என் மலர்
மகாராஷ்டிரா
- மும்பையில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்.
- இந்த உத்தரவு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கரில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலியானார். விபத்தில் காரின் முன் சீட்டில் இருந்த 2 பேரும் உயிர் தப்பினர். ஆனால் பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால்தான் விபத்தின் போது காரின் முன்பகுதியில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்தன.
இந்நிலையில், மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி, பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக மும்பை போலீசார் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த மாதம் 1-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி, பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 194 (பி) (1) பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தவ் தாக்கரே அணியினர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
- தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக உத்தவ் தாக்கரே தரப்பு குற்றம் சாட்டியது.
மும்பை:
அந்தேரி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அவர்கள் அணிக்கு சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பெயர் வழங்கப்பட்டது.
முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை வாள் கேடயம் சின்னம் ஒதுக்கியுள்ளது. பால்தாக்கரேவின் சிவசேனா என்ற பெயரை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கியது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது என உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே அணியினர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய பரிந்துரை பட்டியலை, ஷிண்டே தரப்பினர் பரிந்துரை பட்டியல் அளிப்பதற்கு முன்பே ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர்.
எங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தவற்றைப் பார்த்து, காப்பி அடித்து, அதே விபரங்களை ஷிண்டே தரப்பினரும் தங்கள் பரிந்துரை பட்டியலில் தெரிவித்தனர்.
இதற்கு பின் தான், எங்கள் பரிந்துரை பட்டியல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆணையத்தின் இந்த ஒருதலைபட்சமான செயல்பாடுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
- சரக்கை வேறு வாகனத்திற்கு மாற்றிய பிறகு லாரியை கைவிட்டு ஓட்டுனரை சரோட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவி மும்பையில் உள்ள ரபேலில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இன்று அதிகாலை லாரி ஒன்று சிகரெட் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் காரில் வந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் லாரியை வழிமறித்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர், ஓட்டுனரின் கண்களை மூடிவிட்டு கொள்ளையர்களின் ஒருவன் லாரியை ஓட்டினான். இதையடுத்து, சரக்கை வேறு வாகனத்திற்கு மாற்றிய பிறகு லாரியை கைவிட்டு ஓட்டுனரை சரோட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு ரூ. 1.36 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளன*
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்தல் ஆணையம் சிவ சேனாவின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில், அம்பு சின்னத்தை முடக்கியது.
- ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது
மும்பை:
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது.
மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்தது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் நிராகரித்தது. புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரியது.
அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக ஒதுக்கி உத்தரவிட்டது.
- உத்தவ் தாக்கரே அணி சார்பில் மகாபிரபோதன் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது.
- எதிரிகளும், துரோகிகளும் சிவசேனாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.
தானே :
சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்து உள்ளது. 2 தரப்பும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறிவருகின்றனா். எனவே இருதரப்பும் தங்கள் அணியை பலப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் தானேயில் 'மகாபிரபோதன் யாத்திரை' பொதுக்கூட்டம் நடந்தது.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த ராஜன் விச்சாரே எம்.பி., பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
இறக்கங்களை சந்தித்து உள்ளது. எனவே இதுவும் கடந்து போகும். சிவசேனா பீனிக்ஸ் பறவை போல எழுச்சி பெறும். தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியை பறிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்துக்களின் வரலாறில் எவரும் தந்தை, சகோதரனிடம் இருந்து ஆட்சியை பறித்தது இல்லை. முகாலய ஆட்சியில் தான் அதுபோல நடந்தது''.
இவ்வாறு அவர் பேசினார்.
விநாயக் ராவத் எம்.பி. பேசுகையில், " எதிரிகளும், துரோகிகளும் சிவசேனாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது நடக்காது. சிவசேனா முழு பலத்துடன் எழுச்சி பெறும்." என்றார்.
இதேபோல உத்தவ் அணி துைண தலைவர் சுஷ்மா அந்தாரே ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவின் கைப்பாவை என கடுமையாக விமர்சித்தார்.
- சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- தேர்தல் ஆணையத்தால் தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
மும்பை
அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சிவசேனா கட்சியின் 2 அணிகளும் சிவசேனா சின்னத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் தங்கள் அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இது குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி தேர்தல் ஆணையத்தின் விசாரணை முன்பு பலவீனமாக இருப்பதை உணர்ந்துள்ளது. எனவே விசாரணை தேதிகளை வேண்டுமென்றே ஒத்திவைக்க கோருகிறது. ஆனால் ஒத்திவைப்பதன் மூலம் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியும், காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம் தங்களுக்கு மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறி அவதூறாக அழுதுகொண்டு இருக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக ஒரு கட்சி உடையும் பிரச்சினையை எதிர்கொண்ட போதெல்லாம், அசல் சின்னத்தையும், பெயரையும் முடக்கி தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது மகாராஷ்டிராவில் அதிகம் வெறுக்கப்படும் நபர் ஏக்நாத் ஷிண்டே.
- கட்சியின் சின்னம் முடக்கப்படுவது புதிதல்ல.
