என் மலர்
ஆந்திர பிரதேசம்
- இந்த விழா பிப்ரவரி 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது.
- 19-ந்தேதி கல்யாண உற்சவம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. முன்னதாக 10-ந்தேதி மாலை புற்றுமண் எடுத்தும், முளைப்பாரி விதைத்தும் அங்குரார்பணம் நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் 11-ந்தேதி மீன லக்னத்தில் நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி 18-ந்தேதி நந்தி வாகன வீதிஉலா நடக்கிறது. 19-ந்தேதி கல்யாண உற்சவம், 20-ந்தேதி திரிசூல ஸ்நானம், கொடியிறக்கம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
- 29-ந்தேதி கிரிவலம் நடக்கிறது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 28-ந்தேதி மாத சுத்த சப்தமியையொட்டி ரதசப்தமி விழா நடக்கிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரதசப்தமியையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் ருத்ர பாதங்கள் அருகில் உள்ள சாயா உஷா தேவி சமேத சூரிய நாராயண சுவாமி சன்னதி அருகில் காலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மேலும் மூலவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு இரண்டாவது கால அபிஷேகம் நடக்கிறது.
அதன் பின்னர் காலை 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடக்கிறது. இதே போல் 29-ந் தேதி ஆன்மிக சொற்பொழிவாளர் சாகன்ட்டி கோட்டீஸ்வர ராவ் தலைமையில் கிரிவலம் நடக்கிறது.
ஸ்ரீ காளஹஸ்தி எல்லை பகுதியில் கைலாச கிரி மலைகள் வழியாக இந்த கிரிவலம் நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
- அன்று ஒரேநாளில் மலையப்பசாமி 7 வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இது, திருமலையில் நடக்கும் 'மினி பிரம்மோற்சவ' விழா என்றும், 'ஒருநாள் பிரம்மோற்சவம்' என்றும் அழைக்கலாம். அன்று ஒரேநாளில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த வாகனச் சேவையை வழிபடும் பக்தர்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் வாகனச் சேவையை வழிபடும் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அதன்படி 28-ந்தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.
மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
ரத சப்தமியையொட்டி 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- இணையதளத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது.
- அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவது பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது.
எனினும், கோவிலில் பாலாலயம் நடக்க இருப்பதால் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவது பிப்ரவரி மாதம் 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம், 8 பவுன் நகையை மாணவி தன்னுடைய காதலனிடம் கொடுத்தார்.
- பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வருகிறார்.
கல்லூரி அருகே உள்ள ஐ.டி.ஐ-யில் 17 வயது மாணவர் ஒருவர் படித்து வருகிறார். மாணவனும், மாணவியும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் சினிமா, பூங்கா என சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் மாணவர் காதலியிடம் ஐடிஐ படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். தற்போது கடன் பிரச்சினை உள்ளதால் உன்னுடைய வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்து கொடு என கேட்டுள்ளார்.
இதையடுத்து தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம், 8 பவுன் நகையை தன்னுடைய காதலனிடம் கொடுத்தார். பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் நகை, பணத்தை தன்னுடைய காதலனுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாணவிக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்து மார்பு பகுதியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியின் தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலனிடம் நகை, பணத்தை கொடுத்ததை போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் மாணவியின் காதலனை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மாணவியிடம் வாங்கிய நகை, பணத்தை வேறு ஒரு காதலிக்கு செலவு செய்ததாக தெரியவந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் மீது போலீசில் புகார் செய்தார். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
- தூரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடந்து விடலாம் என வேகமாக சென்றனர்.
- அதிவேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் மோதியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஆத்ம குரு பஸ் நிலையம் அருகே சுரங்க ரெயில் பாதை உள்ளது.
சுரங்க ரெயில் பாதையில் நேற்று நள்ளிரவு 1 பெண், 2 ஆண்கள் தண்டவாளத்தை கடந்தனர்.
அப்போது தர்மாவரத்தில் இருந்து நர்சாபூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டு இருந்தது.
தூரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடந்து விடலாம் என வேகமாக சென்றனர்.
அதிவேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பெண் மட்டும் ரெயில் சக்கரத்தில் சிக்கி நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டு உடல் துண்டாகி இறந்தார்.
இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு உடனடியாக ரெயில் நிலைய போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயில் மோதி இறந்த 3 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் நள்ளிரவில் எதற்காக தண்டவாளத்தை கடந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 78,158 பேர் தரிசனம் செய்தனர். 27,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் திருமலையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஏழுமலையான் கோவில் உச்சியில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கவும் தடை உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் தொடங்கி ஏழுமலையான் கோவில் உச்சிவரை வாலிபர் ஒருவர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் திருமலை ஒன் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கிரண் என்ற வாலிபர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாதுகாப்பு விதிகளை மீறி கோவிலின் காட்சிகளை சமூக விரோத சக்திகளுக்கு பயன் தரும் வகையில் செயல்பட்டதாக ஐ.பி.சி செக்ஷன் 447 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கோவிலில் ஆகம விதிகளுக்கு எதிராக வீடியோ எடுத்து பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். பலத்த பாதுகாப்பையும் மீறி ஆளில்லா குட்டி விமானம் மூலம் வாலிபர் எப்படி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என பக்தர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
திருப்பதியில் நேற்று 78,158 பேர் தரிசனம் செய்தனர். 27,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.
- பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா மையப் பகுதியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் ரூ.268 கோடி செலவில், 206 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது.
சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது.
பீடம் உட்பட சிலையின் மொத்த உயரம் 206 அடி இருக்கும். வளாகத்தில் 2000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் தாடே பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது.
அம்பேத்கர் சிலையுடன் நினைவு இல்லம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.268 கோடி செலவிடப்படுகிறது. ஸ்மிருதி வனம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்தில் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினர்.
மேலும் குடிமராமத்து பணிகள், நினைவு இல்லத்தை அழகுபடுத்துதல், மைதானத்தை பிரதான சாலையுடன் இணைப்பது குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
வருகிற 31-ந் தேதிக்குள் சிலையின் பாகங்கள் விஜயவாடாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கண்காணிப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
- 1 நிமிடம் 11 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ டிரோன் ஷாட்ஸ் என்ற தலைப்பில் யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
- உண்மையான வீடியோ என்றால் பாதுகாப்பு படையினரின் பலவீனத்தை காட்டுகிறது என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மற்றும் திருமலையில் ஆகம சாஸ்திரப்படி கோவிலுக்கு மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற துப்பாக்கி ஏந்திய ஆக்டோபஸ் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
தடையை மீறி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பறக்கும் டிரோன் கேமரா உள்ளிட்டவைகளை சுட்டு வீழ்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1 நிமிடம் 11 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ டிரோன் ஷாட்ஸ் என்ற தலைப்பில் யூ டியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் திருப்பதி பேடி ஆஞ்சநேயர் சாமி கோவிலிலிருந்து, கொல்ல மண்டபம், மஹா துவாரகா, ஆனந்த நிலையம், வசந்த மண்டபம் வரை ஏழுமலையான் கோவிலுக்கு மேலே காட்சிகள் தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது உண்மையான வீடியோ என்றால் பாதுகாப்பு படையினரின் பலவீனத்தை காட்டுகிறது என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ள கோவில் மீது பறந்த ஆளில்லாத குட்டி விமானம் பாதுகாப்பு வீரர்கள் கண்ணில் படவில்லையா அல்லது கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
பதிவிடப்பட்டுள்ள வீடியோவை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு பதிவிட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும்.
கூகுள் மேப்பில் வீடியோ சேகரிக்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தேவஸ்தான முதன்மை விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தெரிவித்தார்.
இந்த வீடியோ உண்மையானது அல்ல இருப்பினும் ஆய்விற்கு பிறகு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளில்லா குட்டி விமானம் கோவில் உச்சியில் எப்போது பறந்தது என்பது குறித்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கல்கி பகவானின் ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம்.
- கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்ற நித்யா மேனன் அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.
திருப்பதி:
தமிழில் ஓ.காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது.
இந்த ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அந்த ஆசிரமத்திற்கு நடிகை நித்யா மேனன் வந்தார்.
அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின்னர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார்.
அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- குடியரசு தின விழாவை நடத்துவது குறித்து இதுவரை மாநில அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை.
- நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் டெல்லி, கேரளா, பஞ்சாப் முதல்வர்கள், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முதல்வர்கள், கவர்னர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இது தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கவர்னர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். தெலுங்கானாவைப்போல சில நேரங்களில் மட்டும் கவர்னருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாநில அரசு கவர்னரின் நெறிமுறையின்படி இல்லை. தெலுங்கானா அரசு ஏன் நெறிமுறைகளை மீறுகிறது என்று கேளுங்கள்.
எதற்கும் முரண்படாமல் கடமையை மட்டும் செய்து வருகிறேன். என்னிடம் சில மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. நான் அவற்றை மதிப்பீடு செய்து பகுப்பாய்வு செய்கிறேன்.
ஆனால் அரசு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை. குடியரசு தின விழாவை நடத்துவது குறித்து இதுவரை மாநில அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை.
அரசியல் சாசனப் பதவிக்கும், கவர்னர் நாற்காலிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
தெலுங்கானா அரசு ஏன் நெறிமுறைகளின்படி இல்லை, கவர்னருக்கு ஏன் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் நான் திரும்பத் திரும்ப கேட்டு வருகிறேன்.
நெறிமுறைகளை ஏன் பின்பற்றவில்லை என அரசு பதில் அளித்தால், மற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். கவர்னராக தனது வரம்புகளை ஒருபோதும் மீறவில்லை. கவர்னருக்கு எதிராக முதல்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். எனக்கு சிலர் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
- திருப்பதியில் நேற்று 67,511 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்கம் வெள்ளி, நகைகள், பணம், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
உண்டியல் காணிக்கை நாணயங்கள் எந்திரம் மூலமும் ரூபாய் நோட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் எண்ணி கணக்கிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்காக பரகாமணி என்ற புதிய கட்டிடத்தை தேவஸ்தானம் கட்டி உள்ளது.
தற்போது காணிக்கை பணத்துடன் உண்டியல் கோவிலில் இருந்து பரகாமணி கட்டிடத்திற்கு கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.
உண்டியல் காணிக்கையை எண்ணுவதற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடம் வாஸ்து பரிகார படி கட்டப்படவில்லை என்றும் கிரேன் மூலம் உண்டியல் காணிக்கையை எடுத்துச் செல்வது ஆகம விதிகளுக்கு முரணானது என்பதால் தீமைகள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் ஆமக ஆலோசகர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 67,511 பேர் தரிசனம் செய்தனர். 26,948 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






