என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மாநில அரசு கவர்னர் உரையை அனுப்பி வைக்காததால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சொந்த உரையை நிகழ்த்தினார்.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு உருவானது.
திருப்பதி:
குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தின விழா அன்று அந்தந்த மாநில கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். குடியரசு தின விழாவில் கவர்னர் உரையை மாநில அரசு தயாரித்து வழங்க வேண்டும்.
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தின விழா விவரங்கள் மற்றும் உரை விவரங்களை கேட்டு மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவை மாநில அரசு அங்குள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடத்துவதை தவிர்த்தது. இதையடுத்து குடியரசு தின விழா அங்குள்ள ராஜ் பவனில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மாநில அரசு கவர்னர் உரையை அனுப்பி வைக்காததால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சொந்த உரையை நிகழ்த்தினார்.
இதனால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு உருவானது.
பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் அம்மாநில முதலமைச்சர்களுடன் கவர்னர்கள் மோதல் போக்கை உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் சந்திரசேகர் ராவ் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோர் மத்திய அரசு மீதும் கவர்னர்கள் மீதும் குற்றம்சாட்டி பேசினர்.
முதலமைச்சர்கள் மற்றும் கவர்னர்கள் இடையே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தின உரை கேட்டு கடிதம் எழுதி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
- போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி ராமகிருஷ்ணா நகரில் பசு மாடுகளை கொன்று அதன் கொழுப்பில் இருந்து எண்ணெய் தயாரித்து சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்வதாக போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்குள்ள கால்வாய்களில் ரத்தம் வழிந்து ஓடிய கறைகள் படிந்திருந்தது.
மேலும் அப்பகுதியில் மாட்டு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. அங்கு பயங்கரமாக துர்நாற்றம் வீசியது. போலீசார் வருவதைக் கண்டு அங்கிருந்த கும்பல் தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் அதிரடியாக அங்குள்ள குடோனுக்குள் சென்று சோதனை நடத்தினர்.
அங்கு மாட்டுக்கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை சமையல் எண்ணெயுடன் கலப்படம் செய்து பேரல்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த கும்பல் மாடுகளை கொன்று எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்தது. போலீசார் அங்கிருந்த கலப்பட எண்ணெய் மற்றும் மாட்டு தோல்களை பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 4 நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததால் அறைகளில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். உண்டியல் வருவாயும் குறைந்த அளவிலேயே வசூல் இருந்தது.
நேற்று காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
26 அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று காலையும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் தரிசனத்திற்கு இன்னும் பல மணி நேரம் கூடுதலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சென்று சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 74,236 பேர் தரிசனம் செய்தனர். 27,269 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார்
- உத்தரபிரதேசத்தை சேர்ந்த விகாசிங் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் மகாஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (வயது 29). விண்வெளி ஆராய்ச்சி மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
நீண்ட விடுப்பில் சென்ற சிந்தாமணி கடந்த 20-ந் தேதி மீண்டும் பணிக்கு திரும்பினார். நேற்று பணியில் இருந்த அவர் இரவு 7.30 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு பேசினார்.
பின்னர் அவரிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை பிரிவினர் சிந்தாமணி பணியில் இருந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மரத்தில் சிந்தாமணி தூக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிந்தாமணியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விகாசிங் (வயது 30). இவர் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார்.
விண்வெளி ஆராய்ச்சி மைய வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேற்று இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை வேலை செய்து கொண்டு இருந்தார்.
இன்று அதிகாலை பணி முடியும் நேரத்தில் விகாசிங் தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்து நெற்றி பொட்டில் வைத்து சுட்டார்.
இதில் குண்டு பாய்ந்து தலையின் பின்பக்கம் வெளியேறியது. ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து விகாசிங் பரிதாபமாக இறந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த போலீசார் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி சுமை காரணமாக 2 பாதுகாப்பு படை போலீசார் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேவல் ஒன்றின் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரிய பிரகாஷின் கழுத்தில் பலமாக வெட்டியது.
- சூரிய பிரகாஷின் தொண்டையில் உள்ள நரம்பு துண்டித்து ரத்தம் கொட்டியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
சேவல்களின் காலில் கட்டப்பட்ட கத்தியுடன் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்வதை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சேவல் சண்டையை வேடிக்கை பார்ப்பார்கள்.
