என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வுமையம்.
    • கனமழை பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி மழை பெய்தது. இதன்பின் மும்பையில் மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவி வந்தது.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் மும்பையில் மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக நகரின் சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. இந்த மழையின் காரணமாக மின்சாரம், பஸ் போக்குவரத்து மற்றும் ரெயில்வேயில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. வழக்கம் போல் இயக்கப்பட்டது.

    இந்நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு மும்பை உள்பட தானே, பால்கர் மற்றும் கொங்கண் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து மேலும் உயிரிழப்பை ஏற்படுத்தியது.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் இன்று அதிகாலை பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், வாகனங்கள் இரண்டும் தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர்.

    அவுரங்காபாத் சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த கோர விபத்து நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'ஸ்லீப்பர்' பெட்டியான அந்த தனியார் பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். லாரி துலேயில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து மேலும் உயிரிழப்பை ஏற்படுத்தியது.

    மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்து பயணிகள் எனவும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இந்துத்வா பற்றி பேச உத்தவ் தாக்கரேவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
    • உத்தவ் தாக்கரேவின் இந்துத்துவம் போலியானது.

    மும்பை :

    மத்திய மந்திரி நாராயண் ரானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டதால் 56 இடங்களை கைப்பற்ற முடிந்தது. ஆனால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா கட்சியை கைவிட்டது.

    சிவசேனா கட்சி ஏன் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து? அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் முதல்-மந்திரி பதவிக்காக இந்துத்வா கொள்கையை கைவிட்டுள்ளனர்.

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்துத்வா பற்றி பேசக்கூடாது. இந்துத்வா பற்றி பேச அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அவரது இந்துத்துவம் போலியானது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கில் நடத்திய தசரா பொதுக்கூட்டத்தில் அவர் தன்னை பற்றி தற்பெருமை கூறிகொள்வதாகவும், தனது எதிரிகளை கேவலப்படுத்துவதாகவும் தான் இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஷிண்டேவின் பேரனை குறிப்பிட்டு கருத்து தெரிவிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
    • பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயத்தில் வாழ்க்கிறார்.

    மும்பை :

    சிவசேனா கட்சி 2-ஆக பிளவு பட்டுள்ள நிலையில் வழக்கமாக நடத்தப்படும் சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டம் மும்பை சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே தலைமையிலும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பேரணி பி.எம்.சி. மைதானத்திலும் 2 இடங்களில் நடைபெற்றது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசிக்கொண்டனர்.

    அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது உரையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் மகனான எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டேவை ஒரு ஏமாற்று பேர்வழி என்று கூறியதுடன், அவரது ஒன்றரை வயது பேரனையும் விமர்சிக்கும் வகையில் பேசியதாக தெரிகிறது.

    இவரின் பேச்சுக்கு எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் பேரனை குறிப்பிட்டு கருத்து தெரிவிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இது மிகவும் கீழ்த்தரமானது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக தனது வார்த்தைகளை திரும்ப பெறவேண்டும்.

    மராட்டியத்தில் ஒன்றரை வயது குழந்தையை பற்றி கருத்து தெரிவித்தால் நாம் எங்கே செல்கிறோம்? இதுபோன்ற கருத்துகளுக்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளுக்கு இடையே இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. ஆனால் இது அனைத்தும் வீணான முயற்சி தான். பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயத்தில் வாழ்க்கிறார்" என்றார்.

    • 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஜர் பின்னி இடம் பெற்றார்.
    • பி.சி.சி.ஐ. செயலாளர் பதவிக்கு மீண்டும் ஜெய்ஷா போட்டியிட முடிவு.

    மும்பை:

    பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால் அந்த பதவிகளுக்கான தேர்தல் பணிளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை 13 ஆம் தேதி நடைபெறு என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். என்றும் அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்த முறை கங்குலி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் செயலாளர் பதவிக்கு மீண்டும்  போட்டியிட ஜெய்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் கங்குலி போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ரோஜர் பின்னியின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளரான ரோஜர் பின்னி, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றவர். பின்னி தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தில் அலுவலக பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    • பெண் பயணிகளின் சண்டையால் ரெயில் பெட்டியே போர்க்களம் போன்று மாறியது.
    • சில பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி சென்றனர்.

    மும்பை:

    மும்பை தானேவிலிருந்து பன்வெல் செல்லும் புறநகர் ரெயிலில் இருக்கையில் அமருவது தொடர்பாக 3 பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அடிதடியாக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமயாக தாக்கிக்கொண்டனர். சிறிது நேரத்தில் இந்தச் சண்டையில் மற்ற பெண்களும் சேர்ந்து கொண்டனர். இந்தச் சண்டையால் ரெயில் பெட்டியே போர்க்களம் போன்று மாறியது. சண்டையில் ஈடுபட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் முடியைப் பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டனர்.

