என் மலர்tooltip icon

    குஜராத்

    • வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    • பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் மணீஷ் சிசோடியா விமர்சனம்

    அகமதாபாத்;

    குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.

    இந்நிலையில், தங்கள் வேட்பாளர்களில் ஒருவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் புகார் கூறி உள்ளனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா பாஜகவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும், காவல்துறையினரால் தேர்தல் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் வேறு இடத்திற்கு கொண்டு சென்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டுவிட்டரில் பதிவிட்டனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்துள்ளது.

    வேட்பாளரையும் அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவரது வீடு பூட்டி கிடக்கிறது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    ஜரிவாலாவை இழுத்து வந்து அவரது வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதாக கூறி ஒரு வீடியோவை ஆம் ஆத்மி கட்சித் தலைவரான ராகவ் சத்தா, வெளியிட்டார். காவல்துறையும் பாஜக குண்டர்களும் சேர்ந்து, எங்கள் சூரத் கிழக்கு வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, வேட்புமனுவை வாபஸ் பெறும்படி வற்புறுத்தியதைப் பாருங்கள்... 'சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்' என்ற வார்த்தை ஜோக் ஆகிவிட்டது என அவர் ட்வீட் செய்துள்ளார்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.

    • மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம்.
    • அதிக ஓட்டுகள் வாங்குவோம்.

    ஆமதாபாத் :

    குஜராத் சட்டசபை தேர்தலில் சனந்த் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கனுபாய் படேல் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இந்த தொகுதி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் மக்களவை தொகுதியில் அடங்கியது. எனவே மனுதாக்கலின்போது அவரும் கலந்து கொண்டார்.

    அப்போது அமித்ஷா கூறும்போது, "குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும். இங்கு மீண்டும் பலத்த பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம். மிக அதிகளவில் இடங்களை பிடிப்போம். அதிக ஓட்டுகள் வாங்குவோம்" என கூறினார்.

    • கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
    • ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், நவ்சாரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். கிராம மக்கள் சார்பில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 'ரெயில் இல்லை, ஓட்டும் இல்லை' என எழுதப்பட்டுள்ளது.

    இங்குள்ள அஞ்செலி ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயில்களை நிறுத்துமாறு கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, ஆளும் பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்ய வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் வசிக்கும் மாணவர்களும் படிப்பில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், பெரும்பாலும் அவர்கள் கல்லூரிக்குச் செல்வதற்கு தாமதமாகிறது. இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 

    • இதுவரை பாஜக 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
    • காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளுக்கும், ஆம் ஆத்மி 176 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பாஜக ஏற்கனவே 160 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. முதலமைச்சர் பூபேந்திர படேல், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவபா உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்று இருந்தன. தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப் படவில்லை.

    இந்தநிலையில் பாஜக 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாஜக 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே பாஜகவில் சீட் கிடைக்காததால் தற்போதைய எம்எல்ஏ மற்றும் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகிய 5 பேர் சுயேட்சையாக போட்டியிட போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளுக்கும், ஆம் ஆத்மி 176 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

    • குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • முதல்கட்டமாக 43 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அக்கட்சி ஏற்கனவே வெளியிட்டது.

    அகமதாபாத்:

    182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.

    குஜராத் சட்டசபைக்கு தகுதிவாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே, 43 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வெளியிட்டது.

    இந்நிலையில், குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான 2வது கட்டமாக 46 வேட்பாளர்களும், 3வது கட்டமாக 7 வேட்பாளர்களும் அடங்கிய பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

    • கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரசில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் 35 பேர் தற்போது பாரதிய ஜனதாவில் உள்ளனர்.
    • பிரிஜேஷ் மெர்ஜா சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்த மோர்பி தொகுதியில் வலுவான போட்டியாளராக உள்ளார்.

    காந்தி நகர்:

    குஜராத் மாநிலத்தில் வருகிற 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி அம்மாநிலத்திற்கு தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர். அதன்பிறகு குஜராத்தில் பெரும்பான்மையாக உள்ள பட்டேல் இனத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்திய

    ஹர்திக் பட்டேல் - அல்பேஸ் தாக்கோர்

    ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்திருந்தனர்.

