என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • திருப்பதியில் தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆகிறது.
    • பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம் வார விடுமுறை இறுதிநாளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஓரளவு பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருந்தது.

    பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பும் வைகுண்டம் காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பி பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக காத்து நிற்கின்றனர்.

    பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயலும் போது அடிக்கடி பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. எனவே அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூடுதல் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் சார்பில் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    பக்தர்களுக்கு அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.வார இறுதி விடுமுறை நாட்களில் தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். மற்ற நாட்களில் தரிசனத்திற்கு வந்தால் சிரமமின்றி ஏழுமலையானை தரிசித்து செல்ல முடியும் என்றனர்.

    திருப்பதியில் நேற்று 87,698 பேர் தரிசனம் செய்தனர். 48,804 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம்.
    • இந்திய கலாச்சாரத்தை எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வது அவருக்கு செலுத்தும் அஞ்சலி

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை குறித்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:

    எஸ் பி பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகவும் திகழ்ந்தார். அவர் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு எப்போதும் உந்துசக்தியாக இருப்பார்.

    இந்திய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வதும் வழிகாட்டுவதும்தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.

    புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதற்கும் அப்பால் அவர் இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, நடிகராகத் திகழ்ந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமது ஊக்கமளிக்கும் வார்த்தைகளாலும், அன்பாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தவர்.

    எஸ் பி.பி.மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் எளிமையையும் கொண்டவர். அவரது குணங்களால் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இவரது ஆளுமையைக் கட்டமைப்பதில் இவரின் தந்தை சாம்பமூர்த்தி மிக முக்கிய பங்கு வகித்தார்.

    இந்தியாவை மென்மையான சக்தியாக முன்னிறுத்தியதில் இந்திய கலாச்சாரத்திற்கும், இசைக்கும், திரைப்படங்களுக்கும், நூல்களுக்கும் மிகப்பெரும் பங்கு உண்டு. இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில், எஸ்பிபி சகோதரியும், பாடகியுமான எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பி.சரண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக 8 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • திருக்கல்யாண உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை 8 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 18-ந் தேதி சான்பிரான்சிஸ்கோ, 19-ந்தேதி சியாட்டில், 25-ந்தேதி டல்லாஸ், 26-ந்தேதி செயின்ட் லூயிஸ், 30-ந்தேதி சிகாகோ, ஜூலை 2-ந்தேதி நியூ ஆர்லியன்ஸ், 3-ந்தேதி வாஷிங்டன், 9-ந்தேதி அட்லாண்டா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது.

    சாமி திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருக்கல்யாண உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    பக்தர்களுக்கான கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • திருப்பதி கோவிலில் கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடியை தாண்டியுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் உண்டியல் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1500 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வந்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

    இந்த மே மாதத்தில் 22.62 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிகின்றன. சாமி தரிசனத்திற்கு 25 மணி நேரம் ஆகிறது.

    நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 949 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39, 837 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ‌.3.70 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

    சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் சரோஜா சூரியநாராயணன் தம்பதியினர் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் 4 கிலோ 150 கிராம் எடையில் வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை ஏழுமலையான் கோவிலில் நேற்று காணிக்கையாக வழங்கினர்.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நேற்று நடைபெற்றது.
    • திருப்பதியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர்.

    திருப்பதி:

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் நேற்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இதற்கிடையே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர் . இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.

    இந்நிலையில், திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையைஅ தொடர்ந்து, நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • சென்னையில் இருந்து தினமும் திருப்பதிக்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தரிசனத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு டூரிசம் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்.

    வேலூர்:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரும் 15-ந்தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து தினமும் திருப்பதிக்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும்.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுடன் பஸ் போக்குவரத்து கட்டணத்துடன் முன்பதிவு செய்ய வேண்டும்.

