என் மலர்
அரியலூர்
- உரிய வகையில் அனுமதி பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை...
- ஜல்லிகட்டு நடத்த விதிமுறைகள் அறிவிப்பு
அரியலூர்,
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டுகீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு முதல், கோவிட்-19 பெருந்தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கோவிட்-19 பெருந்தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன், கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்று பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளை உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக் கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் - ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் விழாக் குழுவினர் கீழ்க்கண்ட விவரங்களுடன் முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும்.
கிராம விழாக்குழுவினரின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விண்ணப்பம். காப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீடு நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்திரவாத பத்திரம். இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான அரசாணை நகல். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளின் எண்ணிக்கை. ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ள மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை. கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததில், அசாம்பாவிதம் ஏதேனும் நடந்திருப்பின், அதற்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதற்கான நகல். கடந்த ஆண்டு தங்கள் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்ற காளைகளில், காயம் அடைந்த காளைகளின் எண்ணிக்கை மற்றும் விவரம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் தல வரைபடம். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தின் மொத்தப் பரப்பளவு. காளைகள் ஓடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் பரப்பளவு. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் மொத்த இடத்தின் வரைபடம். ஜல்லிக்கட்டு களம் அமைத்திடும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்த கடித நகல்.
மேற்கண்ட தங்களது ஆவணங்களை மூன்று நகல்களில் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அறிவிக்கை செய்யப்படாத கிராமம் எனில் இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான ஆதாரம் (புகைப்பட ஆதாரம், செய்தி நறுக்கு, செய்தித்தாள், கல்வெட்டு ஆதாரம், கிராம பஞ்சாயத்து தீர்மானம், துண்டு பிரசுரம்., போன்றவை) ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த தொடர்புடைய குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை தொடர்புடைய குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளை உரிமையாளர், ஒரு உதவியாளர் மற்றும் காளை விவரங்களை நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை, அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி எதுவும் பெறாமல் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
- விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த விளையாட்டு அகாடமியை தொடங்க வேண்டும்
- காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டு அகாடமி தொடங்க வேண்டும் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்ட விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த விளையாட்டு அகாடமியை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொருப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மாரடைப்பால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேராவுக்கு இரங்கல் தெரிவிப்பது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து பாஜக அரசின் செயல்பாடுகளை மக்களிடம் விளக்கிச் சொல்வது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை விளக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ. சங்கர் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் நகர தலைவர் அறிவழகன், பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகர், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், கர்ணன், அழகானந்தம், கண்ணன், கங்காதுரை, வேல்முருகன், மகளிர் அணித் தலைவி மாரியம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர தலைவர் மா.மு.சிவகுமார் வரவேற்றார். முடிவில் மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜசேகரன் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
- அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த சங்கம்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைமை குற்றவியல் நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் பொன்.சண்முகம் மாவட்ட தலைவராகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 அலுவலக உதவியாளர் பாஸ்கர் மாவட்ட செயலாளராகவும், முதன்மை சார்பு நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் நல்லதம்பி மாவட்ட பொருளாளராகவும், குடும்ப நல நீதிமன்றம் முதல் நிலை எழுத்தர் உதயகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் வேல்முருகன், மகிளா கோர்ட் அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன், ஆகியோர்கள் மாவட்டத் துணைத் தலைவராகவும், மகிளா விரைவு நீதிமன்ற முதல் நிலை சுருக்கெழுத்து தட்டச்சர் தினேஷ், முதன்மை மாவட்ட நீதிமன்ற உதவியாளர் மதன்குமார், சார்பு நீதிமன்ற நகல் பரிசோதகர் பாஸ்கரன் ஆகியோர்கள் மாவட்ட துணைச் செயலாளராகவும், முதன்மை மாவட்ட நீதிமன்ற முதுநிலை கட்டளை பணியாளர் வடிவேல், ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற இளநிலை கட்டளை பணியாளர் பாரத், ஆகியோர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடந்த ஆட்சியில் வழங்கியது போன்று பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சமூட்டும் வகையில் நடைபெறும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் வழங்கியது போன்று பொங்கல் தொகுப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் பி.துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் கே.கிருஷ்ணன், பொருளாளர் கே.கண்ணன், துணை தலைவர் சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொழிற் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
- அரசு பள்ளியில் ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது
- மாணவர்களுக்கு பல்வேறு ஆசனங்களை விரிவுரையாளர் தமிழ்வேந்தன் செய்து காண்பித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலை பள்ளியில், உலக உடல் மன ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசினார். வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஜெகதீஸ்வரன், தமிழ்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு ஆசனங்களை விரிவுரையாளர் தமிழ்வேந்தன் செய்து காண்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
- கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
- மருத்துவ குழுவினர் 300 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு ஊசி செலுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர்
அரியலூர்:
அரியலூர் அடுத்த மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் சங்கீதா அசோக் குமார் தொடக்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவகுழுவினர், பெரியமணக்குடி, சின்ன மணக்குடி, மணக்குடி காலனி உள்ளிட்ட பகுதியிலுள்ள 300 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு ஊசி செலுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். முகாம் முடிவில் மணக்குடி ஊராட்சி துணைத் தலைவர்பாப்பா பரமசிவம் நன்றி கூறினார்.
