என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • போயபாலம் சந்திப்பு பகுதியில் 10 கழுதைகளுடன் நான்கு குடும்பங்கள் கொண்ட குழு கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை பால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

    பிறந்த குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழுதை பாலில் மருத்துவக் குணம் அதிகம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

    கழுதைபால் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது கழுதை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ.8000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் போயபாலம் சந்திப்பு பகுதியில் 10 கழுதைகளுடன் நான்கு குடும்பங்கள் கொண்ட குழு கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்தனர் .

    "நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம். ஒரு லிட்டர் ரூ.8,000-க்கு மொத்தமாக விற்கிறோம். ரூ.1,000 தள்ளுபடி தரலாம். ஒரு கழுதை ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்க முடியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கிறோம். நாங்கள் வழக்கமாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் வணிகத்திற்காக விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு வருவோம்," என்றனர்.

    விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கழுதைப்பாலின் மருத்துவ குணம் பற்றி கேள்விப்பட்டு 75 மில்லி கழுதைப்பாலை வாங்கியதாக கூறினார்.

    "இங்கே கழுதையிலிருந்து புதிதாகப் பால் கறந்த பச்சைப் பாலை அந்த இடத்திலேயே குடித்து திருப்தியடைந்தேன். விற்பனையாளரிடம் ரூ.500 டிஜிட்டல் பேமெண்ட் செலுத்தினேன்" என்றார்.

    • தக்காளி விவசாயியான சந்திரமவுலிக்கு சொந்தமாக 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
    • விளைச்சல் விரைவாகவும், கணிசமாகவும் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசனம், மூடாக்கு போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினார்.

    சித்தூர்:

    எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு 'கிலி'யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று 'இரட்டைச் சதத்தை' நோக்கி 'நாட் அவுட்'டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி விலை, நடுக்கத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால் இந்த 'கிடுகிடு' விலை உயர்வு, சில விவசாயிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் அழைத்து வந்திருக்கிறது. அவர்களை குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக்கி இருக்கிறது.

    அவர்களில் ஒருவர்தான், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமவுலி.

    தக்காளி விவசாயியான இவருக்கு சொந்தமாக 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், ஒரு அரிய வகை தக்காளியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயிரிட்டார். விளைச்சல் விரைவாகவும், கணிசமாகவும் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசனம், மூடாக்கு போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினார். இவருடன், இவரது மனைவியும் சேர்ந்து உழைத்ததற்கு, நிலத்தின் மேல் பலன். ஜூன் மாத இறுதியில் சந்திரமவுலியின் நிலத்தில் செடிகளில் குண்டு குண்டாக தக்காளிகள் காய்த்துக் குலுங்கின.

    அவற்றைப் பறித்து, அருகில் உள்ள கர்நாடக மாநிலம் கோலார் சந்தைக்கு கொண்டு சென்று விற்றார். 15 கிலோ தக்காளி அடங்கிய ஒரு பெட்டியை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்தார். இப்படி இவர் 45 நாட்களில் விற்ற தக்காளி பெட்டிகளின் எண்ணிக்கை 40 ஆயிரம்!

    இதன் மூலம், ரூ.4 கோடி சம்பாதித்திருக்கிறார் சந்திரமவுலி. தற்போது மகிழ்ச்சியான மனிதராக மாறியிருக்கிறார்.

    குரலில் குதூகலம் தென்பட அவர் கூறும்போது, 'தக்காளி விற்று நான் ரூ.4 கோடி ஈட்டினேன். அதில் உற்பத்தி, பறிப்பதற்கான கூலி, கமிஷன், போக்குவரத்து செலவு எல்லாம் போக எனக்கு லாபமாக ரூ.3 கோடி மிஞ்சியிருக்கிறது' என்றார்.

    தகுந்த விலை கிடைக்காமல் விளைபொருட்களை வீதியில் கொட்டுவது, கடன் தொல்லை தாளாமல் தற்கொலையை நாடுவது என்று விவசாயிகளைப் பற்றிய வேதனைச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்திருக்கிறோம். ஆனால் தக்காளி விலை உயர்வால் ஒரு சில விவசாயிகளாவது கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பது, குடும்பஸ்தர்களின் குமுறல்களுக்கு மத்தியிலும் சிறிது ஆறுதலையே தருகிறது.

    • சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
    • ராக்கெட்டின் 4-வது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பேசியதாவது:-

    சிங்கப்பூருக்காக இஸ்ரோ மேற்கொள்ளும் பிரத்யேக ஏவுதல் இதுவாகும். சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது சிங்கப்பூர் நாட்டினருக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மீதான நம்பகத் தன்மையைக் காட்டுகிறது.

