என் மலர்tooltip icon

    குஜராத்

    • பகலில் மின்தகடுகள் வழங்கும் மின்சக்தி வீடுகளில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.
    • உற்பத்தியை விட நுகர்வு குறைவாக இருந்தால் அதற்குரிய பணம் வழங்கப்படுகிறது

    மோதிரா:

    இந்தியாவின் முதல் சோலார் கிராமம் என்ற பெருமையை குஜராத் மாநிலம் மோதிரா கிராமம் பெற்றிருக்கிறது. வீட்டின் கூரைகளெங்கும் சூரிய தகடுகளாக காட்சியக்கும் இந்த கிராமத்தின் மக்கள், முழுக்க முழுக்க சூரிய மின்சக்தியை 24 மணி நேரமும் பயன்படுத்துகின்றனர். சூரிய கோவிலுக்கு புகழ்பெற்ற இந்த கிராமம் இப்போது சூரிய மின்சக்திக்கும் உதாரணமாகியிருக்கிறது.

    மண்பாண்டத் தொழில், தையல் தொழில் மற்றும் விவசாயம் செய்யும் 6500 குடும்பங்கள் கொண்ட இந்த கிராமத்தில் எல்லாம் இயந்திரத்தில் இயங்குகிறது. இதற்கு சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. பகலில் மின்தகடுகள் வழங்கும் மின்சக்தி வீடுகளில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரம் இரவில் பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

    அங்கு மண்பாண்டத் தொழில் செய்யும் பிரஜாபதியிடம் பேசியபோது, சூரியசக்தி தங்களை மிளிரச் செய்வதாக தெரிவித்தார். சூரிய மின்சக்தியால் வேலைகள் எல்லாம் இப்போது சீக்கிரமாக முடிந்துவிடுவதாக கூறினார், கையால் சக்கரங்களை சுற்றியபோது கடினமாக இருந்ததாகவும், சூரிய மின்சக்தியால் சக்கரம் சுழல்வதால் அதிக மண்பாண்டங்களை தயாரிக்க முடிவதாகவும் கூறினார்.

    கிராமங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்மீட்டர்களை கணக்கிட்டுக்கொண்டிருக்கும் ஸ்வேதா பட்டேல் பேசுகையில் மாற்றங்களை விளக்கினார். வீடு வீடாக சென்று மீட்டர்களை கணக்கிட்டு, மின்சார உற்பத்தியை விட நுகர்வு அதிகமாக இருந்தால் அதற்குரிய கட்டணத்தை கட்டச் சொல்கிறோம். மாறாக உற்பத்தியை விட நுகர்வு குறைவாக இருந்தால் அதற்குரிய பணம் அவர்களது கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படுகிறது என்றார் ஸ்வேதா. அதாவது, அதிகப்படியான மின்சாரத்தை அரசாங்கம் வாங்குகிறது.

    அங்குள்ள சூரிய கோவிலில் பாரம்பரிய விளக்குகள் மற்றும் வரலாற்றை விளக்கும் 3டி புரொஜெக்சன் காட்சிப்படுத்தலுக்கும் சூரிய மின்சக்தியே பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியா 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் மின்சாரத்தை சூரிய மின்சக்தி, காற்றாலை, நீர்மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாயிலாக பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நோக்கத்தை அடைய மத்திய அரசும் குஜராத் அரசும் 80.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மோதிரா கிராமத்தில் இந்த சூரிய மின்சக்தி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

    • குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • குஜராத்தில் ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டிருந்தார்.

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

    ஆனால் 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.

    தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கிடையே, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2ம் தேதி (இன்று) மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் அன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டிருந்தார்.

    அதன்படி, இன்று மாநிலம் முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாநிலத்தில் இந்திய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • தனியார் நிறுவனத்தின் காண்டிராக்டர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார்.
    • மோர்பி 150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு நதியில் தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் 141 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாலம் மறு சீரமைப்புக்கு பின் திறந்து 5 நாட்களில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.

    முதல் கட்ட விசாரணையில் அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. 150 பேர் நிற்கக்கூடிய பாலத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் இருந்ததால் பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட காண்டிராக்டர் அதனை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த பாலம் 1879-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும்.

    சுமார் 230 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிறந்த சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. 143 ஆண்டுகள் பழமையான பாலம் என்பதால் அதனை சீரமைக்க முடிவு செய்யபட்டு அதற்கான பணியை மேற்கொள்ள கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த பணியை முடிக்க வருகிற டிசம்பர் மாதம் வரை அவகாசம் கேட்டு இருந்தார். ஆனால் அடுத்தடுத்து தீபாவளி மற்றும் குஜராத் புத்தாண்டை யொட்டி அதற்கு முன்பாக பணியை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.