    அவர்கள் தற்போது பா.ஜ.க. சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் உள்பட கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரசில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் 35 பேர் தற்போது பாரதிய ஜனதாவில் உள்ளனர்.

    இவர்களில் சிலர் தற்போது பாரதிய ஜனதா சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளனர்.

    குறிப்பாக குன்வர்ஜி பவாலியா 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், மக்களைவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். சோமாபாய் கோல்பட்டேல் சுரேந்திரன்நகரில் இருந்து மக்களவை உறுப்பினராகவும், லிம்பே சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

    பிரிஜேஷ் மெர்ஜா சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்த மோர்பி தொகுதியில் வலுவான போட்டியாளராக உள்ளார்.

    இந்த தலைவர்கள் அனைவருமே காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு வந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் தற்போது பா.ஜனதா சார்பில் போட்டியிடுவதற்காக முயற்சி செய்து வருவது பா.ஜனதாவுக்கு ஒரு வகையான இக்கட்டான சூழ்நிலையாக மாறி வருவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    காங்கிரசில் இருந்து விலகி வந்த இந்த தலைவர்கள் அனைவருமே மக்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ளனர். எனவே அவர்களில் கணிசமானவர்களுக்கு சீட் வழங்க பா.ஜனதா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி, துணைமுதல்வர் நிதின்பட்டேல் உள்ளிட்ட மூத்த பா.ஜனதா தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு கட்சி தலைமைக்கு வலியுறுத்த உள்ளார்களாம்.

    ஆனால் அவர்களுக்கு கட்சியில் வேறு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • குஜராத்திற்கு செழிப்பை கொண்டு வந்தது தாமரை.
    • அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    வல்சாத்:

    அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று தமது பிரச்சாரத்தை தொடங்கினார். வல்சாத் மாவட்டம் கப்ரடா தாலுகாவில் உள்ள நானா போந்தா கிராமத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது நான் இதை குஜராத்திற்காக உருவாக்கினேன் என்ற பிரச்சார முழுக்கத்தை அறிமுகம் செய்தார். மேலும் அவர் கூறியதாவது:

    குஜராத்திற்கு செழிப்பை கொண்டு வந்தது தாமரை. அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குஜராத்தியும், அது ஆதிவாசியாக இருந்தாலும், மீனவராக இருந்தாலும், கிராமவாசியாக இருந்தாலும், நகரவாசியாக இருந்தாலும், இன்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்.

    அதனால்தான் இதை நான் குஜராத்திற்காக உருவாக்கினேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் தங்கள் கடின உழைப்பால் இந்த மாநிலத்தை உருவாக்கியுள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள பழங்குடியினர் பகுதியில் ஒரு அறிவியல் பள்ளி கூட இல்லை, ஆனால் இன்று இப்பகுதியில் உள்ள அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தெற்கு குஜராத்தில் உள்ள உமர்காம் முதல் வடக்கே அம்பாஜி வரையிலான பழங்குடியினப் பகுதியிலும் இப்போது ஐந்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இன்று இந்த மக்கள் 24 மணி நேர மின்சாரத்தைப் பெறுகிறார்கள், மாநிலத்தில் 100 சதவீத வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் கிடைக்கிறது.

    வெறுப்பை பரப்பும் பிரிவினைவாத சக்திகள், குஜராத்தை அவமதிக்க முயற்சித்தவர்கள், குஜராத்தில் இருந்து துடைத்து எறியப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக அந்த சக்திகள் கடுமையாக முயற்சித்து வந்தாலும், குஜராத் மக்கள் அவர்களை நம்பவே இல்லை. வெறுப்பை பரப்புபவர்களை குஜராத் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்குக் காரணம், மாநில மக்கள் கடுமையாக உழைத்து குஜராத்தை உருவாக்கியுள்ளனர்.