    சில பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி சென்றனர். நெருல் ரெயில் நிலையம் வந்தபோது சிலர் ரெயில்வே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அந்த ரெயில் பெட்டிக்குள் பெண் காவலர் உள்ளே நுழைந்தார். உடனே சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அதன்பின்னர் மீண்டும் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களின் சண்டையை பெண் காவலர் தீர்த்து வைக்க முயன்றார். ஆனால் பெண் காவலரையும் பெண் பயணிகள் விட்டு வைக்கவில்லை. அவரையும் அடித்து உதைத்தனர்.

    இந்த மோதலில் பெண் காவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ரெயிலிலிருந்து இறங்கும்போது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • ஆகாசா ஏர் விமான நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
    • ஆகாசா ஏர் நிறுவனம் செல்லப் பிராணிகளை விமானங்களில் அனுமதிக்கும் 2-வது விமான நிறுவனம் ஆகும்.

    மும்பை:

    கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர் விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலில் மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமான சேவையை வழங்கி வந்த இந்நிறுவனம் தற்போது கூடுதல் வழித்தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

    இந்நிலையில், பயணிகள் இனி தங்கள் செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்வதற்கான முன்பதிவு அக்டோபர் 15 முதல் தொடங்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதை தொடர்ந்து நவம்பர் 1 முதல் செல்லப் பிராணிகள் விமானத்தில் பயணம் செய்யலாம் என ஆகாசா தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் செல்லப்பிராணிகளை விமானங்களில் அனுமதிக்கும் இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா ஏர் மாறியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற வீட்டு செல்லப்பிராணிகளை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

    • முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர் மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனைக்கும் மிரட்டல் விடுத்திருந்தார்.

    மும்பை:

    மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அதன்பின், அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ராகேஷ் குமார் மிஸ்ரா என்பவரை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுக்க பயன்படுத்திய மொபைல் போனையும் போலீசார் மீட்டனர். பீகார் காவல்துறை உதவியுடன் அந்த மிரட்டல் ஆசாமியைக் கைது செய்த மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்தனர்.
    • மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 2 இடைத்தரகர்களும் நூற்றுக்கணக்கானவர்களை மியான்மர் நாட்டுக்கு ஏமாற்றி அனுப்பி உள்ளனர்.

    மும்பை:

    மியான்மர் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மியாவாடி என்ற நகரம் மாபியா கும்பல் மற்றும் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கிறது.

    அந்த மாபியா கும்பல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கொண்டது. அந்த ஆயுத குழுவினர் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களை கடத்தி சென்று தங்களது டிஜிட்டல் குற்றங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

    அந்த வகையில் அந்த மாபியா கும்பலிடம் சுமார் 300 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக சிக்கி இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. அவர்களில் கணிசமானவர்கள் தமிழர்கள் என்பதும் அங்கிருந்து பேசியவர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.

    தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்தனர். அவர்களில் சிலரும் மியான்மருக்கு கடத்தப்பட்டு ஆன்லைன் மோசடி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மாபியா கும்பலிடம் இருந்து தங்களை மீட்குமாறு தமிழக இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். முதலில் 32 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அடுத்தகட்டமாக 13 தமிழர்கள் மீட்கப்பட்டு நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

    மற்றவர்களையும் மீட்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 6 தமிழர்கள் அங்குள்ள ஆயுதக்குழுக்கள் கும்பலிடம் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    மியான்மருக்கு கடத்தி செல்லப்படும் இளைஞர்களை இந்தியாவில் சிலர் திட்டமிட்டு ஏமாற்றி அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் நல்ல வேலை இருப்பதாகவும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் ஏமாற்றி அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அங்கு சென்ற பிறகு கிரிப்டோ கரன்சி மூலம் மோசடி செயல்களை செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளனர். மோசடியில் ஈடுபட மறுப்பவர்களை மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்து உள்ளனர். இவை அனைத்தும் மீட்கப்பட்டவர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே மீட்கப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் மகாராஷ்டிரத்தில் 2 இடைத்தரகர்கள் சிக்கி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் டோங்கிரி நகரை சேர்ந்த அந்த 2 இடைத்தரகர்களும் நூற்றுக்கணக்கானவர்களை மியான்மர் நாட்டுக்கு ஏமாற்றி அனுப்பி உள்ளனர். அங்குள்ள ஆயுதக்குழுக்களுடன் அவர்கள் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த 2 இடைத்தரகர்களும் நவாஸ்கான், உமர் காதர் என்று தெரிய வந்துள்ளது. அவர்களிடம் மகாராஷ்டிர மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை போல மற்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் இடைத்தரகர்களை பிடிக்கவும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • அதிகார ஆசைக்கும் ஒரு எல்லை உள்ளது.
    • உங்களின் ஆதரவுடன் சிவசேனா மீண்டும் எழுச்சி பெறும்.

