என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    குழந்தைக்கு கொடுப்பதில் தாய்ப்பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள சத்துக்களின் வித்தியாசத்தைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இவ்வுலகில் வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது.

    ‘தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தாலே, விட்டமின் மருந்துகள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அந்தளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது இந்த உயிர்ப்பால். தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.

    தாய்ப்பால் :

    * தாய்ப்பால் ஓர் இயற்கை உணவு.
    * இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து.
    * தாய்ப்பால் அருந்துவதால், குழந்தை உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.
    * சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது.
    * வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும். 



    புட்டிப்பால் :

    * பசும்பால் மற்றும் பவுடர் இரண்டும் செயற்கை உணவுகளே. தாய்ப்பால் தரவல்ல தரமும், சத்தும், பாதுகாப்பும் இதில் இருக்காது.  

    * பசும்பால் அல்லது பால் பவுடரை கொதிக்க வைத்து, பாட்டில் மற்றும் ரப்பரை சுத்தமாகக் கழுவி, வெதுவெதுப்பான சூடுநீரில் சுத்தப்படுத்தி, அதன் பிறகு டப்பாவில் பால் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது, என இந்தச் செய்முறைகளில் ஏதேனும் சுகாதாரக் குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும். மேலும், இவற்றை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகம். அதற்குள், குழந்தையின் பசியும் அழுகையும் அதிகமாகி விடும்.   

    * புட்டிப்பால் குழந்தையின் செரிமானத்தைத் தாமதப்படுத்தும்.

    * பால் பவுடர் டப்பாவின் காலாவதி தேதியைச் சரிபார்க்காமல் கொடுப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

    சில பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காமல், அல்லது குறுகிய காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுவார்கள். சிலருக்கு அழகு பற்றிய எண்ணம் இருக்காது. ஆனால், தாய்ப்பால் கொடுக்க அலுப்பு, தூக்கத்தில் எழ சோம்பேறித்தனம் போன்ற காரணங்களால் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பார்கள்.

    தாய்ப்பாலால் குழந்தைக்குக் கிடைக்கும் இணையற்ற நோய் எதிர்ப்பு சக்தி, சத்துக்கள், சீரான உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைவிட, அழகும், அலுப்பும் முக்கியத்துவம் பெற்று விடுமா என்பதை ஒருகணம் சிந்தித்தால், குறைந்தது 6 மாதம், அதிகபட்சம் 1 வயதுவரை தங்கள் குழந்தைக்குப் பாலூட்ட தாய்மார்கள் உறுதியேற்று விடுவார்கள்.

    கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது போன்ற பிரச்னைகளுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பார்க்கலாம்.
    கர்ப்ப காலத்தில் முகம் முழுக்க கரும்புள்ளிகள் தோன்றுவது, முடி உதிர்வது, சருமம் வறண்டு போவது என புற அழகு சார்ந்த பிரச்னைகளும் சகஜம். அழகு விஷயத்தில் அக்கறை காட்டும் பெண்களுக்கு இவை கவலையைத் தரலாம். இந்த அழகு பிரச்னைகளுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பார்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் உண்டாகிற ஹார்மோன் மாற்றங்களால் கொழுப்புக் கட்டிகள் வருவதுண்டு. ஹார்மோன் அதிகம் சுரப்பதால் சீபம் என்கிற எண்ணெய் பசைச் சுரப்பிகள் தூண்டப்பட்டு எண்ணெய் பசையும் அதிகரிக்கும். எல்லோருடைய சரும அமைப்பும் ஒரே  மாதிரியான தன்மை கொண்டதல்ல. எனவே எல்லோருக்கும் கர்ப்ப காலத்தில் பருக்கள் வரும் என்று அர்த்தமில்லை. கர்ப்ப காலத்தில் திடீரென கிளம்புகிற பருக்கள், தற்காலிக மானவையே. வந்த வேகத்தில் மறைந்து விடும் என்பதால் கவலை வேண்டாம். மருத்துவரைப் பார்த்து, அலர்ஜி ஏற்படுத்தாத கிரீம் ஏதேனும் உபயோகிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் மெலனினை தூண்டும் ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் நிறமாற்றங்கள் உண்டாவது இயல்பு. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனும் அதிகமாகச் சுரக்கும். முகமும் அழகாகும். கூடவே திருஷ்டி பொட்டு மாதிரி ஆங்காங்கே மங்கும் வரும். இந்தப் பிரச்னையை கர்ப்ப கால முகமூடி என்றுகூட சொல்வதுண்டு. மற்ற பிரச்னைகளைப் போலவே இதுவும் பிரசவமானதும் தானாக மறைந்து  விடும். சிலர் இந்த மங்கைப் பார்த்ததும் பயந்து பியூட்டி பார்லர் போய் கெமிக்கல் பீலிங் போன்ற சிகிச்சைகளை செய்வதுண்டு. அவையெல்லாம் மிக ஆபத்தானவை.