- சிவன், பெருமாள் கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்
- வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கிராமத்தில் முகாம் செய்து விசாரணை மேற்கொண்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில் தெரிவித்துள்ளதாவது, அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம் ஊராட்சிக்குட்பட்ட சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் உள்ளிட்ட இரு கோவில்களில் மாற்று சமுதாயத்தினரைச் சேர்ந்தவர்கள் வழிபட முடியாத நிலையில் உள்ளது எனத் தகவல் வரப்பெற்றது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மேற்படி கிராமத்தில் முகாம் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி கோவிலுக்குள் அனைத்து சமூகத்தினரும் எவ்வித பாகுபாடுமின்றி சென்று வழிபட எவ்வித தடை இல்லை எனவும், இதனில் எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை என்பதும், மேற்படி கோயிலுக்கு சென்று வழிபட எந்த சமூகத்தினருக்கும் இதுவரை தடை ஏற்படுத்தப்படவில்லை என்பதும், அனைத்து சமூகத்தினரும் சுமூகமாக வழிபட்டு வருகின்றனர் எனவும் விசாரணையில் தெரிவிய வருகிறது. எனவே, மேற்படி கிராமத்தில் அமைந்துள்ள மேற்படி கோவில்களில் அனைத்து சமூகத்தினரும் சுமூகமான முறையில் சென்று வழிபடலாம் என அறிவித்துள்ளார்.
- ரீடு தொண்டு நிறுவனத்தில் வெளிநாட்டினர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்
- பவளிநாட்டினர் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ரீடு தொண்டு நிறுவனத்தின் அன்பகத்தில் 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய இல்லம் செயல்பட்டு வருகிறது. மேலும் சுமார் 30க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குறைபாடு உடைய பெண்கள் தொழில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த காப்பகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு அமெரிக்காவில் வசிக்க கூடிய மருத்துவர் கேயன் வான் ராம்பே, ராபின், வேர்லி ஆகியோர் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கொண்டாட அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் தமிழரின் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். அங்கிருந்த மாற்று திறனாளிகள், பெண்கள், குழந்தைகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, கும்மி அடித்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். செங்கரும்புடன் கூடிய பொங்கல் பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு வழிபாடு செய்வதை நேரில் பார்வையிட்டு அதன் விளக்கத்தையும் கேட்டறிந்தனர். பின்னர் அனைவரும் பொங்கல் உணவை உண்டு மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையில் தாங்களும் கலந்து கொண்டு பங்கேற்று சிறப்பித்தது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது என்று கூறினர். நீடு நிறுவனத்தில் இருந்தவர்களும் இவ்வாண்டு வெளிநாட்டினர் தங்களுடன் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.
- அரியலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வள்ளி, தேவசேனா சமேத வில்லேந்தி வேலவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
வள்ளி, தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பிரகார பிரதட்சணம் செய்யப்பட்டது. இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தர நாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலிலும், கோடாலி கருப்பூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலிலும், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் உள்பட தா.பழூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
- அரியலூர் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைத்தீர்ப்பாளர் நியமிக்கபட்டுள்ளார்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை குறைத்தீர்ப்பாளியிடம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி, அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக வைத்தீஸ்வரன் குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மேற்கண்ட திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரின் 8925811301 என்ற எண்ணிலும் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுங்கச்சாவடி மேற்பார்வையாளரை தாக்கிய பா.ம.க. நகர செயலர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
- பலத்த காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
அரியலூர்:
உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் கீழவெளி பட்டியடி தெருவைச் சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன்(வயது33). மணகெதி சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கச்சாவடியை கடக்க முயன்ற காரில் உள்ளவர்களிடம் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளார்.அப்போது அந்த காரில் இருந்த பா.ம.க. அரியலூர் நகரச் செயலர் விஜி, அக்கட்சியை சேர்ந்த கோவிந்தபுரம் நந்தகுமார், காட்டுப்பிரிங்கியத்தை சேர்ந்த கருணாநிதி மகன் முத்து உள்பட 8 பேர் சேர்ந்து, எங்க காரையே மறிக்கிறாயா என கூறி தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில், வெங்கடேசனை தாக்கிய மேற்கண்ட 8 பேர் மீதும் உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடாரங்கொண்டான் அரசு பள்ளியில் வானவில் மன்றம் நடைபெற்றது
- ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் உற்று நோக்கங்களின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களிடையே எடுத்துரைத்தார். கல்வித் துறை சார்பில் அறிவியல் தூதுவராக கலந்து கொண்ட சதீஷ்குமார், அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்திய பெர்னௌலி தத்துவம், ஸ்பிரேயர் செயல்படும் விதம், நீர் சூழல் மற்றும் அதன் தாக்கம், வாயுக்களில் அழுத்தம் வேறுபாடு, பருமப்பொருள்களில் அழுத்தம் போன்ற செயல்பாடுகளை செய்து காட்டி மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் புஷ்பவல்லி, சவேரியம்மாள், இளமுருகு ஆகியோர் செய்திருந்தனர்.






