search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள்.
    • நோன்பு கஞ்சி அருந்தி நோன்பை நிறைவு செய்வார்கள்.

    இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். இப்படி நோன்பு இருப்பவர்கள் மாலையில் தொழுகையை நிறைவு செய்த பிறகு நோன்பை நிறைவு செய்யும் வகையில் நோன்பு கஞ்சி அருந்தி நிறைவு செய்வார்கள். இந்த நோன்பு கஞ்சி என்பது அனைத்து பள்ளிவாசல்களிலும் கிடைக்கும். முஸ்லிம்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாக விளங்கும் நோன்பு கஞ்சியை வீட்டில் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரி- கால் கிலோ

    பாசிப்பருப்பு- 50 கிராம்

    பட்டை- 2

    ஏலக்காய்- 4

    கிராம்பு- 4

    பிரியாணி இலை- 1

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    நெய்- ஒரு குழி கரண்டி

    கொத்தமல்லி, புதினா- ஒரு கைப்பிடி

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    கேரட்- 1

    பச்சை மிளகாய்- 3

    சின்னவெங்காயம்- ஒரு கைப்பிடி

    பூண்டு- 5 பல்

    வெங்காயம்- 1 (நறுக்கியது)

    தக்காளி- 4 (நறுக்கியது)

    தேங்காய்ப்பால்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். இவை இரண்டும் நன்றாக சூடான பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

    வெந்தயம் சிவந்த பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் ஒன்று இரண்டாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து, மூன்று பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய கேரட்டையும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் கேரட்டிற்கு பதிலாக கொத்துக்கறி வாங்கி இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்திருக்கும் பச்சரிசி, பாசிப்பருப்பை இதனுடன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு இதில் 5 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும்.

    ஐந்து விசில் வரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து விசில் வந்த பிறகு அதை அணைத்து விடலாம். விசில் முழுவதும் போன பிறகு குக்கரை திறந்து தண்ணீர் தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் பால் சேர்த்து ஒருமுறை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட வேண்டும்.

    அவ்வளவுதான் மிகவும் சுவையான நோம்பு கஞ்சி தயாராகிவிட்டது. சைவம், அசைவம் இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் தான் சைவமாக இருந்தால் கேரட்டை சேர்த்துக் கொள்ளுங்கள் அசைவமாக இருந்தால் மட்டனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது.
    • வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம்.

    ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மனிதர்கள் மட்டுமல்ல இதர உயிரினங்களும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம். வீட்டில் ஐஸ்கிரீமை தயார் செய்தால் அது பிராண்டட் நிறுவனங்கள் தயாரிக்கும் சுவையில் இருக்காது. ஆனால் குல்ஃபி அப்படி அல்ல. வீட்டிலேயே சூப்பரான சுவையில் எளிதாக தயாரிக்கலாம். விடுமுறை நாட்களில் இந்த குல்ஃபியை தயார் செய்து உங்கள் மனதிற்கு பிடித்தமான நபருடன் பகிர்ந்து மகிழுங்கள்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாதாம், பிஸ்தா குல்பி ஐஸ்கிரீமை எளிமையாக வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட்- 3

    பால் - ஒரு லிட்டர்

    பாதாம், பிஸ்தா, முந்திரி- தலா 2 ஸ்பூன்

    குங்குமப்பூ- ஒரு சிட்டிகை

    சர்க்கரை- 100 கிராம்

    மில்க்மெய்டு- 50 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை எல்லாம் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் காய்ந்தவுடன் அதில் சர்க்கரை, பொடித்த பிரெட் மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி கலவை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

    பின்னர் குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஏலக்காய் தூள் மற்றும் மில்க்மெய்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறினால் அந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு குல்பி மோல்டு அல்லது சிறிய கிண்ணங்கள் அல்லது, டம்ளர் ஆகியவற்றை ஊற்றி அதனை ஒரு அலுமினிய பேப்பர் கொண்டு மூடி ஃப்ரிட்ஜில் ஃபிரீசரில் 6 மணிநேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு எடுத்து பரிமாறலாம்.

