என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவி கேட்டு சாமியாரிடம் சென்றார்.
    • பெண்ணை தனி அறையில் வைத்து சில மாந்திரீக வார்த்தைகளை கூறி பூஜை செய்தார். அப்போது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

    திருப்பதி:

    தமிழகத்தை சேர்ந்த 58 வயது சாமியார். இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள வாரங்கல் ஏனுமாமுலா மார்க்கெட் பகுதியில் வசித்து வருகிறார்.

    தன்னிடம் அற்புத சக்தி உள்ளது. மேலும் சூனியம் செய்யக்கூடிய சக்தி இருப்பதாக கூறி மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

    இவரிடம் குறைதீர்க்க வரும் பெண்களை தனிமையில் பூஜை செய்ய வேண்டுமென அழைத்துச் சென்றுள்ளார். மேலும் இவர் அற்புத சக்தி இருப்பதாக கூறி பெண்களை பாலியல் ஆசைக்கு அடிபணிய செய்துள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவி கேட்டு சாமியாரிடம் சென்றார்.

    பெண்ணை தனி அறையில் வைத்து சில மாந்திரீக வார்த்தைகளை கூறி பூஜை செய்தார். அப்போது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு ஓடிச்சென்றார். நடந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலி சாமியார் என்பதால் கூடுதலாக அதிரடிப்படை போலீசார் விரைந்தனர். போலி சாமியாரின் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு பல்வேறு மாந்திரீக புத்தகங்கள் எலுமிச்சை பழங்கள் ஆயுர்வேத பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலி சாமியாரை கைது செய்தனர். போலி சாமியார் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.

    தொடர்ந்து எத்தனை பெண்களிடம் போலி சாமியார் அத்துமீறலில் ஈடுபட்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது.
    • சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5-ந் தேதி விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் தந்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா 2017-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    குற்றச்சாட்டை முன்வைத்த ரூபா அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

    இந்த வழக்கில், பெங்களூரு ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 11-ந்தேதி சசிகலா, இளவரசி ஆஜராகி, தற்போது, ஜாமினில் உள்ளனர். இதனிடையே சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களுக்கு சிறப்பு சொகுசு வசதி வழங்கியதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    மனுவில், "பரப்பன அக்ரஹாரா சிறையில் தனக்கு சிறப்பு சொகுசு வசதி அளிக்கப்படுவதாக ஐ.பி.எஸ். அதிகாரி டி.ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

    அதன்பிறகு, அரசு உத்தரவுப்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி, 2017 அக்டோபர் 21-ந் தேதி அளித்த அறிக்கையை, 2018 பிப்ரவரி 26-ந் தேதி மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இந்த அறிக்கையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை." என கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • தெலுங்கானாவில் அமைச்சர் ஒருவரை பாராட்டி பொதுமக்கள் அவருக்கு நேரிலேயே பாலாபிஷேகம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மகபூப் நகரில் உள்ள பி.கே ரெட்டி காலனியில் அமைச்சர்களை வரவேற்க பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பதி:

    சினிமா நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது விசுவாசத்தை பொதுமக்கள் காட்டி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் அமைச்சர் ஒருவரை பாராட்டி பொதுமக்கள் அவருக்கு நேரிலேயே பாலாபிஷேகம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநில தொழிலாளர் நல அமைச்சர் மல்லா ரெட்டி. இவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மகபூப்நகருக்கு சென்றார்.

    அவருடன் கலால் துறை அமைச்சர் சீனிவாஸ் உடன் சென்றார்.

    மகபூப் நகரில் உள்ள பி.கே ரெட்டி காலனியில் அமைச்சர்களை வரவேற்க பொதுமக்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    அமைச்சர்கள் வந்து இறங்கியதும் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை ஒரு நாற்காலியில் அமர வைத்து பொதுமக்கள் வரிசையாக வந்து பாலாபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர் மல்லாரெட்டி தங்கள் பகுதியில் பல்வேறு நல்ல பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாலாபிஷேகம் செய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அபிஷேகத்தை தொடர்ந்து அமைச்சர்கள் வேறு உடை அணிந்து கொண்டனர். இதனையடுத்து விருது வழங்கும் விழா நடந்தது. அப்போது சினிமா பாடல் ஒன்றுக்கு அமைச்சர் மல்லா ரெட்டி நடனம் ஆடினார்.

    இதனை அங்குள்ள பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அமைச்சருக்கு பாலாபிஷேகம் செய்வது அவர் நடனமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பையும் அதிக பார்வையாளர்களையும் கவர்ந்தது.

    • கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 2½ வயது ஆகிவிட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் பை வீட்டு பாடம் என ஆரம்பத்திலேயே சுமைகள் அதிகரிக்கிறது.

    கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.

    தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

    பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

    தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர 'நோ பேக் டே' திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த 'நோ பேக் டே' கடைபிடிக்கப்படும்.

    அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம்.

    ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் 'நோ பேக் டே' நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.

    இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:-

    இந்த 'நோ பேக் டே' நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
    • தெலுங்கானாவில் ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகரில் தெலுங்கானா மாநில ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த பகுதிக்கு அங்குள்ள ஆற்றில் படகில் தான் செல்ல வேண்டும். இதில் கலந்து கொள்வதற்காக அந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காங்குலா கமலாகர் படகில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, படகு திடீரென கவிழ்ந்தது. நிலைதடுமாறிய அமைச்சர் தண்ணீரில் விழுந்தார். கரையில் இருந்த போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக போலீசார் தண்ணீரில் இறங்கி அமைச்சர் மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகளை லாவகமாக காப்பாற்றினர்.

    படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் தண்ணீரில் நிலை தடுமாறி நூலிலையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    படகு கவிழ்ந்து அமைச்சர் தண்ணீரில் விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மீன் மருந்து சாப்பிட்டவர்களுக்கு ஆஸ்துமா குணமாகும்.
    • ஒரு முறை சாப்பிட்டால் திரும்ப நோய் வராது.

    ஐதராபாத் :

    ஒவ்வொரு ஆண்டும், பருவ மழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறும். அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைப்பார்கள்.

    இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்தை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் அங்கே கூடுவது வழக்கம். இதை பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தொற்றின் தீவிரம் கட்டுக்குள் வந்தபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் வருடாந்திர நிகழ்வு கடந்த ஆண்டும் நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    தெலுங்கானா கால்நடை பராமரிப்பு துறை மந்திரி தலசானி சீனிவாஸ் யாதவ் இந்த முகாமை தொடங்கி வைத்தார். மீன் பிரசாதத்தை பெற தெலுங்கானா மட்டும் அல்லாது ஆந்திரா, கர்நாடகம், ஒடிசா, தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே இந்த முகாமில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் மீன் பிரசாதமாக, உயிருள்ள விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுத்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி வரை மீன் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என பாத்தினி மிருகசீரா அறக்கட்டளை பிரதிநிதிகள் மற்றும் பாத்தினி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

    இருமல், ஆஸ்துமா போன்ற தீராத சுவாச நோய்களுக்கு 190 ஆண்டுகளுக்கு மேலாக மீன் பிரசாதம் வழங்கி வருகிறோம். இந்த மீன் மருத்துவ சிகிச்சையை சேவை மனப்பான்மையுடன் இலவசமாக அளித்து வருகிறோம். எங்கள் பரம்பரையை சேர்ந்த முன்னோர் நிஜாம் காலத்தில் இருந்தே இந்த மீன் மருந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த சேவை இப்போதுவரை தொடருகிறது.

    மீன் மருந்து சாப்பிட்டவர்களுக்கு ஆஸ்துமா குணமாகும். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது தீரும். ஒரு முறை சாப்பிட்டால் திரும்ப நோய் வராது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ஒருமுறை மீன் மருந்து சாப்பிட்டாலே ஆஸ்துமா குணமாகிவிடும் என்று முகாமுக்கு வந்தவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இதை எடுத்துக்கொண்டால் நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

    இந்த மீன் மருத்துவ முகாமுக்காக லட்சக்கணக்கான மீன்களை தெலுங்கானா அரசின் மீன் வளத்துறை இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசு சார்பில் குடிநீர் வசதி, பாதுகாப்பு, போக்குவரத்து வசதி போன்றவையும் செய்யப்பட்டது.

    • அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.
    • கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வரும் சாய் கிருஷ்ணா ஷரூர்நகர் பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அப்சராவுக்கும் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதில், அப்சரா கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர், சாய் கிருஷ்ணாவின் வற்புறுத்தலால் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

    மேலும், அப்சரா சாய் கிருஷ்ணாவிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு பூசாரி சாய் கிருஷ்ணா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுல்தான்பல்லி பகுதியில் உள்ள பசு கொட்டகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அங்கு, திருமணம் குறித்து அப்சரா பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை அடித்து தாக்கியுள்ளார். பின்னர், அப்சராவை கோவில் பின்புறத்தில் எரித்து சுமார் இரண்டு லாரி மணலால் மூடி கொலையை மறைத்துள்ளார்.

    தொடர்ந்து, சாய் கிருஷ்ணா அப்சராவை காணவில்லை என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் சாய் கிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையின் மூலம் அப்சராவை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து, கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர். பூசாரி செய்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.
    • கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது. இதிலிருந்து தப்பிக்க மது பிரியர்கள் ஹாட் வகைகளிலிருந்து பீருக்கு மாறினர்.