    எங்களுக்கு விண்வெளியில் சரியான சுற்றுப்பாதை சாதனையாக உள்ளது.

    இந்த பயணத்தின் மூலம் விண்வெளி குப்பைகளை குறைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ராக்கெட்டின் 4-வது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும்.

    4-வது நிலை 535 கி.மீ. முதல் 300 கி.மீ. சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும். விண்வெளிக் குப்பைகள் அபாயத்தைக் குறைக்க இஸ்ரோ பயனுள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    அடுத்த ஏவுதல் பி.எஸ்.எல்.வி. சி-57 ஆதித்யா-எல்1 ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ககன்யான் விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆள் இல்லாத விண்கலம் விண்ணில் செலுத்தி சோதனை இடப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திட்ட இயக்குனர் பிஜூ கூறுகையில், 'பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 530- 570 கி.மீ. உயரம் வரையான சுற்று வட்டப் பாதையில் அதிக அளவிலான செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளி கழிவுகள் உள்ளன.

    எனவே 350 கி.மீ. புவி தாழ்வட்ட பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்துவது குறித்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டில் உள்ள பி.எஸ்-4 (4-வது நிலை) மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார்.

    • நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.

    ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சாலை எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, நந்திகிராமுக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின.

    இந்நிலையில், என்டிஆர் மாவட்டத்தின் நந்திகிராமில் முழங்கால் அளவு வெள்ளத்தில் சிக்கிய பி-டெக் மாணவர்களைக் காவல் துறையினர் மீட்டு உதவியுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பி-டெக் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற அச்சத்தில் மாணவர்கள் நந்திகம போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, அவர்களுக்கு உதவியாக, நிரம்பி வழியும் நெடுஞ்சாலையை கடந்து, மாணவர்களை தேர்வு மையத்தில் இறக்கிவிட, போலீசார் கிரேன் ஏற்பாடு செய்தனர்.

    இதேபோல் தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பவும் போலீசார் உதவினர். இந்த மீட்பு குறித்த காணொளியை ஆந்திர காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    இந்த கானொலியை காணும் பலர், ஆந்திரா காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.

    • மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.
    • நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நந்திகம் அருகே உள்ள அய்த்தாபுரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி நதி ஒன்று உள்ளது.

    நதிக்கரையை ஒட்டி உள்ள மாட்டுக்கொட்டகையில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. நேற்று அதிகாலை தாய் நாய் உணவு தேடி மறுக்கரைக்கு வந்தது.

    அப்போது திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த நந்திகம் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த தாய் நாய் அங்கும் இங்கும் அலறியபடி மறுக்கரையை நோக்கி குறைத்தது.

    இதனை கண்ட போலீசார் படகு மூலம் மறுகரைக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த கொட்டகையில் நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர் குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர்.

    தனது குட்டிகளை கண்ட நாய் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி ஆனந்த கண்ணீர் வடித்தது.

    • 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.
    • நடிகை ஜெயசுதாவிற்கு தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

    திருப்பதி:

    நடிகை ஜெயசுதா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் தலைவரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது நடிகை ஜெயசுதா காங்கிரஸில் இணைந்தார்.

    இதையடுத்து செகந்திராபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஜெயசுதா வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    ஓய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

    பின்னர் 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    நடிகை ஜெயசுதாவிற்கு தேர்தலில் போட்டியிட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தில் இருந்தார்.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதாவை பா.ஜ.க. கட்சியின் இணைப்பு குழு தலைவரும், ஈட்ல ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைய அழைப்பு விடுத்தார்.

    ஐதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் நடிகை ஜெயசுதா அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணையவில்லை.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதா நேற்று தெலுங்கானா பா.ஜ.க மாநில தலைவர் கிஷன் ரெட்டியை சந்தித்தார்.

    விரைவில் அவர் பா.ஜ.க.வில் இணைகிறார். இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • உண்டியல்களில் 3 பக்கமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தற்போது பித்தளையால் செய்யப்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு சில பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் அதிலிருந்து பணத்தை திருடுகின்றனர்.

    பழைய உண்டியல்களில் உள்ள சிரமத்தை போக்கும் வகையில் தற்போது சில்வர் உலோகத்தால் செய்யப்பட்ட புதிய வடிவிலான 5 உண்டியல்கள் ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

    இந்த உண்டியல்களில் 3 பக்கமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எளிதாக சிரமம் இன்றி நகர்த்திச் செல்ல முடியும்.

