என் மலர்
இந்தியா

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு
- கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.
- தட்டுப்பாடு காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது.
திருப்பதி:
ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆந்திராவில் கனமழை காரணமாக தற்போது விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
நேற்று முதல் தக்காளி கிலோ 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே அங்கல்லு தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது.
சித்தூர், மதனப்பள்ளி, கலகடா, குர்ரம் கொண்டா, வால்மீகிபுரம், முலகலா செருவு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது.
இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவை போல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வரும் ஆகஸ்டு மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என தக்காளி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.