    எல்லா கர்ப்பிணிகளும் சந்திக்கிற பிரச்சனை வயிறு, மார்பகங்கள், தொடைகள் என உடல் முழுவதும் அரிப்பும், கோடுகளும் வருவது. மடிப்புத் தசைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கு அரிப்பும் இருக்கும். தவிர கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிப்பதாலும் அரிப்பு பிரச்சனை இருக்கும். அரிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளை சுத்தமாகவும் வியர்வையோ, ஈரமோ இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமு கொப்புளங்கள் உருவாவதைத் தவிர்க்கலாம்.



    நைலான் உள்ளாடை மற்றும் உடைகளைத் தவிர்த்து காட்டன் உடைகளை அணிவது சிறந்தது.கர்ப்ப காலத்தில் வயிற்றில் கோடுகள் தோன்றுவதும் இயல்பானதுதான். சருமம் விரிவடைவதே காரணம். சில பெண்களுக்கு பிரசவமானதும் இது ஓரளவு மறைந்துவிடும். ஒருசிலருக்கு நிரந்தரமாகத் தங்கி விடுவதும் உண்டு. வரிகளை மறைக்க இப்போது கிரீம்கள், லோஷன்கள் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உபயோகிக்கலாம்.

    கர்ப்ப காலத்தில் திடீரென கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பது எல்லா கர்ப்பிணிகளுக்கும் நடப்பதுதான். வளரும் நிலையில் உள்ள முடிகள் எல்லாம் ஹார்மோன்களின் தூண்டுதல் காரணமாக வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும். பிரசவமானதும் நீங்கள் பயப்படும் அளவுக்கு முடி உதிர்வு அதிகமாகும். இந்த இரண்டுமே தற்காலிகமானவைதான் என்பதால் கலக்கம் வேண்டாம். பிரசவத்துக்குப் பிறகு ஒருவரது உடல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முடி உதிர்வும், வளர்ச்சியும் சீராகும்.

    கர்ப்ப காலத்தில் கால் நரம்புகள் சுருண்டும், நீல நிறத்திலும் காட்சியளிக்கும். இதை வெரிக்கோஸ் வெயின்ஸ் என்கிறோம். இது சிலருக்குப் பரம்பரையாகத் தொடரும். குழந்தையின் தலைப்பகுதி பெரிதாகும் போது திரவங்கள் அதிகமாவதால் நாளங்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் அங்கு ரத்தத் தேக்கம் உண்டாகி வீக்கத்தைக் கொடுக்கும்.

    இந்த நாளங்கள் சருமத்தின் மேற்பகுதியில் இருப்பதால் நீலநிறமாகக் காணப்படும். கால் வலியும் அதிகமாக இருக்கும். நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்ப்பது, கால்களை உயரத்தில் வைத்தபடி ஓய்வெடுப்பது போன்றவை இதமளிக்கும்.பிரசவத்துக்குப் பிறகு இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். ஒருவேளை பிறகும் தொடர்ந்தால் ரத்த நாள நரம்பு சிகிச்சை நிபுணரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் புளித்த ஏப்பத்தை உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை வைத்து எப்படி விரட்டுவது என்பது பற்றி காணலாம்.
    நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம் ஆகிய இரண்டுமே கர்ப்பிணி பெண்களை அச்சுறுத்தும் ஒரு விஷயமாகும். இந்த புளிப்பு ஏப்பத்திற்கு அதிகமாக மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் சிரமமாக இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தை வைத்து இந்த புளித்த ஏப்பத்தை எப்படி விரட்டுவது என்பது பற்றி காணலாம்.

    சாப்பாட்டு விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுதல், அதிக கொழுப்பு உள்ள உணவுகளையும், செரிமானமாக கடினமாக உள்ள உணவுகளையும் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    என்ன தான் இருந்தாலும், கர்ப்பமாக உள்ள சமயத்தில் டயட்டை கடைப்பிடிப்பது பலருக்கு கடிமானதாக தான் இருக்கும். கர்ப்பத்தின் இரண்டாவது பருவகாலத்தில் எதை சாப்பிட்டாலும் புளித்த ஏப்பம் வரும். இதற்கு மருத்துவரும் மருந்துகளை பரிந்துரைப்பார்.



    சாப்பிட்ட பிறகு இந்த புளித்த ஏப்பம் வராமல் இருக்க, மாத்திரைகளை சாப்பிட்டாலும் கூட அது அந்த சமயத்தில் மட்டும் சரியாகும். அதன் பின்னர் மீண்டும் ஆரம்பித்துவிடும்.

    ஒரு டம்ளர் குளிர்ந்த பாலை குடித்தால், புளித்த ஏப்பம் தீர்ந்து போகும் அல்லவா? அதே போல தான் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாலும் புளித்த ஏப்ப பிரச்சனை தீர்ந்துவிடுகிறது. இது உங்களது செரிமான மண்டலத்தை குளிர்ச்சியடைய செய்கிறது. வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்ற ஐஸ்கிரீம்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த கலோரிகளை கொண்டது. இது கொழுப்பு நீக்கப்பட்டதும் கூட..

    ஆனால் இந்த ஐஸ்கிரீமை தினமும் சாப்பிடுவது சிறந்ததல்ல. எப்போதாவது சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்றால் சாப்பிட்ட பிறகு யோகார்ட் சாப்பிடலாம்.

    இந்த முறையை கடைப்பிடிப்பதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். இது கர்ப்பகாலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் செய்ய கூடாது.
    பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியே பல மணி நேரம் செலவிட வேண்டிய பெண்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.
    ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் 15,000 நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார் என்கிறது ஓர் ஆய்வு. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது.

    ‘’பொருத்தமில்லாத அளவில் நாப்கினைப் பயன்படுத்துவதால், 80 சதவிகிதம் பெண்கள் கறைபடும் பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். மாதவிடாய் நாள்களின் உதிரப்போக்குக்கு ஏற்பவும் ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்பவும் நாப்கின்கள் மீடியம், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப் பல அளவுகளிலும் பேக், ஃப்ரன்ட் கவரேஜ் எனப் பல வகைகளிலும் வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணும் இதில் தன் தேவை என்ன என்பதன் அடிப்படையில் நாப்கின் வாங்குவது நல்லது.

    உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் முதல் மூன்று நாள்களுக்கு மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்த எக்ஸ்எல் சைஸ் நாப்கின்கள், உதிரப்போக்குக் குறையத் தொடங்கும் நான்கு, ஐந்தாவது நாள்களில் மீடியம்/லார்ஜ் சைஸ் நாப்கின்கள் எனப் பயன்படுத்தலாம். அதேபோல, மெனோபாஸை எதிர்கொள்ளும் பெண்களும் தேவையைப் பொறுத்து எக்ஸ்எல் நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.



    பிரசவ நேரத்தில் அந்நாள்களின் அசௌகர்யங்களைக் கருத்தில்கொண்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும், நீளமும் அடர்த்தியும் அதிகம்கொண்ட ‘மெட்டர்னிட்டி பேடு’ பயன்படுத்தலாம். இதை மருத்துவமனையிலேயே வழங்குவார்கள். ஒவ்வொரு பெண்ணின் உடலைப் பொறுத்தும் குறிப்பிட்ட ரக நாப்கின் ஆற்றும் வினை மாறுபடலாம்.

    எனவே, மாதவிடாய் நாள்களில் ஒவ்வாமை, கட்டி என்று அவதிப்படும் பெண்கள், வேறு வகை நாப்கின்களைப் பயன்படுத்திப் பார்க்கலாம். எளிமையான காட்டன் பேடுகள், ஹெர்பல் நாப்கின்களைத் தேர்ந்தெடுக்கலாம். இன்று துணியினாலான ரெடிமேடு நாப்கின்களும் கிடைக்கின்றன. குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

    பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியே பல மணி நேரம் செலவிட வேண்டிய பெண்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் நாப்கின்களைப் பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பொழுதுகளில், உதிரப்போக்குக் குறையும் நான்காவது, ஐந்தாவது நாட்களில் எல்லாம் மேற்கூறிய வகை நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.
    ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    ஆண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும், பெண்களின் செக்ஸ் தூண்டுதலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உடலளவிலும் மன அளவிலும் கூட மாறுபாடுகள் உண்டு. ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி உடனடியாக வந்துவிடும். பெண்களுக்கு தம் பிரியாணி போல செக்ஸ் உணர்ச்சி வருவதற்கு நேரமாகும். வந்தால் நீடித்த நேரம் இருக்கும்.

    உணர்ச்சி வசப்படுவதிலும் வித்தியாசம் இருக்கிறது. உலக அளவில் நடந்த ஆராய்ச்சியில் ஆண்கள் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதிக பட்சம் 30 நொடிகளில் தயாராகிவிடுகிறார்கள். பெண்களுக்கு செக்ஸ் உணர்வு ஏற்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடம் தேவை. ஒரு மாட்டு வண்டி நகர வேண்டும் என்றால் இரு மாடுகளும் இழுக்க வேண்டும்.

    ஒரு மாடு சரியாக இழுக்கவில்லை எனில் வண்டி நகராது. அது போலத்தான் செக்ஸ் உணர்வும். இருவரும் சரியாக இயங்கினால்தான் செக்ஸ் வாழ்க்கை சுகமாக அமையும். மனைவியை தயார்படுத்த கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டும். முத்தம், லேசான தடவுதல் போன்ற இதமான செயல்களை செய்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்.



    மனைவிக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் பேச வேண்டும். எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். பிடிக்காத விஷயங்களை பேசினால் மனைவியின் மனநிலை மாறி அன்று செக்ஸ் நடக்காமல் போக வாய்ப்புண்டு. ஆண்கள் ஓர் உணர்வில் இருந்து அடுத்த உணர்வுக்கு எளிதாக மாறிவிடுவார்கள்.

    பெண்களின் உணர்வுநிலையை மாற்றுவது கடினம். அன்று அவர்கள் வருத்தப்படும்படி நடந்து கொண்டால் நாள் முழுவதும் அவர்களின் மனதில் அந்த வருத்தமானது இருக்கும். காலையில் மனைவியை திட்டிவிட்டு, இரவில் ‘படுக்கைக்கு வா’ என்றால் காரியம் நடக்குமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஜனன உறுப்பைக் கொண்டு செய்வது மட்டும் செக்ஸ் என நினைத்திருப்பவர்கள் அதிகம்.

    செக்ஸுக்கு முன்னும் பின்னும் பல விஷயங்களும் மனநிலைகளும் உண்டு. எல்லாம் சேர்ந்ததுதான் மன்மதக்கலை. மற்றவர்களுக்குத் தெரியாமலே மனநிலையை அறிந்து கொள்ள தம்பதி இருவரும் செக்ஸ் சிக்னல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனைவி விருப்பத்தில் உள்ளாரா? இல்லையா? இதைத் தெரிந்துகொள்ள சிக்னல்கள் உதவும்.

    மனைவிக்கு சில நேரம் செக்சில் விருப்பம் இல்லையெனில், புரிந்து கொண்டு தள்ளி இருப்பது நல்லது. கட்டாயப்படுத்தி உறவு கொள்ள நினைக்கக் கூடாது. தம்பதி இடையே தகவல் பரிமாற்றம் எளிதாகவும் சுமுகமாகவும் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையை எந்தப் பிரச்னையும் இன்றி சுகமாக அனுபவிக்கலாம்.
    பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.
    உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்று முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற  ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பருவம் அடைகிறாள்.

    பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முடடையை வெளியிடுகின்றன. ஒரு பென் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

    கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.



    ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மொனோபாஸ்.

    இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.
    மனதால் இணைதல் தாம்பத்தியம், வெறும் உடலால் மட்டும் இணைதல் உடலுறவு. தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? உள்ள வித்தியாசத்தை என்று பார்க்கலாம்.
    ஆங்கிலத்தில் இன்டர்கோர்ஸ் என்பது பொதுச்சொல். இது போக இரு உடல் இணையும் உறவை லவ் மேக்கிங் மற்றும் ஹேவிங் செக்ஸ் என இரு சொல்லாடலில் கூறுவர். இதை நாம் தமிழில் தாம்பத்தியம் மற்றும் உடலுறவு என எடுத்துக் கொள்ளலாம்.

    மேலோட்டமாக காணும் போது, இரண்டிலும் வெறும் வாக்கிய, வார்த்தை வேற்றுமை மட்டுமே நாம் உணர முடியும். ஆனால், சற்று உற்று நோக்கினால், அதனுள் மனம், உணர்ச்சி சார்ந்த விஷயங்கள் புதைந்திருப்பதை நாம் அறிய முடியும்.

    அப்படி என்ன இந்த இரண்டுக்கும் மத்தியில் வேற்றுமை இருந்துவிட போகிறது என சிலர் எண்ணலாம். ஒருவேளை இதை படித்து முடித்த பிறகு, தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கும்? உடலுறவில் ஈடுபடுவதற்கும்? என்ன வித்தியாசம் என பிரித்து அறியும் நிலை உங்களுக்கு பிறக்கலாம்...

    சூழல் அமைந்து வரும் போது இணைவது தாம்பத்தியம். அது காதலின் வழியே கூடுதல். சூழலை அமைத்துக் கொண்டு கூடுதல் உடலுறவு, இச்சையின் வழியே கூடுதல் இது.

    ஒரு அழகான மாலை நேரம், தூரலில் நனைந்து வந்த பொழுதில் உடல் சிலிர்ப்பு காந்தமாய் ஈருடலை இணைக்க செய்வதாக இருக்காமல், வெற்றி, மகிழ்ச்சி, சோகம், என பல்வேறு உணர்ச்சி சூழலின் வெளிப்பாடாக அமையலாம், இது தாம்பத்தியம்.

    இருவர் கட்டித் தழுவுதலை கண்டு, இச்சை காட்சிகள் காண்பித்து, உடல் வருடி உரசி, தேகம் எனும் சதையை பிசைந்து சூழலை செயற்கையாக உண்டாக்கி இணையும் அனைத்துமே உடலுறவு தான்.

    மனதின் வழியே இணைந்து பிறகு கூடுதல் தாம்பத்தியம். உடலின் வழியே மட்டும் கூடி பிரிவது உடலுறவு.

    ஏதோ ஒரு உணர்ச்சி மனதை பிணைய செய்து, அதன் பால் கட்டிலில் ஆரத்தழுவி உடல் இணைவது தான் தாம்பத்தியம். சிற்றின்ப காரணத்திற்காக உடலை மட்டுமே இணைந்துக் கொள்வதன் பெயரே உடலுறவு.



    காதலின் வழியே இணைவது தாம்பத்தியம், இச்சையின் வழியே இணைவது உடலுறவு.

    ஒரு காட்சியில் துவங்கி, பிறகு இணைந்து அடுத்த காட்சிக்கு நகர்வது தாம்பத்தியம். உடல் இணைதல் மட்டுமே காட்சியாக அமைவது உடலுறவு.

    ஒரு சூழல் / காட்சி ஆண், பெண் மனதை இணைத்து, அதன் பால் நகர்ந்த சில காதல் காட்சிகளுக்கு பிறகு கூடுதல் தாம்பத்தியம். உடல் கூடுவதை மட்டுமே காட்சியின் ஆரம்பம் மற்றும் முடிவாக கொண்ட ஒற்றை காட்சி உடலுறவு.

    ஈருடல் இணைந்து பிணைய ஒரு ஆசை வரும், அது முடிந்தவுடன் ஆடை அணிந்து நகர்வது வெறும் உடலுறவே!

    பேசி மகிழ்ந்து, கூடி குலவிய பிறகு மீண்டும் பேசி மகிழ்தல் தாம்பத்தியம்.

    முடிவில் காதல் அடுத்த நிலைக்கு உயர்ந்திருந்தால்... மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிருந்தால், பாரமற்ற நிலையால் இரு உடல் நிலத்தில் மிதந்திருந்தால்.... அது தாம்பத்தியம்.

    எப்படியோ அனுபவித்தாயிற்று... அடுத்த வாய்ப்பு எப்போதோ, சூழல் எப்போது அமையுமோ என்ற எண்ணம் எள்ளளவு மனதை சூழ்ந்திருந்தாலும் அது வெறும் உடலுறவே.

    திருமணமான பலரும் உடலுறவில் மட்டுமே ஈடுபட்டு வரலாம்... திருமணம் செய்யாத காதலர் கூட தாம்பத்தியத்தில் ஈடுப்பட்டு வரலாம்.

    மனதால் இணைதல் தாம்பத்தியம், வெறும் உடலால் மட்டும் இணைதல் உடலுறவு.

    பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்த நோய் 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.
    பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம்.  பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.

    பொதுவாக எல்லா வகை புற்றுநோய்களிலுமே, வயது அதிகமாக அதிகமாகத்தான் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். அந்த வகையில் மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

    பாலூட்டாத பெண்கள் மார்பகப் புற்றுக்கு இலக்காகலாம். காரணம், பாலூட்டுவதால் புற்றுநோய்க்குக் காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். பாலூட்டும் காலம் முடியும்போது, டி.என்.ஏ சிதைவுக்கு உட்பட்ட மார்பகச் செல்கள் தாய் உடலில் இருந்து விடுபட்டிருக்கும். அவை எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    அதிவிரைவில் பூப்படைவது, புகை மற்றும் மது பழக்கம், உடல் பருமன், மரபியல் போன்றவை மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கலாம்.  பொதுவாக 10 முதல் 15 சதவிகித மார்பகப் புற்றுநோய் மரபியல் காரணமாக வருகிறது.



    மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.

    மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.

    மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.

    சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.
    நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
    இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகிதப் பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை: 65 சதவிகிதப் பெண்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால் அவற்றை வாங்குவதில்லை என்கின்றன ஆய்வு முடிகள்.

    நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

    நாப்கின்களில் மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு, உள்ளாடையில் ஒட்டுவதற்கேற்ப பசையுடன் இருக்கும். அதற்கு மேல் உள்ள அடுக்கானது, வறண்டு வலை போன்று இருக்கும். நடுவில் உள்ள அடுக்கு ‘பாலிமர் ஜெல்’ எனச் சொல்லப்படக் கூடிய பொருளினால் ஆனது. இந்த வேதிப்பொருளுக்கு உறிஞ்சும் தன்மை இருப்பதால், இதுதான் ரத்தத்தை உறிஞ்சி தன்னுள் தக்க வைத்துக்கொள்கிறது. சிலர் பாலிமர் ஜெல்லுக்கு பதிலாக ‘செல்லுலோஸ்’ என்ற மரக்கூழைப் பயன்படுத்தி நாப்கின் தயாரிக்கிறார்கள். இந்த வேதிப்பொருள்கள் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

    நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

    * மாதவிடாய் நாள்களில் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகமுள்ள நாள்களில் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றுவது நலம்.



    * துணியாக இருந்தால் சுத்தமான பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். உபயோகித்த துணிகளை, சோப்புப் போட்டு சுடுநீரில் அலசி வெயிலில் காய வைக்கவும். பிறகு, மடித்து ஒரு பையில் வைத்து காற்றோட்டமான இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.

