என் மலர்
குஜராத்
- ஆளும் பா.ஜ.க. மட்டுமே அனைத்து இடங்களிலும் நிற்கிறது.
- பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.
ஆமதாபாத் :
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிற இந்த மாநிலத்தில், இம்முறை ஆளும் பா.ஜ.க., காங்கிரசுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் போட்டியையும் எதிர்கொள்கிறது.
மும்முனைப் போட்டி நடைபெறுகிற தேர்தலில் பிரசார களத்தில் சூடேறி வருகிறது.
முதல் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. இரண்டாவது கட்ட தேர்தல் 93 இடங்களில் டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல், பரிசீலனை, திரும்பப்பெறல் யாவும் முடிந்துள்ளன.
இந்த நிலையில், அங்கு 1,621 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் சந்திக்கின்றனர்.
ஆளும் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் (182) வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கூட்டணிக்கட்சியான சரத் பவாரின் தேசியவாதக்காங்கிரசுக்கு ஒதுக்கித்தந்து விட்டு எஞ்சிய 179 இடங்களிலும் வேட்பாளர்களை போட்டியிடச்செய்துள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கோப்சிங் லாவர், தேவ்காத் பரியா தொகுதியில் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற்றுள்ளார். எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 182 இடங்களிலும் போட்டி போடுவதாக அறிவித்தது. ஆனால் அதன் வேட்பாளர் சூரத் கிழக்கு தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், அந்தக் கட்சி 181 தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது.
ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அதன் வேட்பாளர் பாபுநகர் தொகுதியில் வேட்பு மனுவை திரும்பப்பெற்று விட்டதால் 13 இடங்களில் மட்டுமே அக்கட்சி களத்தில் உள்ளது.
இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 765 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் (2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738), ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் 1,417 பேர் இந்த மாநிலத்தில் வாக்காளர்களாக உள்ளனர்.
இந்த தேர்தலில் பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந் தேதி எண்ணப்படுகின்றன. அதே நாளில் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள்.
- சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை பாதுகாக்க முடியாது.
கட்ச்:
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரவு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தனசுரா மற்றும் கட்ச் பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்று பேசினார்.
அப்போது டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை அவர் எழுப்பினார்.
அப்தாப் மும்பையில் இருந்து ஷ்ரத்தா என்ற சகோதரியை வரவழைத்து லவ் ஜிகாத் என்ற பெயரில் 35 துண்டுகளாக வெட்டினார். மேலும் அவர் அந்த உடலை குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். உடல் பாகங்கள் குளிர் சாதன பெட்டியில் இருக்கும்போது, வீட்டிற்கு மற்றொரு பெண்ணை அழைத்து வந்து டேட்டிங் செய்யத் தொடங்கினார்.
ஏன் அவர் இந்து பெண்களை மட்டும் குறி வைத்து காதலில் வீழ்த்துகிறார் என போலீசார் விசாரித்தனர். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதால் அப்படி செய்வதாக அப்தாப் கூறியுள்ளார். இதனால்தான் லவ் ஜிகாத்க்கு எதிராக நாட்டிற்கு கடுமையான சட்டம் தேவை. மீண்டும் இது போன்ற சம்பங்கள் நிகழாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி போன்ற வலிமையான தலைவர் ஆட்சியில் நீடிப்பது முக்கியம்.
நாட்டின் ஒவ்வாரு நகரத்திலும் இது போன்ற அப்தாப்கள் பிறப்பார்கள். நாட்டிற்கு சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றால், எங்கள் சமூகத்தை எங்களால் பாதுகாக்க முடியாது. அதனால் 2024ம் ஆண்டு தேர்தலில் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக்குவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சர்தார் படேலை அவமதிக்க முடிந்த அனைத்தையும் காங்கிரஸ் செய்தது.
- காங்கிரஸ் காலம் முடிந்து, பிரதமர் மோடியின் காலம் தொடங்கி விட்டது.
