என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    • கர்நாடக முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டர்.
    • இவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்த பெருமைக்கு உரியவர் ஜெகதீஷ் ஷெட்டர். அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக கட்சிக்கு எதிராக சில விஷயங்களைக் கூறி வந்துள்ளார்.

    இதனால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    கட்சியின் மூத்த தலைவரான ஷெட்டர் 6 முறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல் மந்திரி, சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என கட்சி அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே, ஜெகதீஷ் ஷெட்டர் இன்று கூறுகையில், கட்சியை சில தலைவர்கள் தவறாக கையாளுகின்றனர். கட்சி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். தனக்கு எதிராக சதி நடக்கிறது. அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் தனது பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அதற்கான பதவி விலகல் கடிதம் ஒன்றை சபாநாயகர் விஷ்வேஷ்வர் ஹெக்டே ககேரியை சிர்சி நகரில் வைத்து இன்று நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்து உள்ளார்.

    இதையடுத்து, அவரிடம் காங்கிரசில் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, நான் இன்னும் முடிவு செய்யவில்லை என பதிலளித்தார்.

    • பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை.
    • லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    பெங்களூரு :

    பெலகாவியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பா.ஜனதாவின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வந்த அவரது நிலைமை தற்போது என்ன ஆகி இருக்கிறது. ஈசுவரப்பாவின் இந்த நிலைமையை பார்த்தாலே பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

    பா.ஜனதாவின் முதல் மற்றும் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்பு நிறைய தலைவர்கள் சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளனர். சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருடன் நான் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. அவர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்.

    லட்சுமண் சவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதால், பெலகாவியில் எங்களுக்கு பெரிய சக்தி கிடைத்துள்ளது. பெலகாவியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அந்த கட்சிக்குள் மோதல் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • டிக்கெட் வழங்கும் விஷயத்தில் இன்று வரை கட்சி மேலிடத்தின் முடிவுக்காக காத்திருப்பேன்.
    • கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை இருக்கிறதா என்பதை யோசிக்க தோன்றுகிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 212 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மூத்த தலைவர்கள் பலர் கழற்றி விடப்பட்டனர். அதில் முக்கியமானவர் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் ஆவார். பா.ஜனதாவில் ஜெகதீஷ் ஷெட்டர் நிராகரிக்கப்படுவதன் மூலம் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு மாநிலம் முழுவதும் 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் வழங்கப்படும் என்றும் நம்புகிறேன். எனக்கு டிக்கெட் வழங்கும் விஷயத்தில் நாளை(அதாவது இன்று) வரை கட்சி மேலிடத்தின் முடிவுக்காக காத்திருப்பேன். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி உள்பட 12 முக்கிய தொகுதிகளுக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார்கள். கட்சி மேலிடத்தின் முடிவை பொறுத்து நான் எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை அறிவிப்பேன்.

    கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை இருக்கிறதா என்பதை யோசிக்க தோன்றுகிறது. இதன்மூலம் எதிர்மறையான நிகழ்வுகள் ஏதும் நடந்து விடாமல் இருப்பதை கட்சி மேலிடம் உறுதி செய்திட வேண்டும்.

    ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்றால், அதன் தாக்கம் ஒரு தொகுதியில் மட்டும் எதிரொலிக்காது. வட கர்நாடகத்தில் குறைந்தது 20 முதல் 25 தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எடியூரப்பாவே சொல்லி இருக்கிறார். ஆனால் நான்(ஜெகதீஷ் ஷெட்டர்) சொல்கிறேன், 20 முதல் 25 தொகுதிகளில் மட்டுமல்ல, கர்நாடகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    இதற்கிடையே ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் வழங்கவில்லை என்றால் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவோம் என்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலர்கள் 16 பேர் மற்றும் கட்சி நிர்வாகிகள் 49 பேர் அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் கையெழுத்திட்ட ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், 'ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கிடைக்காததால் நாங்கள் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளோம். நாங்கள் எடுத்த முடிவு கோபத்தில் எடுத்தது அல்ல' என்று தெரிவித்தனர். இதுபோல் கர்நாடக சட்டசபை முன்னாள் சபாநாயகரும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    தனது ஆதரவாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோருடன் ஜெகதீஷ் ஷெட்டர் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கண்டிப்பாக டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    • கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
    • காங்கிரசில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்கள் மாற்று கட்சிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