    தவிர்க்க முடியாத காரணங்களால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தரிசனத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு டூரிசம் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு வர இயலாத பக்தர்களுக்கு பதிலாக வேறு பக்தர்களை தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்து உருண்டது.
    • மலைப்பாதையில் கார் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பதி:

    சென்னையை சேர்ந்த 3 பக்தர்கள் நேற்று காலை திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக காரில் வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை தரிசனம் முடிந்து மீண்டும் சென்னைக்கு காரில் புறப்பட்டனர்.

    இன்று காலை 9 மணி அளவில் கார் அலிபிரி மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்து உருண்டது.

    இதில் காரில் வந்த 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அலிபிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய காரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாதையில் கார் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது.
    • தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் விரக்தியடைந்து 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடந்த 3-ந் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

    தேர்வில் 70.70 சதவீத மாணவிகளும், 64.02 சதவீத மாணவர்களும் வெற்றி பெற்றனர். 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 2 லட்சம் மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்தனர். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் விரக்தியடைந்து 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு நேற்று ஆன்லைன் மூலம் ஆறுதல் கூறினார். அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாரா லோகேசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.

    • கடப்பாறை, கோடாரி, கத்தி ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இதில் சில வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • செம்மரக் கடத்தல் வழக்குகள் அதிகமாகிவிட்டதால் இதற்காக திருப்பதியில் 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து விலை உயர்ந்த செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன.

    இவை சென்னை, மங்களூர் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. செம்மரம் கடத்தப்படுவதை தடுக்க ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தனிப்படையினர் சேஷாசலம் வனப்பகுதியில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    ஆனால் அவ்வப்போது அவர்கள் மீது செம்மர கடத்தல் கும்பல் கற்கள், கடப்பாறை, கோடாரி, கத்தி ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இதில் சில வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவங்களும் சேஷாசலம் வனப்பகுதியில் சர்வசாதாரணமாகி விட்டது. பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் செம்மரக்கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்படவில்லை. செம்மரம் வெட்டி கடத்தப்படும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர் சில நாட்களிலேயே ஜாமினில் வெளியே வந்துவிடுகின்றனர்.

    பின்னர் மீண்டும் அதே தொழிலை செய்து வருகின்றனர்.கோடிக்கணக்கில் இந்த தொழிலில் பணம் கைமாறுவதே இதற்கு காரணமாகும்.

    தற்போது செம்மரக் கடத்தல் வழக்குகள் அதிகமாகிவிட்டதால் இதற்காக திருப்பதியில் 2 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தொடங்கிவைத்தார்.

    இதில் செம்மர கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு விவில் தீர்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
    • தற்போது 700 அறைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் 7,500 அறைகள் கட்டப்பட்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த அறைகள் அனைத்தும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. அதன்பின்னர் அறைகளை சீரமைக்காததால் அறைகளின் ஜன்னல்கள், தரைகள் மற்றும் கழிவறைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    மேலும் மின்விசிறிகள் மின் விளக்குகள் சரிவர இல்லை என்ற புகார் எழுந்தது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தனியார் விடுதிகளை விட தேவஸ்தானம் விடுதிகள் குறைந்த வாடகைக்கு கிடைப்பதால் தேவஸ்தானம் விடுதியிலேயே தங்கியிருந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் சிதிலமடைந்து காணப்படும் 4500 விடுதி அறைகளை 40 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. தற்போது 700 அறைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் மேலும் 2300 அறைகள் சீரமைக்கப்பட உள்ளது. சீரமைக்கப்பட்ட 4500 அறைகள் பக்தர்களுக்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருவதால் தேவஸ்தான அறைகள் கிடைக்காததால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் விடுதிகளில் தங்கி பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே தேவஸ்தான அறைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2½ ஆண்டுகளில் ஸ்ரீவாணி டிரஸ்ட் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.

    கடந்த வாரம் வரலாறு காணாத அளவிற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். இதனால் நீண்ட தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பின்னர் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே கூடுதலாக வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் சாமானிய பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்யும் விதமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.

    பக்தர்களின் கூட்டம் குறையாததால் இம்மாத கடைசிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சித்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி.

    இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 42 வயது தொழிலாளி ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    சிறுமி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    ×