என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பேச்சு பயிற்சி சிகிச்சையாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
- கொரோனா முழு அடைப்பு காரணமாக குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால் குழந்தைகளின் பேச்சு மெதுவாக உள்ளது.
திருப்பதி:
கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருந்த போது முழு அடைப்பு போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த முழு அடைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள் சிறைப்பட்டு கிடந்தனர். வெளி பழக்க வழக்கங்கள் இல்லாமல் குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாதது போல் இருந்தனர்.
பிறந்த குழந்தைகளால் சரிவர பேச முடியாமல், குழந்தைகள் தங்கள் இயல்பான ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழந்தனர்.
சக குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பெற்றோர், உறவினர்களுடன் பழக முடியாமல் விலகி செல்போன்களில் மூழ்கினர். இதன் தாக்கம் அவர்களின் மன வளர்ச்சியில் தற்போது காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தங்கள் குழந்தைகள் சரியான வார்த்தைகளைப் பேச முடியாததால் பெற்றோர்கள் மருத்துவமனைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது. விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மனநலப் பிரிவுக்கு வாரத்திற்கு 20 பேர் வரை இதுபோன்ற குழந்தைகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகின்றனர். இதனால் பேச்சு பயிற்சி சிகிச்சையாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்த குழந்தைகளின் வயது இப்போது 3-5 வயதுக்குள் உள்ளது.
அவர்களின் உடல் வளர்ச்சியைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில குழந்தைகள் இயற்கையான மன முதிர்ச்சி குறைவாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.
பேச்சுத் திறன் இல்லாமை, பதிலளிக்காதது போன்ற குறைபாடுகளைக் கண்ட பெற்றோர் மருத்துவர்களை தொடர்பு கொள்கின்றனர். ப்ளே ஸ்கூல் அல்லது நர்சரியில் சேர்க்கப்படும் வயதில், பேச்சு சிகிச்சையாளர்களிடம் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
குழந்தைகள் இயல்பான நிலையில் இல்லாததால் 3 ஆண்டுகளுக்குப் பிறகும், எல்கே.ஜியில் சேர்க்க முடியவில்லை.
இப்போது குழந்தைகளுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுப்பதே எங்கள் வேலையாகிவிட்டது' என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை.
இது சம்பந்தமாக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் உளவியலாளர் துர்காபிரசாத் என்பவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா முழு அடைப்பு காரணமாக குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால் குழந்தைகளின் பேச்சு மெதுவாக உள்ளது. பெற்றோர் இருவரும் வேலை செய்யும் குடும்பங்களில் இந்த பிரச்சனை அதிக அளவில் உள்ளது. குழந்தைகள் 2 வயது வரை செல்போன் மற்றும் டிவியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
குழந்தை பருவத்தில் சுற்றுச்சூழலை கவனிப்பதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது என்றார்.
- சிவைய்யா கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு எந்த ஒரு நிறுவனமும் இல்லை என்பதை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சிவைய்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம்பொம்மல சமுத்திரம், நம்டியால போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக சிவைய்யா என்பவர் வேலை செய்து வருகிறார்.
இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் முதல் 10 லட்சம் வரை பலரிடம் பணம் வாங்கியுள்ளார். பணம் வாங்கியவர்களிடம் பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களின் போலியான ஈமெயில் ஐடி, வாட்ஸ் அப்பில் வேலைவாய்ப்பு கடிதங்களை போலியாக தயாரித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் சிவைய்யா கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு எந்த ஒரு நிறுவனமும் இல்லை என்பதை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாக சிவைய்யாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். அவர் சரியான பதில் சொல்லாததால் சிவைய்யா வேலை செய்யும் போலீஸ் நிலையம் முன்பாக குவிந்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சிவைய்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது சாப்ட்வேர் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் போலீசிலும் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் சிவைய்யாவிடம் எவ்வளவு பேர் எவ்வளவு பணம் கொடுத்து ஏமாந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்காக காத்துக் கொண்டு உள்ளனர்.
- இலவச தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பதி:
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. கோவில் வளாகம், வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ், மாட வீதிகள், தேங்காய் உடைக்கும் இடம், லட்டு பிரசாதம் வழங்கும் இடம், அன்னதான பிரசாத கூடம், பஸ் நிலையம், விடுதி வளாகங்கள், சாலைகளில் பக்தர்கள் நிரம்பி வருகின்றனர்.
வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் பக்தர்கள் நிரம்பி காத்திருக்கின்றனர். நாராயணகிரி பூங்கா மற்றும் பாறை வளைவு வரை பக்தர்கள் வரிசையில் உள்ளனர். சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் தரிசனத்திற்காக காத்துக் கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மற்றும் திருப்பதிக்கு வர வேண்டும்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பதியில் நேற்று 85,450 பேர் தரிசனம் செய்தனர். 43,862 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தற்காக தெலுங்கானா மாநிலம் நாகர்கோல் பகுதியை சேர்ந்த சுமன் என்பவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் தரிசனத்திற்கு வந்தார்.
தன்னிடம் தரிசன டிக்கெட் இல்லாததால் திருமலையில் இருந்த வேணு என்பவரை தரிசன டிக்கெட் கேட்டு அணுகினார். அவர் 7 சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை கொடுத்து இருந்து ரூ.30 ஆயிரம் பெற்றுக் கொண்டார்.
தரிசனத்திற்கு சென்றபோது தேவஸ்தான அதிகாரிகள் சுப்ரபாத சேவை டிக்கெட்டுகளை பரிசோதனை செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது.
சுமன் இதுகுறித்து திருமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து வேணுவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே தமிழக மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் திடீரென மோதிக் கொண்டனர்.
- ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களிடம் ஏன் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினீர்கள் என தட்டி கேட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே தமிழக மீனவர்களும் ஆந்திர மீனவர்களும் திடீரென மோதிக் கொண்டனர். இதனால் நெல்லூர் கடலோர மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக ஆந்திர எல்லை பகுதியில் மீன் பிடித்து வந்தனர்.
நேற்று அவர்கள் அல்லூர் மண்டலம் இசக்கப்பள்ளி கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை கண்ட ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் ஆந்திர எல்லையில் மீன்பிடிப்பதாகவும், தங்களது வலைகளை அவர்கள் சேதப்படுத்தியதாகவும், அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று உள்ளூர் மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு படகில் சென்றனர்.
ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களிடம் ஏன் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தினீர்கள் என தட்டி கேட்டனர்.
அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு திடீெரன மோதிக் கொண்டனர். இதில் கல்வீசி தாக்கியதில் பல மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் கரைக்கு திரும்பிய ஆந்திர மீனவர்கள் இசைக்க பள்ளி கடலோர போலீஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவ தலைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்கள் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- குஷ்பு சிகிச்சை பெற்று வரும் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
- குஷ்புக்கு அடினோவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
பிரபல திரைப்பட நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு சிகிச்சை பெற்று வரும் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில் அவர் தனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் நல்ல ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறது. ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.
உடல் நிலை சீராக சிறிது நாட்கள் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்புக்கு அடினோவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை குஷ்புவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
- இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.
சில மாதங்கள் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு மணி கணக்கில் போனில் பேசி வந்தனர்.
வைஷ்ணவ் தங்களது பெற்றோரிடம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அவரது பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வைஷ்ணவ்க்கும் இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தது.
அப்போது வைஷ்ணவ் தனது வருங்கால மனைவிக்காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பில் வைர மோதிரம், ரூ.10 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள், ஓட்டல் மற்றும் உணவுக்காக ரூ.30 லட்சம் என ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார்.
வைஷ்ணவ் மிகுந்த உற்சாகத்தில் திருமண நாளை நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார்.
கடந்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி வைஷ்ணவுக்கு போன் செய்த இளம் பெண் அவசரமாக ரூ.7 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். தன்னிடம் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் தனது தந்தையிடமிருந்து ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது இளம் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு இளம் பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.
இதனால் இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.அப்போது வைஷ்ணவ் இளம்பெண்ணை தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் வீட்டிற்கு வேகமாக சென்றார் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் வைஷ்ணவ் பெற்றோரை அழைத்து உங்கள் குடும்பம் எங்களது அந்தஸ்திற்கு ஏற்றது இல்லை. மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை தாக்கியதால் திருமணத்திற்கு விருப்பம் இல்லை. என தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவ் மணமகள் வீட்டாரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்.
அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை குடிபோதையில் தாக்கியதாக வைஷ்ணவி மற்றும் அவரது பெற்றோர் மீது ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்தர்கள் தங்கள் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
- 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அதில் தேதி, நேரம் குறிப்பிட்ட (எஸ்.எஸ்.டி. டோக்கன்) இலவச தரிசன டோக்கன் பெறாமல் நேராக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சுக்கு வந்து கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 43 மணிநேரம் ஆகிறது. இதனால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர்.
திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் சாமி தரிசனத்துக்காக தங்கி உள்ள பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும், என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 101 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள கல்யாணக் கட்டாக்களில் 30 ஆயிரத்து 991 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பிரதான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டதில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 3 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிரண்குமார் ரெட்டி கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
- தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற கட்சி தொடங்கினார்.
அமராவதி:
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு சமக்கிய ஆந்திரா (ஒருங்கிணைந்த ஆந்திரா) என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வி அடைந்தார். அதன்பின், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதனிடையே கர்நாடகாவைத் தாண்டி தென் இந்தியாவில் தங்களது கட்சியை விரிவுபடுத்த நினைக்கும் பா.ஜ.க.வுக்கு அவர் தலைமை தாங்கக்கூடும் என்று ஆந்திர வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கிரண் குமார் ரெட்டி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
- அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.
- அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், குற்றால மடுகு பகுதியை சேர்ந்தவர் மனைவி அனுஷா. தம்பதிக்கு கிருத்திகா என்ற 4 வயது மகளும், லட்சுமி ஹாரிகா என்ற 18 மாத குழந்தையும் இருந்தனர். மணிகண்டன் ராய்ப்பூரில் ஓட்டல் நடத்தி கொண்டு அங்கேயே தங்கி உள்ளார்.
அனுஷா தனது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கணவர் ஓட்டல் நடத்தி வருவதால் அவமானமாக கருதிய அனுஷா கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, ஐதராபாத் சென்று நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என எண்ணினார். இதனால் தனது மூத்த மகள் கிருத்திகாவை கணவரிடம் ஒப்படைத்து விட்டார். 1½ வயது குழந்தையை என்ன செய்வது என்று யோசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நள்ளிரவு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை வீட்டின் பின்புறம் உள்ள கால்வாயில் வீசினார்.
பின்னர் அனுஷா தொட்டிலில் 2 கரடி பொம்மைகளை வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் தூங்கினார்.
பொழுது விடிந்ததும் தூக்கத்தில் இருந்து எழுந்த அனுஷா தொட்டிலில் இருந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாகவும் குழந்தைக்கு பதிலாக கரடி பொம்மைகளை வைத்து சென்றதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனுஷாவின் நடத்தையில் மாற்றங்களை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
முதலில் குழந்தை திருடு போனதாக போலீசாரிடம் தெரிவித்த அனுஷா பின்னர் போலீசார் அவர்களது பாணியில் விசாரித்தபோது குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கால்வாயில் வீசப்பட்ட குழந்தை உடலை போலீசார் மீட்டனர். அனுஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண் கொடுத்த முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றார்.
- அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அரிகிருஷ்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோணசீமா மாவட்டம் அமலாபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் அரிகிருஷ்ணாவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட நேரம் பேசி பழகி அரட்டை அடித்து வந்தனர். 2 பேரும் தங்களது செல்போன் எண் மற்றும் முகவரியை பகிர்ந்து கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு அரிகிருஷ்ணா இளம்பெண்ணை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தனக்கு திருமணமாகி கணவர் இருப்பதாகவும், நண்பர்களாக மட்டும் பழகலாம் என தெரிவித்தார். ஆனால் அரிகிருஷ்ணா உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என செல்போனில் அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
இதனால் விரத்தி அடைந்த இளம்பெண் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி அரிகிருஷ்ணாவின் செல்போன் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு டெலிட் செய்துவிட்டார்.
இளம் பெண்ணுடன் பேச முடியாததால் ஆத்திரம் அடைந்த அரிகிருஷ்ணா நெல்லூரில் இருந்து அமலாபுரத்திற்கு வந்தார். பஸ் நிலையத்தில் இருந்த பாருக்கு சென்று மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண் கொடுத்த முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததால் மாடிக்கு சென்றார். அங்கு வீட்டில் வேலை செய்யும் ஸ்ரீதேவி என்ற பெண் நின்று கொண்டு இருந்தார்.
