புரவலராக சேர்ந்தனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் 50 மாணவிகளை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். முன்னதாக நூலக ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். முடிவில் உடையார்பாளையம் நூலகர் முருகானந்தம் நன்றி கூறினார்."

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது
    • தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உடையார்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொண்டு, எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவித்தனர்.

    • காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சென்னையிலிருந்து பெறப்பட்ட கூட்டப்பொருட்கள் மற்றும் இதர கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும். இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • நவராத்திரி விழாவையொட்டி நடந்தது

    அரியலூர்

    நவராத்திரி விழாவையொட்டி அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெருகாளியம்மன் கோவிலில் உள்ள முகாம்பிகையும், அரியலூர் பெரிய கடைத்தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுது

    • வாடிக்கையாளர்களுக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தவு வழங்கியுள்ளது
    • 4 வாரத்திற்குள் 9 பேருக்கும் வழங்க வேண்டும்

    அரியலூர்

    சென்னையை சேர்ந்த விஜயசாரதி(வயது67), வரதராஜுலு(66), விஸ்வாசகுமார்(63), சுப்பிரமணி(67), அகசம்(62), சேலத்தை சேர்ந்த இளங்கோவன்(63), மணிவண்ணன்(61), விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி(64), புதுச்சேரியை சேர்ந்த மேகர்அலி என்கிற ராஜா(65) உள்பட அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 27 பேர் 06-03-2015 அன்று சென்னையிலிருந்து இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரான போர்ட் பிளேயர் செல்லவும், 10-03-2015 அன்று போர்ட் பிளேயரிலிருந்து சென்னை திரும்புவதற்கும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் செல்வதற்கான பயணச் சீட்டுகளை மேக் மை ட்ரிப் நிறுவனம் மூலமாக கடந்த 29-11-2014 அன்று முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 06-03-2015 அன்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்திற்கு சென்று ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமானத்தில் செல்வதற்கான சீட்டை பெறுவதற்கு அலுவலக பணியாளர்களிடம் கேட்டபோது, தங்கள் பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். முன் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுக்கள் அனைத்தும் மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் ரத்து செய்யப்பட்டது என்றும், அவர்களை தொடர்பு கொண்டுதான் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகத்தில் கூறியுள்ளனர்.

    இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சென்னையிலிருந்து போர்ட் பிளேயர் செல்வதற்கும், அங்கிருந்து சென்னை திரும்புவதற்கான விமான பயணச் சீட்டுகளை கூடுதல் கட்டணம் செலுத்தி பெற்று தங்கள் பயணத்தை தொடர்ந்துள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பயணிகள் தங்களால் கூடுதலாக செலுத்தப்பட்ட பயண கட்டணத்தை திருப்பி அளிக்குமாறு மேக் மை ட்ரிப் மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திடம் கேட்டதில் அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களால் பயண கட்டணத்துக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை ரூ.1,86,000 கேட்டும், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மற்றும் மேக் மை ட்ரிப் நிறுவனம் ஆகியவற்றின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு கேட்டும், கடந்த 2017-ம் ஆண்டு சென்னை (தெற்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று தீர்ப்பளித்தனர். இதில் சேவை குறைபாட்டின் காரணமாக விமான சீட்டுகளைப் பெறுவதற்கு கூடுதலாக செலவிடப்பட்ட தொகை ரூ.1,86,000 மற்றும் சேவை குறைபாட்டின் காரணமாக ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.10,75,000-ஐ மேக் மை ட்ரிப் நிறுவனம் 4 வாரத்திற்குள் 9 பேருக்கும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். மேலும் இந்த வழக்கில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை விடுவித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ×