என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    இக்கட்டுரையில் தாய்ப்பால் சுரப்பு குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடைகள் மற்றும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெளிவாகிக் கொள்ளுங்கள்.
    ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் வழியே தான் அச்சத்துக்கள் கிடைக்கும். பிரசவத்திற்கு பின் இயற்கையாகவே தாய்ப்பால் சுரக்கும். ஆனால் மார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா என்று கேட்டால், உடல்நல நிபுணர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள்.

    இக்கட்டுரையில் தாய்ப்பால் சுரப்பு குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடைகள் மற்றும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெளிவாகிக் கொள்ளுங்கள்.

    * தாய்ப்பால் சுரப்பு என்று வரும் போது, அதற்கும் மார்பக அளவிற்கும் சம்பந்தமே இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்களுக்கு சிறிய அளவில் மார்பகங்கள் இருந்தால், குறைவாக தாய்ப்பால் சுரக்குமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

    * மார்பகங்களில் உள்ள கொழுப்பு திசுக்களின் அளவைப் பொறுத்து தான் ஒருவரின் மார்பக அளவு உள்ளது. எனவே மார்பக அளவிற்கும், சுரக்கும் தாய்ப்பாலின் அளவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.



    * கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பல ஹார்மோன் மாற்றங்களின் விளைவால், மடிச்சுரப்பிகள் தூண்டப்பட்டு, தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

    * தாய்ப்பால் உற்பத்தியான பின், மார்பகங்களின் அளவு சற்று பெரிதாகும். இதற்கு காரணம் மடிச்சுரப்பிகளின் அளவு சற்று பெரிதாவது தானே தவிர, தாய்ப்பால் உற்பத்தி மார்பக அளவைப் பொறுத்தது அல்ல.

    * தாய்ப்பால் உற்பத்தி மற்றொரு காரணியாலும் பாதிக்கும். அது என்னவெனில், குழந்தை அதிகளவில் தாய்ப்பாலைக் குடித்தால், தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.

    * கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின் மார்பக அளவில் சிறிதும் மாற்றம் இல்லாவிட்டால், அப்பெண்ணிற்கு போதுமான சுரப்பி திசுக்கள் இல்லை என்று அர்த்தம். அத்தகைய பெண்களுக்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். இப்பிரச்சனையை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

    * பெண்ணிற்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கு அதிகமாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்தது, மார்பக அறுவை சிகிச்சை மற்றும் புகைப்பிடித்தல் போன்றவைகள் காரணங்களாகும்.
    பெண்கள் முக்கியமான விஷேசங்களுக்கு, செல்ல மாதவிடாய் வராமல் தடுக்க மாத்திரைகளை பயன்படுத்துவது சரியான தீர்வா இல்லையா என்பதை இந்த பகுதியில் காணலாம்.
    பெண்கள் முக்கியமான விஷேசங்களுக்கு செல்ல வேண்டும் என்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கின்றனர். இன்றும் சிலர் மாதவிடாய் ஏற்படுவதை உடலில் நடக்கும் சாதாரண ஆரோக்கிய நிகழ்வாக கருதுவதில்லை. இதனால் தான் மாதவிடாயை சிறிது காலம் தடுத்து வைத்திருக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது சரியான தீர்வா இல்லையா என்பதை இந்த பகுதியில் காணலாம்.

    மாதவிலக்கு ஏற்படுவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பாக உணர செய்யக்கூடிய நாப்கின்கள் அதிகம் கிடைக்கின்றன. மாதவிலக்கை தடுத்து வைப்பதற்கு பதிலாக அது போன்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்தலாம்.

    மாதவிலக்கை தடுக்கும் மாத்திரைகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது. சிலருக்கு அது ஒவ்வாமையை உண்டாக்கும். பெண்களின் கர்ப்பப்பை பூ போல மென்மையானது. அதனை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்



    பெண்கள் மருந்தின் பெயரை சொல்லி தாமே கடைகளில் மாத்திரைகளில் வாங்கி கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு வாங்குவது மிகவும் தவறு. கர்ப்பபையின் நிலைகளை பொருத்து மாத்திரைகள் மாறுபடும். எனவே மருத்துவரிடன் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து உங்களது கர்பப்பையின் நிலைக்கேற்ற மாத்திரைகளை சாப்பிடுவதே நல்லது.

    உங்களது ஆரோக்கிய பின்னனி தெரியாமல் மாத்திரைகளை சாப்பிடுவது முற்றிலும் தவறு. அவ்வாறு சாப்பிட்டால், உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

    நீங்கள் இயற்கையாக உண்டாகும் மாதவிடாயை மருந்துகளை உபயோகித்து தள்ளிப்போடுவதால், பின்னாளில் உங்களுக்கு மிக அதிக அளவு உதிரப்போக்கும், முன்பு எப்போது இல்லாத அளவுக்கு உடல் வலியும் உண்டாகும்.
    தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிரச்சினையை சரிசெய்து விடலாம்.
    தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அதை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

    உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

    உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேருகிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது. தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும்.



    எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் பெண்களின் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.

    அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அதை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.

    தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்தப் பிரச்சினையை சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு வேறு சில குறைபாடுகளால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலன் தராது என்கிறார்கள், மருத்துவர்கள்.
    பெண்கள் சந்திக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளில் ஒன்று, யூரினரி இன்ஃபெக்‌ஷன். ஆனால், அதுகுறித்த சரியான தெளிவு பெரும்பாலான பெண்களிடம் இல்லை.
    குத்துவலி மற்றும் நீர்க்கடுப்பு: தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் தங்க ஆரம்பிக்கும்போது, இடுப்புக்குக் கீழே வலி எடுக்கும். தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவையும் அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் இடத்தில் அதிகமாக எரிச்சல் உண்டாகும்.

    கட்டுப்படாத வலி: அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் உண்டாகும். இதனால், மற்ற வேலைகளில் கவனம் சிதறி, மன அழுத்தத்தோடு இருப்பார்கள்.

    சொட்டுச் சொட்டாக வெளியேறுதல்: மீண்டும் மீண்டும் சிறுநீர் கழித்தாலும் நிவாரணம் கிடைக்காது. சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறும். அப்போது, கடுமையான வலியை உணர்வார்கள்.

    சிறுநீரின் நிறம் மாறுதல்: மஞ்சள் நிறமாகவோ, கலங்கலாகவோ சிறுநீர் வெளியேறினால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது வலி அதிகமாக இருக்காது. ஆனால், நிறத்தை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். சில சமயம், நீர் திட்டுத்திட்டாக வெளியேறும். அப்போது மட்டும் நீர்க்கடுப்பு இருக்கும்.

    துர்நாற்றம் வீசுதல்: சிறுநீர் கழிக்கும்போது வெளிப்படும் துர்நாற்றத்தை வைத்தே தொற்றைக் கண்டறிய முடியும். சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், உள்ளேயே தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் உண்டாகலாம். புகைப்பழக்கமுள்ள ஆண்களுக்குச் சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் வெளிப்படும். அதிகமாக மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துவதாலும் இப்படி நாற்றம் வீசுவது உண்டு. ஆனால், நாற்றத்தோடு வலியும் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    சோர்வாக உணர்தல்: பெண்களில் ஒரு குறிப்பிட்ட வயதுடையவர்கள் மற்றும் முதியவர்களுக்கு முதுகுவலியும் மன அழுத்தமும் இருக்கும். மாதவிடாய் சமயத்தில் எப்படிச் சோர்வாக இருப்பார்களோ, அதேபோல உணர்வார்கள்.

    இந்த ஆறு அறிகுறிகள், பெண்களுக்கு அடிக்கடி வரக்கூடியவை. இவற்றில் ஏதாவது ஒன்று வருடத்துக்கு மூன்று முறை வந்தாலே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முதலில் யூரின் டெஸ்ட் எடுப்பார்கள். தேவைப்பட்டால் ஸ்கேன் செய்வார்கள். எந்தக் கிருமியால் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சையை அளிப்பார்கள்.



    எப்படி விரட்டலாம்?

