என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கருட சேவையின் போது திடீரென பலத்த மழை கொட்டியது.
- பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் உண்டியல் வருவாயும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நேற்று ரூ.300 ஆன்லைன் விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரத்திலும், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்களால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் 10 அறைகள் நிரம்பியது.
இதனால் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருப்பதி மலையில் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் எழுந்தருளினார்.
பக்தர்கள் ஏழுமலையானுக்கு கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனர். கருட சேவையின் போது திடீரென பலத்த மழை கொட்டியது. மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 59,849 பேர் தரிசனம் செய்தனர். 30,097 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- புலிகளில் நடமாட்டத்தை கண்டறிய கிராமப் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.
- புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தில் தற்போது 73 புலிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் புலிகள் பல்வேறு ஜோடிகளாக சுற்றி திரிகின்றன.
சில புலிகள் சரணாலயத்தில் உள்ள அடர்ந்த காடுகளை விட்டு வெளியேற தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரணாலயத்திலிருந்து 2 புலிகள் வெளியே வந்தன.
வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் கடந்த சில நாட்களாக 2 புலிகள் நடமாடி வருகிறது.
கிராமங்களுக்குள் புகுந்து பசுக்களை புலிகள் அடித்து கொன்றது.
இரவு நேரங்களில் கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று அட்டகாசம் செய்தன.
இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். புலிகளில் நடமாட்டத்தை கண்டறிய கிராமப் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.
மேலும் வன ஊழியர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறையினர் கிராம மக்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புலிகள் நடமாடுவதால் வனப்பகுதி அல்லது வயல்வெளிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து வினுகொண்டா வனச்சரக அலுவலர் சையத் உசேன் கூறுகையில்:-
"அலைந்து திரியும் புலிகள் மனிதர்களை கொன்று சாப்பிடக் கூடியது அல்ல. இதனால் கிராம மக்கள் பீதியடைய வேண்டாம். புலிகளை காப்பாற்றுவது அனைவரின் பொறுப்பு".
புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியே வருகின்றன.
அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- தன்னை டி.எஸ்.பி. என்றும் மற்றவர்களை போலீஸ்காரர்கள் என்றும் கூறினார்.
- ரியாஸ் கான் பலமநேர் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது பணம் பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ்காரர்கள் என தெரிய வந்தது.
திருப்பதி:
ஆந்திராவில் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமான போது எந்த வங்கிக்குப் போனாலும் சரி, ஏ.டி.எம் மையத்துக்குப் போனாலும் சரி ரூ.10 ஆயிரம் எடுத்தால் குறைந்தது 4 நோட்டுகள் 2,000 ரூபாய்த் தாளாகவே இருந்தன.
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதுரு. 2,000 ரூபாய் நோட்டுகளை பார்ப்பது அபூர்வமாகிவிட்டது.
2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து தொடர்நது குறைந்து கொண்டே வருகிறது. ஏ.டி.எம்.களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.
இதனை பயன்படுத்தி ஆந்திராவில் நூதன மோசடியில் கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், முன்பாகல் பகுதியை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவண்ணாவுக்கு திடீரென தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் குறுக்கு வழியில் எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என சிவண்ணா முடிவு செய்தார்.
அதன்படி பெங்களூருவை சேர்ந்த டேனியல் (50), முன்பாகல் ஜமீர் பாஷா (33), கோலார் இம்ரான் (29), வெங்கடேஷைய்யா (75) ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு குழுவாக உருவாக்கினார்.
ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் என்பவரை சந்தித்த சிவண்ணா தனக்கு சாமி என்ற நபரை தெரியும். அவரிடம் ரூ.1 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக கொடுத்தால் கூடுதலாக ரூ.20 ஆயிரம் தருவார் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய ரியாஸ்கான், சிவண்ணாவிடம் ரூ.80 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக கொடுக்க முன் வந்தார்.
