என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அகழாய்வுப் பணிகளைக் முதலமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.
    • முதல் கட்ட அகழாய்வில் மொத்தம் 1,010 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப்பேரரசின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரம் அமைந்துள்ளது. முதலாம் இராசராசனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் இராசேந்திரனால் சோழநாட்டின் தலைநகராக இந்நகரம் தோற்றுவிக்கப்பட்டது.

    கங்கைகொண்டசோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதையும் சோழப்பேரரசர்களின் அரசியல் தளமாக மாற்றப்பட்டதையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைகொண்டசோழபுரத்தை உருவாக்கிய முதலாம் இராசேந்திரனின் ஆட்சியின் போது, முடிகொண்டசோழன் திருமாளிகை, கங்கை கொண்ட சோழன் மாளிகை, சோழகேரளன் திருமாளிகை என்ற பெயர்களில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளைக் முதலமைச்சர் கடந்த 11.2.2022 அன்று தொடங்கி வைத்தார். சோழப் பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

    கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள மாளிகைமேட்டில் அகழாய்வு மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன.

    அதன்படி, புதையுண்ட செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்ட சான்றுகளின் மூலம் கட்டடப்பகுதிகள் செங்கற்களின் அடிப்பகுதியில் எழுப்பப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும், கிடைக்கப்பெற்ற செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.

    செங்கல் கட்டுமானங்களுடன் பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உலோகப் பொருட்கள் குறிப்பாக அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினாலான பொருட்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், தந்தத்தினாலான பொருட்கள், வட்டச்சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கெண்டி மூக்குகள் ஆகியவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    செலடன் மற்றும் போர்சலைன் எனப்படும் சீனப் பானையோடுகளும் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைக்காலத்தின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. இவை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

    கங்கைகொண்டசோழபுரம் (மாளிகைமேடு) அகழாய்வுப் பணிகள் 2021 மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 19 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் மொத்தம் 1010 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 


    இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2022) அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் இடயத்தாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 40), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கொளஞ்சிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • சுவர் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான்

    அரியலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் சின்னையன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கண்மணி. இவர்களுடைய மகன் ரித்விக் (வயது 2). கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலகருப்பூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று முன்தினம் அங்கிருந்து அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற போது அவர்களது குழந்தை ரித்விக் வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக திண்ணையில் இருந்த சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த ரித்விக்கை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரித்விக் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    "

    • சாலை அமைத்து தர கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • சாலை மறியலிலும் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் செல்லக்கூடிய 16 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்கவும், ஏற்கனவே உள்ள சாலையில் வெத்தியார் வெட்டு கிராமம் அருகே 600 மீட்டர் சாலையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைவிட அதிகமான தரம் இல்லா சாலைகளுக்கெல்லாம் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

    மீன்சுருட்டி - குட்ட கரைக்கு கூட மாநில அரசினுடைய மாவட்ட சாலையாக மாற்றம் செய்து புனரமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அதே போல மீன்சுருட்டில் இருந்து கல்லாத்தூர் ரோடு மாவட்ட நெடுஞ்சாலையாக அறிவிக்காத காரணத்தினால் இந்த பகுதி பின்தங்கிய சூழலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி 5 கிராம மக்களை அணி திரட்டி இன்றைய தினம் மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம்.

    இந்த போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு உடனடியாக நிதிநிலை பற்றிய காரணம் சொல்லாமலும் ஆறு மாதங்களுக்கு பிறகு பார்க்கிறோம் என்று காரணம் சொல்லாமலும் உடனடியாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நாளைய தினம் இந்த மாவட்டத்திற்கு வர இருக்கின்ற சூழ்நிலையில் இந்த பாதையினுடைய மிக மோசமான சூழ்நிலை கணக்கில் எடுத்துக் கொண்டு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பாதையை தரம் உள்ள தார் சாலையாக மாற்றம் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இல்லாவிட்டால் மீண்டும் டிசம்பர் 11 ஆம் தேதி முற்போக்கு சிந்தனையாளர் இயக்கமும், கிராம பொதுமக்கள் அனைத்து பேரும் ஒன்று சேர்ந்து மீண்டும் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம்.

    • ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
    • அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரியலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இந்த வகுப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் நடக்கும் வகுப்புகளை கவனித்து, பாடங்களை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும். கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் வெற்றி உங்கள் வசமாகும். அரசு சார்பில் நடத்தப்படும் எத்தகைய வகுப்புகளையும் மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சின்னத்துரை பேசினார். மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் நேற்று 'நீட்' தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் மொத்தம் 420 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு வகுப்புகள் காலை மற்றும் மதியம் என இருவேளைகளிலும் நடைபெறுகின்றன. 

    • அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது.
    • அமைச்சர் பெயர் பலகையை திறந்து வைத்தார்

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சங்க கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே.கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சக்திவேல், செயலர் ஆர்.சீனிவாசன், துணைச் செயலர் கே.வில்லவன், பொருளாளர் ஓ.சுகுமாறன், கௌரவத் தலைவர் முருகேசன், சங்க காப்பாளர் கே.அருண்ராஜா, சட்ட ஆலோசகர் எஸ்.விஜி மற்றும் திமுக பொதுக் குழு உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    • விதை தொகுப்புகளை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கூடுதல் விவரம் பெறலாம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் விதை தொகுப்பு மற்றும் புல்கறணைகளை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், வயது 18 முதல் 65 வரையிலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அல்லது உறுப்பினராக சேர வேண்டும். பயனாளிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் புல் கறணைகளுடன் பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி வழங்கப்படும்.

    இத்திட்டம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையதளம் மூலம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களின் சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அடையாள அட்டை, நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், புல வரைபடம் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், மேலும் இத்திட்டத்திற்கு கூடுதலாக கோரப்படும் ஆவணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் அறை எண் 225-ல் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து கூடுதல் விவரம் பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 36 ஆயிரத்து 691 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    அரியலூர்:

    கொல்லாபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 23 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 9 ஆயிரத்து 621 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்."

    • மரக்கிளையில் சிக்கி மான் உயிரிழந்தது
    • மானை வனப்பகுதியில் புதைத்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், வெளிப்பிரிங்கியம் வனப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளை இடையே ஒரு மான் சிக்கி இறந்த நிலையில் காணப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அரியலூர் வனத்துறை அதிகாரி முத்துமணி, வனத்துறை காப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த மானை கைப்பற்றினர். பின்னர் கீழப்பழுவூர் கால்நடை மருத்துவர் உதவியுடன், அந்த மானை உடற்கூறு பரிசோதனை செய்து, பின்னர் மானை வனப்பகுதியில் புதைத்தனர்.

    • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது
    • மாநில தலைவர் கலந்து கொண்டு பேசினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநித்துவ பேரவைக் கூட்டம் மற்றும் பயற்சி முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த அப்போதையை எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான பிறகு அரசு ஊழியர்களின் உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கிறார்.

    தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றாலும் அவர்களிடம் யாசகம் பெற்று எந்த சலுகையும் பெறவில்லை. அவர்களிடமிருந்து போராட்டம் நடத்தியே அனைத்து சலுகைகளையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    தற்போது இளைஞர்களுக்கு சமூக அநீதியை விளைவிக்கக் கூடிய வகையில், அரசு வேலைக்காக ஆட்களை தேர்வு செய்ய தனியார் நிறுவனத்தை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையால் இனி வேலைவாய்ப்பு அலுவலகம், டிஎன்பிஎஸ்சி தேவையில்லை.

    இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள 1 கோடி இளைஞர்களுக்கு தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது. இதனால் இந்த ஆட்சி மீது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், இளைஞர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.

    எனவே சமூக நீதியை பேசிக் கொண்டு திராவிட மாடல் என சொல்லிக் கொள்ளும் இந்த அரசிடமிருந்து உரிமையை மீட்க சென்னையில் நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கூடுவோம் என்றார்.

    கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் மலர்விழி, துணைச் செயலர் வாசுகி, மாவட்டச் செயலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் வரவேற்றார்.

    • கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    • நோய்கள் பரவும் நிலை உள்ளது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் நிலை உள்ளது. இதனை தடுக்க நீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியாகாத வகையிலும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அரியலூர் நகரில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனம் விரைவாக செல்வதால் முறையாக கொசு மருந்து அடிக்கப்படவில்லை என்றும், தெருக்களில் சந்துகளில் உள்ள வீடுகளில் கொசு மருந்து அடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 2- வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ஏற்கனவே திருமணமானதை மறைத்து

    அரியலூர

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடத்தை அடுத்த காங்குழி கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன்(வயது 34). இவர் தனக்கு திருமணமானதை மறைத்து தற்போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து, நலுங்கு உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் செய்திருந்தனர். இந்நிலையில் திருமண நாள் அன்று திருமணம் நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக கலைச்செல்வனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து திருமணத்திற்காக சுமார் ரூ.3¼ லட்சம் செலவு செய்துள்ளோம், இது மட்டுமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்று கூறி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

    ×