என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
    • டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது.

    8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    டி 20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    டி 20 உலக கோப்பையில் பங்கேற்கச் செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கு பெர்த் மைதானத்தில் 13-ம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.

    • விபத்து நடந்த பகுதியில் மீண்டும் விபத்து நடந்துள்ளது
    • காயமடைந்த 8 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாந்த்ரா-வொர்லி சீ லிங்க் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஒரு ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அந்த ஆம்புலன்ஸ் மற்றும் அருகில் நின்றிருந்த கார்களில் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

    இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் சீ லிங்க் ஊழியர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதில் சிகிச்சையின்போது 5 பேர் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 8 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

    • சனாதன தர்மத்தை தடுக்கும் சக்திகள் போலியான கதைகளைப் பரப்புகின்றன.
    • பயங்கரவாதம் மற்றும் சமூக அமைதியின்மையை தூண்டுகின்றன.

    விஜயதசமி மற்றும் தசரா கொண்டாட்டங்களையொட்டி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சிறப்பு பொதுக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் புகழ்பெற்ற மலையேறும் வீராங்கனை சந்தோஷ் யாதவ் பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ். வரலாற்றில் ஒரு பெண் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. 


    மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:

    பெண்கள் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும்.அவர்கள் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் அதிகாரம் பெற வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சந்தோஷ் யாதவ் பங்கேற்றுள்ளது, மகிழ்ச்சிகரமான மற்றும் கௌரவமான சக்தியை பிரதிபலிக்கிறது. இரண்டு முறை இமயமலையில் ஏறி அவர் சாதனை படைத்துள்ளார்.

    இந்து ராஷ்டிரம் பற்றிய கருத்து குறித்து விவாதிக்கப்படுகிறது. பலர் கருத்துடன் உடன்படுகிறார்கள், ஆனால் இந்து என்ற வார்த்தையை சிலர் எதிர்க்கின்றனர், வேறு வார்த்தைகளைப் பயன்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கருத்து தெளிவுக்காக, இந்து என்ற சொல்லை நாங்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்போம்.

    சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு எங்களால் அல்லது அமைப்பு ரீதியான இந்துக்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் பயமுறுத்துகிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ்.அல்லது இந்துக்களின் இயல்பு அல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சகோதரத்துவம், நட்புறவு என்ற நிலைத்து நிற்கும் உறுதிப்பாடு உள்ளது.

    நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை வளங்களாக உருவாக்காமல் வளர்ந்தால், அது ஒரு சுமையாக மாறும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு என்பது புறக்கணிக்க கூடாத ஒரு முக்கிய விஷயமாகும். மத அடிப்படையிலான மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுகளே புவியியல் எல்லை மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன. 


    சனாதன தர்மத்தைத் தடுக்கும் தடைகள், பாரதத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு விரோதமான சக்திகளால் உருவாக்கப்படுகின்றன. அவை போலியான கதைகளைப் பரப்புகின்றன, அராஜகத்தை ஊக்குவிக்கின்றன, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றன, மேலும் பயங்கரவாதம், மோதல்கள் மற்றும் சமூக அமைதியின்மையைத் தூண்டுகின்றன

    தொழில் படிப்புக்கு ஆங்கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை பண்பட்டவர்களாகவும், தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழி வகுக்க வேண்டும். இது அனைவருக்குமானது. இந்த சமூகம் புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தசரா நாளில், ராவணன் சிலைக்கு மகா ஆரத்தி எடுத்து வழிபாடு.
    • ராவணனை வணங்குவதால், கிராமத்தில் அமைதி, மகிழ்ச்சி நிலவுவதாக நம்பிக்கை.

    அகோலா:

    டெல்லி உள்பட வட மாநிலங்களில் தசரா பண்டிகையான இன்று ராவண வதம் எனப்படும் ராவணன் உருவ பொம்மைகள் எரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராமத்தில் வசிப்பவர்கள் தசாராவையொட்டி இன்று, இலங்கை மன்னர் ராவணனுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுகின்றனர். இந்த கிராமத்தில் 10 தலைகள் கொண்ட ராவணனின் கருங்கல் சிலை கொண்ட கோயில் உள்ளது.