காம்பத்:
குஜராத் சட்டசபைத் தேர்தலையொட்டி ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதையும், முத்தலாக் தடைச் சட்டத்தையும் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்க்கிறது. இது போன்ற காரணங்களை ஆதரித்தால், அந்த வாக்குகளை இழக்க நேரிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
நான் எந்த வாக்குகளைப் பற்றி பேசுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்களின் காலம் இப்போது முடிந்துவிட்டது, பிரதமர் மோடியின் காலம் தொடங்கி விட்டது. ராகுல்காந்தி அயோத்தி செல்ல டிக்கெட்டை பதிவு செய்யுங்கள். ஏனென்றால் அங்கு பிரம்மாண்ட கோயில் திறக்கப்பட உள்ளது
என்னுடைய சிறுவயதில் இருந்தே எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் சர்தார் வல்லபபாய் படேலைப் பற்றிப் பேசிக் கேட்டதில்லை. படேலை அவமதிக்க முடிந்த அனைத்தையும் காங்கிரஸ் செய்தது. நாட்டின் முதல் துணைப் பிரதமரின் இறுதிச் சடங்குகள் கூட சம்பிரதாயமற்ற முறையில் நடைபெற்றன.
அவருக்கு எந்த நினைவுச் சின்னமும் கட்டப்படவில்லை. ஆனால் குஜராத் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் இப்போது படேலைப் புகழ்ந்து பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தின் சூரத் நகரை நேற்று வந்தடைந்தது.
- ஆதிவாசிகளின் நிலங்களைப் பறித்து அவற்றை தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கியது என்றார்.
அகமதாபாத்:
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை குஜராத்தின் சூரத் நகரை நேற்று வந்தடைந்தது. அப்போது கூட்டத்தினரிடம் ராகுல் காந்தி பேசியதாவது:
இந்த யாத்திரையின்போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஆதிவாசிகளைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்கள் அனுபவித்து வரும் வலியை நான் உணர்ந்தேன். இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்றால் அவர்கள் ஆதிவாசிகள்தான். ஆனால், அவர்களை பா.ஜ.க.வோ வனவாசிகள் என அழைக்கிறது. அவர்களிடம் இருந்து, நிலங்களைப் பறித்து அவற்றை 2 முதல் 3 தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கி உள்ளது. ஆதிவாசிகள் நகர பகுதிகளில் வசிப்பதற்கோ, அவர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதிலோ பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை.
பழங்குடியினர் நலனுக்காக, அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்த போது கொண்டு வந்த பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமைச்சட்டம், நில உரிமைகள் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் போன்ற சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது. நாங்கள் ஆட்சிக்கு வருகிறபோது, இந்த சட்டங்களையெல்லாம் பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
- ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை குஜராத் அரசியலில் இனி பலிக்காது.
- இந்த முறை குஜராத்தில் ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும்.
சூரத்:
குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். மூன்றாவது நாளாக இன்று குஜராத்தில் மூன்று பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார்.
மற்றொருபுரம் ஆம்ஆத்மி தொண்டர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தனது முதல் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள மஹுவாவில் மற்றும் ராஜ்கோட் பகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று பேசுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பொதுமக்களின் மனநிலை பாஜகவுக்கு எதிராக இருப்பதால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும். மோர்பி பாலம் விபத்து சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை. தற்போது குஜராத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
குஜராத்தில் கள்ளச் சாராயத்தால் ஏராளமான மக்கள் உயிரிழந்தது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆளும் கட்சியின் ஏமாற்று வித்தை இனி பலிக்காது. இந்த முறை ஆச்சரியமான தேர்தல் முடிவுகள் இருக்கும். மோடியும், அமித்ஷாவும் வாரந்தோறும் குஜராத்திற்கு வந்தால் என்ன அர்த்தம்? அவர்களின் பலவீனமான நிலையை அது காட்டுகிறது. அதனால் இருவரும் இங்கு முகாமிட்டுள்ளனர்.
