என் மலர்
அரியலூர்
- கால பைரவருக்கு முளைப்பாரி பூஜை
- கால பைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்தபுரம் ஸ்ரீகாலபைரவருக்கு முளைப்பாரிகை பூஜை நடைபெற்றது. இந்த கோயில் கடந்த 2015-ம் ஆண்டு கட்டப்பட்டு, ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. சிவனின் பருவத்திலிருந்து தோன்றிய ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் முன்வினை நீ்ங்கி, திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, கடன் பிரச்சினை, கல்வியில் மேன்மை, பெருவாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு கடந்த மாதம், பக்தர்கள் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டிகளை உருவாக்கி வளர்த்து வந்தனர். இந்நிலையில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக முளைப்பாரிகளை எடுத்துவந்தனர். தொடர்ந்து காலப்பைரவருக்கு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் முளைப்பாரிகையை மக்கள் விட்டு வழிபாடு செய்தனர். வழிபாட்டிற்கான ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவரை வணங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
- மாவட்டங்களில் நடந்த வேட்டையில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
- அரியலூரில் 8 ரவுடிகளுக்கு கடந்த 5 நாட்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது
அரியலூர்
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற ரவுடி வேட்டையில் மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 6 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் அடங்குவர். அவர்கள் வீடுகளிலும், மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு கொடூர ஆயுதங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ரவுடிகள் மீதும், அரியலூர் மாவட்டத்தில் 33 ரவுடிகள் மீதும் நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு, அரியலூரில் 8 ரவுடிகளுக்கு கடந்த 5 நாட்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் கீழ் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நடமாட்டங்கள் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் மற்றும் அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
மேலும் பொதுமக்களும் பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்ற செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பயணிகளிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
அரியலூர்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் தலைமையிலான போலீசார், அரியலூர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அவர்களின் பாதுகாப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல் இணைய வழி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அரியலூர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளிடம் இணைய வழியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், இணையத்தை எவ்வாறு கையாள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் மூடப்படுகிறது.
- மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரியலூரில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பேரணியில் 100 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு புகையில்லா போகி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்
அரியலூர்:
அரியலூர் நகராட்சியின் சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின்கீழ் புகையில்லா போகி கொண்டாடும் வகையில் புகை நமக்கு பகை, புகையில்லா போகி நமக்கு பெருமை என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் 100 மாணவ, மாணவி்கள் கலந்துகொண்டு புகையில்லா போகி கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கமிட்டும் பழைய நகராட்சி அலுவலகத்திலிருந்து, தேரடி, பெருமாள் கோவில் தெரு, சத்திரம் வழியாக மீண்டும் தேரடி, பெருமாள் கோவில் தெரு, பழைய நகராட்சி அலுவலகத்தில் வந்தடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன், நகராட்சி கமிஷனர் பொறுப்பு தமயந்தி, நகராட்சி மேற்பார்வையாளர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரியலூரில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது
- 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அரியலூர்:
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது, நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில், நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி முன்னிலையில், நகராட்சி கமிஷனர் பொறுப்பு தமயந்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன், கண்ணன், ரேவதி, மகாலட்சுமி, இன்பவள்ளி, முகமதுஇஸ்மாயில், மலர்கொடி, வெங்கடாஜலபதி, ஜெயந்தி, ராணி, ராஜேஷ், புகழேந்தி, ராஜேந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இளநிலை உதவியாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசித்தார், இதை தொடர்ந்து அரியலூர் நகராட்சிக்குட்பட்ட செட்டிஏரி முதல் சித்தேரி வரை உள்ள வாய்க்கால்களை தூர் வாருவது, அரியலூர் வார சந்தையில் உள்ள நுண்ணிய கலவை உரக்கிடங்கில் கசிவு நீர் தொட்டி அமைப்பது, திருச்சி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்பட்டு கீழப்பழுவூரில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் பிரதான கழிவு நீர் குழாய் மற்றும் மருதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரதான கழிவு நீர் குழாயினை தாங்கும் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்வது என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
- 34 பேருக்கு உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி ஆகியவை 45 நாட்கள் வழங்கப்பட்டன.
