என் மலர்
இந்தியா

ஆந்திராவில் 2000 ரூபாய் நோட்டுகள் கூடுதல் விலைக்கு வாங்குவதாக மோசடி- போலீஸ் உடையில் நூதன பறிப்பு
- தன்னை டி.எஸ்.பி. என்றும் மற்றவர்களை போலீஸ்காரர்கள் என்றும் கூறினார்.
- ரியாஸ் கான் பலமநேர் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது பணம் பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ்காரர்கள் என தெரிய வந்தது.
திருப்பதி:
ஆந்திராவில் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமான போது எந்த வங்கிக்குப் போனாலும் சரி, ஏ.டி.எம் மையத்துக்குப் போனாலும் சரி ரூ.10 ஆயிரம் எடுத்தால் குறைந்தது 4 நோட்டுகள் 2,000 ரூபாய்த் தாளாகவே இருந்தன.
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதுரு. 2,000 ரூபாய் நோட்டுகளை பார்ப்பது அபூர்வமாகிவிட்டது.
2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து தொடர்நது குறைந்து கொண்டே வருகிறது. ஏ.டி.எம்.களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை.
இதனை பயன்படுத்தி ஆந்திராவில் நூதன மோசடியில் கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், முன்பாகல் பகுதியை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 57). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சிவண்ணாவுக்கு திடீரென தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் குறுக்கு வழியில் எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என சிவண்ணா முடிவு செய்தார்.
அதன்படி பெங்களூருவை சேர்ந்த டேனியல் (50), முன்பாகல் ஜமீர் பாஷா (33), கோலார் இம்ரான் (29), வெங்கடேஷைய்யா (75) ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு குழுவாக உருவாக்கினார்.
ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் என்பவரை சந்தித்த சிவண்ணா தனக்கு சாமி என்ற நபரை தெரியும். அவரிடம் ரூ.1 லட்சம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக கொடுத்தால் கூடுதலாக ரூ.20 ஆயிரம் தருவார் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய ரியாஸ்கான், சிவண்ணாவிடம் ரூ.80 லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக கொடுக்க முன் வந்தார்.
இதையடுத்து வி.கோட்டா பெட்ரோல் பங்க் அருகே ரியாஸ் கான் பணத்துடன் தயாராக இருந்தார். அப்போது அங்கு வந்த சிவண்ணாவும் வந்தார்.
இருவரும் பணத்தை மாற்ற நினைத்தபோது விசில் அடித்தபடி போலீஸ் உடையில் டேனியல் வந்தார். தன்னை டி.எஸ்.பி. என்றும் மற்றவர்களை போலீஸ்காரர்கள் என்றும் கூறினார். பின்னர் ரியாஸ் கான் வைத்திருந்த பணத்தை பறித்தனர். போலீஸ் நிலையத்தில் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
ரியாஸ் கான் பலமநேர் போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது பணம் பறித்துச் சென்றவர்கள் போலி போலீஸ்காரர்கள் என தெரிய வந்தது.
இது குறித்து ரியாஸ்கான் பலமநேர் போலீசில் புகார் செய்தார். வி.கோட்டா பகுதியில் டி.எஸ்.பி. உடையில் வந்த டேனியல், சிவண்ணா உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.