இதையடுத்து வி.கோட்டா பெட்ரோல் பங்க் அருகே ரியாஸ் கான் பணத்துடன் தயாராக இருந்தார். அப்போது அங்கு வந்த சிவண்ணாவும் வந்தார்.
இருவரும் பணத்தை மாற்ற நினைத்தபோது விசில் அடித்தபடி போலீஸ் உடையில் டேனியல் வந்தார். தன்னை டி.எஸ்.பி. என்றும் மற்றவர்களை போலீஸ்காரர்கள் என்றும் கூறினார். பின்னர் ரியாஸ் கான் வைத்திருந்த பணத்தை பறித்தனர். போலீஸ் நிலையத்தில் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
ரியாஸ் கான் பலமநேர் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது பணம் பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ்காரர்கள் என தெரிய வந்தது.
இது குறித்து ரியாஸ்கான் பலமநேர் போலீசில் புகார் செய்தார். வி.கோட்டா பகுதியில் டி.எஸ்.பி. உடையில் வந்த டேனியல், சிவண்ணா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
- திருப்பதி மலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது.
- தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி மலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது. அதற்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களை விற்பனை செய்தனர்.
மேலும் பிரசாத லட்டுக்கள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சணல் பைகள் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்டீல் பாட்டில்கள் ரூ.300, 400-க்கு விற்பனை செய்தனர். சாதாரண பக்தர்கள் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிபட்டனர்.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அளித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி மூங்கிலால் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ஒரிசா மாநிலத்தில் இருந்து மூங்கில்கள் வரவழைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் மூங்கிலை வெட்டி எடுத்து அழகிய வடிவில் குடிநீர் பாட்டில்களாக தயார் செய்துள்ளனர். இவை ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மூங்கிலால் செய்யப்பட்ட பாட்டில்களில் உள்ள குடிநீர் புதிய சுவையுடன் உள்ளது. இதனால் இந்த குடிநீர் பாட்டில்களுக்கு பக்தர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
திருப்பதியில் நேற்று 64,707 பேர் தரிசனம் செய்தனர். 28,676 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
இலவச தரினத்தில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- மாதவிக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாயுடுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி;
ஆந்திர மாநிலம், சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ். இவரது மனைவி மாதவி (வயது 27) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஜா (6), சிவா (5) என ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.
மாதவிக்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மாதவி நாயுடுபேட்டை போலீசில் கணவர் மீது புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மாதவி தன்னுடைய மகன் சிவாவை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் ஹரிஷ் தனது பண்ணை வீட்டை விற்றுவிட்டு சூளூர்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.
மேலும் சூலூர்பேட்டை அடுத்த ஸ்ரீராமுடியில் உள்ள வீட்டையும் ஹரிஷ் விற்க போவதாக மாதவிக்கு தகவல் கிடைத்தது.
வீட்டை விற்பதை தடுப்பதற்காக மாதவி நேற்று சூலூர்பேட்டையில் கணவர் தங்கி உள்ள வீட்டிற்கு வந்தார்.
நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த ஹரிஷுக்கும் மாதவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஹரிஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மாதவியின் கழுத்தை அறுத்தார். உடல் முழுவதும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாதவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைக் கண்ட மகன் சிவா அலறி கூச்சலிட்டான். தன் கண்முன்னே தாய் இறந்ததை கண்டு சிறுவன் துடித்தான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாதவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாயுடுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஹரிஷ் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று மாலை அங்குரார்ப்பணம், நவ கலச ஸ்தாபனம் நடக்கிறது.
- நாளை கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடக்கிறது. அதையொட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை சாஸ்திரமுறைப்படி விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், அங்குரார்ப்பணம், நவ கலச ஸ்தாபனம் நடக்கிறது.
நாளை காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு நவ கலச ஸ்நாபன திருமஞ்சனமும் மற்றும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர், விபூதி ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனமும் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பத்ர புஷ்ப யாக மகோற்சவம் கோலாகலமாக நடக்கிறது. உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு மல்லி, ஜாதி மல்லி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, தாமரை, கனகாம்பரம் உள்பட பல்வேறு மலர்களாலும், வில்வம், துளசி, பன்னீர் இலைகளாலும் பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடக்கிறது.