சண்டையில் பங்கேற்கும் சேவல்கள் மீது லட்சக்கணக்கில் பணம் கட்டுவார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளாக நடந்த சேவல் சண்டையின்போது பலர் உயிரிழந்ததால் ஆந்திர மாநில அரசு சேவல் சண்டைக்கு தடை விதித்து இருந்தது.
ஆனாலும் தடையை மீறி சேவல் சண்டை நேற்று நடத்தப்பட்டது.
காக்கிநாடா மாவட்டம், கிர்லாம்புடி பகுதியில் நடந்த சேவல் சண்டையை அதே பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 43) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது சேவல்கள் மேலே பறந்தபடி ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டன.
மேலே பறந்து வந்த சேவல் ஒன்றின் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரிய பிரகாஷின் கழுத்தில் பலமாக வெட்டியது.
இதில் சூரிய பிரகாஷின் தொண்டையில் உள்ள நரம்பு துண்டித்து ரத்தம் கொட்டியது. அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சூர்யா பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கிழக்கு கோதாவரி மாவட்டம், நல்ல கர்லா மண்டலம், அனந்த பள்ளியில் நடந்த சேவல் சண்டையை பத்மா ராவ் (வயது 22) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது பறந்து வந்த சேவல் காலில் கட்டப்பட்டு இருந்த கத்தி பத்மாராவின் முழங்காலுக்கு கீழே வெட்டியது.
இதில் காலில் இருந்த நரம்பு துண்டிக்கப்பட்டு அவர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார்.
- உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
விசாகப்பட்டினம்:
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது.
போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள். குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள்.
கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.
அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.
முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.
அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.
- பிரதாப் அவரது மனைவியை சென்னைக்கு இடமாற்றம் செய்து வரும்படி கூறியுள்ளார்.
- தம்பதிக்கு இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.
திருப்பதி:
சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (வயது 34). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனியில் வாகன வடிவமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சிந்தூரா ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். தம்பதியின் மகள் ஆதியா( 4) பிரதாப்பின் தாய் ராஜாத்தி. சிந்தூரா பணியின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடி பெயர்ந்தனர்.
அங்கு சிந்தூரா அவரது குழந்தை ஆதியா மற்றும் பிரதாப்பின் தாய் ராஜாத்தி ஆகியோர் தங்கி இருந்தனர். பிரதாப் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரதாப் அவரது மனைவியை சென்னைக்கு இடமாற்றம் செய்து வரும்படி கூறியுள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறை காரணமாக பிரதாப் ஐதராபாத் சென்றுள்ளார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று சிந்துராவுடன் வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அவருக்கு போனில் அழைப்பு விடுத்தார். நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பிரதாப் வீட்டின் கதவை தட்டினார்.
நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் பிரதாப் தூக்கில் பிணமாக தொங்கினார். மற்ற அறைகளில் தனித்தனியாக சிந்துரா அவர்களது குழந்தை ஆதியா, தாய் ராஜாத்தி ஆகியோர் இறந்து கிடந்தனர்.
அவர்களது இறப்புக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
மேலும் சம்பவ இடத்தில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. குடும்பத் தகராறு காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிந்துராவை சென்னைக்கு பணியிடம் மாற்றுவது குறித்து கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
4 பேர் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய அவர்களுடைய உடல்கள் அங்குள்ள காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டிசம்பர் மாதம் 16-ந் தேதி மாலை மார்கழி மாதம் தொடங்கியது.
- ஒரு மாதமாக சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுர பாராயணம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தை தவிர மற்ற மாதங்களில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் சுப்ரபாத சேவைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி மாலை மார்கழி மாதம் தொடங்கியது. மார்கழி மாதம் தொடங்கியதையொட்டி 17-ந் தேதி அதிகாலை முதல் நேற்று முன் தினம் அதிகாலை வரை கடந்த ஒரு மாதமாக சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுர பாராயணம் நடந்தது.
நேற்று முன்தினம் மார்கழி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை சாமிக்கு மீண்டும் சுப்ரபாத சேவை நடந்தது.
திருப்பதியில் நேற்று 76,307 பேர் தரிசனம் செய்தனர். 29,573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
திருப்பதி
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம்.
இந்த நிலையில் கடந்த வாரம் இளம் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார்.