ராகுல் காந்தி, பாத யாத்திரைக்கு முன்னுரிமை அளித்து வருவதால் இதுவரை இங்கு வரவில்லை, ஆனால் அவர் எழுப்பும் பிரச்சினைகள் இங்குள்ள ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரியும். இமாச்சல பிரதேச தேர்தலில் பிரச்சாரத்தை ஆம் ஆத்மி திடீரென வாபஸ் பெற்றது குறித்து கேஜ்ரிவாலைக் கேட்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து வெளியேறினால் யாருக்குத் தெரியும்? அவர்கள் பாஜகவுடன் கூட்டுச் சேர்கிறார்களா? அவர்களின் நம்பகத்தன்மை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அவர்களுக்கு 27 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள்.
- வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நான் மீண்டும் உங்களிடம் வரமாட்டேன்.
பஞ்சமஹால்ஸ்:
குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி 182 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று பஞ்சமஹால்ஸ் மாவட்டத்தில் உள்ள ஹலோ பகுதியில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த சிலர் மோடி, மோடி என்று ஆதரவு குரல் எழுப்பினர். இதையடுத்து அந்த பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:
சில நண்பர்கள் மோடி, மோடி என்று கூக்குரலிடுகிறார்கள், நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்து கோஷம் எழுப்பலாம், ஆனால் உங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகளை உருவாக்க இருப்பது கெஜ்ரிவால்தான் என்று கூற விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு கோஷம் எழுப்பினாலும், உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப் போவது கெஜ்ரிவால்தான். எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்து கோஷம் எழுப்பலாம். ஒரு நாள் உங்கள் மனதை வென்று எங்கள் கட்சிக்கு கொண்டு வருவோம்.
மாநிலத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர், அவர்களுக்கு எங்கள் கட்சி வேலைக்கான உத்தரவாதம் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு ரூ 3,000 உதவித் தொகையை வழங்கும். பள்ளிகள் பற்றி பேச இங்கு எந்த கட்சியும் இல்லை. பள்ளிகள், மருத்துவமனைகள், வேலை வாய்ப்புகள், இலவச மின்சாரம் வழங்குவோம் என்று எந்த கட்சியாவது வாக்குறுதி அளித்துள்ளதா? எங்கள் கட்சி மட்டுமே இந்த பிரச்சனைகளை பற்றி பேசுகிறது.
நீங்கள் சிறந்த பள்ளிகளை விரும்பினால் என்னிடம் வாருங்கள். நான் ஒரு பொறியாளர். உங்களுக்கு மின்சாரம், மருத்துவமனைகள் அல்லது சாலைகள் தேவை என்றால் என்னிடம் வாருங்கள். இல்லையெனில் அவர்களிடம் (பாஜகவிடம்) செல்லுங்கள். நீங்கள் அவர்களுக்கு (பாஜகவுக்கு) 27 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நான் மீண்டும் உங்களிடம் வரமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- எந்த காங்கிரஸ் தலைவரிடமாவது வளர்ச்சிக்கான பாதை என்ன என்று கேளுங்கள்.
- அவர்கள் செய்த ஒரு பணியாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அம்ரேலி
குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அம்ரேலி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
குஜராத்தை வலுப்படுத்த பாஜக அரசு பல பணிகளை செய்துள்ளது. இப்போது மாபெரும் செயல்களை செய்வதற்கான நேரம் வந்து விட்டது. அதைச் செய்யும் திறன் காங்கிரசுக்கு இல்லை. எதிர்க்கட்சியால் உங்களுக்கு ஒருபோதும் நல்லது செய்ய முடியாது. பிரதம மந்திரி விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ், குஜராத்தில் 60 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக 12,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. காங்கிரஸிடம் இருந்து இது போன்ற விஷயங்களை எதிர்பார்க்க முடியாது.

ஒரு காங்கிரஸ் தலைவராவது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த காங்கிரஸ் தலைவரிடமாவது வளர்ச்சிக்கான பாதை என்ன என்று கேளுங்கள், அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. அம்ரேலி தொகுதி மக்கள் முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்தனர்.