    வெளியூர்ப் பயணம் செய்யும்போது இரவில் சிறுநீர் கழிக்க நேரிடுமே என்று பல பெண்கள் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். வழியில் கழிவறைகள் இருக்காது; இருந்தாலும் அவை சுகாதாரமாக இருக்காது என்று இப்படிச் செய்வார்கள். கழிவறைகளால் மட்டுமே தொற்று ஏற்படுவதில்லை; தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் தொற்று ஏற்படும்.

    வெளியூர்ப் பயணங்களின்போது நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும். அது தீங்கு செய்யும் கிருமிகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.

    * நான்கு மணி நேரத்துக்கு மேல் ஒரு நாப்கினைப் பயன்படுத்தக் கூடாது. மாற்றிவிட வேண்டும்.

    * காட்டன் உள்ளாடைகளைப் பயன்படுத்துவது நல்லது.

    * ஆன்டிசெப்டிக் தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சுத்தமாக இருக்க நினைத்து நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடக் கூடாது. ஆன்டிசெப்டிக்குக்குப் பதில், இளஞ்சூடான நீராலேயே சுத்தப்படுத்தலாம்.

    * கோடைக்காலங்களில் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும்.

    * செயற்கை பானங்களைத் தவிர்த்து, இயற்கையாகக் கிடைக்கும் மோர், இளநீர் போன்றவற்றை அருந்த வேண்டும்.

    * காபி, சோடா, ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுயமருத்துவம் கூடாது.

    * ஆரம்பத்தில் வலி குறைந்ததும் மாத்திரைகளை நிறுத்திவிடாமல், மருத்துவர் சொன்ன தேதி வரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
    மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும்.
    மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும். மாதவிடாய் சுழற்சி பொதுவாக 28 நாள்களுக்கு நடைபெறும். ஆனால், அது இயல்பாகவே பல்வேறு காரணங்களால் 20 முதல் 40 நாள்களுக்குள் நடைபெறும்.

    கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள்...

    மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அவை மூன்று கட்டடங்களாக நடைபெறும்.

    வளரும் நிலை

    இது மாதவிடாய் ரத்தப்போக்கு நின்ற நாள்முதல், சினைமுட்டை வெளிப்படுதல் (Ovulation) நடைபெறும் நாள் வரை நீடிக்கும் (பொதுவாக 4-ம் நாள் முதல் 14-ம் நாள் வரை). அண்டகத்தில் இருந்து (Ovary) வெளிப்படும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன், கர்ப்பப்பையின் சுவரை வளர்ச்சியடையச் செய்யும். இந்த ஹார்மோன் கர்ப்பப்பையின் சுவருக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, 1 மி.மீ ஆக இருந்த சுவரை 4 மி.மீ அளவுக்குத் தடிமனாக்கும்.

    சுரக்கும் நிலை

    இது மாதவிடாய் சுழற்சியின் இறுதி 14 நாள்களுக்கு நீடிக்கும். சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர், கார்பஸ் லூட்டியம் (Corpus luteum) அண்டகத்தில் உருவாகி, புரோஜெஸ்ட்ரான் என்னும் ஹார்மோனைச் சுரக்கும். இதுவும், சிறிய அளவில் வெளிப்படும் ஈஸ்ட்ரோஜெனும் சேர்ந்து கர்ப்பப்பை சுவரை மேலும் தடிமனாக மாற்றும். இறுதியாக கர்ப்பப்பை சுவரின் மொத்த அளவு 6 மி.மீ. என்ற அளவுக்கு இருக்கும்.

    மாதவிடாய் நிலை

    கருவுறுதல் நடக்காதபோது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால் கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும், இதனால் கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும். இப்படி வெளியேறும் திரவம்தான் `மாதவிடாய்’ எனப்படும்.

    இந்த நிலை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும்.

    இந்தச் சுழற்சி மீண்டும் முதலிலிருந்து தொடங்கும்.
    தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகம் மற்றும் சினைப்பை புற்றுநோய் வருவது பெருமளவு குறைகிறது என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
    தாய்மை வரம் என்றால், தாய்ப்பால் வரப்பிரசாதம். சுகப்பிரசவம் என்றால் அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பால் புகட்ட வேண்டும். பிறக்கும் குழந்தைகளில் 55 சதவிகித குழந்தைகளுக்கு மட்டும்தான் முதல் ஆறு மாதத்துக்கு தாயிடம் இருந்து முழுமையாக பால் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 6 மாதங்களுக்குப் பிறகு திட உணவோடு, தாய்ப்பாலும் குடிக்கும் குழந்தைகள்  52.6 சதவிதத்தில் இருந்து 42.7 சதவிகிதமாக குறைந்துள்ளார்கள் என்பது வேதனையான விஷயம்.

    'குழந்தை பிறந்தவுடனேயே தாய்க்கு இயற்கையாக பால் சுரப்பு தொடங்கிவிடும். முதலில் வெளியேறும் மஞ்சள் நிற சீம்பாலை பலர் குழந்தைகளுக்குத் தருவதைத் தவறவிட்டு விடுகிறார்கள். இது தவறு. சீம்பாலில்தான் கொலஸ்ட்ரம் எனப்படும், குழந்தைக்கு எதிர்ப்புசக்தியை அளிக்கும் ஆற்றல் அதிகளவில் உள்ளது. ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.

    அதற்காகத்தான் அரசு, தனியார் நிறுவனங்களில் ஆறு மாதகால பேறுகால விடுப்பு அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பலர் வேலைக்குச் சென்றவுடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகின்றனர். வேலைக்குச் சென்றால்கூட பிரஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம். வேலை நேரம் தவிர, மற்ற நேரங்களில் குறைந்தபட்சம் ஓர் ஆண்டில் இருந்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை தாய் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.



    செயற்கைப் பால் பவுடர் பயன்படுத்தும்போது குழந்தைக்கு செரிமானக் கோளாறுகள், அதைப் புகட்டும் பாட்டில்களால் தொற்றுகள் என பல பிரச்னைகள் ஏற்படும். தாய் தன் சுத்தத்துடன் குழந்தைக்குப் பாலூட்டுவதன் மூலம் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு உட்பட பல்வேறு நோய்களில் இருந்து குழந்தையைக் காப்பாற்ற முடியும். தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம் பல பெண்களுக்கு கர்ப்பத்தடைக்கான நாள்களாக இருப்பதுவும் நடைமுறை உண்மை. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகம் மற்றும் சினைப்பை புற்றுநோய் வருவது பெருமளவு குறைகிறது என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  

    தாய்ப்பால் கொடுப்பது என்பதை பெண்கள் கடமைக்காகச் செய்யாமல் முழு மனதோடு, கவனச்சிதறல் இல்லாமல், சரியான பொசிஷனில் அமர்ந்து தரவேண்டும். தாய்க்கும், சேய்க்கும் பாசப்பிணைப்பை பலப்படுத்துவது  தாய்ப்பால். சில காரணங்களால் மிகச் சில பெண்களைத் தவிர, எல்லா பெண்களுக்கும் தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருக்கும்.

    அந்தப் பெண்கள், ரத்தவங்கிபோல இப்போது மருத்துவமனைகளில் செயல்படும் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை நாடி குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்கச் செய்யலாம். மற்ற பெண்கள் அனைவரும், தாய்ப்பால் சுரப்புக்கான  பிரத்யேக, ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொண்டு, நிச்சயம் பாலூட்ட வேண்டும். அன்பு, கல்வி, சொத்து என நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் தரவிருக்கிற எல்லா பரிசைகளையும்விட அவசியமானது, இணையில்லாதது தாய்ப்பால்!"
    ஒரு பெண் தான் கருத்தரிப்பது பற்றி அறிந்ததும், ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும்.
    ஒவ்வொரு பிரசவ காலமும் புத்தம் புதிய பொறுப்புக்களை ஒரு பெண்ணுக்கு கொடுக்கும். ஒரு தாய் தமது உடல் நலத்தில் விழிப்பாக இருந்து அதிக கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். அதனால் மட்டுமே கருவில் இருக்கும் குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கும். மேலும் மற்ற பிரசவ பிரச்சனைகளிலிருந்து தம்மை காக்கவும் உதவும்...

