என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம்
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது
- மாநில தலைவர் கலந்து கொண்டு பேசினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநித்துவ பேரவைக் கூட்டம் மற்றும் பயற்சி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த அப்போதையை எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான பிறகு அரசு ஊழியர்களின் உரிமைகளை படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் எந்த ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றாலும் அவர்களிடம் யாசகம் பெற்று எந்த சலுகையும் பெறவில்லை. அவர்களிடமிருந்து போராட்டம் நடத்தியே அனைத்து சலுகைகளையும் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தற்போது இளைஞர்களுக்கு சமூக அநீதியை விளைவிக்கக் கூடிய வகையில், அரசு வேலைக்காக ஆட்களை தேர்வு செய்ய தனியார் நிறுவனத்தை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையால் இனி வேலைவாய்ப்பு அலுவலகம், டிஎன்பிஎஸ்சி தேவையில்லை.
இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள 1 கோடி இளைஞர்களுக்கு தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது. இதனால் இந்த ஆட்சி மீது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், இளைஞர்களும் கடும் கோபத்தில் உள்ளனர்.
எனவே சமூக நீதியை பேசிக் கொண்டு திராவிட மாடல் என சொல்லிக் கொள்ளும் இந்த அரசிடமிருந்து உரிமையை மீட்க சென்னையில் நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கூடுவோம் என்றார்.
கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் மலர்விழி, துணைச் செயலர் வாசுகி, மாவட்டச் செயலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் தாவூத் வரவேற்றார்.






