என் மலர்
பீகார்
- ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- அடுத்த 4 நாட்களுக்கு மூடுபனி, கடும் குளிர் நிலை தொடரும்.
வட இந்தியாவில் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் பனிமூட்டம் காரணமாக, 14 ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஒருசில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
அடுத்த நான்கு நாட்களுக்கு இமாச்சலப் பிரதேசம், டெல்லி, பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் வடக்கு ராஜஸ்தானிலும் இரவு மற்றும் காலை நேரங்களில் அடர்ந்த மூடுபனி காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என்றும் அதன் பின் நிலைமை படிப்படியாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூடுபனி மற்றும் கடும் குளிரை கருத்தில் கொண்டு, பீகார் மாநிலம் பாட்னாவில் 8 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் டிசம்பர் 31 வரை மூடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மோதிஹரி:
பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம், ராம்கர்வா பகுதியில் செங்கல் சூளை உள்ளது. இன்று வழக்கம்போல் ஊழியர்கள் செங்கல் சூளையில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலையில் திடீரென அங்கு குண்டுவெடித்ததுபோன்று பலத்த சத்தம் கேட்டது. சிம்னி வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:
இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் அல்லது பாதயாத்திரையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நிதிஷ் குமார் பேசுகையில், அவர்கள் (மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு) கொரோனாவில் முதலில் ஏன் பின்வாங்கினார்கள்? இப்போது காங்கிரசார் பாதயாத்திரை போகிறபோது இப்போது எதனால் திடீரென விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்தாக வேண்டும். யாத்திரைக்கு ஏன் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் மட்டும் ஊர்வலங்கள் எல்லாம் நடத்துகிறார்களே? என கேள்வி எழுப்பினார்.
- 2017ல் பணி முடிந்தாலும் அணுகுசாலை இல்லாததால் பாலம் திறக்கப்படவில்லை.
- பாலத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெகுசாய்:
பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு பாலம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடிவடைந்தது. ஆனால், அணுகு சாலை இல்லாததால், பாலம் திறக்கப்படாமல் இருந்தது.
நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் முன்பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த பாலத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. ரூ.13 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்படும் முன்பே பாலம் இடிந்து விழுந்தது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்க்கட்சியான பாஜக சட்டசபையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
- மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும் என நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டார்
பாட்னா:
பூரண மது விலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய பயன்பாடு அதிக அளவில் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவ்வகையில், பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் உயிரிழந்தது உறுதி செய்யபபட்டுள்ளது. இது, மது விலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு ஏற்பட்ட மிகவும் துயரமான சம்பவம் ஆகும்.
இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜக இது குறித்து அவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்காது. மது குடித்தால் இறந்துவிடுவீர்கள் என மக்களிடம் நாங்கள் கூறி வருகிறோம். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட வேண்டும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'இது எங்குதான் நடக்கவில்லை? அரியானா, உத்தரபிரதேசம் என எங்கு சென்றாலும் அதே கதைதான். மற்ற இடங்களில் அவர்கள் இறக்கும்போது ஏன் தகவல் வெளிவருவதில்லை? நான் எல்லா இடங்களிலும் மீண்டும் வலியுறுத்துகிறேன், யாராவது மதுவுக்கு ஆதரவாக பேசினால், அது ஒருபோதும் பயனளிக்காது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற அவலங்கள் நடக்கும்போது ஊடகங்கள் பெரிதாக காட்டுகின்றன' என்றார்.
- பீகாரில் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
- எதிர்க்கட்சிகள் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷ சாராயம் குடித்த 21 பேர் இறந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலும் சிலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
விஷ சாராய உயிரிழப்பு குறித்து முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறுகையில், மதுவிலக்கு இல்லாத போதும் கள்ளச்சாராயத்தால் மரணம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. பீகாரில் முழுமையாக மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும் சர்தார் வல்லபாய் படேல் நினைவுதின விழாவில் அவர் பேசுகையில், நடைமுறையில் உள்ள மதுவிலக்கு சமூகத்தில் நல்ல பலனை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டார்.
பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
- பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உயிரிழப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும்.
- கள்ளச்சாராயத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக்கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ சட்டசபையில் பேசினார்
பாட்னா:
பூரண மது விலக்கு அமலில் உள்ள பீகாரில் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பது அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், முழுமையாக அகற்ற முடியவில்லை. இந்நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தவர்களில் 24 பேர் உயிரிழந்தனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே உறுதி செய்யப்படும்.
இந்த விவகாரம் சட்டசபையில் இன்று எதிரொலித்தது. எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் முதல்வர் நிதிஷ் குமார் கோபமாக அவர்களுக்கு பதிலளித்தார்.