    குடிமகன்களை கவருவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் 300 வகையான பீர் விற்பனைக்கு வந்தன. 650 மில்லி மற்றும் 350 மில்லி என 2 அளவுகளில் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் கடந்த மாதம் ஒரு பாட்டில் பீர் ரூ.10 விலையும் குறைக்கப்பட்டது.

    இதனால் அனைத்து மது கடைகளிலும் பீர் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக பிரசித்தி பெற்ற 12 வகையான பீர்கள் அதிக அளவில் வாங்கி குடித்தனர்.

    நாளுக்கு நாள் அதிகரித்த வெயில் காரணமாக குடிமகன்கள் பீர் வாங்கி குடித்து பொழுதை கழித்தனர்.

    இதனால் இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் வரலாற்று சாதனையாக 7.4 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 4 கோடி லிட்டர் பீர் மது பிரியர்கள் குடித்துள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக 7.2 கோடி பாட்டில்கள் விற்பனையாகி இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது. மேலும் விலை குறைப்பும் விற்பனை அதிகரிப்பு காரணமாக இருந்துள்ளது.

    வருங்காலங்களில் மேலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோபோக்கள் உதவியுடன் கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
    • உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சித்திபேட்டை மண்டலம், புருகுபள்ளி டவுன்ஷிப் வளாகத்தில் 3,800 சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் 3டி பிரிண்டிங் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கோவில் வளாகத்தில் 30 அடி உயரத்தில் விநாயகர், சிவன், பார்வதிக்கு 3 பகுதிகளாக மிகப்பெரிய அளவில் தனித்தனியாக சன்னதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

    ஐதராபாத்தை சேர்ந்த அப்சுஜா இன்ப்ராடெக் நிறுவனத்தின் மேற்பார்வையில் சிம்ப்ளி போர்ஸ் கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோபோக்கள் உதவியுடன் கோவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது விநாயகர், சிவன் கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் பார்வதி தேவி கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பொருட்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது உலகிலேயே முதல் மிகப்பெரிய அளவில் 3டி கோவில் என தெரிவித்தனர்.

    • ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
    • அப்போது அவர், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்கள் என்றார்.

    ஐதராபாத்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, மாநிலத்தை ஆட்சி செய்வது டிஆர்எஸ் என்ற கார், ஆனால் அதன் ஸ்டீயரிங் ஒவைசி கைகளில் உள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தலாமே? - அமித்ஷாவுக்கு ஒவைசி கேள்வி

    எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், தெலுங்கானா அரசு கோவில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒப்புதல் அளித்து வருகிறது. ஆனால், ஸ்டீயரிங் என் கையில் உள்ளது என்று அவர் (அமித் ஷா) கூறுகிறார். ஸ்டீயரிங் என் கையில் இருந்தால், உங்களுக்கு ஏன் வலி ஏற்படுகிறது?

    பழைய நகரில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்கிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த முடியுமா என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
    • சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது.

    தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் TSPSC தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

    குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. உதவியோடு இயங்கும் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பதில்களை பெற்றதோடு, அவற்றை ப்ளூடூத் இயர்போன் மூலம் மற்ற தேர்வர்களுக்கும் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பதில் அனுப்பிய பூலா ரமேஷ் என்ற நபரை புலனாய்வு படையினர் விசாரணை செய்தது.

    ரமேஷ் என்ற நபர், தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வினாத்தாளை எடுத்து, சாட்ஜிபிடி சேவை மூலம் பதில்களை பெற்றுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு தேர்வர்களும், தேர்ச்சி பெறுவதற்காக ஆளுக்கு ரூ. 40 லட்சம் வரை வழங்க தயாராக இருந்துள்ளனர். அதன்படி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் ரமேஷ் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவியிருக்கிறார்.

    தொடர்ந்து இலவசமாகவே கிடைப்பதால், ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட ஏ.ஐ. டூல்கள் தற்போது செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகமாகவே உள்ளன.

    • டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.
    • மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    ஐதராபாத்:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை இன்று சந்தித்தனர். அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரசேகர் கூறியதாவது:

    இந்த அவசரச் சட்டத்தை நீங்களே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் கெஜ்ரிவாலை ஆதரிப்போம் என பிரதமரிடம் கோருகிறோம். அவருக்கு துணை நிற்போம்.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி அவசரச் சட்டத்தை முறியடிப்போம். தேவையின்றி பிரச்சனை செய்யாதீர்கள் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு நீதி வழங்க, கேசிஆர் கட்சி மற்றும் அவரது அரசு எங்களுடன் உள்ளது. இது டெல்லி மட்டுமல்ல, தேசத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது. கே.சி.ஆர் ஆதரவு எங்களுக்கு பலத்தை அளித்துள்ளது என கூறினார்.

    ×