    ராவணனின் புத்திசாலித்தனம் மற்றும் உயர்ந்த குணங்களுக்காக அவரை வணங்கும் பாரம்பரியம், கடந்த 300 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருந்து வருவதாக உள்ளூர்வாசிகள் சிலர் கூறுகின்றனர். அரசியல் காரணங்களுக்காக சீதையைக் கடத்திச் சென்ற ராவணன் அவளுடைய புனிதத்தைப் பாதுகாத்தார் என்பது சங்கோலா கிராம மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    ராவணனின் ஆசீர்வாதத்தால், தங்கள் கிராமத்தில் அனைவருக்கும் வேலை கிடைக்கிறது, தங்கள் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். கிராம மக்கள் சிலர் ராமரை நம்புகிறார்கள், ஆனால் அவர்களுக்கும் ராவணன் மீது நம்பிக்கை இருக்கிறது, அவருடைய உருவ பொம்மைகளை எரிப்பதில்லை என்று உள்ளூர்வாசியான பிவாஜி தாக்ரே குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் நாளை முதல் 5ஜி சேவை.
    • மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக அமல்படுத்தப்படும்.

    டெல்லியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். முன்னதாக தீபாவளி முதல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஜியே 5ஜி சேவை வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தசரா பண்டிகையான நாளை முதல் 4 நகரங்களில் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என, ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் நாளை முதல் 5ஜி சேவை சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

    இந்த 4 நகரங்களில் ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரு ஜி.பி.பி.எஸ்க்கும் கூடுதலான வேகத்தில் எல்லையில்லா 5ஜி டேட்டாவைப் பெறுவார்கள் என்று ஜியோ நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஏற்கனவே உள்ள செல்போன்களில் ஜியோ 5ஜியை வழங்கும் வகையில் பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

    இந்த சேவை குறித்து ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் மேலும் சேவை வலுப்படுத்தப்படும் என்றும், 425 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், இந்தியாவின் மாற்றத்தை ஜியோ 5ஜி சேவை விரைவுபடுத்தும் என்றும் அந்நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.
    • போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 980 கிராம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து அவரிடம் இருந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    • அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர் எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    47 ரெயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்த நிலையில், 32 ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.

    200 ரெயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும். அவற்றில் 100 ரெயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

    பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அல்லது ரெயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மராத்வாடாவின் சில பகுதிகளும் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஹலோ என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரம்.
    • மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    மும்பை:

    மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதாவது:

    உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் போது அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், "ஹலோ" என்பதற்குப் பதிலாக "வந்தே மாதரம்" என்று தெரிவிக்க வேண்டும். அரசுத் துறைத் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும். "ஹலோ" என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது. அதற்கு எந்த உணர்வும் இல்லை.

    வந்தே மாதரம் என்றால், நாங்கள் எங்கள் தாய்க்கு தலைவணங்குகிறோம் என்று பொருள். எனவே, பொதுமக்களும் "ஹலோ" என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று சொல்லுங்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    வந்தே மாதரம் கூட கட்டாயமில்லை. 'ஜெய் பீம்' அல்லது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும் சொல்லலாம், தங்கள் பெற்றோரின் பெயரைக் குறிப்பிடலாம். ஆனால் தொலைபேசி அழைப்பைப் பெறும்போது ஹலோ சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "ஜெய் பலிராஜா" ( (விவசாயிக்கு வாழ்த்துக்கள்) மற்றும் "ராம் ராம்" என்ற வார்த்தைகளை பயன்படுத்துமாறு காங்கிரஸ தொண்டர்களை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது நாடு விவசாயப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது 'ஜெய் பலிராஜா', 'ராம் ராம்' என்று சொல்வோம் என்பதே எங்களது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.

