என் மலர்
அரியலூர்
- சவுதியில் இறந்த தந்தையின் உடலை மீட்டுத்தரக் கோரி மனு அளித்தார்.
- எனது தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
செந்துறை அடுத்த சோழன்குடிகாடு , மணபத்தூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கவியரசன். இவர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், சௌதி அரேபியாவில் வேலைக்கு சென்றிருந்த எனது தந்தை ரவிச்சந்திரன், இறந்து விட்டதாக தொலைப் பேசி மூலம் தகவல் வந்தது. எனவே எனது தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரியலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம், இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, மாவட்ட அணி செயலாளர் மாணவரணி சங்கர், மகளிர் அணி ஜீவா, இளைஞரணி சிவசங்கர், வக்கீல் அணி வெங்கடாஜலபதி, பொதுக்குழு உறுப்பினர் செல்லையா, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சாமிநாதன், வடிவழகன், அசோகன், வைத்தியநாதன், மருதமுத்து, ராமச்சந்திரன், கல்யாணசுந்தரம், விக்ரம் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, செங்கமலை, பாஸ்கர், நகரச் செயலாளர் செந்தில், செல்வராஜ், பேரூராட்சி செயலாளர் அழகேசன், ஸ்டீபன் ராஜ், முன்னாள் அரசு வக்கீல் சாந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் அரசு கொறடா ராஜேந்திரன் பேசுகையில்:- அ.தி.மு.க. நிறுவன தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரியலூரில் வரும் 20-ம் தேதி நடைபெறுகின்றது. எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அரியலூர் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு கொடுப்பதுடன் பொதுக் கூட்டத்தையும் சிறப்பான முறையில் நடத்திக் காட்ட வேண்டும், குறுகிய காலம் உள்ள நிலையில் அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசினார். முடிவில் நகரச் செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
- அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மைய கூட்டம்
- அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மைய கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அரியலூர்:
அரியலூர் வாலாஜா நகரத்திலுள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மைய கூட்டம் நடைபெற்றது. ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்குரைஞர்கள் மோகன், கதிரவன், இளவரசன், ஜெயராமன் மற்றும் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், நுகர்வோர் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதிக்கும் வகையில் அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட ஆய்வரங்கம் ஒன்றை நடத்துவது, இந்த ஆய்வு அரங்கத்தை நடத்துவதற்கு விருப்பமுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து மனுக்கள் பெறுவது, அரியலூர் மாவட்டத்தை நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக மாற்றும் வகையில் 50 தன்னார்வலர்களை தேர்வு செய்து நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நீதிபதி ராமராஜ் பேசியதாவது:- நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பெற விருப்பமுள்ள இளைஞர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் விவரங்கள் அடங்கிய சுயகுறிப்புடன் பயிற்சியில் கலந்துகொள்ள அஞ்சல் மூலம் சமரச மையம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாலாஜா நகரம், அரியலூர் என்ற முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்றார்.
- சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை
- மேலும் சிறுமிக்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு வழங்குமாறும் உத்தரவிட்டார்.
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்(வயது60). இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளங்கோவனை போக்சோ சட்டத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில், இளங்கோவனுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு வழங்குமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து இளங்கோவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.
- டாஸ்மாக் கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
- வழியாக சென்றவர்கள் உடனடியாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிகுறிச்சி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகின்றது. இரும்புலிக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் இங்கு வந்து மது அருந்தி செல்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து கடையின் விற்பனையாளர் சுப்பிரமணியன், விற்பனை பணம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்தை அங்குள்ள லாக்கரில் வைத்து பூட்டி சாவியை அதன் அருகிலேயே வைத்து விட்டு சென்றுள்ளார்.
இன்று காலை டாஸ்மாக் கடையின் பக்கவாட்டில் உள்ள ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விற்பனையாளர் சுப்ரமணியன் கடைக்கு வந்து பார்த்தபோது நேற்று விற்பனையாகி லாக்கரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மேலும் மது பாட்டில்களும் திருடப்பட்டு இருந்தன.
