என் மலர்
இந்தியா

தெலுங்கானா முதலமைச்சருக்கு குடியரசு தின உரை கேட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடிதம்
- மாநில அரசு கவர்னர் உரையை அனுப்பி வைக்காததால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சொந்த உரையை நிகழ்த்தினார்.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு உருவானது.
திருப்பதி:
குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
குடியரசு தின விழா அன்று அந்தந்த மாநில கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். குடியரசு தின விழாவில் கவர்னர் உரையை மாநில அரசு தயாரித்து வழங்க வேண்டும்.
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தின விழா விவரங்கள் மற்றும் உரை விவரங்களை கேட்டு மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவை மாநில அரசு அங்குள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடத்துவதை தவிர்த்தது. இதையடுத்து குடியரசு தின விழா அங்குள்ள ராஜ் பவனில் நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மாநில அரசு கவர்னர் உரையை அனுப்பி வைக்காததால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சொந்த உரையை நிகழ்த்தினார்.
இதனால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு உருவானது.
பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் அம்மாநில முதலமைச்சர்களுடன் கவர்னர்கள் மோதல் போக்கை உருவாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலம் கம்மத்தில் சந்திரசேகர் ராவ் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோர் மத்திய அரசு மீதும் கவர்னர்கள் மீதும் குற்றம்சாட்டி பேசினர்.
முதலமைச்சர்கள் மற்றும் கவர்னர்கள் இடையே மோதல் போக்கு நடந்து வரும் நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசு தின உரை கேட்டு கடிதம் எழுதி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.