    • கடுகு சட்னி ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.
    • சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

    எப்போது பார்த்தாலும் தேங்காய் சட்னி, கார சட்னி, வேர்க்கடலை சட்னி என்று அரைத்து சாப்பிடுகின்றோம். அந்த வரிசையில் கொஞ்சம் வித்தியாசமான ஆரோக்கியமான இந்த சட்னியையும் சேர்த்துக் கொள்வோமே. இது சுவையில் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு மிக மிக நன்மை தரக்கூடியது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    அதை விட சுடச்சுட சாதத்தில் இந்த கடுகு துவையலை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கடுகு- 5 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- 5 ஸ்பூன்

    தக்காளி-2

    காய்ந்தமிளகாய்-4

    பூண்டு- 6 பல்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவேண்டும். கடாய் சூடானதும் அதில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். கடுகை கறியவிட்டுவிடக்கூடாது. அதன் பின்பு அதே கடாயில் பூண்டு, வரமிளகாய், தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை கலவையை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சட்னி அரைப்பது போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒருவேளை உங்களுக்கு இதில் கடுகின் கசப்பு தெரிகிறது என்றால் சிறிய துண்டு வெல்லம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தாளிப்பு வேண்டுமென்றால் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கு தாளிப்பு தேவைப்படாது. சுடச்சுட சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். அது நம்முடைய விருப்பம் தான். நீங்க மிஸ் பண்ணாம உங்களது வீட்டில் டிரை செய்து பாருங்கள்.

     குறிப்பு: கடுகை வறுக்கும் போது கவனம் தேவை. கடுகு கருகி விட்டால் சட்னியின் ருசி மாறிவிடும்.

    • விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர்.
    • குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    விதவிதமான உணவுகள் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகள் பல உள்ளன. அவற்றில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது  குறித்து இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேரட்- 3

    தேங்காய்- ஒரு கப் (துருவியது)

    சர்க்கரை- 250 கிராம்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    பால் பவுடர்- 100 கிராம்

    மெலன் சீட்ஸ்- ஒரு ஸ்பூன்

    நெய்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.

    பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் லட்டுக்களாக உருட்டி எடுத்து பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

    • உடல் எடை குறைப்பவர்களுக்கு பசலக்கீரை ஒரு வரப்பிரசாதமாகும்.
    • தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதமாகும். காரணம், இதிலுள்ள கரோட்டினாய்டு என்ற லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக்கொண்டவை. தினமும் டயட்டில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

    பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. நிறைய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. சரியான நேரத்தில் பசியை தூண்டுவதற்கு, இந்த கீரைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகின்றன. மேலும், மாங்கனீசு, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

    மேலும், உடலில் தேவையற்ற கலோரிகள் தங்கி உடல் எடை கூடுவதை கீரைகளில் உள்ள வைட்டமின்கள் தடுத்து நிறுத்துகின்றன.. எனவே, டயட் இருப்பவர்கள், வாரம் 2 முறையாவது, சேர்த்து இந்த கீரையை, உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பாலக்கீரையை பயன்படுத்தி ஆந்திரா ஸ்பெஷல் உல்லிக்காரம் செய்து பார்க்கலாம். இதனை சூடான சாதத்திலும், சப்பாத்திக்கு கூட்டு போல செய்து சாப்பிடலாம்.

     தேவையான பொருட்கள்:

    பசலைக்கீரை- ஒரு கட்டு

    மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    பூண்டு- 20 பல்

    வெங்காயம்- 2

    உப்பு- தேவையான அளவு

    சீரகம்- கால் டீஸ்பூன்

    காய்ந்தமிளகாய்- தாளிக்க

    கடுகு- கால் டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் பசக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் தாளிக்க வேண்டும். அது பொறிந்ததும் காய்ந்தமிளகாய், பூண்டு. கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை அதில் சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு மசாலாவில் வெட்டி வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து நன்றாக மசாலா வாசனை போகும் வரையிலும், எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறி இறக்கினால் சுவையான பாலக்கீரை உல்லிக்காரம் தயார். சூடான சாதத்தில் இதனை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அதுதாங்க அமிர்தம்.

    • வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...?
    • பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    வழக்கமான சிக்கன், மட்டன் பிரியாணியை ருசித்திருப்பீர்கள், வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...? இந்த கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், சுவையில் சுண்டியிழுக்கும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சீரகச் சம்பா அரிசி- 1 கிலோ

    மட்டன் (வெள்ளாட்டுக்கறி)-1 கிலோ

    வெங்காயம்- 200 கிராம்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50 கிராம்

    புதினா-1 கைப்பிடி

    கொத்தமல்லி-1 கைப்பிடி

    பச்சைமிளகாய்-12

    தேங்காய்ப் பால்-1கப்

    பாதம்-50 கிராம்

    பிஸ்தா-25 கிராம்

    முந்திரி-25 கிராம்

    கசகசா-10 கிராம்

    பட்டை-2 துண்டு

    கிராம்பு-6

    சோம்பு-2 ஸ்பூன்

    ஏலக்காய்-3

    எலுமிச்சை- 1/2

    நெய்- 50

    தேங்காய் எண்ணெய்- 50 மி.லி.