இப்போது சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்காக (இந்த ஐந்து ஆண்டுகளில்) என்ன செய்தார்கள்? அவர்கள் செய்த ஒரு பணியாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிறகு ஏன் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை வீணாக்குகிறீர்கள்? அம்ரேலியை வலுப்படுத்த, இந்த முறை தாமரையை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தாரி, அம்ரேலி, லத்தி, சவர்குண்ட்லா மற்றும் ரஜூலா ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் மாநிலம் தான் பிரதமர் மோடியை நாட்டுக்கு அடையாளம் காட்டியது.
- மும்முனை போட்டி என்கிறார்கள். ஆனால் களத்தில் காங்கிரசை காணவில்லை.
ராஜ்கோட்:
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும் தமிழில் முன்னணி நடிகையுமான குஷ்புவை குஜராத் தேர்தல் களத்தில் பா.ஜனதா இறக்கி உள்ளது.
நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
நேற்று ராஜ்கோட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முதல்கட்ட தேர்தல் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது.
குஜராத் தேர்தல் பிரசாரம் மற்றும் கள நிலவரம் பற்றி குஷ்பு கூறியதாவது:-
குஜராத் மாநிலம் தான் பிரதமர் மோடியை நாட்டுக்கு அடையாளம் காட்டியது. அந்த மாநிலத்தில் தொடர்ந்து 3 முறை முதல் மந்திரியாக இருந்தவர் மோடி... காங்கிரசின் கைகளில் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியால் வழங்க முடியாத வளர்ச்சியை கடந்த 20 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.
அதனால்தான் எங்கு சென்றாலும், மோடி... மோடி இதுதான் அங்குள்ள மக்களின் மந்திரமாக உள்ளது. அவர்களை பொறுத்தவரை இப்போதும் மோடி சர்க்கார் நடப்பதாகவே நினைக்கிறார்கள்.
மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 27 தொகுதிகள் பழங்குடியினர் தொகுதி. பழங்குடியினர் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது மோடி ஆட்சியில்தான் என்கிறார்கள்.
அடிப்படை வசதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு விட்டது. தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை இல்லை. எந்த பக்கம் சென்றாலும் மிகுந்த உற்சாகத்துடன் மக்கள் வரவேற்கிறார்கள். இந்த முறையும் பா.ஜனதா ஆட்சிதான் என்பதைவிட இதுவரை பெற்றதை விட கூடுதலான தொகுதிகளில் பா.ஜனதா வெற்றிபெறும் என்பது உறுதி.
மும்முனை போட்டி என்கிறார்கள். ஆனால் களத்தில் காங்கிரசை காணவில்லை. அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பிரசாரத்துக்கு செல்லமாட்டார். எங்கு தேர்தல் இல்லையோ அங்குதான் சென்று தேர்தல் பிரசாரம் செய்வார்.
இப்போதும், தெலுங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறார். போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் காங்கிரஸ் எதிர்பாராத தோல்வியை சந்திக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியே போட்டியில் இல்லை என்ற நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி இன்று காலை சோம்நாத் கோவிலில் பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்த பிறகு பிரசாரத்தை தொடங்கினார்.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது.
அகமதாபாத்:
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களத்தில் குதித்துள்ளது.
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 6-ந்தேதி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். வல்சாத் மாவட்டம் கபர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
மோடி 2-வது முறையாக குஜராத்தில் பிரசாரம் மேற் கொண்டுள்ளார். 3 நாட்கள் பயணமாக அவர் நேற்று இரவு குஜராத் சென்றார். வல்சாத் மாவட்டம் ஜூவா சராபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
குஜராத்தில் மோடி இன்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார்.
பிரதமர் மோடி இன்று காலை புகழ் பெற்ற சோம்நாத் கோவிலில் பூஜையில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்த பிறகு பிரசாரத்தை தொடங்கினார்.
இன்று அவர் 4 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளரகளுக்கு ஆதரவு திரட்டுகிறார். சோம்நாத் மாவட்டம் வெராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:-
வாக்குப்பதிவு நாளில் மக்கள் அதிக அளவில் சென்று ஓட்டு போட வேண்டும். முந்தைய வாக்குப்பதிவு சாதனையை முறியடிக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இங்குள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பா.ஜனதா வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் அதை எனக்காக செய்வீர்களா?