இந்தப் பத்ர புஷ்ப யாக மகோற்சவம் கோவிலில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் ெசய்கின்ற தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக நடத்தப்படுவதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
- பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
- நாளை இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் (கருட சேவை) உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) பவுர்ணமி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி அலிப்பிரி வன உயிரியல் பூங்காவில் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
திருப்பதி ராயல் நகரை சேர்ந்தவர் சுப்ப ரத்ன சுஷ்மா. இவர் தனது 3 மகன்கள் மற்றும் அவரது சகோதரர் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு உயிரில் பூங்காவிற்கு சென்றார்.
உயிரில் பூங்காவில் விலங்குகளை சிறுவர்கள் ரசித்தனர். அங்கும் இங்குமாக சந்தோஷமாக ஓடியாடி விளையாடினர். சுப்ப ரத்ன சுஷ்மா அருகில் இருந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.
சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டனர். அங்குள்ள உணவகத்தின் வழியாக நடந்து சென்றனர்.
அப்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேட்டரி கார் திடீரென சுப்ப ரத்னா சுஷ்மாவின் மகன் பிரணவ் (வயது 3) என்பவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைக் கண்ட அவரது தாய் கதறி அழுதார். பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தாய் எம்.ஆர்.பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.
சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
இனி உயிரியல் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனங்கள் 10 கிலோ மீட்டருக்கு பதிலாக 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படும் என ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசினார்.
- ரஜினி காந்த்தை அமைச்சர் ரோஜா, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், மறைந்த நடிகருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு தொடக்க விழா விஜயவாடாவில் கடந்த வாரம் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசினார். இதனால் ரஜினி காந்த்தை அமைச்சர் ரோஜா, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்தனர்.
இதற்கு சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார். ரஜினியை விமர்சிப்பதை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் நிறுத்தவில்லை.
இந்த நிலையில் ரஜினியை சந்திரபாபு நாயுடு போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது இந்த விமர்சனங்கள் குறித்து பேச்சு எழுந்தது. விமர்சனங்கள் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த ரஜினி, "அப்படி எதுவும் நான் நினைக்கவில்லை. விமர்சனங்கள் பற்றி சிந்திக்கவே இல்லை.
யார் என்ன கூறினாலும் உங்கள் மீதுள்ள மரியாதை என்றும் மாறாது" என்று கூறியுள்ளார்.
- ரூ.40 லட்சம் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன
- தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகள கடத்தியது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவதாக சித்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.
சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின்போது 2 கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட 8 செம்மர கட்டைகள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் சித்தூர்- கடப்பா நெடுஞ்சாலையில் நடந்த வாகன சோதனையின்போது, 2 கார்களில் இருந்த 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. செம்மரக் கட்டைகள் கடத்தி வந்ததாக, வேலூர் மாவ்டடத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகள கடத்தியது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.
- ஆஞ்சநேயலு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார் என தேடினர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், மந்திராலயம் துங்கபத்ரா பகுதியில் பழைய ரெயில் நிலையம் உள்ளது.
இங்குள்ள கட்டிடத்தில் ஆஞ்சநேயுலு அவரது மனைவி அங்கம்மா தம்பதியினர் தங்கியிருந்தனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வைத்து வந்தனர். தம்பதிக்கு ராமு என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது.
ஆஞ்சநேயலு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த 2 மர்ம நபர்கள் குழந்தை ராமுவை கடத்தி சென்று விட்டனர்.
அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களுடன் படுத்து இருந்த குழந்தை காணாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார் என தேடினர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
- ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து புகழ்ந்து பேசினார்.
ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி ராமையா கூறியதாவது:-
பிரபல நடிகர் ரஜினிகாந்த் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து விமர்சனம் செய்கின்றனர். தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்தால் ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






