என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூர் நீதித்துறை ஊழியர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
    • தலைமை குற்றவியல் நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் பொன்.சண்முகம் மாவட்ட தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் பணிபுரியும் கோர்ட் ஊழியர்கள் ஒருங்கிணைந்த அரியலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைமை குற்றவியல் நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் பொன்.சண்முகம் மாவட்ட தலைவராகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 1 அலுவலக உதவியாளர் பாஸ்கர் மாவட்ட செயலாளராகவும், முதன்மை சார்பு நீதிமன்ற இரண்டாம் நிலை எழுத்தர் நல்லதம்பி மாவட்ட பொருளாளராகவும், குடும்ப நல நீதிமன்றம் முதல் நிலை எழுத்தர் உதயகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் வேல்முருகன், மகிளா கோர்ட் அலுவலக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மாவட்டத் துணைத் தலைவராகவும், மகிளா விரைவு நீதிமன்ற முதல் நிலை சுருக்கெழுத்து தட்டச்சர் தினேஷ், முதன்மை மாவட்ட நீதிமன்ற உதவியாளர் மதன்குமார், சார்பு நீதிமன்ற நகல் பரிசோதகர் பாஸ்கரன் ஆகியோர் மாவட்ட துணைச் செயலாளராகவும், முதன்மை மாவட்ட நீதிமன்ற முதுநிலை கட்டளை பணியாளர் வடிவேல், ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற இளநிலை கட்டளை பணியாளர் பாரத், ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


    • வளர்ச்சி திட்ட பணிகளை ஊராட்சி துறை ஆணையர் ஆய்வு செய்தார்
    • அரசின் திட்டப்பணிகளை தங்குதடையின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு கிராமங்களில் ரூ.1.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அஹமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை கணக்கெடுப்பு பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம், ஆன்லைன் வரி, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் போன்ற திட்டப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில், இத்திட்டத்தில் செயல்படும் ஊராட்சிகளின் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து கேட்டறிந்து, அரசின் திட்டப்பணிகளை தங்குதடையின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். 

    மேலும், அரசு அலுவலர்கள் அரசின் பணிகள் மக்களுக்கு சென்று சேரும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    • ஜெயங்கொண்டம் அருகே சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை எப்படி பெறுவது என விளக்கி பேசினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு மற்றும் ஜெயங்கொண்டம் சட்ட பணிகள் குழு இணைந்து நடத்தும் இலவச சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சட்ட விழிப்புணர்வு அறிக்கையில் சட்டத்தினை பற்றி அனைத்து பிரிவு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    முகாமில் தலைவர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, செயலாளர் சார்பு நீதிபதி, தலைவர் சார்பு நீதிபதி, சட்ட பணிக்குழு ஜெயங்கொண்டம் நீதிபதிகள் ஆகியோர் பேசியதாவது:- சிவில் வழக்குகள் சம்பந்தமாக குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் வழக்குகளை நேரடியாக நீதிமன்ற நடைமுறையில் அல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு பெற மக்கள் நீதிமன்றம் நடுவர் அரங்கங்கள் பற்றிய விழிப்புணர்வு, மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை எப்படி பெறுவது, காசோலையில் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சரி செய்வது, குறித்தும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குறித்தும் பொதுமக்கள் அவர்களது பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பன குறித்து விளக்கி பேசினர்.


    • அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் முக்காடு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும், பணியின்போது உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார் விளக்க உரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ஞானசம்பந்தம், உதயசூரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • அரியலூரில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
    • இம்முகாமில் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கினர்.

    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், மகளிர் திட்டம், ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிக்கான ஆணையை அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் சின்னப்பா வழங்கினார். மேலும் அவர் பேசியதாவது:- ஒருவர் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த பதவிகளை பெறும் போது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவரது வாழ்க்கைதரம் உயர்வடைகின்றது. எந்த வேலையாக இருந்தாலும் உழைப்பு, நேர்மை இருக்க வேண்டும். பெண்கள் திருமணத்துக்கு பிறகு சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஆகவே தான் இது போன்று பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    எனவே இந்த அரிய வாய்ப்பினை ஒவ்வொரு இளைஞர்களும் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் முருகண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார். இம்முகாமில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 22 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கினர்.


    • போலீசாரின் சிறப்பு முகாமில் 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • மற்ற மனுக்கள் மீது தீர்வு காண மேல் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜாசோமசுந்தரம், வெங்கடேசன், சங்கர் கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 25 மனுக்களில், 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது தீர்வு காண மேல் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.