மும்பை :
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று நீதிமன்ற காவல் முடிந்து மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிவசேனாவின் வில், அம்பு சின்னம் முடக்கப்பட்டது குறித்து சஞ்சய் ராவத்திடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-
உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு புதிய சின்னம் ஒதுக்கப்படுவது பெரிய புரட்சியை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் கட்சியின் சின்னம் முடக்கப்படுவது புதிதல்ல. காங்கிரசின் சின்னம் கூட முடக்கப்பட்டுள்ளது. ஜனதா தளத்தின் சின்னமும் முடக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தால் சிவசேனாவின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தவிடாமல் மட்டும் தான் தடுக்க முடியும். கட்சி உயிரோடு தான் இருக்கும். சிவசேனா பெயரையும், வில், அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணியால் எளிதில் பெற்றிபெற முடியாது. தற்போது மகாராஷ்டிராவில் அதிகம் வெறுக்கப்படும் நபர் ஏக்நாத் ஷிண்டே.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பத்ரா சால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
- வில் அம்பு சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்றது என்றார் உத்தவ் தாக்கரே.
- மக்களிடம் சென்று இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், சிவசேனா பெயர் மற்றும் அதன் சின்னமான வில்- அம்பு ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்தது.
வில் அம்பு சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்றது என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்நிலையில், வில் அம்பு சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் விதித்த தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சாவர்க்கர் சிறையில் சித்தரவதை அனுபவித்தார்.
- அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நாக்பூர்:
சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித் தொகை பெற்றதாகவும், அவை வரலாற்று உண்மை என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே புரட்சியாளர் சாவர்க்கர் மட்டுமே. அவர் சித்திரவதைகள் நிறைந்த சிறை தண்டனையை அனுபவித்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் நிம்மதியாக கழித்தனர். எனவே, (அவரது ) தேசபக்தியை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது, மனிதாபிமானமற்றது.
உங்களால் அவரை மதிக்க முடியாவிட்டால், அவரை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் அனைத்து சாதியினரும் மதிக்கப்படுகிறார்கள். தீண்டாமை என்பது அதர்மம், பாவம். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவை பேச்சுவார்த்தை நடத்துமாறு மகாத்மா காந்தி தெரிவிக்கவில்லை.அப்படி நடத்தியிருந்தால் நாடு பிரிக்கப்பட்டிருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உத்தவ் தாக்கரே அணிக்கு மூன்று பெயர்கள் தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை.
- கட்சிக்கான சின்னத்தையும் பெயரையும் விரைவில் இறுதி செய்யுமாறு உத்தவ் கோரிக்கை
மும்பை:
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்துள்ள நிலையில், அந்தேரி கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷிண்டே அணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் இடைத்தேர்தலில் வில்-அம்பு சின்னத்தை உத்தவ் தாக்கரே அணிக்கு ஒதுக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் அந்தேரி கிழக்கு தொகுதி இடைதேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியும், சிவசேனா பெயர் மற்றும் அதன் சின்னமான வில்- அம்பு ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்தது.
மேலும் இரு பிரிவும் தங்கள் அணிக்கு 3 புதிய பெயர்களை சின்னங்களையும் தேர்வு செய்து திங்கட்கிழமைக்குள் (நாளை) தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி, இன்று தனது மூன்று விருப்ப சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
அதன்படி திரிசூலம், உதய சூரியன் மற்றும் எரியும் ஜோதி ஆகியவற்றுள் ஒன்றை புதிய சின்னமாக தேர்வு செய்து விரும்புவதாக கூறப்பட்டுள்ளது அதேபோல் தமது அணிக்கு சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா பிரபோதங்கர் தாக்கரே மற்றும் சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய மூன்று பெயர்களையும் பரிந்துரை செய்த தேர்தல் ஆணையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
வில் அம்பு சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு நியாயமற்றது என்று கூறி உள்ள உத்தவ் தாக்கரே, தனது கட்சிக்கான சின்னத்தையும் பெயரையும் விரைவில் இறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளார். மக்களிடம் சென்று இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.
- சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் சட்டப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. சிவ சேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோர் தலைமையில் 2 அணிகளாக பிரிந்து, தனித்தனியே கட்சிக்கு உரிமை கோரிய நிலையில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் மறு அறிவிப்பு வெளியிடும் வரை 'வில், அம்பு' சின்னத்தை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, அந்தேரி (கிழக்கு) தொகுதி இடைத்தேர்தலில் இரு அணியினரும் வேறு பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த வேண்டும். வரும் 10ஆம் தேதி (நாளை மறுநாள்) மதியம் 1 மணிக்குள் இரு அணிகளும் தங்களுக்கான புதிய பெயர் மற்றும் சின்னத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
சிவசேனாவின் முக்கிய தலைவரான ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 20ஆம் தேதி உத்தவ் தாக்கரே மற்றும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். மொத்தம் உள்ள 55 சேனா எம்எல்ஏக்களில் 40 எம்எல்ஏக்கள் ஷிண்டேவுக்கு ஆதரவாக திரும்பினர். மொத்தமுள்ள 18 சிவசேனா மக்களவை எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு மாறினர்.
உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
அதன்பின்னர் சிவ சேனா கட்சிக்கு உரிமை கோரி இரு தரப்பினரும் நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு சட்டப் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான சிவ சேனா என கூறி வருவதால் தேர்தல் ஆணையம் தற்போது சின்னத்தை முடக்கி உள்ளது.
- லாரி மீது மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது
- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
நாசிக்:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் பஸ் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர்.
இந்த விபத்து மற்றும் தீயில் சிக்கி 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்தனர். பஸ் தீப்பிடித்து எரிந்தது பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் பிரதமர் மோடி தனது வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொண்டார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.