    ஒரு பெண் தான் கருத்தரிப்பது பற்றி அறிந்ததும், ஒரு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும். அவர்களிடம் இருந்து கர்ப்பக்காலங்களில் தாம் உட்கொள்ளவேண்டிய உணவு மற்றும் மேற்கொள்ளவேண்டிய உடற்பயிற்சி போன்றவற்றை அறிந்து கொள்ளவேண்டும்.

    கர்ப்பகாலங்களில் ஒரு பெண் உண்ணும் உணவு இரு உயிர்களுக்கு சென்றடைகிறது. ஆதலால் ஒரு தாய் தமக்கும், கருவில் இருக்கும் சிசுவிற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராத உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.



    ஊட்டச்சத்து உள்ள உணவை உண்பது மட்டும் இல்லாமல் நல்ல தூக்கமும் தாய் மற்றும் சேய் இருவரின் நலனை அதிகரிக்கும்.தாயின் நல்ல ஓய்வு வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இரவில் சராசரியாக 7-8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். மதிய நேரங்களில் ஒரு குட்டி தூக்கம் அவசியம். தினம் தூங்குவதற்கான அட்டவணை மாறாமல் இருப்பது நல்ல தூக்கத்தை மேம்படுத்தும். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவது சரியான வழி இல்லை. கர்ப்பிணி பெண்கள் பொதுவாக இடது பக்கம் உறங்குவதையே மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உறங்குவதற்கு முன் ஒரு சிறிய நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    பிரசவத்திற்கு முன் ஒரு பெண் தனது வயதிற்கும், உயரத்திற்கும் ஏற்ற சரியான எடை உள்ளவறென்றால், பிரசவ காலத்தில் 12-15 கிலோ அதிகமாக இருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். இரட்டை குழந்தை பெறுபவருக்கு இது மாறுபடும்.

    உடல் தளர்வாக காணப்படும் நேரத்தில் மகிழ்ச்சி தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட்டு உடல் தளர்ச்சியை மனதிற்கு கொண்டு போகாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலையும், குழந்தையின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்துடன் காப்பது அவசியம். மனதளவில் தன்னம்பிக்கையோடு இருப்பது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம். உங்கள் வீட்டின் புது வரவை எண்ணி மகிழ்ச்சியாய் இருங்கள்..
    உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
    குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை..

    திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 _40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20_25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர்.

    15_20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும். திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை உண்டாகாமல் இருந்தால்தான் தம்பதிகளில் யாருக்கேனும் பிரச்சனை இருக்கமுடியும் என்று நம்மால் சொல்லமுடியும். ஒவ்வொரு தம்பதிக்கும் அவரவர் சூழல் வேறுபடும்.

    சிலர் முப்பது வயது போல திருமணம் முடித்திருக்கலாம். இவர்களுக்கு குழந்தை விஷயம் தள்ளிப்போனால் இரண்டு மூன்று வருடம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. இது உடனே கவனிக்கப்படவேண்டிய விஷயமாகிவிடும்.

    சிலருக்கு இருபத்தியிரண்டு, இருபத்துமூன்று வயதிலேயே திருமணமாகலாம். ஆனால் குடும்பத்தாரின் நச்சரிப்பு இந்தத் தம்பதிக்கு அதிகமாக இருக்கும். வயது காரணமாக இவர்கள் இன்னும் சில காலம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றாலும், குடும்பக் கட்டாயத்தின் பேரில் அவர்கள் உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்துவிட நேரலாம். அதனால் சூழல் என்பது அவரவர்க்கு ஏற்றபடி மாறுபடும். அவரவருடைய குடும்பச்சூழல் மற்றும் தேவைப்படி மருத்துவர்கள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பார்கள்.



    எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?…

    சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம்.

    முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருத்தரிப்பு ஏற்படும். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.

    கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.

    சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருத்தரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

    சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

    சில குடும்பங்களில் கூட்டுக் குடும்பமாக இருப்பார்கள். அதுபோன்ற சூழலில் தம்பதியரின் நெருக்கம் சற்றே குறைய வாய்ப்புள்ளது. அதனாலும் குழந்தைபேறு தள்ளிப் போகலாம்.

    சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம்.

    இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.
    தாம்பத்திய வாழ்க்கையை மீண்டும் துளிர்க்கவைக்க ஐந்து விதமான கட்டளைகளை பாலியல் நிபுணர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    திருமணம் முடிந்த ஒருசில ஆண்டுகளிலேயே பல தம்பதிகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை சலிப்பாகிவிடுகிறது. அந்த சலிப்பு அவர்களது தாம்பத்திய ஆசைகளுக்கு போடப்படும் அதிரடிப்பூட்டாகிவிடுகிறது. அந்த பூட்டு போடப்பட்டுவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கத் தொடங்கிவிடுகின்றன. அடிக்கடி வாக்குவாதங்களை ஏற்படுத்தி, தேவையில்லாமல் முட்டிமோதிக்கொள்கிறார்கள். சில நேரங்களில் அது தவறான தொடர்புகளுக்கும், சந்தேகங்களுக்கும்கூட காரணமாக அமைந்துவிடுகிறது.

    சலிக்கும் தாம்பத்திய உறவை, மீண்டும் புது உற்சாகத்துடன் அனுபவிக்க ஆய்வு ரீதியில் ‘செக்ஸ் உணர்வு மீட்பு சிகிச்சை’ உருவாக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் சுமார் 60 சதவீதம் தம்பதியரின் தாம்பத்திய வாழ்க்கை சலிப்பாகவே செல்வதாக தெரிய வந்துள்ளது. அவர்களின் படுக்கை ஒன்றாக இருந்தாலும் அவர்களிடையேயான இடைவெளி தூரமாக உள்ளது. அதற்கு திருப்தியின்மையும், இணையின் மீதான சலிப்பும்தான் முக்கிய காரணங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்களுக்குள் தாம்பத்திய தொடர்பு இடைவெளி அதிகம் விழுகிறது. வேலைப்பளு, அதனால் ஏற்படும் உடல்சோர்வு மற்றும் மன அழுத்தம், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவையும் செக்ஸின் மீதான நாட்டத்தை குறைத்துவிடும். சில நேரங்களில் அது அரைகுறை விருப்பத்துடனான உறவாகிவிடும். அத்தகைய உறவு கொள்பவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாணியில், சில நிமிடங்களில் உறவை முடித்துக்கொண்டு உறங்கச் செல்வதிலே குறிக்கோளாக இருப்பார்கள். இத்தகைய உறவு, விரைவாகவே அந்த தம்பதிகளை சலிப்பு நிலைக்கு கொண்டு சென்று விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.



    தாம்பத்திய வாழ்க்கையை மீண்டும் துளிர்க்கவைக்க ஐந்து விதமான கட்டளைகளை பாலியல் நிபுணர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.

    முதலில் கண்டவற்றையும் விருப்பம்போல உண்பதற்கு தடைபோடுகிறார்கள். அவசியமானவற்றை அளவாக சாப்பிட வேண்டும். தேவையான நேரத்தில் உண்ணாவிரதம் கடைப்பிடித்து உடலை சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். இது பலவிதங்களில் உடலை உறவுக்கு தயார்படுத்தும் என்கிறார்கள்.

    இரண்டாவதாக, துணைவருடன் செக்ஸ் தொடர்பான விருப்பங்களை மனம் திறந்து பேச வேண்டுமாம். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான முறையான தொடர்பே ‘செக்ஸ்’ என்பதை புரிந்துகொண்டு, இணையின் விருப்பத்துக்கு ஈடுகொடுத்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள்.