அரியலூர்
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 பேருக்கு உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி ஆகியவை 45 நாட்கள் வழங்கப்பட்டன. பயிற்சி காலம் முடிந்து அவர்கள் பணிக்கு செல்ல உள்ள நிலையில் பயிற்சி நிறைவு விழா அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் போலீசாருடன் இணைந்து நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம், அரியலூர் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அஸ்தினாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அஸ்தினாபுரம் வடக்கு தெருவைச்சேர்ந்த கல்வி (54) என்பவர் முருகன் கோவில் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- ஜெமீன் மேலூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
- கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த ஜெமீன் மேலூர் கிராமத்தில், மாவட்ட கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணரவு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் வைரம் அறிவழகன் தொடக்கி வைத்து கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து வருபவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஹமீது அலி, உதவி இயக்குநர்கள் சொக்கலிங்கம், ரிச்சர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் செல்வம், செந்தில் வீர இந்திரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செல்வராஜ், மேகநாதன், ஆனந்தநாயகி ஆகியோர் கொண்ட குழுவினர், கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனர். முகாமில் 1,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.
- அரியலூர் கோர்ட்டில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
- புது பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்பு வைத்து சூரிய பகவானை அனைவரும் வணங்கினர்.
அரியலூர்:
அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சங்கம், குமஸ்தா சங்கம், நீதிமன்ற பணியாளர்கள் சார்பில் தைப்பொங்கலை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மாவட்ட நீதிபதி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. புது பானையில் பொங்கல் வைத்து, செங்கரும்பு வைத்து சூரிய பகவானை அனைவரும் வணங்கினர். இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. பொங்கல் தின விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி கர்ணன், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணன், மகிளா நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், சப் கோர்ட் நீதிபதி ஜெயசூர்யா, நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி அறிவு, நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி செந்தில்குமார், முதன்மை மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி கற்பகவல்லி, கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட் நீதிபதி செந்தில்குமார், வழக்குரைஞர்கள், சங்கத் தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், செயலாளர்கள் முத்துக்குமார், செந்தில்குமார், பொருளாளர்கள் கொளஞ்சியப்பன், மோகன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மணி, சங்கர், முன்னாள் அரசு வழக்கறிஞர் சாந்தி, வக்கீல்கள், குமாஸ்தாக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தையுடன் காதலரை பட்டதாரி பெண் கரம் பிடித்தார்
- நர்மதாவை சந்துரு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குட்டைக்கரை காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சந்துரு (வயது24). டிப்ளமோ படித்த இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வில்வகுளம் ரெட்டித்தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் பட்டதாரியான நர்மதா(21) என்பவரை கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து காதலரிடம் தன்னை திருமணம் செய்ய கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நர்மதா அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்தது தெரிய வந்தது. பின்னர் இருதரப்பு பெற்றோரிடம் கூறி கோயிலில் வைத்து திருமணம் செய்து மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டுமென அனுப்பி வைத்தனர். இதையடுத்து நர்மதாவை சந்துரு ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். இதையடுத்து போலீசார் இருவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி காதல் கணவர் சந்துருவுடன் நர்மதாவை அனுப்பி வைத்தனர்.
- பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சத்தான உணவு பொருள்கள் வழங்கப்பட்டது
- இந்த உணவு பொருள்கள் அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும்.
அரியலூர்:
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர உணவு வழங்கும் பணியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா வழங்கி தொடக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த மாலை நேர சிறுதானிய சிற்றுண்டியான சுண்டல், பட்டாணி, பச்சை பயிறு, தட்டைப் பயிறு, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை ஆகிய சத்தான உணவு பொருள்களை உட்கொண்டு தங்களை தேர்வுக்கு தயார்படுத்திகொள்ள வேண்டும் .இது அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும். எனவே தொடர்ந்து படித்து அதிக மதிப்பெண்களை பெற மாணவ, மாணவிகள் தயாராக வேண்டும் என்றார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணை தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, துணை தலைவர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா, வார்டு உறுப்பினர் அருள்சாமி, கல்வி ஆர்வலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், தனலட்சுமி, பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, கோகிலா, கபிலஷா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். பொதுத் தேர்வு முடியும் வரை இந்த உணவுகள் வழங்கப்படுகிறது.