    * காயவைத்த நாப்கின் துணிகளை அயர்ன் செய்வதும் கிருமிகள் பரவுவதைத் தடுக்கும். பாதுகாக்கப்பட்ட துணியாக இருந்தாலும் 2 அல்லது 3 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    சானிட்டரி நாப்கின்களினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அவற்றை எப்படித் தவிர்க்கலாம்?

    * பேடுகளில் உறிஞ்சி வைக்கப்படும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிகமிக அதிகம். எனவே, 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாகப் பேடுகளை மாற்றி விடுங்கள்.

    * நாப்கின்களால் தொற்று ஏற்பட்டு அதனால் பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர் வெளியேறும்போது வலி போன்றவை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நுண்ணுயிர்க்கொல்லி ஆயின்மென்ட்களை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். பிறப்புறுப்பின் வெளியே தடவும் மருந்துக்கும், உள்ளே தடவக் கூடிய மருந்துக்கும் வேறுபாடுகள் அதிகம். எனவே, இரண்டு மருந்துகளையும் கவனமாகப் பார்த்து உபயோகப்படுத்த வேண்டும்.

    * ஓர் அந்நியப் பொருளை உள்ளாடையில் வைத்திருக்கும்போது, அது தொடைகளை உரசுவதால் ஒரு சிலருக்குத் தொடைகளில் புண்கள் ஏற்படுதல், பிறப்புறுப்புப் பகுதி வறண்டு போவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கான ஆயின்மென்ட் தடவுவதன் மூலம் பாதிப்பிலிருந்து மீளலாம்.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். உங்கள் மாதவிடாய் நார்மலாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.

    அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)

    மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)

    சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.

    பயமுறுத்தும் பிசிஓடி (PCOD – PolyCystic Ovarian Syndrome)

    சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.

    வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)

    சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.



    கருக்கலைதல் (Miscarriage) கவலை

    சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.

    துர்நாற்றமா? கவனம் தேவை!

    மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.

    உறவுக்குப் பின் உதிரம்

    சிலருக்குத் தாம்பத்ய உறவுக்குப் பின்னர் ரத்தம் வெளியேறலாம். இது கர்ப்பவாயில் தொற்று அல்லது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் உடனடிப் பிரத்யேகப் பரிசோதனை, சிகிச்சை அவசியம்.

    மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரப்போக்கு


    மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
    பெண்களுக்கு முப்பது முப்பத்தி ஐந்து வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி நோய்கள் பெண்களுக்கு அதிகம் வருகிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
    பருவம் அடைதல், திருமணம், குழந்தைபேறு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக அதிகமான உதிரப் போக்கு, சுழற்சி தவறிய மாதவிடாய், திருமணத்திற்கு பின் ஏற்படும் தொடர்ச்சியான கருச்சிதைவு, குழந்தையின்மை, குழந்தைபேற்றுக்குப்பின் வரும் உடல் மாற்றம், அதிகப்படியான உடல் பருமன், மன அழுத்தம், நாற்பது வயதைத் தாண்டி வரும் இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) பிரச்சனை அதைத்தொடர்ந்து வரும் கர்ப்பப்பை பிரச்சனை, முதுகு வலி, முழங்கால் வலி என அனைத்திற்கும் யோகாவில் தீர்வு உண்டு.

    மின் இயந்திரங்களின் வருகைக்கு முன்பு, பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்ததால், துணி துவைப்பது, அம்மி ஆட்டுக்கல் கொண்டு உடலை அசைத்து வேலை செய்வது, கீழே அமர்ந்து காய்கறிகளை அரிவது என பல வேலைகளை செய்து வந்தனர். இவை அனைத்திலும் உடலுக்குத் தேவையான பயிற்சி கிடைத்தது. ஆனால் இன்று பெண்கள் படித்து, அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் சூழலில், வீட்டு வேலைகளில் பெரும்பாலும், உடல் உழைப்பு குறைந்து மின் இயந்திரங்களின் ஆதிக்கம் பெருகிவிட்டதால் உடல் அசைவுக்கென சில உடற்பயிற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன.

    பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்சனையாக உருவாகும். அடிக்கடி உருவாகும் தலைவலி மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்குக் கூட ஹார்மோன் சமநிலையின்மையே காரணம்.

    இதனால் முப்பது முப்பத்தி ஐந்து வயதிலே மூட்டு வலி மற்றும் முதுகு வலி நோய்கள் பெண்களுக்கு அதிகம் வருகிறது. சிலருக்கு அதிக உடல் எடை, முகச் சுருக்கம், முகப்பரு, வயது மூப்புத் தோற்றம் போன்றவையும் வருகிறது. 80% பெண்கள் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தினம் ஒரு முறையாவது கீழே உட்கார்ந்து எழ வேண்டும். மேலும் இன்டியன் டாய்லெட் பொஸிஸன் பயன்படுத்த வேண்டும். இதனால் இடுப்பு எலும்பு வலுப்பெறும்.



    நமது உணவு முறைகளும் இயற்கையானதாக இருத்தல் வேண்டும். உணவில் பச்சை நிற காய்கறி, பால், தயிர், முட்டை, மீன் போன்ற உணவுகளை தொடர்ச்சியாக சேர்க்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் சுழற்சி பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுதல் வேண்டும். கர்ப்பப்பையினை மாதாமாதம் சுத்தப்படுத்துவதே மாதவிடாய். 35 நாட்களுக்கு மேல் பீரியட்ஸ் வரவில்லை என்றால் கர்ப்பப்பை பிரச்சனை. மாதவிடாய் பிரச்சனையில் துவங்கும் இது குழந்தையின்மை பிரச்சனைவரை கொண்டு செல்லும்.

    நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் சுத்தமாக்க வழி உள்ளது. இதயம், வயிறு, கர்ப்பப்பை போன்றவற்றை வேலை செய்ய வைத்து சுத்தப்படுத்த அதற்கென சில யோகா பயிற்சிகள் உள்ளன. ஜிம்முக்கு போய் உடலை சரிபண்ணினால் வெளித்தோற்றம் மட்டும்தான் மாறும். ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டால் உடல் இரண்டு மடங்கு எடைபோடும். ஜிம்மில் உடலின் உள்உறுப்புகள் வேலைசெய்யாது.

    யோகா உள் உறுப்புடன் தொடர்புடையது. நம் உடல் எடை மெதுவாகக் குறையும். ஆனால் மறுபடி ஏறாது. தினம் ஒரு 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை செய்தால் போதும். இதனால் பெண்களுக்கு ஹார்மோன்கள் மூலம் வரும் சிக்கல்கள் சரியாகும். பீரியட்ஸ், குழந்தையின்மை, மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். இதனால் மன அழுத்தத்தில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறலாம். யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் முக அழகைக் கூட்டி, இளமையை தக்க வைக்க முடியும்.
    கருத்தரிப்பதில் தடை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இயற்கையில் பல வழிகள் உள்ளது.
    கருத்தரிப்பதில் தடை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இயற்கையில் பல வழிகள் உள்ளது.

    கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும், அதனால் குழந்தையின்மை பிரச்சனைகள் உண்டாகலாம்.

    அதிக மன அழுத்தத்தினால் சினைப்பை அடைப்பு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற காரணத்தினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

    கருமுட்டையானது சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பெண்களின் குழந்தையின்மைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

    தடுப்பது எப்படி?

    வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பை சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம் அல்லது வெள்ளைப்பூசணி சாறு எடுத்து குடிக்கலாம். ஆனால் கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.



    காலை உணவுக்கு முன் சோற்றுக் கற்றாழை சாற்றை எடுத்துக் கொள்ளலாம் அல்லது சித்த மருத்துவரின் பரிந்துரையில் தயாரித்த சோற்றுக் கற்றாழை லேகியம் சாப்பிடலாம்.

    வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் குடிக்க வேண்டும். பயறு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்வதுடன், முறையாக யோகா செய்ய வேண்டும்.

    தவிர்க்க வேண்டியவை?

    சத்துக்கள் இல்லாத ஜங் ஃபுட் உணவுகள், அளவுக்கு அதிகமான இனிப்புகள், சாப்பிடாமல் அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
    ×