    • பொங்கல் தொகுப்பிற்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு ேதாட்டத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்
    • கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்

    அரியலூர்:

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 2,46,210 முழுக்கரும்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின்தரம், உயரம் ஆகியவை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    அதன் அடிப்படையில் சுந்தரேசபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.அப்போது விவசாயிகளிடம், கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கக் கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்பவேண்டாம் என்றார். இந்த ஆய்வின்போது,மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


    • தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆணைய நீதிபதி பேசினார்
    • பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வழக்குரைஞர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த மாநாட்டில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராக உள்ளதால் தேசத்தின் நுகர்வோர் நீதி நிர்வாகம் வலிமையாக இருக்க வேண்டும். இதனை வலுப்படுத்த நுகர்வோர்களும், வழக்குரைஞர்களும் முன் வரவேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில், 60- க்கும் மேற்பட்ட வகையான பிரச்னைகளுக்கு புகார் தாக்கல் செய்யவும், பலவகையான தீர்வுகளை பெறவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது. இணையதளம் மூலம் நடத்தப்படும் விளையாட்டு போட்டி போன்ற தன்மையிலான வணிகங்கள் உட்பட அனைத்து வகையான நுகர்வோரின் இணையதள பயன்பாடுகளில் பிரச்னை ஏற்படும் போது எங்கு அணுகுவது என்ற குழப்பமான நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மாறிவரும் இணையதள யுகத்தில் ஏற்படும் இத்தகைய சவால்களை முறியடிக்கவும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வழிவகுத்துள்ளது. பாதிக்கப்படும் நுகர்வோர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து நுகர்வோர் நீதியைப் பெற நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம். பணம் செலுத்தி பெறக்கூடிய பொருள்கள் மற்றும் சேவைகள் குறித்த பிரச்னைகளுக்கு மட்டுமே நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக இயலும். கட்டணம் இல்லாமல் அரசு வழங்கும் பல்வேறு சேவைகளில் பிரச்னை ஏற்படும்போது மக்களுக்கு நீதி வழங்க தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்களை மேற்கொண்டு நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் சேவை உரிமை தீர்ப்பாயங்களாக மாற்றலாம். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் நமது மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். மாநாட்டில், வழக்குரைஞர் சங்கச் தலைவர் மனேகோரன், செந்துறை வழக்குரைஞர் சங்கத் தலைவர் சின்னதுரை, அரியலூர் வழக்குரைஞர் சுகுமார் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு வழக்குரைஞர் ஏ.கதிரவன் வரவேற்றார். முடிவில் அரியலூர் மாவட்ட வழக்குரைஞர் சங்கச் செயலர் வி.முத்துகுமார் நன்றி தெரிவித்தார்.


    • ஜெயங்கொண்டத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது
    • ஏற்கனவே சங்கத்தில் 25 ஆட்டோக்கு மேல் இருப்பதால் சவாரி சரியான முறையில் கிடைக்கவில்லை என தெரிவித்து அவர்களை சங்கத்தில் சேர்க்காமல் இருந்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் 20 வருடத்திற்கு மேலாக ஆட்டோ டிரைவர்கள் சங்கம் அமைத்து இருந்து வந்தனர். அந்த சங்கத்தில் டிரைவராக இருந்தவர்கள் புதிதாக ஆட்டோ வாங்கிக் கொண்டு எங்களையும் சங்கத்தில் சேர்த்துக் கொள் வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் ஏற்கனவே சங்கத்தில் 25 ஆட்டோக்கு மேல் இருப்பதால் சவாரி சரியான முறையில் கிடைக்கவில்லை என தெரிவித்து அவர்களை சங்கத்தில் சேர்க்காமல் இருந்தனர். அவர்கள் புதிதாக ஆட்டோ சங்கம் அரசு பதிவு செய்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் சங்க பேனரை யாருக்கும் சொல்லாமல் யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல் வைத்தனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த பேனரை கிழித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் இருதரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை நகராட்சி ஆணையர் திருமூர்த்தி, காவல் ஆய்வாளர் வேலுச்சாமி உள்ளிட்டவர்கள் தலைமையில் ஜெயங்கொண்டம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அழைத்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் மிகுந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் புதிதாக ஆரம்பித்த ஆட்டோ சங்கத்தை பேருந்து நிலையத்தில் அமைக்க கூடாது. இதனால் பல வருடங்களாக சங்கம் வைத்து ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். எனவே நீங்களும் ஏற்கனவே இருந்த சங்கத்தில் ஒற்றுமையாக இருந்து ஆட்டோவை போட்டுக் கொள்ள வேண்டுமென்று ஒருமனதாக பேச்சுவார்த்தை முடிந்தது. மேலும் ஜெயங்கொண்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஆட்டோ உரிமங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் அனைத்தையும் காவல் நிலையத்தில் தர வேண்டும், உங்களுடைய மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆட்டோ டிரைவர்களிடம் வட்டாட்சியர் துறை ஆய்வாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.