தன்னுடைய காதலிதான் நிற்பதாக நினைத்த ஹரிகிருஷ்ணா தான் கொண்டு சென்ற கத்தியால் அந்த பெண்ணின் கழுத்து முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி கூச்சலிட்டபடி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஸ்ரீதேவியின் அலறல் சத்தம் கேட்ட இளம் பெண்ணின் தாய் மாடிக்கு ஓடி வந்தார். அவரையும் அரிகிருஷ்ணா பயங்கரமாக வெட்டினார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அரிகிருஷ்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த இளம் பெண்ணின் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதேவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரிகிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் கொலை நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 3 ஆண்டுகளுக்கு பிறகு தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது.
- பக்தர்கள் எந்தவொரு சமையல் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை அருகே சேஷாசலம் வனப்பகுதியில் தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடந்தது. தும்புரு தீர்த்தத்துக்கு செல்ல ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். பக்தர்களுடன் கோவிலில் இருந்து அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் பலரும் புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 23 ஆயிரம் பக்தர்களும், நேற்று காலை 5 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை 13 ஆயிரத்து 200 பக்தர்களும் என மொத்தம் 36 ஆயிரத்து 200 பக்தர்கள் தும்புரு தீர்த்தத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தும்புரு தீர்த்தத்துக்கு சென்ற அதிகாரிகளும், அர்ச்சகர்களும் தும்புரு நாதருக்கு சிறப்புப்பூஜைகளை செய்தனர். அங்கு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி தும்புரு நாதரை தரிசனம் செய்தனர்.
உடல் பருமன், இருதயக் கோளாறுகள், பிற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் தங்கள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தும்புரு தீர்த்தத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் எந்தவொரு சமையல் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
பாபவிநாசனம் அணையில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதத்துறையினர் உணவுப் பொட்டலங்களை வினியோகித்தனர். நடந்து செல்லும், மலையேறும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவப் பிரிவு சார்பில் டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர். அவசர ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்தனர். இதுதவிர அன்னப்பிரசாதம், சுகாதாரம், பறக்கும்படை ஆகிய துறைகளில் போதுமான எண்ணிக்கையிலான ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை செய்தனர். மலையேறும் பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட சில இடங்களில் பறக்கும் படையினர், வனத்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களை அழைத்துச் செல்ல பஸ் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
- போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- தமிழக ஆந்திர எல்லைகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குடிபாலா பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி உஷா. சீனிவாஸ் குடிபாலா பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். வீட்டில் இருந்து தினமும் நகைகளை காரில் கடைக்கு எடுத்துச் சென்று விற்பனை முடிந்து மீண்டும் வீட்டிற்கு நகைகளை எடுத்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்த நகைகளை காரில் கடைக்கு எடுத்துச் சென்றனர். இரவு 7 மணி அளவில் வியாபாரம் முடித்து சுமார் 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை ஒரு பையில் வைத்து கணவனும் மனைவியும் வீட்டிற்கு காரில் வந்தனர். ஸ்ரீனிவாஸ் வீட்டின் பின்புறம் காரை நிறுத்தினார்.
உஷா காரில் இருந்த நகை பையை எடுத்துக்கொண்டு காரில் இருந்து கீழே இறங்கி நின்றார். அப்போது பைக்கில் வேகமாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் உஷாவிடம் இருந்த நகைப்பையை பறிக்க முயன்றனர். ஆனால் உஷா நகை பையை கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உஷாவை சரமாரியாக தாக்கி உதைத்து கீழே தள்ளிவிட்டனர்.
உஷா வலி தாங்காமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் உஷாவிடம் இருந்த நகை பையை பறித்துக் கொண்டு பைக்கில் வேகமாக தப்பி சென்றனர்.
இது குறித்து சீனிவாஸ் குடிபாலா போலீசில் புகார் செய்தார். டிஎஸ்பி சீனிவாச ரெட்டி, இன்ஸ்பெக்டர் சீனிவாசலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பைக்கில் வந்த மர்ம நபர்கள் மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட பைக்கில் வந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தமிழக ஆந்திர எல்லைகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.