    இதனால் அவசரகதியில் இந்த பணி நடந்து கடந்த 26-ந்தேதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. தனியார் நிறுவனத்தின் காண்டிராக்டர் தொங்கு பாலத்தை தாங்கி பிடிக்கும் கேபிள்களை மாற்றாமல் வர்ணம் மட்டும் பூசி புதுப்பிக்கப்பட்டது போல மாற்றினார். இதுதான் 141 பேர் உயிர் இழந்ததற்கு காரணமாக அமைந்து விட்டது.

    இதனால் அந்த நிறுவனம் முழுமையாக பாலத்தை சீரமைத்ததா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி நேற்று சம்பவம் நடந்த தொங்கு பாலத்தை நேரில் பார்வையிட்டார். விபத்து தொடர்பாக அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    விபத்துக்கான காரணம் உடனடியாக கண்டறியப்பட்டால் தான் எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் ஏற்படுவதை தடுக்க முடியும். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இயல்பு நிலை திரும்பும் வரை உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியில் தங்கி இருந்து கண்காணிக்குமாறு அறிவுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.
    • தற்போதைய உடனடித் தேவை, பாலம் விபத்து தொடர்பாக விரிவான விசாரணை.

    குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் உடன் இருந்தார். மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் அவர்களது துணிச்சலான சேவையைப் பாராட்டினார். 


    இதைத் தொடர்ந்து மோர்பியில் பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்க்வி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா, குஜராத் மாநில அரசின் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 


    மீட்பு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பிரதமருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். அப்போது பேசிய பிரதமர், இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் அனைத்து உதவிகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 


    தற்போதைய உடனடித் தேவை, விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் கண்டறிய பரந்த மற்றும் விரிவான விசாரணை என பிரதமர் கூறினார். விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்ளூர் மருத்துவமனைக்கும் சென்று பிரதமர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    • காயமடைந்தவர்களுக்கு மோர்பி நகர மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மிகப்பெரிய ஊழலால் தொங்கு பால விபத்து நிகழ்ந்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

    ஆமதாபாத்:

    குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் கடந்த 30-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 141-பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு மோர்பி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக விபத்து நடந்த இடத்தை அவர் ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

    தொங்கு பாலத்தை புனரமைக்கும் ஒப்பந்தம் ஒரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிறுவனம் கடந்த 7 மாதங்களாக பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த வாரம் அப்பாலம் மீண்டும் திறக்கப்பட்டு இருந்தாலும் பாலத்துக்கான மாநகராட்சி தர சான்றிதழை அந்த நிறுவனம் பெறவில்லை.

    சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் இருவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரிய பொதுநல மனுவை, வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலால் நிகழ்ந்தது என்று, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பாலத்தை சீரமைப்பதில் எந்த அனுபவமும் இல்லாத, நிறுவனத்திடம், ஏன் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது, குஜராத் அரசுக்கு வேண்டியவர்களுக்கு இந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • விபத்திற்கு தார்மிக பொறுப்பேற்று குஜராத் முதல்-மந்திரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்.
    • பாலத்தில் இவ்வளவு பேரை அனுமதித்தது ஏன்? இதற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்.

    மோர்பி:

    குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது. இதில் 141 பேர் பலியானார்கள்.

    மோர்பி பகுதியில் விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ் குழுவினர் நேற்று பார்வையிட்டனர். ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    அப்போது இந்த விபத்து எதிரொலியாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனக்கு அரசியல் செய்ய விருப்பமில்லை. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை மாலை பாலம் அறுந்து விழுந்த போது பா.ஜனதா மந்திரிகள், எம்.பி.க்கள், கலெக்டர் மற்றும் மோர்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அருகில் உள்ள இடத்தில் கூட்டம் நடத்தி கொண்டு இருந்ததை அறிந்தேன். அவர்கள் கூட்டத்தை நிறுத்தவில்லை.

    அதிகாரிகளிடம் இருந்து எந்தவித சான்றிதழும் பெறாமல் பாலம் எப்படி பொது மக்களுக்காக திறக்கப்பட்டது.

    இது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. அரசால் உருவாக்கப்பட்ட சோகமாகும். இதற்கு தார்மிக பொறுப்பேற்று குஜராத் முதல்-மந்திரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும். பாலத்தில் இவ்வளவு பேரை அனுமதித்தது ஏன்? இதற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு திக்விஜய் சிங் தெரிவித்தார்.

    • இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.
    • 100-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஆமதாபாத்

    குஜராத்தில் மோர்பி நகரத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்து நேரிட்ட கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த துயர சம்பவத்தில் ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி அவர் கூறும்போது, "இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 12 பேரை நான் இழந்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனது சகோதரி குடும்பத்தினர்" என கண்ணீருடன் தெரிவித்தார்.

    • குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்தது.
    • மாநிலம் முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என முதல் மந்திரி அறிவித்துள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால் 5 நாட்களில் பாலம் திடீரென நேற்று முன்தினம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது.

    இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சம்பவம் நடந்தது முதல் இதுவரை மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றி பிரதமர் மோடியிடம் விளக்கி கூறப்பட்டன. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தி உள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2-ம் தேதி (நாளை) மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் அன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டுள்ளார்

    • குஜராத் பாலம் விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது.
    • குஜராத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    குஜராத் மாநிலம் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    குஜராத் பாலம் விபத்து நிகழ்வால் என் இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. நான் கெவாடியா பகுதியில் இருந்தாலும் எனது மனம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. பாரம்பரிய நடனம் ஆடுவதற்காக நாடு முழுவதும் இருந்து நடன குழுக்கள் கெவாடியாவுக்கு வந்துள்ளன. ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர்களது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இந்த சம்பவம் காரணமாக குஜராத்தில் இன்று மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. ரோடு ஷோ மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருந்தார். இதே போல காங்கிரஸ் கட்சியும் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது.

    • என் கண் முன்னால் பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
    • என் முன் மரண ஓலத்துடன் பலர் இறந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை.

    அகமதாபாத்:

    குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 142 பேர் இறந்து விட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த டீ வியாபாரி கூறியதாவது.-

    நான் இந்த பகுதியில் டீ விற்று வருகிறேன். நேற்றும் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது தொங்கு பாலம் திடீரென அறுந்து விழுந்தது. எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்து விட்டது.

    என் கண் முன்னால் பாலத்தில் இருந்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். எங்கு பார்த்தாலும் பலர் தண்ணீரில் மூழ்கியதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

    7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கதறியபடி உயிர் விட்டதை பார்த்ததும் நான் மனம் உடைந்து போய் விட்டேன். நானும் என்னால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சி செய்தேன். மீட்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல உதவினேன். ஆனாலும் என் முன் மரண ஓலத்துடன் பலர் இறந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அகமதாபாத்தை சேர்ந்த விஜய் கோஸ்சுவாமி என்ப வர் கூறியதாவது:-

    நான் எனது குடும்பத்துடன் தொங்கு பாலத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சில இளைஞர்கள் தொங்கு பாலத்தை பிடித்து ஆட்டினார்கள். இதனால் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்பதை அறிந்த நான் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு திரும்பி வந்து விட்டேன்.

    அந்த சமயம் நான் நினைத்தபடியே பாலம் அறுந்து விழுந்து விட்டது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இளைஞர்கள் பாலத்தை பிடித்து இழுத்துக்கொண்டு இருப்பது குறித்து நான் அங்கு டிக்கெட் விற்று கொண்டிருந்தவர்களிடம் முன்னமே கூறினேன்.

    ஆனால் அவர்கள் அதுபற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் டிக்கெட் கொடுப்பதில் தான் மும்முரமாக இருந்தனர். நான் சொன்னதை அவர்கள் காது கொடுத்து கேட்டு நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோர்பி தொங்கு பாலம் விபத்தில் இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • ஆற்றில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகளை பார்வையிடுகிறார்.

    குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் அங்கு திரண்டு அங்குள்ள தொங்கு பாலம் வழியாக சென்றனர்.

    அப்போது, பாரம் தாங்காமல் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான பலரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விவகாரத்தில் பாலத்தை புதுப்பித்த பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில், மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். ஆற்றில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகளை பார்வையிடுகிறார்.

    • தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
    • இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது.

    இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது.

    சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க குஜராத் மாநில அரசு தனியார் நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து இருந்தது.

    அந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்பு பணியை முடித்து கடந்த 26-ந்தேதி பாலத்தை திறந்தது. அன்று முதல் அந்த பாலத்தில் கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்ல தொடங்கினார்கள்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை தினம் என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டனர்.

    அந்த தொங்கு பாலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி நின்று சாத் பூஜை செய்தனர். சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அந்த பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாதபடி பாலத்தில் தொய்வு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் சில இளைஞர்கள் தொங்கு பாலத்தில் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் கேபிள்கள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்த மக்களும் மசசூ ஆற்று தண்ணீருக்குள் விழுந்தனர்.

    ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை. பலர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பாலத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில், தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×