    மூன்றாவதாக தேவையற்ற கவலை, மன அழுத்தம், பொருளாதார சிக்கல் போன்றவற்றை உறவு நேரத்தில் தள்ளிவைக்க வேண்டுமாம். தனிப்பட்ட வெறுப்பு கலந்த விவாதங்களும் அந்த நேரத்தில் தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

    நான்காவதாக,தேவைப்பட்டால் உறவுக்குத் தேவையான உடல்திறனை அதிகரிக்க மருத்துவ ஆலோசனையையும், மனநல ஆலோசனையையும் பெற வற்புறுத்துகிறார்கள்.

    ஐந்தாவதாக, குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். கணவரைவிட்டு மனைவியோ- மனைவியை விட்டு கணவரோ குறைந்தபட்சம் ஒருமாதம் பிரிந்திருந்தால், அது அவர்களிடையே தாம்பத்திய ஆர்வத்தை மேம்படுத்தும் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த இடைவெளி அவர்களுக் குள் ஏக்கத்தை உருவாக்கி, அதுவரை இருந்த கசப்புகளை எல்லாம் காணாமல் போக்கடித்து விடுகிறதாம்.

    இந்த ஐந்து விஷயங்களால் உடல்- மன அளவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன தெரியுமா?

    உணவுப் பழக்க வழக்கத்தையும், மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளையும் பின்பற்றும்போது உடல் ஆரோக்கியம் அதிகரித்து உறவுக்கு தயாராகும். இதனால் நீண்ட நேர இன்பம் சாத்தியமாகும். துணையுடன் மனம்விட்டு விருப்பத்தை பகிர்தல், அதன்படி உறவு கொள்வது, கவலைகளை ஓரம்கட்டிவைத்துவிட்டு உறவுக்கு தயாராவது போன்றவை உணர்ச்சிப்பூர்வமான உறவுக்கு கைகொடுக்கும்.

    உற்சாகமான உறவு உச்சத்தையும், இன்பத்தையும் வாரி வழங்கும். தம்பதிகளுக்குள் ஒரு மாத இடைவெளியை ஏற் படுத்துவது அவர்களுக்குள் தாம்பத்திய வேட்கையை அதிகரிக்கும். உறவைத் தூண்டும் ஹார்மோன் களான டெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரோன், ஆக்சிடாசின் மற்றும் வாசோபிரெசின் போன்றவற்றை நன்கு சுரக்கச் செய்யும். துரிதமான ஹார்மோன் சுரப்பானது உணர்ச்சிகளை மொத்தமாகத் தூண்டக்கூடியது. இதன் மூலம் உறவு இனிமையாகும்.
    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயை சந்திக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு சுமை தங்களையும் தங்களின் குழந்தையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
    கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோயை சந்திக்கும் பெண்களுக்கு இரட்டிப்பு சுமை தங்களையும் தங்களின் குழந்தையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய், எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். இதனால் பிரசவத்தின் போது பிரச்சனைகள் உண்டாகும்.

    கர்ப்ப கால சர்க்கரை நோய்களில் இரண்டு வகை இருக்கிறது ஒன்று கெஸ்டேஸ்னல் டயப்பட்டீஸ் மெல்லிடஸ் (Gestational Diabetes Mellitus). பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இந்த வகை சர்க்கரை நோயே ஏற்படும். உடலில் குளூக்கோஸ் தாங்கும் திறன் குறைவதால் இது ஏற்படுகிறது.

    Pre-gestational diabetes எனப்படுவது ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து அல்லது ப்ரீ டயப்பட்டீஸ் அறிகுறிகள் இருக்கும் பெண்களுக்கு வருகின்ற சர்க்கரை நோய். இது சிலசமயங்களில் பிரசவத்தையே சிக்கலாக்கிடும். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைபாடு கூட உண்டாக்க கூடும். குறிப்பாக 25 வயதிற்கு பிறகு கர்ப்பம் தரிப்பவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், குடும்ப பின்னணியில் சர்க்கரை நோய் கொண்டவர்கள் இந்த சிக்கலில் சிக்குகிறார்கள்.