    • திருமானூர் அருகே கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • முகாமில் 380 பசுக்களும், 560 வெள்ளாடுகளும், 180 கோழிகளும் பயன்பெற்றன.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டிராதீர்த்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம் என்ற கணக்கில் மொத்தம் 120 முகாம்கள் நடைபெற உள்ளது. கண்டிராதீர்த்தம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற முகாமை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். முகாமானது ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் 380 பசுக்களும், 560 வெள்ளாடுகளும், 180 கோழிகளும் பயன்பெற்றன. மேலும் சிறப்பாக வளர்க்கப்படும் 10 கிடேரி கன்றுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டம், அரசு திட்டங்களையும், வங்கிகள் மூலம் வழங்கப்படும் வேளாண் கடன் அட்டை ஆகியவற்றை பெற விண்ணப்பங்களும் வழங்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு வரும் தொற்று நோய்கள் பற்றியும் அது வராமல் இருப்பதற்கான விளக்கங்களையும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மூலம் விளக்கப்பட்டது. குறிப்பாக கால்நடைகளுக்கு தற்போது பரவி வரும் தோல் கழலை நோயிற்கான தடுப்பூசி 380 மாடுகளுக்கு செலுத்தப்பட்டது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீதுஅலி மற்றும் உதவி இயக்குநர் மருத்துவர் ரிச்சர்ட் ராஜ் தலைமை வகித்தனர். இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் பிரபாகரன், மணிகண்டன், அருண் நேரு, கால்நடை ஆய்வாளர் செல்வராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி கருத்தரங்கு
    • மாணவர்கள் தொழிற்சார்ந்த கல்வியை தேர்வு செய்து, அதனை திட்டமிட்டு படித்தால் தொழில்முனைவோர்களாகி விடலாம்

    அரியலூர்,

    மாணவர்கள் தொழிற்சார்ந்த கல்வியை தேர்வு செய்து, அதனை திட்டமிட்டு படித்தால் தொழில்முனைவோர்களாகி விடலாம் என்று  திருச்சி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் மு.சந்திரன் பேசி உள்ளார். அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி விழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை அவர் தொடக்கி வைத்து மேலும் பேசியது: இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுபவர்களின் கருத்துகளை மாணவ, மாணவியர்கள் நன்கு கூர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுடைய திறமைக்கேற்ப வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்வு செய்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் இணையதளத்தில் வேலைவாய்ப்பு தகவல்களை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்திட வேண்டும். தொழிற்சார்ந்த தொழிற்கல்வியை தேர்வு செய்து, திட்டமிட்டு படித்திட வேண்டும். நேர்முக தேர்வுகளை ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் எதிர்கொள்ள வேண்டும். மேலும், வாசிக்கும் திறன்களை வளர்த்துக்கொண்டு, படிப்பு சார்ந்த புத்தகங்கள் மட்டுமல்லாமல் ஏனைய அறிவியல் மற்றும் தொழில்சார்ந்த புத்தகங்கள்,, பொது அறிவு புத்தகங்களை படித்து, தொழிற் முனைவோர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகி தங்கள் தேவைக்கேற்ப கடனுதவி பெற்று, தலைச்சிறந்த சுயதொழில் முனைவோர்களாக உருவாக்கிக்கொள்ள வேண்டும் என பேசினார். கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான ஆய்வுக் கூட்டம்
    • மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அரியலுார்,

    அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் தலைமையில் நடைபெற்றது.அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பான ஆய்வுக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, 01.01.2023-ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு, அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் 2023-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றைய தினம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் 05.01.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்காளர்களை நீக்குதல் மற்றும் சேர்த்தல் ஆகியவை முறைப்படி நடைபெற்றுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து, வாக்காளர் தினவிழா முன்னேற்பாடுகள் குறித்தும் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

    ×