என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை 449 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது நீர்வரத்து 3,745 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை 449 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது நீர்வரத்து 3,745 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    ஒரு மணி நேரத்துக்கு முன்னால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,773 கனஅடி நீர் வந்த நிலையில் தற்போது நீர்வரத்து 3,745 ஆக உயர்ந்துள்ளது.

    • சென்னையில் கடந்த 5 மணி நேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளது.
    • அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியி 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது.

    சென்னையில் கடந்த 5 மணி நேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ. மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. எழும்பூர், ஆர்பிஐ, பெரம்பூர், பழவந்தாங்கல், ரங்கராஜபுரம், திருவொற்றியூர், ராஜா முத்தையா சாலை, மில்லர்ஸ் ரோடு, அண்ணா பிளைவ் ஓவர் சர்வீஸ் ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

    • மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளுக்கு கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை!

    எனவே, எனது அறிவுறுத்தலின்படி, @AIADMKITWINGOFL சார்பில் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளுக்கு கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    • கடற்கரை சாலையில் காலையில் மட்டும் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

    சென்னை:

    வங்கக்கடலில் 'ஃபெஞ்சல்' புயல் உருவானதையொட்டி, சென்னையில் இன்று கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அலைகள் பல மீட்டா் உயரத்துக்கு எழும்பி ஆா்ப்பரித்தன.

    இதையொட்டி கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைச் சாலையில் காலையில் மட்டும் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அப்போது, கடல் அலைகள் பல மீட்டா் உயரத்துக்கு எழும்பி ஆா்ப்பரித்தன.

    இதையடுத்து, போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா். மேலும், தடுப்புகள் அமைத்து கடலில் குளிக்கவோ, அலைகளில் கால் நனைக்கவோ யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

    • மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.

    முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.56 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வருகிறது. தற்போது மதுரை மாநகர் குடிநீர் தேவைக்காக மட்டும் 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2978 மி.கன அடியாக உள்ளது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் நாளை முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உள்ளது. வரத்து 320 கன அடி. திறப்பு 755 கன அடி. இருப்பு 2658 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.20 அடியாக உள்ளது. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 399.31 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.83 அடி. வரத்து 11.5 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 94.34 மி.கன அடி. சண்முகாநதி அணை நீர்மட்டம் 50.40 அடி. வரத்து இல்லாத நிலையில் பாசன தேவைக்காக 15 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 72.78 அடியாக உள்ளது.

    சோத்துப்பாறையில் 2.6, பெரியாறு அணையில் 1.4, தேக்கடி 3.8 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • கனமழையை எதிர்கொள்ள சென்னையில் மட்டும் 10,000 நபர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இன்று தொடங்கி நாளை காலை வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.

    சென்னை:

    சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டரிடம் கேட்டு அறிந்தார்.

     

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் நிலவரங்கள் கேட்டு அறிந்த முதலமைச்சர், மழை முன் எச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

    இந்நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்றிரவு காற்றும் மழையும் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்கள் துரிதமாக செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    * கனமழையை எதிர்கொள்ள சென்னையில் மட்டும் 10,000 நபர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    * சென்னையில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். இன்று தொடங்கி நாளை காலை வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும் என்பதால் முன் எச்சரிக்கையாக அவர் அறிவுறுத்தினார். 

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.37 அடியாக இருந்தது.
    • தற்போது அணையில் 78.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 110.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 3,976 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 4,528 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 78.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.
    • கனமழையால் எந்த மாவட்டத்தில் இருந்தும் ஆபத்தான செய்திகள் வரவில்லை.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    ஃபெஞ்சல் புயல் மாலை கரையை கடக்கும் என கூறப்படும் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்தார்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தேன்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.

    மழை முன் எச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    கனமழையால் எந்த மாவட்டத்தில் இருந்தும் ஆபத்தான செய்திகள் வரவில்லை.

    கடந்த முறை மழைநீர் தேங்கிய இடங்களில் இம்முறை முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழைநீர் தேங்கவில்லை.

    இன்று இரவு கடுமையான மழை பெய்யும் என்பதால் மீட்பு, நிவாரண பணிகளுக்கு தயாராக உள்ளோம். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.

    • புறநகர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
    • அனைத்து நகைகடைகளுக்கும் இன்று விடுமுறை.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    இதனிடையே ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    * சென்னையில் கனமழை பெய்து வரும்நிலையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

    * ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனமழை பெய்வதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கி விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    * புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    * கனமழை காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் இன்று ஒருநாள் மூடப்படுகின்றன. சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் கூட்டம் குறைவாக இருப்பதாலும் தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
    • திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

    தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் ஃபெஞ்சல் புயல் நகர்ந்து வருகிறது.

    ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை எண்ணூரில் இன்று சில மணிநேரங்களில்13 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், கத்திவாக்கத்தில்12 செ.மீ. மழையும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ. மழையும் மணலி சென்னை சென்ட்ரலில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

    • சென்னையில் காற்று வீசும் வேகம் அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
    • சென்னை கொருக்குப்பேட்டையில் ரெயில்வே தண்டவாளத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டிவரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னையில் காற்று வீசும் வேகம் அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் இயக்கப்படும் நேர இடைவெளி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    சென்னை கொருக்குப்பேட்டையில் ரெயில்வே தண்டவாளத்தை வெள்ளம் மூழ்கடித்தது. கனமழை தொடர்வதால் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கி உள்ளது.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
    • அவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அரசு அறிவுறுத்தி உள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் அச்சமயத்தில் 90 கி.மீ. வேகத்தில் காற்று சுழற்று வீசுவதுடன் அதிகனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனிடையே அவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், பொதுமக்கள் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநில உதவி எண் - 1070, மாவட்ட உதவி எண் - 1077, வாட்ஸ்அப் - 9445869848 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசிய தேவைகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

    * சென்னை மாநகராட்சி - 1913

    * மின்சாரம் - 94987 94987

    * குடிநீர் - 044-4567 4567

    * பாம்பு மீட்பு படை - 044 - 2220 0335

    * சென்னை மெட்ரோ ரெயில் - 1860 425 1515

    * ப்ளூ கிராஸ் - 9677297978, 9841588852, 9176160685

    * மகளிர் உதவி எண் - 181

    * சைல்டு லைன் - 1098.

    ×