    உப்பு- தேவையான அளவு

    உலர் திராட்சை - 2 ஸ்பூன்

    தயிர்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தை கழுவி, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை போட்டு அதனுடன் தயிர், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் 5, புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    அடுத்து பாதம், பிஸ்தா, முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு மிக்சி ஜாரில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதைத்தொடர்ந்து, ஊறவைத்த மட்டன் கலவையை ஒரு குக்கரில் சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    அதன்பின் குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்த கலவை, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    அதன்பிறகு வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

    இதைத்தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரையே ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்கின்ற அளவுக்கு ஊற்ற வேண்டும்.

    அதன் பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதி வந்தவுடன், அரை மணி நேரம் ஊறவைத்த அரிசியை சேர்த்து, 90 சதவீதம் வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து மூடியிட்டு, 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கினால், கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    • முந்திரி பருப்புகளை வறுத்து வைத்தால் கெடாது.
    • அடைக்கு பருப்புடன் ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்தால் அடை மொறுமொறுப்பாக கிடைக்கும்.

    * முற்றிய தேங்காயை துண்டுகளாக வெட்டுவது சிரமம். அதை பிரீசரில் 10 நிமிடங்கள் வைத்து விட்டு தண்ணீரில் கழுவி கீறினால் ஓடு கழன்று வந்துவிடும்.

    * பிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென இருக்க, லிக்விட் சோப்புடன் சொட்டு நீலத்தை நுரை வரும்வரை கலந்து, அந்த நுரையால் துடைத்தால் போதும்.

    * சவ்சவ் நறுக்கும்போது விரல் பிசுபிசுப்பாகி விடும். சவ்சவ்வை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒன்றோடு ஒன்று தேய்த்து, பின்பு நீரில் கழுவி விட்டு நறுக்கினால் பிசுபிசுப்பாக இருக்காது.

    * முழு முந்திரி பருப்புகளை விரைவில் பூச்சி அரித்து விடும். அவற்றை ஒன்றிரண்டாக உடைத்து, வெறும் வாணலியில் வறுத்துவிட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

    * ரோஜா, சாமந்தி பூக்களின் காம்புகள் ஒடிந்த நிலையில் இருந்தால் சாமி படங்களுக்கு வைப்பது சிரமம். ஊதுவர்த்தியின் கீழ்பாகம் போன்ற சிறு குச்சிகளை பூ நடுவில் சொருகி விட்டால் அழகாக பூ சூட்ட முடியும்.

    * குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால் சிறிது காய்ச்சிய பாலை சேர்க்கலாம்.

    * பாகற்காயுடன் பீட்ரூட், கேரட் கலந்து பொரியல் செய்தால், அதன் கசப்பு தன்மை குறைந்து விடும்.

    * வெயில் காலத்தில் தயிர் வேகமாக புளித்து விடும். டிபன் கேரியரில் பால் உறை ஊற்றி மேல், கீழ் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தால் எளிதில் புளிக்காது.

    * அடைக்கு பருப்பு ஊற வைக்கும்போது கைப்பிடி ஜவ்வரிசியையும் அதனுடன் ஊற வைத்தால் மொறுமொறு அடை கிடைக்கும்.

    * பால் சேர்த்து பாயசம் செய்யும்போது அடுப்பில் வைத்து சர்க்கரை கலந்தால் திரிந்தது போல் ஆகிவிடும். இறக்கிவிட்டு பொடித்த சர்க்கரை சேர்க்கலாம்.

    * வெயில் காலத்தில் பூக்கள் சீக்கிரம் வாடாமல் இருக்க, ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து அதன் மேல் பூக்களை வைத்து ஈரத்துணியால் சுற்றவும்.

    • வெள்ளை குருமாவை 10 நிமிடத்தில் மிக எளிதாக செய்துவிடலாம்.
    • சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

    எல்லா காய்கறி மற்றும் சிக்கன், மட்டன் ஆகியவற்றை வைத்து குருமா செய்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக பேபிகார்ன் வைத்து ஒரு கிரீமியான ஒயிட் கிரேவி செய்யலாம். இந்த வெள்ளை குருமாவை வெறும் 10 நிமிடத்தில் மிக எளிதாக செய்துவிடலாம்.

    இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும். சரி வாங்க பேபிகார்ன் ஒயிட் கிரேவி எப்படி செய்யணும், இதற்கு என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் போன்ற விவரங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    பேபி கார்ன் -5

    பட்டானி- 100 கிராம்

    தேங்காய்- ஒரு கப்

    கசகசா- ஒரு ஸ்பூன்

    சோம்பு ஒரு ஸ்பூன்

    உடைத்த கடலை- ஒரு ஸ்பூன்

    முந்திரி- 5

    பட்டர்- ஒரு ஸ்பூன்

    பட்டை-1

    லவங்கம்- 2

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    பச்சைமிளகாய்

    கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    முதலில் ஒயிட் கிரேவிக்கு செய்வதற்கு ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், கசகசா, சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பச்சைமிளகாய், முந்திரி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பட்டர் சேர்த்து அதில் பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பின்னர் வெட்டி வைத்துள்ள பேபிகார்னை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பட்டானி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்க விட வேண்டும். ஒரு கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் கிரீமியான பேபிகார்ன் ஒயிட் கிரேவி தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • பிரியாணி மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது.
    • குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள்.

    பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்பினால் கண்டிப்பாக டிபன்பாக்ஸ் காலியாக வரும் என்பது உறுது. காலை உணவு அல்லது இரவு உணவு சமைக்கும் பொழுது இப்படி ராகி சேமியாவில் ஒரு பிரியாணி செய்து கொடுத்தால் குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். வாருங்கள் ராகி சேமியா பிரியாணியை எப்படி என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ராகி சேமியா — 1 கப்

    பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1/2 கப்

    பச்சை பட்டாணி – 1/4 கப்

    பெரிய வெங்காயம் – 2

    தக்காளி – 1

    பட்டை – 1

    ஏலக்காய், கிராம்பு – 2

    கரம் மசாலா துாள் – 1/2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்

    மஞ்சள் துாள் – 1/4 தேக்கரண்டி

    மிளகாய் துாள் – 1/2 மேஜைக்கரண்டி

    எண்ணெய், கல் உப்பு, கொத்தமல்லி தழை,

    புதினா – தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில், எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள், தக்காளி, பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, புதினா, போட்டு வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு கப் நீர் ஊற்ற வேண்டும்.

    நீர் கொதித்தவுடன், ராகி சேமியாவைப் போட்டு கிளறி, அடுப்பை, `சிம்'மில் வைத்து, கொத்தமல்லி தழை துாவினால், ராகி சேமியா பிரியாணி தயார். சாப்பிட சுவையாக இருக்கும்; ராகி சேமியா சாப்பிடாத குழந்தைகள் இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவர்.

    • சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.
    • பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை.

    ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்க நல்ல மருந்து. பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை. ஆவாரம்பூ உடல் சூடு தணிக்கும், நாவறட்சி நீக்கும், கண் எரிச்சல் தீர்க்கும். மூலநோய் குணமாக உதவும். சருமப் பொலிவுக்கு உதவும். உடலை பலப்படுத்தும். சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ஆவாரம்பூ - ஒரு கைப்பிடி

    தேங்காய்த்துருவல்-ஒரு கப்

    காய்ந்த மிளகாய் -2

    புளி, உப்பு - சிறிது

    பூண்டு - 2 பல்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்க வேண்டும். அதில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பூண்டு, ஆவாரம்பூ, புளி, உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு, கருகிவிடாமல் வதக்க வேண்டும்.

    ஆறிய பிறகு, மிக்சியில் அரைத்தெடுக்க வேண்டும். தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.

    குறிப்பு:

    ஃப்ரெஷ் ஆவாரம்பூ கிடைக்கவில்லை என்றால், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற உலரவைத்த பூவையும் பயன்படுத்தலாம்.

    • சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும்.
    • சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள். அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். சமையல் ருசியாக இருக்க கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக...

    சமையலில் செய்யக்கூடாவதவை

    * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

    * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

    * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

    * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

    * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

    * சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

    * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

    * ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.

    * பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

    * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

    * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

    * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

    செய்ய வேண்டியவை..!

    * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

    * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

    * ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

    * போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

    *குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

    * பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

    * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

    * வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.

    * கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.

    * வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

    • நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
    • நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும்.

    நண்டு சப்பிடுவதால், வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண்பார்வை மேம்படவும், கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது. இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும். நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.

    காயங்கள் விரைந்து குணமாகவும், நண்டு உணவுகள் கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்றவை எரித்ரோசைடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்வை என்றும், இது புதிய திசுக்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. நண்டு உணவில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 1

    இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    கரம்மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்

    மைதா மாவு- ஒரு ஸ்பூன்

    பிரெட் தூள்- தேவையான அளவு

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை, எண்ணெய்- தேவையான அளவு,

    உப்பு- தேவையான அளவு.

    செய்முறை

    முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் நண்டுகளை போட்டு வேக வைக்க வேண்டும்.

    நண்டு நன்றாக வெந்ததும், ஆறவைத்து ஓடுகளை உடைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கரம்மசாலாதூள், மஞ்சள்தூள், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ வைக்கலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் தூள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், ஒரு லாலிபாப்பை எடுத்து, முட்டையில் முக்கி எடுத்து பின்னர் பிரெட் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான நண்டு லாலிபாப் தயார்.

    ×