என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.
- பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு:
கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் மச்சிலி செக்டாரில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் சிக்கினர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
- இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என பரூக் அப்துல்லா தகவல்
ஸ்ரீநகர்:
நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்கும் நேரம் இது. கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இது ஒரு ஜனநாயக நடைமுறை' என்றார்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலராகப் பொறுப்பேற்பார் என்றும், தற்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா, புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
- உயிரிழந்தவர்களுக்கு, ஆளுநர், மத்திய மந்திரி இரங்கல்
கிஷ்த்வார்:
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் மார்வாவிலிருந்து ரெனி பகுதிக்கு இன்று மாலை பயணிகளை ஏற்றிச் சென்ற கால்டாக்சி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. மீட்பு பணியில் காவல்துறை, ராணுவ வீரர்கள், மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் துணை ஆணையர் தேவன்யாதவ் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு நௌபாச்சி சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவர்களது குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் நிகழ்ந்த உயிர் இழப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத், இதுபோன்ற விபத்துகளை தடுக்க அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
- மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை.
- மதுபானம், எரிபொருட்கள் மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
ஸ்ரீநகர் :
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:-
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம்.
ஆனால், மாநிலங்கள் சம்மதிக்க வாய்ப்பில்லை. இதை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டம் இல்லை. மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. ஆனால், அந்த மாநில நிதிமந்திரி ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வகையில், உற்பத்தி வரியை குறைத்துள்ளோம். சில அண்டை நாடுகளில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், நமக்கு கிராமப்புற பகுதிகளில் கூட தட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வசதிகளே இதற்கு காரணம்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. விலையை சீராக வைத்திருப்பதற்கு முயன்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வீட்டு வசதித் துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி, ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் அங்குள்ள மக்களுக்கும், நாட்டுக்கும் இடையே உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி அரசியல் பிரிவு சட்ட 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதன் மூலம் சாத்தியமாகி உள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்த பிரதமர் மோடியின் கனவு நனவாகிறது
11,721 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 25 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 13,600 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 7 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு-தில்லி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் காஷ்மீர் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடியுடன், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு.
- பாஜகவின் வாக்குறுதிகள் பொய்யாகி விட்டதாக காங்கிரஸ் கருத்து.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதன் பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, டெல்லியில் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். அப்போது அங்குள்ள தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மத்திய பாஜக ஆட்சியின் கீழ் ஜம்மு காஷ்மீர் அடையாளத்தை இழந்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய அந்த யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல்வானி கூறியுள்ளதாவது: பாஜக ஆட்சி ஜம்மு காஷ்மீரை பல துறைகளில் அழித்து விட்டது, அடையாளம், அந்தஸ்து, வேலைகள், நிலங்கள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஜம்மு காஷ்மீர் இழந்து விட்டது.
அதை மீட்டெடுப்பதற்கான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். காஷ்மீரில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யத் நிர்வாகம் தவறி விட்டது. காஷ்மீர் சிறுபான்மையினரும், ஜம்மு ஊழியர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பற்ற பகுதிகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சம்பளமும் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒளிமயமான எதிர்காலம், விலைவாசி கட்டுப்பாடு, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று அவர்களது (பாஜக) வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. மக்கள் சுரண்டப்படுகின்றனர். வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலை தவிர வேறு ஒன்றும் இங்கு இல்லை. பிற மாநிலங்களை விட ஜம்மு காஷ்மீர் வரலாற்று ரீதியாக மிகவும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டது. ஆனால் இப்போது அது அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
- பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் சுப்ரீன் பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் திருப்பி சுட்டனர். சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் கம்ரான் என்பதும், இவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. இவன் சோபியான் மற்றும் புல்கான் பகுதியில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். அவனடம் இருந்து பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
- தோடா மாவட்டத்தில் புதன்கிழமை கார் கட்டுப்பாட்டை இழந்து செனாப் பகுதியில் கவிழ்ந்ததில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
- விபத்து குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இவர்களில் குறைந்தது ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இவர்களை மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் பாரத் பூஷன் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை கார் கட்டுப்பாட்டை இழந்து செனாப் பகுதியில் கவிழ்ந்ததில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
இவர்களை இந்திய ராணுவமும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "தோடா மற்றும் சம்பாவில் துரதிர்ஷ்டவசமான சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது" என்றார்.