இவ்வாறு மோடி பேசினார்.
அவர் ராஜ்காட் மாவட்டம் தோராஜி, அம்ரேலி, போடட் பகுதிகளிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார்.
- பிரதமர் மோடி நாளை 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- பாவ்நகர், அம்ரேலி, ஜங்காபாத் ஆகிய மாவட்டங்களில் 4 பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
அகமதாபாத்:
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 3-வது அணியாக களத்தில் குதித்துள்ளது.
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 6-ந்தேதி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினார். வல்சாத் மாவட்டம் கபர்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். பாவ் நகரில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி 2-வது முறையாக குஜராத் செல்கிறார். இன்று முதல் 2 நாட்கள் அவர் பிரசாரம் செய்கிறார்.
மோடி இன்று காலை அருணாச்சல பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கிருந்து அவர் புறப்பட்டு குஜராத் செல்கிறார்.
இன்று மாலை 6.30 மணிக்கு வல்சாத் மாவட்டம் ஜூவா கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பிரதமர் மோடி நாளை 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பாவ்நகர், அம்ரேலி, ஜங்காபாத் ஆகிய மாவட்டங்களில் 4 பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
- பாஜகவின் துண்டு பிரசுரங்களை மக்களிடம் சென்று ரோபோ வழங்குகிறது.
- பா.ஜ.க.வின் நூதன பிரச்சாரத்தை ஆர்வத்துடன் பார்க்கும் வாக்காளர்கள்.
காந்திநகர்:
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1-ந் தேதி மற்றும் 5ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மக்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு நூதன முறை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் பட்டேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோவை தயாரித்துள்ளார். இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரத்திற்காக இந்த ரோபோவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் களம் இறக்கி உள்ளார்.

பாஜகவின் சாதனைகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் குறித்து மக்களிடத்தில் இந்த ரோபோ அறிமுகம் செய்கிறது. மேலும் கட்சி பொதுக் கூட்டங்களிலும் பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ரோபோ வழங்குகிறது.
மேலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வகையில் இதில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் இந்த நூதன பிரச்சாரத்தை அந்த தொகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பல தொகுதிகளில் வீடு வீடாக சென்று பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய இது போன்ற மேலும் பல ரோபோக்களை களமிறக்க உள்ளதாகவும் ஹர்ஷத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
- பாஜக தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாக மணீஷ் சிசோடியா விமர்சனம்
- ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகம் மீண்டும் அம்பலமாகியிருப்பதாக பாஜக கூறியுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அவரை பாஜகவினர் கடத்தி தேர்தல் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டி வேட்பு மனுவை வாபஸ் பெற செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி புகார் கூறி உள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், "எங்கள் சூரத் (கிழக்கு) வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா மற்றும் அவரது குடும்பத்தினரை நேற்று முதல் காணவில்லை. முதலில் அவரது வேட்புமனுவை நிராகரிக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அதன்பின்னர், வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவர் என்ன ஆனார்? கடத்தப்பட்டாரா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஜரிவாலா 500 போலீஸ்காரர்களால் சூழப்பட்டு குஜராத் தேர்தல் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். பாஜக தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை கடத்தியதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக கூறியுள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-
என்னை யாரும் கட்டாயப்படுத்தியதால் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. நானாக முன்வந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நான் பிரசாரம் செய்யும்போது, தேசவிரோத மற்றும் குஜராத்திற்கு எதிரான கட்சியின் வேட்பாளராக ஏன் போட்டியிடுகிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்டார்கள். நானும் யோசித்துப் பார்த்தேன். என் உள் மனம் சொல்வதை கேட்டேன். எந்த அழுத்தமும் இன்றி வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளேன். அப்படிப்பட்ட கட்சியை என்னால் ஆதரிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளரை பாஜக கடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி அழுத்தமாக குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வேறு மாதிரியாக கூறியிருக்கிறார். அவர் தனது சொந்த கட்சியையே வசை பாடியது, இந்த விஷயத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.