    கடந்த காலத்தில் குஜராத் மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்கள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலிலும் அவர்கள் அதே நிலையை சந்திப்பார்கள். டெல்லியில் நான் இருந்தாலும், குஜராத்தில் பாஜக இந்த முறை சாதனை வெற்றியை பெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. கடந்த கால சாதனைகளை முறியடிக்கவே இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக முடிந்தவரை அதிக நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக இருக்கிறேன் என்று குஜராத் பாஜகவிடம் கூறியுள்ளேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

    • மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
    • குஜராத்தில் பாரதிய ஜனதா கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது.

    ஆமதாபாத்:

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 15-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 17-ந்தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து குஜராத்தில் தேர்தல் ஜூரம் தொற்றி கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் குஜராத்தில் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியுமே பிரதான கட்சிகளாக களம் இறங்கியது. இதில் பாரதிய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன.

    இம்முறை குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் இம்முறையும் ஆட்சியை கைப்பற்றி விட பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது.

    குஜராத்தில் பாரதிய ஜனதா கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. 6 முறை ஆட்சியில் அமர்ந்து தொடர்ந்து 27 ஆண்டுகள் பதவியில் இருக்கிறது. 7-வது முறையாக இந்த தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளது.

    இதையொட்டி பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேர்தல் தேதி வெளியான பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் பிரசாரம் தொடங்க இருக்கிறார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி மோடி பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக அவர் சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று பிற்பகல் செல்கிறார்.

    அவருக்கு பாரதிய ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்பு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து வல்சாத் மாவட்டம் செல்கிறார்.

    வல்சாத் மாவட்டத்தில் உள்ள கப்ரடா கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பிறகு தேர்தல் பிரசார பேரணியிலும் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாவ் நகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதில் தந்தையை இழந்த 522 பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    பிரதமர் மோடி முதல் முறையாக இன்று பிரசாரம் தொடங்க இருப்பதை தொடர்ந்து அங்குள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக குஜராத் சென்று பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பதால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    • பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி சொந்த மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    அகமதாபாத்:

    பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    இதற்கிடையே, முன்னாள் மந்திரியான ஜெய் நாராயண் வியாஸ் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக இன்று பயணம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரான ஹிமான்ஷு வியாஸ் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

    • 2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது.
    • தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என்ற நிலையில் ஆம் ஆத்மி 3-வதாக களத்தில் குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வியை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    முதல் கட்டத்தில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 14ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களின் பரிசீலனை 15ம் தேதி நடக்கிறது. 17ம் தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    2-வது கட்டமாக 93 தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பரிசீலனை 18ம் தேதி நடக்கிறது. மனுவை வாபஸ் பெற நவம்பர் 21ம் தேதி கடைசி தினமாகும்.

    குஜராத் சட்டசபை தேர்தலில் 4.9 கோடி வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.450 கோடி செலவாகும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது. 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலை நடத்த ரூ.250 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.

    • குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை.
    • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை

    அறிவிக்கப்பட்டாயிற்று, குஜராத் சட்டசபை தேர்தல் திருவிழா. நாளை வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.

    திரைப்படங்களுக்கு பூஜை போடுகிற நாளிலேயே படம் விலை போய்விடுகிறமாதிரி, தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டிலேயே வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

    182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது என்பது அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கு மானப்பிரச்சினை. இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இங்கு வெற்றி வாகை சூடி, 1995-ம் ஆண்டு தொடங்கி சுவைத்து வருகிற வெற்றிக்கனியை மீண்டும் சுவைத்துவிட பா.ஜ.க. துடிக்கிறது.

    ஆட்சியை பறிகொடுத்து கால் நூற்றாண்டு கடந்து விட்டது, இந்த முறையாவது வெற்றி பெற்று, ஆட்சியைப்பிடித்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அஸ்திவாரம் போட நினைக்கிறது காங்கிரஸ்.

    ஆனால் டெல்லி, பஞ்சாபில் வெற்றி பெற்று, இப்போது ஆம் ஆத்மியின் பார்வை குஜராத் பக்கம் திரும்பி இருக்கிறது. 2024 தேர்தலுக்கு பின்னர் இந்தியாவை ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று கனவு வளர்த்து களத்தில் குதிக்கிறது, கெஜ்ரிவாலின் கட்சி.