    • மகாராஷ்டிராவின் புனேயில் பழமையான பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
    • இந்த பாலத்தைத் தகர்க்க சுமார் 600 கிலோ வெடி பொருள் பயன்படுத்தப்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே புனே நகரில் சாந்தினி செளக் சந்திப்பில் மிகவும் பழமையான பாலம் உள்ளது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பல் அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பழமையான பாலம் சுமார் 600 கிலோ வெடிபொருள் வைத்து நேற்று தகர்க்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக நேற்று இரவு 10 மணிக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலம் தகர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியது.

    ஏற்கனவே டெல்லி இரட்டை கட்டிடங்களைத் தகர்த்த மும்பை நிறுவனம்தான் இந்தப் பாலத்தையும் தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதால் எந்த சந்தேகமும் இல்லை.
    • தேர்தலை நேர்மையாக நடத்த சோனியா காந்தி குடும்பத்தினர் விருப்பம்.

    நாக்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியிடுவது மட்டும் உறுதியாகி உள்ளது.

    இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்சாபூமி நினைவு சின்னத்தை இன்று பார்வையிட்ட சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் மல்லிகார்ஜூன் கார்க்கேவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சசிதரூர் தெரிவித்துள்ளதாவது:

    காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் (சோனியா, ராகுல், பிரியங்கா) சந்தித்துப் பேசினேன். கட்சித் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்றும், அப்படிப்பட்ட வேட்பாளர் யாரும் இருக்க மாட்டார் என்றும் அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் நல்ல நேர்மையான தேர்தலை நடத்த விரும்புகிறார்கள்.

    காந்தி குடும்பம் நடுநிலையாகவும், கட்சி பாரபட்சமற்றதாகவும் இருக்கும். சிறந்த முறையில் இந்த தேர்தலை நடத்தி கட்சியை பலப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். கட்சித் தலைவர் (சோனியாகாந்தி) என்னிடம் உறுதியளித்துள்ளதால் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம்.
    • ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது.

    மும்பை :

    மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் பாரத் விகாஸ் பரிஷத் சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளோம். நாம் ஏழை மக்கள் தொகையை கொண்ட பணக்கார நாடு. ஏழை மக்கள் பட்டினி, வேலையின்மை, வறுமை, பணவீக்கம், சாதி பாகுபாடு, தீண்டாமை போன்றவற்றை சந்தித்து வருகின்றனர்.

    இது சமுதாய வளர்ச்சிக்கு நல்லதல்ல. சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

    ஏழை, பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வை போல, பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதிகரித்து உள்ளது. ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளியை குறைக்க கல்வி, சுகாதாரம், சேவை துறைகளில் வேலை செய்ய வேண்டியது உள்ளது.

    பாரத் விகாஸ் பரிஷத்தின் நோக்கம் தெளிவானது. ஆனால் சமூக கடமை, உணர்வுடன் நாம் எப்படி வெவ்வேறு வகையான பிரிவுகளில் பணியாற்ற போகிறோம் என்பது தான் சவாலானது. நாம் நமது லட்சியத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே அதை சாதிக்க நமது வேகத்தை அதிகரிக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுடையதாக இருக்கும் என சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே நாட்டின் வளர்ச்சிக்காக எல்லோரும் அவர்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார்.
    • நீதா அம்பானிக்கு ‘ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    மும்பை :

    பிரபல தொழில் அதிபரான ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் வசித்து வருகிறார். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார். இவருக்கு மத்திய அரசு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கி வந்தது. இந்தநிலையில் மத்திய அரசு அவரது பாதுகாப்பை அதிகரித்து உள்ளது. இதன்படி அவருக்கு உச்சப்பட்ச பாதுகாப்பு வகையான 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி 40-50 கமாண்டோ படை வீரர்கள் ஆயுதங்களுடன் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவர்கள் அம்பானியின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அவர் பயணம் செய்யும் போது அவருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளிடம் இருந்து வந்த எச்சரிக்கையை அடுத்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×