நள்ளிரவில் கடைக்கு வந்த கொள்ளையர்கள் தாங்கள் சிக்காமல் இருப்பதற்காக அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவை துணியை வைத்து மூடி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- அரியலூர் கல்லங்குறிச்சி கிராமத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
- வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார்
அரியலூர்:
அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சி கிராமத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை சார்பில் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் மற்றும் பேரணியை கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மருந்து செலுத்துவதன் மூலமாகவும், தெரு நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து வெறி நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலமாகவும் வெறி நோய் பரவலை தடுக்க முடியும். வெறி நோயின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் அறிய செய்தல், வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி அளித்தல், நாய் கடித்தவுடன் உடனடியாக உரிய மருத்துவ ஆலோசனை பெறுதல், எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவ முறைகளை மேற்கொள்ளாதிருத்தல் ஆகியன வெறி நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான முதல் படியாக அமையும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் வளர்க்கும் நாய்களை கொண்டு வந்து வெறி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், வெறி நோய் இல்லா உலகை உருவாக்க கால்நடை பராமரிப்புத்துறையுடன் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்றார். இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஹமீதுஅலி மற்றும் கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனை உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் நகராட்சியில் புகையில்லாமல் போகி கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
- நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாது:- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். அதில் ஏற்படும் குப்பைகளை புது இடங்களில் கொட்டாமல் தங்கள் பகுதிக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து அவர்களிடம் தர வேண்டும். போகிப் பண்டிகை அன்று குப்பைகளை தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கும் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம். மேலும் நகராட்சி விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
- ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யபட்டனர்
- தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள மாநில உரிமைகளையும் பாதுகாக்க கூட்டாட்சி கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டும் என கூறி ஆளுநர் ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 பேரை ஜெயங்கொண்டம் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
- ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 61 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
- உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் கூறினார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப் பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
இதில் 61வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ( நி. எ) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.
இந்த மக்கள் நீதிமன்றத்தினை மாவட்ட அமர்வு நீதிபதியும் சட்டப்பணி குழு தலைவருமான மகாலட்சுமி துவங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா, ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி, அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் அருகே வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இன்று காலை நிழற்குடையின் மேல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பலகையில் திருமாவளவனின் படம் கிழிக்கப்பட்டிருந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர் கிராமம் அண்ணாநகர் பேருந்து நிறுத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. பயணியர் நிழற்குடையின் மேல்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனின் புகைப்படத்துடன் கூடிய பெயர் பலகை ஒட்டப்பட்டு இருந்தன. இந்நிலையில் இன்று காலை நிழற்குடையின் மேல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பலகையில் திருமாவளவனின் படம் கிழிக்கப்பட்டிருந்தது.
இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆண்டிமடம் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராசாப்பிள்ளை முன்னிலையில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலை ஓலையூர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி. ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் கண் கொளஞ்சி, அன்பானந்தம், தனக்கோடி, கருப்புசாமி, கதிர்வளவன், இலக்கியதாசன், சின்ன ராஜா, இளவரசன், சுதாகர், வேல்முருகன், செல்வராஜ், சீனிவாசன், கோவிந்தசாமி, சிவகுமார், ஜெயராஜ், வீரபாண்டியன், ஆசிரியர் சுந்தர், மணிமொழியான், சிவக்குமார், சுரேஷ், சடையன் பேரன், அய்யாதுரை, சிவக்குமார், சக்கரவர்த்தி, மகாராஜன், பொன்னுசாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆற்றை ஆக்கிரமித்துள்ள
- கருவேல மரங்களை அகற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர்
மழவராயநல்லூர் மருதையாற்று படுகை பகுதிகளில் வன விலங்குகள் தொல்லை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் மருதையாறு தூர்ந்து போன நிலையில் முட்புதர்கள் மண்டி கிடப்பதால், மழை பெய்யும்போது வெள்ள நீர் விவசாய நிலத்தில் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. இதுவும் எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றினால் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- நர்சுகள் முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக நர்சுகளுக்கு பணி பாதுகாப்பு மற்றும் தொகுப்பூதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நர்சுகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பும், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நர்சுகள் தங்களது கோரிக்கையை தபால் அட்டையில் மனுவாக எழுதி, அரியலூர் தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் போட்டனர். இதில் கைக்குழந்தையுடன் வந்தவர்கள், கர்ப்பமாக உள்ளவர்கள் உள்பட திரளான நர்சுகள் பங்கேற்றனர். பின்னர் நர்சுகள் கூறுகையில், கொரோனா காலகட்டத்தில் இறைவனின் தேவதைகள் என நர்சுகளை போற்றினர். அப்போது பல உயிர்களை காப்பாற்றினோம். ஆனால் தற்போது பல்வேறு கட்ட இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஆனால் தற்போது எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே தமிழக அரசு, எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றனர்.