    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ப்ளாஸ்மா குளுக்கோஸ் டெஸ்ட் எனப்படும் இந்த சோதனையில் 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணக்கிடப்படும். அதில் 140 மில்லி கிராம் இருந்தால் கர்ப்ப கால சர்க்கரை நோய் 80 சதவீதம் உறுதி செய்யப்படும். இதே 130 மில்லி கிராம் என்றால் 90 சதவீதம் உறுதி. பாதிப்பு 90 சதவீதம் இருந்தால் மட்டுமே உங்களுக்கு பாதிப்பு தெரிய வரும்.

    கர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் அதிக ப்ரோட்டீன் கலந்திருப்பது, பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்த போக்கு, எடை கூடுதல், கரு கலைதல், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுதல், இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படுதல், ஏற்கனவே பிரச்சனை இருந்தால் அது தீவிரமாகி பிரசவ மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

    பிறப்பில் உண்டாகும் வளர்ச்சிக் குறைபாடுகள், குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது, குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாக இருப்பது, மஞ்சள் காமாலை, சத்துக்குறைபாடு,குறை பிரசவம், சீரான இதயத்துடிப்பு இல்லாமல் இருப்பது போன்ற பல சிக்கல்களை உருவாக்கிடும்.

    சர்க்கரை நோய் வராமல் தடுக்கப்போகிறேன் என்று சர்க்கரை நாமாகவே குறைக்க கூடாது. கர்ப்பகால சர்க்கரை நோயினை நாம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த சர்க்கரை அளவு குறைந்தாலும் பிரச்சனை தான். ஹைப்போக்ளைசமிக் எனப்படும் இந்நோய் தாயையும் குழந்தையையும் பாதிக்கும்.
    உண்மையில் ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை, மூளையும் வித்தியாசப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள் தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது.

    இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

    பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழி வளத்துக்கானது. இது வார்த்தைகளையும், உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.



    ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் விவரித்து, கொஞ்சம் வளவளவென்று இழுத்து கூற முடிவதில்லை. ஒரு ஆண், தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

    அவளுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றி சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே காதலிக்கும் போதும், திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்.

    ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது பாலியல் தேவைகளை பெண் புரிந்துகொள்ளவே இல்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மண வாழ்க்கையிலும், காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்தல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
    பெண்கள் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பாலை அதிகரிப்பது, சரியான உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
    பெண்கள் கர்ப்பகாலத்தில், குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆனால் குழந்தை பிறந்த பின்னர் தங்களை பற்றி கவலைப்படுவதே கிடையாது. உண்மையில் கர்ப்பகாலத்தை விட குழந்தை பிறந்த பின்னர் தான் தாய்க்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. தாய்ப்பாலை அதிகரிப்பது, சரியான உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

    குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டியது அவசியம். எனவே தாய் சத்தான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். தாய்ப்பால் சுரப்பிற்காக முன்பை விட கூடுதலாக 300 முதல் 500 கலோரிகள் அதிமாக உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    நன்றாக சாப்பிட வேண்டும் என்பதற்காக நீங்கள் கண்டதையும் சாப்பிடக்கூடாது. உங்களுக்கு வீட்டில் உள்ள நெறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற தோன்றினால், அவற்றை வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களை சுற்றி சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே இருக்கும் விதம் பார்த்துக்கொள்ளுங்கள்.



    பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை உடல் எடை தான். இதற்கு சிறந்த தீர்வு என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பது தான். தாய்ப்பால் கொடுப்பதனால், உடலில் உள்ள கலோரிகள் குறைக்கப்பட்டு உங்களது உடல் எடை நாளடைவில் கட்டுக்குள் வந்துவிடும்.

    கர்ப்பகாலத்தில், பிரசவம் நல்ல முறையில் நடக்க மருத்துவர் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய கூறியிருப்பார். அதனை பிரசவத்திற்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். தினமும் காலை, மாலை என இருவேளைகள் நடைப்பயிற்சி மேற்க்கொள்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

    எப்போதும் ஒரே வகையான காய்கறிகளை மட்டுமே சாப்பிடாமல், வகைவகையாக சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும். கீரைகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என அனைத்தும் உங்களது உணவில் இருக்க வேண்டியது அவசியம்.
    ×