இதனை அறிந்த வெங்கட்ராம் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி இளம் பெண்ணே பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.
இதற்கு மாற்றுத்திறனாளி பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை சரமாரியாக தாக்கி காலை உடைத்தார். மாற்றுத்திறனாளி பெண் வலியால் அலறி கூச்சலிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்தபோது வெங்கட்ராம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்து படுகாயம் அடைந்த மகளை மீட்டு சர்வஜனா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் நந்தியாலா போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
- கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு வந்தார்.
- கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரத்தை சேர்ந்த நுகர்வோர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர் பதிவு செய்து இருந்தார்.
கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் ஊழியர் சிலிண்டரை நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது ஊழியர் கியாஸ் விலையை விட ரூ.30 கூடுதலாக கொடுக்க வேண்டும் என நுகர்வோரிடம் கேட்டார்.
அதற்கு நுகர்வோர் ரூ.30 கூடுதலாக தர முடியாது என கூறியதால் ஊழியர் மீண்டும் கியாஸ் சிலிண்டரை ஏஜென்சிக்கு கொண்டு சென்றார்.
இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் குடிமை பொருள் வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அங்கு இருந்த அதிகாரிகள் கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஏஜென்சியிலிருந்து சிலிண்டர் வழங்கப்படும் என கூறி வேறு ஒரு ஏஜென்சிக்கு நுகர்வோர் பெயரை மாற்றினார்.
இதனால் ஒரு வாரத்திற்கு மேல் கியாஸ் சிலிண்டர் இல்லாமல் சமையல் செய்ய முடியாமல் அவதி அடைந்த நுகர்வோர் இது குறித்து நுகர்வோர் ஆணையத்தில் புகார் செய்தார். நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா விசாரணை நடத்திய போது, நுகர்வோரிடம் கூடுதல் பணம் கேட்ட ஊழியரை வேலையில் இருந்து நீக்கி விட்டதால் வழக்கை கைவிட வேண்டுமென தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் நுகர்வோரிடம் சிலிண்டர் விலை விட கூடுதலாக பணம் கேட்டது உங்கள் ஏஜென்சியை சேர்ந்த ஊழியர்.
அதனால் அவர் செய்த குற்றத்திற்கு நீங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணைய உறுப்பினர் ஸ்ரீ லதா உத்தரவு பிறப்பித்தார்.
- வெளிநாட்டில் வாழும் நபர் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை அனுப்பி வைத்தார்.
- பணத்தை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் நிலத்தை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
அவர் ஐதராபாத்தில் இடத்தை வாங்கி வீடு கட்ட உள்ளதாக தனது நண்பர்களிடம் தெரிவித்து இருந்தார். இது குறித்து ஐதராபாத் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள சுதாகருக்கு தெரியவந்தது.
வெளிநாட்டில் உள்ள நபரை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி ஐதராபாத்தில் ரூ.5 கோடியில் குறைந்த விலையில் இடத்தை வாங்கி தருவதாகவும் முன்பணமாக ரூ.50 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
தனது நண்பரான ராஜேஷ் என்பவர் மண்டல வருவாய் துறை அலுவலராக உள்ளதாகவும், அவரிடம் பேசி நிலத்தை முடித்து தருவதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய வெளிநாட்டில் வாழும் நபர் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை அனுப்பி வைத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் சுதாகர் நிலத்தை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த வெளிநாட்டில் வாழும் நபர் இதுகுறித்து வனஸ்தலிபுரம் போலீசில் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் மீது புகார் செய்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தியதில் இன்ஸ்பெக்டர் சுதாகர் ரூ.50 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுதாகரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர் ராஜேஷை தேடி வருகின்றனர்.
பண மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
- நாளை முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.
திருமலை :
திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-
இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகைகளில் ஒன்று சங்கராந்தி. இந்தத் திருநாளில் அனைத்துப் பக்தர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை பிரமாண்டமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவிலின் நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு, குடிநீர், காபி, டீ, பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 20 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.129.37 கோடி கிடைத்தது. 1 கோடியே 8 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. 38 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 8 லட்சத்து 45 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
2022-ம் ஆண்டில் ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 37 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.1450.41 கோடி கிடைத்துள்ளது. 11 கோடியே 54 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 கோடியே 77 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 1 கோடியே 9 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.