- கார் நிலை தடுமாறி அங்குள்ள ஆற்றில் பாய்ந்தது.
- காரில் பயணம் செய்த 4 இளைஞர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர்.
தோடா:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் உள்ள பிரேம் நகர் என்ற இடத்தில் நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த கார் நிலை தடுமாறி அங்குள்ள ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடியதால் கார் அதில் மூழ்கியது. இதனால் காரில் பயணம் செய்த 4 இளைஞர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியை உடனடியாக மேற்கொள்ளவில்லை. இன்று காலை முதல் 4 பேரையும் தேடும் பணி நடந்து வருகிறது.
- நசீமின் கணவர் முகமது லத்தீப் (40) ஆபத்தான நிலையில் ராஜோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தம்பதியரின் மகன் பஷரத் குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டிகேஜி சாலையில் உள்ள பாஃப்லியாஸின் டூனர் பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவின்போது பெரிய பாறை ஒன்று வீட்டின் மீது உருண்டு விழுந்தது. இதில், வீடு இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இந்திய ராணுவத்தின் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மீட்டு சூரன்கோட்டில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில், நசீம் அக்தர் (35) மற்றும் அவரது மகள் ரூபினா கௌசர் (12) ஆகியோர் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். மேலும் நசீமின் கணவர் முகமது லத்தீப் (40) ஆபத்தான நிலையில் ராஜோரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பதியரின் மகன் பஷரத் குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டி இல்லை என்று உமர் அப்துல்லா அறிவிப்பு.
ஸ்ரீநகர் :
காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதை முன்னிட்டு சட்டசபை தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தேசிய மாநாட்டுக்கட்சி நியமித்து வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, பொறுப்பாளர் நியமனம் குறித்து அவர்களிடம் விளக்கினார்.
அப்போது அவர் கூறுகையில், 'காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்ப கிடைக்கும்வரை தேர்தல்களில் போட்டியிடமாட்டேன் என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார்' என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்-மந்திரியும், கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இந்த முடிவை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவரது தந்தையும், கட்சித்தலைவருமான பரூக் அப்துல்லாவும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தலுக்காக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்தலில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லையா? என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, 'தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், அதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்று பதிலளித்தார்.
- பெண்களால் ரெயில்களையும், விமானங்களையும் இயக்க முடியும் போது, நாம் ஏன் இ-ரிக்சாவை ஓட்ட முடியாது என்று நினைத்தேன்.
- என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன். எனது கணவர் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.
ஸ்ரீநகர்:
பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், 3 குழந்தைகளின் தாய் ஒருவர் மின்சார வாகனமாக 'இ-ரிக்சா' ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அங்குள்ள நக்ரோடா பகுதியை சேர்ந்தவர் சீமா. 40 வயதான இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 மற்றும் 12 வயதுடைய 2 மகள்களும் உள்ளனர்.
இவர் கடந்த 4 மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 'இ-ரிக்சா' ஓட்டி வருகிறார். இது குறித்து சீமா கூறியதாவது:-
எனது கணவரின் வருமானம் போதாத காரணத்தால் இந்த வேலையை செய்தேன். எங்களுக்கு குடும்ப செலவு அதிகமாக இருக்கிறது. எனவே செலவை சமாளிக்கவும், கணவருக்கு உதவியாக இருக்கவும் விரும்பினேன்.
எனக்கு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே நானும், என் கணவரும் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி, ரூ.3 ஆயிரம் மாத தவணையில் 'இ-ரிக்சா' வாங்கினோம். எனது கணவர் எனக்கு இ-ரிக்சாவை ஓட்ட கற்றுக்கொடுத்தார்.
பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களால் நான் ஈர்க்கப்பட்டேன். பெண்களால் ரெயில்களையும், விமானங்களையும் இயக்க முடியும் போது, நாம் ஏன் இ-ரிக்சாவை ஓட்ட முடியாது என்று நினைத்தேன். அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன். எனது கணவர் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.
பெண்கள் எனது வாகனத்தில் பயணம் செய்வதை பாதுகாப்பாக உணர்கிறார்கள். மாணவிகளையும் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