    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் விலகலால் கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை இழந்தார்.

    இதைதொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி பா.ஜனதாவுடன் கைகோர்த்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதன்பிறகு சிவசேனா 2-ஆக பிளவுபட்டுள்ளது.

    இந்த பெரும் அரசியல் மாற்றத்திற்கு பிறகு இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நேற்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஏக்நாத் ஷண்டேவை கடுமையாக சாடினார். துரோகிகள் என்று அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் ஒருபோதும் மாறாது. காலத்தால் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    காலம் மாறும்போது ராவணனின் முகமும் மாறுகிறது. இன்று ராவணனின் உருவம் துரோகிகள் தான். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சமயத்தில் கட்சியின் பொறுப்பை ஏக்நாத் ஷிண்டேவிடம் ஒப்படைத்தேன். ஆனால் அவர் எனக்கு எதிராக சதி செய்தார். இனி ஒருபோதும் அவரை எங்களின் காலின் நிழலில் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.

    அதிகார ஆசைக்கும் ஒரு எல்லை உள்ளது. துரோக செயலுக்கு பின்னர் அவர் இப்போது கட்சி பெயரையும், அதன் சின்னத்தையும் விரும்புகிறார். மேலும் கட்சி தலைவர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

    ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது குறித்த பா.ஜனதாவின் வாக்குறுதி மீறப்பட்ட காரணத்தால் தான் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்க நான் பாரம்பரிய எதிரிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கினேன்.

    பா.ஜனதா கட்சி எங்களுக்கு இந்துத்வா குறித்து பாடம் நடத்த தேவையில்லை.

    பா.ஜனதா தலைவர்கள் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அவரது பிறந்தநாளில் அழைப்பிதழ் இன்றி சென்று சந்தித்தது மட்டும் இன்றி பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் கல்லறைக்கு முன்னால் வணங்கி நின்றனர்.

    வறுமை வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்துத்வா பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது.

    இன்று என்னிடம் எதுவும் இல்லை. ஆனால் உங்களின் ஆதரவுடன் சிவசேனா மீண்டும் எழுச்சி பெறும். நான் மீண்டும் சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவேன். அதற்கு ஒவ்வொரு தேர்தலிலும் துரோகிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவசேனா கட்சி என்பது ஒரு தனியாருக்கு சொந்தமான நிறுவனம் இல்லை.
    • நான் செய்தது துரோகம் இல்லை. அது ஒரு போராட்டமாகும்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் பிரிவு காரணமாக மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது. ஆட்சியை கைப்பற்றிய ஷிண்டே அணி நாங்கள் உண்மையான சிவசேனா என்று கூறி வருகிறது.

    மேலும் கட்சியின பெயர் மற்றும் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரி உள்ளது.

    இந்தநிலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தசரா பொதுக்கூட்டத்தை ஷிண்டே தலைமையிலான அணி பாந்திரா குர்லா காம்பிளக்ஸ் வளாகத்தில் நடத்தியது.

    இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-

    2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாநில வாக்காளர்கள் சிவசேனா மற்றும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்வு செய்தனர். ஆனால் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி மக்களுக்கு துரோகம் செய்தார்.

    பால்தாக்கரே பாரம்பரியத்தின் உண்மையான வாரிசுகள் யார் என்பதை காட்டுவதற்கு எனது தசரா பேரணியில் திரளான மக்கள் திரண்டிருப்பதே போதுமான சாட்சியாகும்.

    சிவசேனா கட்சி என்பது ஒரு தனியாருக்கு சொந்தமான நிறுவனம் இல்லை. 56 ஆண்டுகாலமாக இந்த கட்சியை கட்டி எழுப்பியவர்கள் சாதாரண சிவசேனா தொண்டர்கள் தான்.

    மகா விகாஸ் அகாடி ஆட்சியை நாங்கள் சதி செய்து வீழ்த்தியதாக சிலர் கூறுகின்றனர். நான் செய்தது துரோகம் இல்லை. அது ஒரு போராட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்திய பேரணியில் உத்தவ் தாக்கரேவின் சகோதரர் ஜெய்தேவ் தாக்கரே மற்றும் மனைவி ஸ்மிதா தாக்கரே, மறைந்த பால் தாக்கரேவின் பேரன் நிகார் தாக்கரே, பால்தாக்கரேவின் தனிப்பட்ட உதவியாளராக நீண்டகாலம் பணியாற்றிய சம்பா சிங் தாபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

    • கடந்த ஆகஸ்டு மாதம் ஒருவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நகை கடைக்காரர் ஒருவரை கைது செய்தனர்.

    மும்பை :

    மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் ஆஸ்பத்திரியை குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடிவருகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் இதேபோல ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஒருவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நகை கடைக்காரர் ஒருவரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மீண்டும் மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×