    பெங்களூரு

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13-ந் தேதியே தொடங்கியது. ஆனாலும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 42 தொகுதிளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    ஒட்டு மொத்தமாக 166 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்திருந்தது. மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று 43 தொகுதிகளுக்கான 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது. இதன்மூலம் அந்த கட்சி சார்பில் இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    நேற்று வெளியான 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலார் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் கொத்தூர் ஜி.மஞ்சுநாத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தான் கோலாரில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். ஆனால் அங்கு வெற்றி அவ்வளவு எளிதல்ல என கூறி கட்சி மேலிடம் அவரை வருணா தொகுதியில் வேட்பாளராக களமிறக்கி உள்ளது. மேலும் கோலார் தொகுதியிலும் அவரே வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனால் சித்தராமையா வருணா மற்றும் கோலார் தொகுதியில் போட்டியிட தயாராகி வந்தார்.

    வருணா தொகுதியில் சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் சோமண்ணா நிறுத்தப்பட்டுள்ளதால், கோலாரில் சித்தராமையா போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியான பட்டியலில் சித்தராமையா, கோலாரில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் இந்த சட்டசபை தேர்தலில் சித்தராமையா வருணா தொகுதியில் மட்டுமே போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தனக்கு ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்து இருப்பதால் சித்தராமையா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் பா.ஜனதாவில் இருந்து விலகி நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதிக்கு பெலகாவி மாவட்டம் அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்திருந்த சிவலிங்கேகவுடாவுக்கு அரிசிகெரே தொகுதியிலும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் திரதாலா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு இருந்த முன்னாள் மந்திரி உமாஸ்ரீக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு எதிராக சிகாரிப்புரா தொகுதியில் ஜி.பி.மால்தேசுக்கும், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் பா.ஜனதா வேட்பாளர் சி.பி.யோகேஷ்வருக்கு எதிராக கங்காதரும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    அதுபோல் குமட்டா தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி மார்க்ரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வாவுக்கும், மூடிகெரே தொகுதியில் முன்னாள் மந்திரி மோட்டம்மாவின் மகள் நயனா ஜோதி ஜாவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் 43 தொகுதிகளுக்கான பட்டியலில் 16 புதுமுகங்கள் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சி இதுவரை 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இன்னும் 15 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி இருக்கிறது. அந்த 15 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாலும், பா.ஜனதா 3-வது கட்ட பட்டியல் வெளியான பின்பு, 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஏனெனில் பா.ஜனதாவில் சீட் கிடைக்காமல் சில தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூட அதிருப்தியில் இருக்கிறார். அவருக்கு சீட் கிடைக்காமல் காங்கிரசுக்கு வந்தால் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் சீட் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல் காங்கிரசில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்கள் மாற்று கட்சிக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

    • பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • சிக்காவி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பெங்களூரு :

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா சார்பில் சிக்காவி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் சிக்காவி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில் தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை வெளியிட்டு இருந்தார். பிரமாண பத்திரத்தில் தனது பெயரில் ரூ.49.70 கோடி சொத்து இருப்பதாக பசவராஜ் பொம்மை கூறி உள்ளார்.

    ரூ.5.98 கோடிக்கு அசையும் சொத்துகளும், ரூ.1.57 கோடிக்கு தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பசவராஜ் பொம்மையின் மனைவி சென்னம்மா பெயரில் ரூ.1.14 கோடி, மகள் அதிதி பெயரில் ரூ.1.12 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது மகன் பரத் பொம்மைக்கு ரூ.14.74 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தனது மகன் பெயரிலான சொத்துக்களை இதில் குறிப்பிடவில்லை.

    மேலும் தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.42.15 கோடிக்கும், ரூ.19.2 கோடிக்கு குடும்ப சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரூ.5.79 கோடி கடன் இருப்பதாகவும், மொத்தத்தில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் சேர்த்து ரூ.52.12 கோடி சொத்து இருப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி கடந்த ஆண்டு(2022) மார்ச் மாதம் 26-ந் தேதி தார்வார் மாவட்ட உப்பள்ளி தாலுகா தாரிஹாலா கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    • மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    • அரிசிகெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் டிக்கெட் கிடைக்காததால் சந்தேஷ் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சார்பில் 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம்(எஸ்) 142 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளும் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    பலர் அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சனசூர், என்.ஒய்.கோபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தனர்.

    வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள மந்திரி எஸ்.அங்கார், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.குமாரசாமி, நேரு ஒலேகர், கூளிகட்டி சேகர் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளனர். பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

    உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் டிக்கெட் கிடைக்காது என்று கூறியதால் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

    அதானி தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால், முன்னாள் துணை முதல்-மந்திரியும், கர்நாடக பா.ஜனதா துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான லட்சுமண் சவதியும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவர் நேற்று பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

    அதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார், யாதகிரியில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குருபாட்டீல் சிரதாள், நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார்.

    இதே போல் அரிசிகெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் டிக்கெட் கிடைக்காததால் சந்தேஷ் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எடியூரப்பாவின் உறவினரான அவரை சமாதானப்படுத்த அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பேடராயனபுராவில் முனேந்திரா, உடுப்பியில் ரகுபதிபட் எம்.எல்.ஏ., பெலகாவி வடக்கில் அனில் பெலகே எம்.எல்.ஏ., கல்கட்டகி தொகுதியில் நிம்மண்ணனவர் எம்.எல்.ஏ., பைந்தூரில் சுகுமார் ஷெட்டி எம்.எல்.ஏ. மற்றும் பெலகாவியில் சில தொகுதிகளில் டிக்கெட் கிடைக்காதவா்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    அடுத்தடுத்த நிகழ்வுகள் பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜனதா தலைவர்கள், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த களத்தில் இறங்கியுள்ளனர். இதற்காக கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறுகையில், "இங்கு அதிகாரத்தை அனுபவித்தவர்கள் பிற கட்சிகளுக்கு செல்கிறார்கள். அரசியல் சூழ்நிலைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியை விட்டு விலகி செல்கிறவர்களை நாங்கள் மீண்டும் சேர்க்க மாட்டோம். அவர்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்ப நினைத்தால் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்றார். 

    • பா.ஜனதாவில் இருந்து விலகிய லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார்.
    • சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் அதானி தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மகேஷ் குமட்டள்ளிக்கு அக்கட்சி டிக்கெட் வழங்கியுள்ளது.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார். அவர் நேற்று தனது எம்.எல்.சி. பதவியையும் ராஜினாமா செய்தார். கர்நாடக மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

    அதற்கு முன்னதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை பெங்களூருவில் நேரில் சந்தித்து தான் காங்கிரசில் சேர விரும்புவதாக கூறினார். இதை அக்கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் நேற்று மாலை பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் லட்சுமண் சவதி கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டி.கே.சிவக்குமார் ஆகியோரின் முன்னிலையில் லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடியை வழங்கி காங்கிரசில் சேர்த்து கொண்டனர். அதைத்தொடர்ந்து டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'பா.ஜனதாவில் இருந்து விலகிய லட்சுமண் சவதி தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று(நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளார். வட கர்நாடகத்தில் பலம் வாய்ந்த தலைவராக இருக்கிறார். பா.ஜனதா தலைவர்கள் அவருக்கு டிக்கெட் வழங்கவில்லை. அவர் எந்த விதமான நிபந்தனையும் விதிக்காமல் கட்சியில் சேர்ந்துள்ளார்' என்றார்.

    காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், 'அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையை ஏற்று லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்துள்ளார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் பா.ஜனதா அரசு இந்த முறை 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது' என்றார்.

    இதையடுத்து லட்சுமண் சவதி பேசுகையில், 'நான் பா.ஜனதாவில் 25 ஆண்டுகள் இருந்தேன். அந்த கட்சியில் இருந்து விலகி இன்று (நேற்று) காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது தொகுதி மக்கள், காங்கிரசில் சேரும்படி கூறினா். அதனால் காங்கிரசில் சேர்ந்துள்ளேன். பா.ஜனதாவில் எப்படி பணியாற்றினேனோ அதே போல் காங்கிரசிலும் கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றுவேன். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நான் தோல்வி அடைந்தேன். கட்சி மேலிட தலைவர்கள் என்னை அழைத்து எம்.எல்.சி. ஆக்கி துணை முதல்-மந்திரி பதவி வழங்கினர். பின்னர் என்னை கட்சியில் இருந்து நிராகரித்து, துணை முதல்-மந்திரி பதவியையும் பறித்து, அதானி தொகுதியில் டிக்கெட் கொடுக்காமலும் ஏமாற்றி அவமதித்து விட்டனர். சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

    • பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது.
    • பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை அவமதித்துள்ளது. கர்நாடகத்தில் போலி இட ஒதுக்கீடு வழங்கி அம்பேத்கருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. இந்த போலி இட ஒதுக்கீடு மூலம் லிங்காயத், ஒக்கலிகர், ஆதிதிராவிடர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

    முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அடுத்த விசாரணை நடைபெறும் வரை நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் முன்பு கூறிய அனைத்து கருத்துக்களும் தற்போது உண்மையாகி உள்ளது.

    பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசு, கா்நாடக மக்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு முடிவுக்கு அரசியல் சாசன ரீதியாக உரிய அங்கீகாரம் கிடைக்காது. அம்பேத்கரின் ஜெயந்தியை கொண்டாடும் இந்த நேரத்தில் கர்நாடக மக்களுக்கு இந்த பா.ஜனதா அரசு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சமூகங்களின் மக்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.

    இட ஒதுக்கீடு உயர்வு நிலை பெற வேண்டுமெனில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சியை பா.ஜனதா மேற்கொள்ளாதது ஏன்?. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார். பா.ஜனதா நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

    • பா.ஜனதாவின் வெற்றியை மக்கள் உறுதி செய்வார்கள்.
    • 60 தொகுதிகளில் காங்கிரசுக்கு பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பிற கட்சிக்கு செல்கிறார்கள். இதனால் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கருத்து கூறியுள்ளார்.

    அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட பொதுவாக ஆளுங்கட்சியில் அதிகம் பேர் டிக்கெட் கேட்பார்கள். அதேபோல் தான் தற்போது எங்கள் கட்சியில் அதிக எண்ணிக்கையில் வாய்ப்பு கேட்கிறார்கள். நாங்கள் எங்கள் கட்சி தொண்டர்களிடம் பேசியுள்ளோம். சில தலைவா்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற ஆசையில் கட்சியை விட்டு வெளியே சென்றுள்ளனர். அவர்கள் சென்றாலும் தொண்டர்கள் கட்சியில் தான் உள்ளனர். கட்சி தொண்டர்கள் உறுதியுடன் உள்ளனர்.

    60 தொகுதிகளில் காங்கிரசுக்கு பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எங்கள் கட்சியை சேர்ந்த சிலரை அக்கட்சியினர் ஏற்கனவே சேர்த்து கொண்டனர். அதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்கள் கட்சி மற்றும் தொண்டர்கள் வலுவாக உள்ளனர். பா.ஜனதாவின் வெற்றியை மக்கள் உறுதி செய்வார்கள்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • 234-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.
    • வேட்புமனு தாக்கல் செய்வதற்கே இதுவரை ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளேன்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன், ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் 6 முறை மனு தாக்கல் செய்துள்ளார். முக்கிய தலைவர்கள் நரசிம்மராவ், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.

    இந்தமுறை கர்நாடக தேர்தலில் பத்மராஜன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை போட்டியிடும் சிக்காவி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் 234-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார்.

    நான் கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். வெற்றி பெற வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதே எனது நோக்கம்.

    அந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் நான் இவ்வாறு தேர்தலில் மனு தாக்கல் செய்து வருகிறேன். சிக்காவி தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கே இதுவரை ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளேன். எனது வாழ்நாள் உள்ள வரை தேர்தலில் போட்டியிடுவேன் என்றார். 

    சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளனர். பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கட்சிகள் சார்பில் தங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மேலும் பலர் கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா கடந்த 11-ந் தேதி வெளியிட்ட முதல்கட்ட பட்டியலில் 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. இதில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளவர்களில் 11 பேருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.