    மும்முனைப் போட்டி தேர்தல் களத்தில் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு அணுவளவும் இடம் இல்லை. இந்த மோதலில் வெற்றி யாருக்கு என்பதே நாட்டின் பேசுபொருளாக மாறப்போகிறது.

    "எங்கள் கட்சியே வெற்றி பெறும். இரட்டை என்ஜின் அரசு மீண்டும் அமையும். பிரதமர் மோடி தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம்" என்று தேர்தல் அறிவிப்பு வெளியான கணத்திலேயே மார் தட்டி இருக்கிறார், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா.

    எந்தவொரு ஆட்சியும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறபோது, அதற்கு எதிரான மனநிலை மக்களிடம் ஏற்படுவது வாடிக்கை. இப்போது அந்த வகையில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராய் திரும்பியுள்ள பிரச்சினைகள் உண்டு.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பில்கிஸ்பானு கும்பல் கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு, மோர்பி பால விபத்து, அரசு வேலைவாய்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்துவிடுவதும் தேர்வு ஒத்திவைப்பும், கடைக்கோடி பகுதிகளில் சுகாதார வசதி-அடிப்படை கல்வி வசதியின்மை, மழைவெள்ளத்தில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்காமை, சரியான சாலை வசதிகள் இன்மை, அதிகபட்ச மின்கட்டணம், அரசு திட்டங்களுக்கு நில எடுப்பில் அதிருப்தி... இப்படி பா.ஜ.க. அரசுக்கு எதிரான அம்சங்கள் அணிவகுக்கின்றன.

    குஜராத்தை சேர்ந்தவர் நாட்டின் பிரதமர் என்ற 'டிரம்ப் கார்டு' கை கொடுக்கும், மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் அரசு என்னும் பிரசாரம் வெற்றிதரும் என்று முழுமையாய் நம்புகிறது பா.ஜ.க.

    மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் காங்கிரசின் கனவுக்கு காரணங்கள் உண்டு.

    காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் விடுவிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்குப் பிறகு முதல்முறையாக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்பு, இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்குவங்கி, 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதி போன்றவை இந்த முறை கண்டிப்பாய் கைகொடுக்கும், வெற்றி தேடித்தரும் என்பது காங்கிரசின் நம்பிக்கை.

    ஆனால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் குஜராத் இடம்பெறவில்லை; சோனியா-ராகுல் பிரசாரம் செய்வார்களா என்பது கேள்விக்குறி; முன்னிலைப்படுத்துவதற்கு கட்சியில் எழுச்சிமிக்க தலைவர்கள் குஜராத்தில் இல்லை என்பதெல்லாம் பின்னடைவுகள்.

    பா.ஜ.க., காங்கிரசுடன் மல்லு கட்டப்போகிறது, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. இந்தக் கட்சிக்கும் ஆட்சியை கைப்பற்றிவிடும் ஆசை இருக்கிறது. நாங்கள் மாறுபட்ட சக்தி என்னும் பிரசாரம், இலவச மின்சாரம்... வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்... 18 வயதான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என வாக்குறுதிகள் கைகொடுக்கும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இலவச வாக்குறுதிகளை குஜராத் மக்கள் வரவேற்பார்களா, மாட்டார்களா என்பது பட்டிமன்ற விவாதப்பொருள்.

    ஆனால் பிரதமர் மோடி தேர்தல் இலவசங்களுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பும்போது, மக்களிடம் இந்த இலவச வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மறுக்கவும் முடியாது. பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களிடம் இது வரவேற்பை பெற்று ஓட்டு வங்கியாக மாறுமா என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அம்சங்கள்.

    அதே நேரத்தில் குஜராத் மாநில அரசியலில் ஆம் ஆத்மி கத்துக்குட்டி, குஜராத்தில் ஆம் ஆத்மியில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை, ஓட்டு வங்கி பெயருக்குகூட இல்லை என்பது பாதகமான அம்சங்கள். ஆழம் தெரியாமல் காலை விட்டு தோல்வி அடைந்தால், அது ஆம் ஆத்மி இனி எடுக்கும் சோதனை முயற்சிகளுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பும் இருக்கிறது.