    உண்டியலுக்குள் கையை விட்டு பணத்தை திருட முடியாதபடி இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    மேலும் லிப்ட்டில் எடுத்துச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சில உண்டியல்களை கொண்டு வர உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால் திரளான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும், இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் 8 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 78,115 பேர் தரிசனம் செய்தனர். 38,243 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 

    • சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
    • ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    திருப்பதி:

    இலங்கையை சேர்ந்தவர் விக்னேஸ்வரி. இவருக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் (கட்டிட மேஸ்திரி) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    லட்சுமணனை திருமணம் செய்ய விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதற்காக சுற்றுலா விசா பெற்று இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

    விமான நிலையத்தில் லட்சுமணன், விக்னேஸ்வரியை வரவேற்று தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    தனது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். லட்சுமணன் குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்று கொண்டனர்.

    இதனை தொடர்ந்து, ஊர்பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதற்கிடையே, விக்னேஷ்வரியின் விசா ஆகஸ்ட் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்குள் விக்னேஸ்வரி நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    மேலும், வெளிநாட்டு இளம்பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    தற்போது எல்லை தாண்டிய காதல் அதிகரித்து வருகிறது. அந்த பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர்.

    • தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.
    • நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் பொங்கல்(சங்கராந்தி) பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

    இதில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

    இந்த பந்தயங்களுக்கென்று இப்பகுதிகளில் சேவல்கள் தனித்துவமான முறையில் வளர்க்கப்படுகின்றன.

    அவற்றுக்கு தினமும் பாதம், முந்திரி, முட்டை மற்றும் புரதச்சத்துக்கள், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்து சண்டைக்கு பழக்கப்படுத்துகின்றனர்.

    இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களைப் பார்த்து ஆந்திராவில் வளர்க்கப்படும் பந்தய சேவல்களை வாங்க தாய்லாந்தில் இருந்து 4 பேர் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூரு பகுதிக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் அனைவரும் ரங்காபுரம் என்னும் ஊரில் பந்தய சேவல்களை வளர்க்கும் ரத்தைய்யா என்பவரை சந்தித்து ரூ.3 லட்சம் கொடுத்து பந்தய சேவல்களை தங்களது நாட்டுக்கு வாங்கிச் சென்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு போகிப் பண்டிகையன்று நான் வளர்த்த சேவல் கனபவரம் என்னும் ஊரில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டு ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்றது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

    இதைப் பார்த்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் என்னிடம் வந்து ரூ.27 லட்சம் பரிசு தொகையை வென்ற சேவலை விலைக்கு கேட்டனர்.

    அதற்கு நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் ரூ.3 லட்சம் கொடுத்து மற்றொரு பந்தய சேவலை அவர்கள் வாங்கிச் சென்றனர் என்றார்.

    • 'டிஎஸ்-சார்' செயற்கை கோள், சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இணைந்து உருவாக்கப்பட்டது.
    • ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி காலை 6.30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றது. ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

     இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சார்' என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த 'டிஎஸ்-சார்' செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.

    'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.

    இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.  மற்ற செயற்கை கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    செயற்கை கோள்களை செலுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், பிஎஸ்எல்வி-சி56 வாகனம் 7 செயற்கை கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் துல்லியமாக செலுத்தியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு முக்கிய நிகழ்வாக, இன்று 7 செயற்கை கோள்களை செலுத்தியிருப்பது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும். 

    • கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
    • வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சூர்யா சலபதி ராவ். இவர் கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார் .

    விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.

    மேலும் போலியான சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கினார்.

    இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கடற்படை வளாகத்தில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது.

    சூர்யா சலபதி ராவ் கொடுத்த போலி சான்றிதழ்களுடன் சிலர் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் முகாமில் கலந்து கொண்டனர் .அப்போது முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இதில் பல்வேறு பட்டதாரிகளின் சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. போலி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டவர்களிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது சூர்யா சலபதி ராவ் சான்றிதழ் வழங்கியதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ராணுவ அதிகாரிகள் சூர்யா சலபதிராவை பிடித்து விசாரணை நடத்தியதில் போலி சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கியது தெரியவந்தது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சூர்யா சலபதி ராவை கைது செய்து அவரிடமிருந்து கார், கடற்படை அதிகாரிகளுக்கான உடைகள், செல்போன், லேப்டாப், போலி அடையாள அட்டை, போலி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சூர்யா சலபதி ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.
    • தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஆந்திராவில் கனமழை காரணமாக தற்போது விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    நேற்று முதல் தக்காளி கிலோ 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே அங்கல்லு தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது.

    சித்தூர், மதனப்பள்ளி, கலகடா, குர்ரம் கொண்டா, வால்மீகிபுரம், முலகலா செருவு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.

    இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவை போல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    வரும் ஆகஸ்டு மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என தக்காளி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    ×