கள்ளச்சாராயத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்துக்கொண்டிருப்தாகவும், ஆனால் முதல்வரோ எதையும் செய்யவில்லை என்றும் உள்ளூர் பாஜக எம்எல்ஏ ஜனக் சிங் குற்றம்சாட்டினார். 'இதுதொடர்பாக எத்தனை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது? கள்ளச் சாராயம் எப்படி என் கிராமத்திற்கு வந்தது? காவல் நிலையங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறீர்கள். ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க உங்களுக்கு உரிமை இல்லை' என்றும் ஜனக் சிங் ஆவேசமாக பேசினார்.
- வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது
- 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
பாட்னா:
பீகாரின் பாட்னா நகரில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்து, இதுவரை 6 கட்டங்களாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுளள்து. 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். 7வது கட்ட ஆட்சேர்ப்பின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. சதி செய்தது.
- மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் முதல் மந்திரியும், அக்கட்சி தலைவருமான நிதிஷ்குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பீகாரில் கடந்த 2005, 2010-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் எங்கள் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்) குறைவான இடங்களைப் பெற்றதில்லை என்பதை அவர்கள் (பா.ஜ.க.) நினைவில் கொள்ள வேண்டும்.
2020-ல் நடந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை தோல்வி அடைய செய்ய அவர்கள் (பா.ஜ.க.) முயற்சி செய்ததால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.
பீகார் அவர்களிடம் (மத்திய பா.ஜ.க. அரசிடமிருந்து) எதுவும் பெறவில்லை. மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
அவர் (பிரதமர் மோடி) பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்து வளமாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஏழைகளை முன்னேற்றாமல் நாடு முன்னேற முடியாது. அவர்களை (பா.ஜ.க.) எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற முடியும். ஆனால் ஒருங்கிணைவது அனைத்துக் கட்சிகளின் கையில் உள்ளது. அதை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன் என தெரிவித்தார்
- ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
- சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.
பாட்னா:
ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, கடந்த வாரம் லாலுவும், அவருடைய குடும்பத்தினரும் சிங்கப்பூர் சென்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இத்தகவலை லாலுவின் மகனும், பீகார் மாநில துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவின் ஒரு சிறுநீரகம், லாலுவுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.
- கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.
- தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ளது. எனினும் சட்ட விரோதமாக சில இடங்களில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை கைப்பற்றும் போலீசார், கலால் துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் தயாரிக்கும் பணியை பெண்கள் மூலமாக செய்து அசத்தி வருகிறார்கள்.
முன்பு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை உடைத்து குப்பையாக வீசப்பட்ட நிலையில், தற்போது புதிய முயற்சியாக அவற்றை கண்ணாடி வளையல்கள் தயாரிக்க கொடுக்கின்றனர். இதற்காக பீகார் கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் மூலம் 150 பெண்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு கண்ணாடி வளையல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பாட்னா மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தில் தனியாக ஒரு உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். இங்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் வளையல்கள் தயாரிக்க முடியும்.
தற்போது 2 டன் மது பாட்டில்களில் இருந்து 70 ஆயிரம் வளையல்களை இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் தயாரித்துள்ளனர். இவற்றை உள்ளூர் வியாபாரிகள் மூலம் பாட்னாவில் உள்ள விமான நிலையம் மற்றும் கண்காட்சிகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது.
இதுகுறித்து கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்க உறுப்பினரான சுதா தேவி கூறுகையில், இந்த புதிய முயற்சியால் நல்ல லாபம் ஈட்டுகிறோம் என்றார். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது என கலால் துறை ஆணையர் தன்ஜி கூறினார்.
- எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன.
- நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்.
பாட்னா :
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ரூ.15 ஆயிரத்து 871 கோடி மதிப்பிலான மின்துறை திட்டங்களை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாட்டில் ஒருசில மாநிலங்கள், மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் ெசய்ய வேண்டி இருக்கிறது. உதாரணமாக, மத்திய அரசின் மின்உற்பத்தி நிலையங்களில் இருந்து பீகார் மாநிலம் மற்ற மாநிலங்களை விட அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி வருகிறது.
அந்த மின்சாரத்தை பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 2018-ம் ஆண்டு, பீகாரில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்தது.
2005-ம் ஆண்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, மின்சார பயன்பாடு வெறும் 700 மெகாவாட்டாக இருந்தது. தற்போது, 6 ஆயிரத்து 738 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. வெளிப்படைத்தன்மையை உருவாக்க விரைவில் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தப் போகிறோம்.
எல்லா மாநிலங்களுமே நாட்டின் வளர்ச்சிக்கு தீவிர பங்காற்றுகின்றன. பிறகு ஏன் சில மாநிலங்கள் மட்டும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்க வேண்டும்?
நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும். அதற்கு 'ஒரே நாடு, ஒரே மின்கட்டணம்' கொள்கையை ஏற்க வேண்டும் என்று முன்பே பல தடவை சொல்லி இருக்கிறேன்.
நாங்கள் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி, மானிய விலையில் மக்களுக்கு கொடுக்கிறோம். இலவச மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.