    வெற்றி யாருக்கு?

    மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் என்கிற பா.ஜ.க. வாதம், அந்தக்கட்சியின் வெற்றிக்கு அஸ்திவாரம். கட்சிக்கு தலித் தலைமை, வேலை வாய்ப்பு வாக்குறுதிகள், ஆட்சியைப் பறிகொடுத்து கால் நூற்றாண்டு என்ற அனுதாப அலை ஆகியவை காங்கிரசின் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையலாம். ஆம் ஆத்மி மாற்றத்துக்கான அரசியல் என்ற வாதம் அதன் வெற்றிக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

    கடைசி நேர மாற்றங்கள், அதிரடிகள், பிரசாரங்கள் என்ன விதமான அலையை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது.

    டிசம்பர் 8 தான் வெற்றியை தீர்மானிக்கும். ஆமாம். அன்றுதான் ஓட்டு எண்ணிக்கை.

    • குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வரை அவரது ஆட்சி காலம் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு கடந்த காலங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று மீண்டும் 2 கட்டங்களாக நடத்தலாமா என்று ஆய்வு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு இன்று மதியம் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    டெல்லியில் இன்று மதியம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    இந்த 89 தொகுகளிலும் நாளை மறுநாள் (நவம்பர் 5-ந் தேதி) வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 5-ந் தேதி 2-ம் கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது.

    குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 142 தொகுதிகள் பொதுவானவை. 17 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 23 தொகுதிகள் மலைவாழ் பழங்குடி இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக 182 தொகுதிகளிலும் 51 ஆயிரத்து 782 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் தரை தளத்திலேயே அமைக்கப்படும்.

    வாக்களிப்பதில் பெண்களையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக முழுக்க முழுக்க அவர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும். 1274 வாக்குச் சாவடிகளில் முழுக்க பெண்களே பணிபுரிவார்கள்.

    அதுபோல 33 வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள். 217 வாக்காளர்களுக்காக கப்பலிலும் இந்த தடவை வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது.

    வாக்காளர்களில் 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 பேர் ஆண்கள், 2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738 பேர் பெண்கள். இவர்களில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 694 பேர் முதல் முதலாக வாக்களிக்க போகும் இளைஞர்கள் ஆவார்கள்.

    ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது.

    இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் ஒரே காலக்கட்டத்தில் நடத்தப்பட்டது. இந்த தடவை இமாச்சலப் பிரதேச தேர்தல் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    அதே தேதியில் குஜராத் மாநில வாக்குகளும் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது.

    இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதே மாதிரியான மும்முனை போட்டிதான் குஜராத் சட்டசபை தேர்தலிலும் காணப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் 1998-ம் ஆண்டு முதல் கடந்த 24 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இதில் மோடி தலைமையில் 12 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி நடந்துள்ளது. 5 தடவை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா 6-வது தடவையும் வெற்றி பெறுமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் நிலவுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜனதா கட்சிக்கு 99 இடங்களே கிடைத்தன. 25 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 100 இடங்களுக்கு கீழ் பா.ஜனதா சரிவை சந்தித்தது கடந்த தேர்தலில்தான்.

    அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி கடும் சவாலாக மாறியது. 10 தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது. தற்போது காங்கிரசுக்கு குஜராத்தில் செல்வாக்கு சற்று மேம்பட்டு இருப்பதாக கருதப்படுவதால் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அதே சமயத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 1 சதவீத வாக்குகளைக்கூட பெறாத ஆம் ஆத்மி கட்சி இந்த தடவை முழு வீச்சில் களம் இறங்கி உள்ளது. டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து குஜராத்திலும் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தை எற்கனவே தொடங்கி விட்டார்.

    அவர் நிறுத்தப்போகும் வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள்தான் பா.ஜ.க., காங்கிரஸ் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் குஜராத் மாநில தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. பா.ஜனதா கட்சி 49.9 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 41.4 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. சுமார் 8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் வெற்றியை இழந்தது.

    இந்த தடவை அதை சரி கட்டுவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகளை பிரிக்கும் பட்சத்தில் அது காங்கிரஸ் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

    ×