    அரிசிகெரே தொகுதியில் எடியூரப்பாவின் உறவினரான சந்தோஷ் என்பவர் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக அங்கு பசவராஜிக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் சந்தோசின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அரிசிகெரேயில் போராட்டம் நடத்தினர். சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். தான் சுயேச்சையாக போட்டியிட போவதாக சந்தோஷ் அறிவித்துள்ளார். ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர்கள் அழைத்தால் அதுகுறித்து பரிசீலிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மூடிகெரே தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ., சபாநாயகர் காகேரியை சிர்சியில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் சிக்கமகளூரு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சி.டி.ரவியை எதிர்த்து போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    ஹாவேரி தொகுதியில் நேரு ஓலேகார் எம்.எல்.ஏ.வுக்கு டிக்கெட் கிடைக்காததால், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அவர் பா.ஜனதாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் ஹாவேரியில் உள்ள ரோட்டில் டயருக்கு தீ வைத்து எரித்தனர்.

    சன்னகிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள மாடால் விருபாக்ஷப்பா, வீட்டில் ரூ.8 கோடி ரொக்கம் சிக்கியது தொடர்பான வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். அவரது குடும்பத்தை சாராத ஒருவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாடால் விருபாக்ஷப்பாவின் ஆதரவாளர்கள் பா.ஜனதா அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்து நாற்காலி, மேசைகளை அடித்து நொறுக்கினர்.

    சிக்கமகளூரு மாவட்டம் கடூரை சேர்ந்தவர் ஒய்.எஸ்.வி.தத்தா. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். இந்நிலையில் கட்சி தலைவர்கள் மீதான அதிருப்தியில் இருந்து வந்த அவர், கடந்த மாதம் தான் அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். இதனால் அவருக்கு காங்கிரஸ் சார்பில் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், ஒய்.எஸ்.வி.தத்தாவுக்கு காங்கிரஸ் சார்பில் கடூர் தொகுதியில் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான லட்சுமண் சவதி அதானி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் கட்சியில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் பா.ஜ.க.வை விட்டு விலகுவதாக அறிவித்து உள்ளார்.

    பா.ஜ.க. சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல்படி தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 15 பேருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    துமகூரு மாவட்டம் குனிகல் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி. முத்தஹனுமே கவுடா ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் பா.ஜனதா சார்பில் கிருஷ்ணகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள முத்தஹனுமே கவுடா தேர்தலில் சுயேச்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார்.

    துமகூரு மாவட்டம் குப்பி தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கு சீட் கிடைக்கும் என்று பா.ஜனதா பிரமுகர் பெட்டேசாமி என்பவர் காத்திருந்தார். குப்பி தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்திருந்தார். ஆனால் பட்டியலில் குப்பி தொகுதியில் பெட்டேசாமிக்கு பதிலாக திலீப்குமார் என்பவருக்கு பா.ஜனதா சீட் கொடுத்திருந்தது. இந்நிலையில் திடீரென்று பெட்டேசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதி களுக்கும், ஜனதா ளம் (எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மீதமுள்ள வேட்பாளர்களை ஓரிரு நாளில் இந்த கட்சிகள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு தாக்கலையொட்டி தேர்தல் அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100 மீட்டர் தொலைவில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

    முதல் நாளில் பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை தாக்கல் செய்தார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியிலும், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் யஷ்வந்த புரா தொகுதியிலும், பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கதக் மாவட்டம் நரகுந்து தொகுதியிலும் மனுதாக்கல் செய்தனர்.

    மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 221 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் ஆண்கள் 197 பேரும், பெண்கள் 24 பேரும் அடங்குவர். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான ஆளும் பா.ஜனதாவை சேர்ந்த 27 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 26 பேரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 10 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    பொதுவாக வேட்பு மனு தாக்கல் தொடங்கினாலும் முதல் நாளில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் கர்நாடக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில் முதல் நாளிலேயே 4 மந்திரிகள் உள்பட மொத்தம் 221 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகளை சேர்ந்த 100 பேர் அடங்குவர்.

    எந்த கட்சியையும் சாராத 45 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் வேட்பாளர்கள் முதல் நாளிலேயே மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். வரும் நாட்களில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கர்நா டகத்தில் அரசு விடுமுறை ஆகும். அதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) வழக்கம் போல் மனு தாக்கல் நடைபெறும்.

    20-ந் தேதி மதியம் 3 மணிக்கு மனுதாக்கல் நிறைவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். போட்டியில் இருந்து விலகி கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் அன்றைய தினம் மதியம் 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.

    மே மாதம் 10-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 13-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ×