என் மலர்
பொது மருத்துவம்
- நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்று சார்க்கரை நோய்.
- தற்போது பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்றாக சார்க்கரை நோய் இருக்கிறது. வயது வித்தியாசங்கள் இன்றி பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக இனிப்பு சேர்ந்த உணவுகளை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். தேனில் கார்போஹைட்ரேட் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் வடிவில் உள்ளது. ஒரு டீஸ்பூன் (சுமார் 7 கிராம்) தேனில் 21 கலோரி ஆற்றல் உள்ளது.
நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவை அனைத்திலும் கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படியே தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவைகளை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் வெள்ளைச்சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவை ஆரோக்கியமானது, சிறந்தது.
தேனில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. வெள்ளைச் சர்க்கரையை விட இது ஆபத்து குறைவு தான். இதிலும் கட்டுப்பாடு அவசியம். இதற்கு அடுத்த இடத்தில் கருப்பட்டி இருக்கிறது. தேன் நல்லது தானே என்று சொல்லி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
- மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.
- வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.
கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிட்டும். அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றை குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகை சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி செய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.
வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் சீதபேதி கட்டுப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும். தினமும் கையளவு நாவல்பழங்களை சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும். பாதாம்பருப்பில் வைட்டமின் 'ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும். தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட்ஸ் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இதிலும் வைட்டமின் 'ஈ' சத்து நிறைந்துள்ளது.
- சிறுநீரக கற்கள் வரக்காரணத்தையும், பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
- சிறுநீரகக் கற்கள் வந்தால் பின்பக்க விலாவில் வலி ஏற்படும்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அமுதம் ஆயுஷ் கூட்டுறவு மருத்துவமனையில் ஓமியோபதி டாக்டராக தினேஷ்குமார் பணியாற்றி வருகிறார். அவர் சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது:-
சிறுநீரகத்தில் கால்சியம் ஆக்சிலேட், யூரிக்ஆசிட், கார்பனேட் போன்ற தாதுக்கள் படிந்து நாளடைவில் அது சிறுநீரக கற்களாக உருவாகிறது. முறையற்ற உணவு பழக்க வழக்கங்களாலும், மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேற்றத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் சிறுநீரக கற்கள் உருவாகிறது. அண்மைக்காலமாக இளம் வயதினருக்கும், மாணவர்களுக்கும் சிறுநீரக கற்கள் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்த சிறுநீரக கற்கள் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காரணிகள்
சிறுநீரக கற்கள் அதிக அளவு அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும், புகை பிடிப்பவர்கள் மற்றும் அதிக அளவு மது குடிப்பவர்களுக்கும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். சரியான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உப்புத்தன்மை நிறைந்த குடிநீர் மற்றும் சுகாதாரமற்ற குடிநீரை எடுத்துக் கொள்வதாலும் சிறுநீரக கற்கள் உருவாகும். அதிக அளவில் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
சிறுநீரகக் கற்கள் வந்தால் பின்பக்க விலாவில் வலி ஏற்படும். முதுகு வலி ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும். வலியுடன் குமட்டல் வாந்தி உருவாகும். சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், அடிவயிற்றில் வலி, சிறுநீர் இயல்பாக வெளியேறாமல் சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். சிறுநீரில் கிருமி தொற்று பரவி காய்ச்சல் உண்டாகும். இடுப்பின் பின்புறம் மற்றும் முதுகுத்தண்டு அருகில் வலி ஏற்படும். சிறுநீரில் மணல் போன்ற கற்கள் காணப்படும். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், உடல் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். இவை சிறுநீர் கற்கள் இருப்பதனால் ஏற்படும் அறிகுறிகள் ஆகும்.
உணவு பழக்க வழக்கங்கள்
சிறுநீரக கற்கள் வராமல் தவிர்க்க அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடக்கூடாது. பால் சார்ந்த பொருட்களையும், கீரைகளையும் சாப்பிடக்கூடாது. தக்காளி விதை, கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க சுரைக்காய், வெண்பூசணி, வாழைத்தண்டு, வெள்ளரி, எலுமிச்சை சாறு, பீன்ஸ், பார்லி கஞ்சி ஆகியவற்றை அருந்த வேண்டும். தினமும் ஒருவர் மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஓமியோபதி சிகிச்சை முறை
பொதுவாக ஒரு முறை சிறுநீரக கற்கள் உருவாகினால் மீண்டும் சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. சரியான உணவுப் பழக்கம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் மூலம் மீண்டும் கற்கள் உருவாவதை தவிர்க்க முடியும். சிறுநீரக கற்களுக்கு நிரந்தர தீர்வு ஓமியோபதி மருத்துவத்தில் உள்ளது. சிறுநீரக கற்களின் அளவு, கற்கள் உருவாகி இருக்கும் இடம், அதன் தன்மை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களின் தனித்தன்மையை பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படும். பக்க விளைவுகள் இல்லா நிரந்தர தீர்வுக்கு ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்றவை ஏற்படுவதுண்டு.
- இதை குணப்படுத்த உதவும் சித்தமருந்துகள் பற்றி பார்ப்போம்:
பருவ காலம் மாறும்போதும், புதிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள தண்ணீர் குடிக்கும்போதும், அங்குள்ள தட்பவெப்ப நிலை காரணமாகவும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, குரல் பாதிப்பு போன்றவை ஏற்படுவதுண்டு. இதை குணப்படுத்த உதவும் சித்தமருந்துகள் பற்றி பார்ப்போம்:
ஆடாதோடை இலை 2, மிளகு 5 எடுத்து, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
சாம்பார் வெங்காயம் 5 எடுத்து நாட்டு வெல்லத்துடன் மென்று சாப்பிட வேண்டும்.
பாலுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.
முட்டையை ஆஃப் பாயில் செய்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.
சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கொத்தமல்லி, அதிமதுரம் இவைகளை சேர்த்து பொடித்த, பொடி சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
பூண்டு சாறுடன் தேன் கலந்து அதை தொண்டையினுள் தடவி வர வேண்டும்.
வெந்நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
சித்த மருத்துவத்தில் தாளிசாதி வடகம் 1 அல்லது 2 மாத்திரை கடித்து சாப்பிட வேண்டும்.
தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
- மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஆகும்.
எனவே மனதை சரியான திசையில் செலுத்தினால் மனஅழுத்தம் இன்றி நிம்மதியாக இருக்கலாம். உடல் ரீதியாக ஒருவர் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மனரீதியில் பலவீனமாக இருந்தால் எளிதாக வீழ்த்தி விட முடியும். எனவே உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது. இது அவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது. தோல்வி அடைகிற போது எழும் கவலை மன அழுத்தமாக மாறுகிறது. நினைத்தது நடக்காத போது வரும் ஏமாற்றம், விரக்தி ஆகிறது. விரும்பியதை அடைய முடியாத போது ஏற்படும் கோபம் ஆத்திரமாக மாறுகிறது.
குடும்பம், தொழில், வாழ்வியல் சூழல்களில் சிக்கல் ஏற்படும் போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. அதை சரியாக கையாள கற்றுக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் மனிதர்க ளிடம் உளவியல் சிக்கல்கள் அதிகரித்து தவறுகளும், குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி விடும். எனவே மனதை சமநிலையில் நிறுத்தி நிதானமாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.
- கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
- உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளடங்கி இருக்கும் உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். புரதம் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஏனெனில் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. அதனை அதிகம் உட்கொண்டால் உடல் பருமனை ஏற்படுத்திவிடும் என்ற விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு உட்கொள்ளும் உணவில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. கார்போஹைட்ரேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டியதில்லை. அதுவும் போதுமான அளவில் இடம்பெற வேண்டும். உடல் எடை குறைப்பு விஷயத்தில் உலவும் மேலும் சில கட்டுக்கதைகள் குறித்து பார்ப்போம்.
புரதம் உட்கொள்வது
உடல் எடையை குறைக்கும்போது நுண்ணூட்டச்சத்துக்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றுள் புரதம் மேக்ரோ நுண்ணூட்டச்சத்துகளை கொண்டுள்ளவற்றுள் முக்கியமானதாகும். இதனை உட்கொள்வது நீண்ட நேரத்திற்கு புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.
அதேவேளையில் புரதத்தையே முதன்மையான உணவாக உட்கொள்ளக்கூடாது. அப்படி புரதத்தை அதிகமாக உட்கொள்வது சருமம் வறட்சி அடைவதற்கு வழிவகுக்கும். சில தேவையற்ற உடல்நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அதனை தவிர்க்க காலை உணவுடன் புரதத்தை சேர்த்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும் சமயங்களிலும் உட்கொள்ளலாம்.
உணவு உட்கொள்வதை தவிர்ப்பது
விரதம் இருப்பது அல்லது பட்டினி கிடப்பது உடல் எடையை விரைவாக குறைக்க உதவும் என்பது முற்றிலும் கட்டுக்கதைதான். பட்டினி கிடப்பது, குறைவாக சாப்பிடுவது, சில உணவுகளை அறவே தவிர்ப்பது உடல் எடை இழப்புக்கான யுக்தி அல்ல.
அப்படி சில நாட்கள் உணவுக்கட்டுப்பாடுகளை கடைப்பிடித்துவிட்டு மீண்டும் பழையபடி உணவு உட்கொள்ள தொடங்கியதும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடுவீர்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதே சிறந்தது. அது பசியை தூண்டாது. அதனால் அடிக்கடி சாப்பிடும் எண்ணம் தோன்றாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடாதது
உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்பவர்கள் சூரியன் மறைந்த பிறகு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் உண்மையல்ல. ஒருவருடைய உடலில் கலோரிகள் அதிகம் சேரும்போதுதான் உடல் எடை அதிகரிக்கும்.
ஏற்கனவே உடலில் கலோரிகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் சூரியன் மறைந்த பிறகு சாப்பிடுவது உடலுக்கு எந்தவொரு தீங்கையும் விளைவிக்காது. தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது இரவு தடையற்ற தூக்கம் பெற உதவும். உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
மாத்திரைகள் சாப்பிடுவது
உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதற்குரிய மாத்திரைகள் புழக்கத்தில் இருக்கின்றன. பவுடர், டானிக்குகள் வடிவிலும் கிடைக்கின்றன. அவை உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதுவும் கட்டுக்கதைதான்.
ஏனெனில் சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தால் மட்டுமே மாத்திரைகள் வேலை செய்யும். இல்லாவிட்டால் அதனை உட்கொள்வதில் பயனில்லை. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள், டானிக்குகளை உட்கொள்வதும் தவறானது.
நச்சு நீக்கும் பானங்கள் பருகுவது
'டீடாக்ஸ்' எனப்படும் பானங்கள் உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் கட்டுக்கதைதான். டீடாக்ஸ் பானங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை அளிக்கலாம். இருப்பினும் உடலில் உள்ள கொழுப்பை முழுமையாக நீக்குவதற்கு உதவாது. வழக்கமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தாலே போதுமானது.
- டெங்கு என்பது ஏடிஸ் எனப்படும் கொசுக்களால் பரவும் தொற்று நோயாகும்.
- கொரோனா, டெங்கு ஆகிய இரண்டும் திடீரென அதிக காய்ச்சல் மற்றும் உடல்வலியை ஏற்படுத்தக்கூடியவை.
குளிர்காலம் முடிவடைய இருக்கும் சூழலில் பருவ கால நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது. அது டெங்கு காய்ச்சல் தானா? இல்லை கொரோனா நோய்த்தொற்றா என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு இரண்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றை துல்லியமாக கண்டறிந்தால்தான் குறிப்பிட்ட நோய்க்கான சிகிச்சையை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். அதற்கு ஏதுவாக டெங்கு, கொரோனா வைரஸ் தொற்றுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அறிகுறிகள், அவை தோன்றுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
டெங்கு காய்ச்சல்:
டெங்கு என்பது ஏடிஸ் எனப்படும் கொசுக்களால் பரவும் தொற்று நோயாகும். தலைவலி, மூட்டுவலி, சருமத்தில் வீக்கம், தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஏடிஸ் கொசுக்கள் பொதுவாக நகர்ப்புற பகுதிகளில் அதிகம் உலவுகின்றன. அதற்கு ஏற்ப டயர்கள், காலி பாத்திரங்கள் உள்பட தேங்கி நிற்கும் நீர் பரப்புகள் அவை இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றவையாக அமைந்திருக்கின்றன.
அறிகுறிகள்
ஒரு நபரை கொசு கடித்த 3 முதல் 14 நாட்களுக்குப் பிறகு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட தொடங்கும். காய்ச்சல், தலைவலி, கண்களுக்கு அடிப்பகுதியில் வலி, தசை மற்றும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். கடும் சோர்வு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். காய்ச்சல் ஏற்பட்ட இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குள் சருமத்தில் வீக்கம், தடிப்பு உண்டாகக்கூடும். சருமம் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வரக்கூடும். மலத்திலும் ரத்தம் வெளிப்படும். பெண்களுக்கு மாதவிடாய் சமயமாக இருந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் பொதுவாக மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு காய்ச்சலின் தன்மை மாறுபடும். சிலருக்கு டெங்குவின் வீரியம் கடுமையாகும். சிலருக்கு குறையத் தொடங்கிவிடும்.
சிகிச்சை முறைகள்
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை பொறுத்தே சிகிச்சை முறைகளும் அமையும். அதிக வீரியம் இல்லாதபட்சத்தில் ஊசி, மருந்து போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி ரத்த பரிசோதனை செய்வதன் மூலம் நோயின் தன்மை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளலாம்.
கொரோனா
இது ஒருவகை தொற்று நோயாகும். சளி, இருமல், தும்மல் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடியது. இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவை கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருப்பது, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றின் மூலம் நோய் பாதிப்பில் இருந்து விலகி இருக்கலாம்.
டெங்கு - கொரோனா
ஒற்றுமைகள்:
கொரோனா, டெங்கு ஆகிய இரண்டும் திடீரென அதிக காய்ச்சல் மற்றும் உடல்வலியை ஏற்படுத்தக்கூடியவை. இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் ஆரம்ப நிலையில் அதாவது, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவருக்கு என்ன நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவது கடினம். அதன் பிறகே அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும். இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், கொரோனா ஒருவகை சுவாச நோய். இருமல், சளி, மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாசத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை கொண்டிருக்கும். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கடுமையான உடல்வலி, தலைவலி மற்றும் காதுகளுக்குப் பின்னால் வலி போன்றவை இருக்கும்.
- நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும்.
- உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தை போல மன நலனையும் பேண வேண்டும். சிலர் எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள். சிலரோ பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பார்கள். மனதை நிதானமாக வைத்திருக்காமல் ஒருவித பதற்றத்துடனே காணப்படுவார்கள். அப்படி இயல்பற்ற நிலையில் இருப்பது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். இதயத்திலிருந்து ரத்தம் சீரான அழுத்தத்தோடு வெளிப்படும்போது அது உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், திசுக்களுக்கும் பரவலாக சென்றடையும்.
அப்படி சீரான அழுத்தத்தோடு தொடர்ச்சியாக ரத்தம் சென்றால் தான் திசுக்களால் சீராக இயங்க முடியும். அதற்கு இடம் கொடுக்காமல் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது ரத்த அழுத்த அளவுகளும் மாறுபடக் கூடும். மிகவும் குறைந்த அளவு ரத்த அழுத்தம் இருந்தாலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். ரத்தமானது, ரத்த நாளங்களின் வழியே பாய்ந்து செல்லும்போது ரத்தநாளச்சுவர்களில் ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தமாகும்.
120 அளவுக்கு மேலுள்ள அழுத்தம், 'சிஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். 80 அளவுக்கு கீழுள்ள தளர் அழுத்தம் 'டயஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். ஒரு மனிதருக்கு பொதுவாக 'சிஸ்டோலிக்' அழுத்தம், 100-ல் இருந்து 120 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும். அதுபோல் 'டயஸ்டோலிக்' அழுத்தம், 70-ல் இருந்து 80 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும்.
ஒருவருக்கு ரத்த அழுத்தமானது தொடர்ச்சியாக 120/80 மி.மீ. பாதரச அளவிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப்படும். அந்த உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும். ஒருவருடைய உடல், மன நல செயல் பாடுகளில் ஏற்படும் மாற்றம் ரத்த அழுத்த அளவுகளில் வெளிப்படும். மன உளைச்சல், பதற்றம், பீதி, அச்சம், கோபம், கடுமையான உடற்பயிற்சி, கடும் உடல் உழைப்பு, கடும் குளிர் போன்ற சமயங்களின் போது வழக்கத்தை விட ரத்த அழுத்தம் உயர்ந்தே காணப்படும்.
நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். இப்படி உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படும் ரத்த அழுத்தம், நாளடைவில் நிலையானதாகி உயர் ரத்த அழுத்த அளவுகளிலேயே நிலைத்து விடும். சிலருக்கு ஏன் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற காரணத்தை உடனே கண்டறிய முடியாது. அப்படி காரணத்தை கண்டறிய முடியாமல் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களின் பெற்றோர் மற்றும் முன்னோர்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வித்திடும் வகையிலான உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பார்கள். மன நலனினும் அதன் தாக்கத்தை உணர முடியும். குறிப்பாக மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இவர்களால் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது. சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பது ரத்த நாளங்களை முறுக்கேறச் செய்து ரத்த அழுத்தத்திற்கு வித்திட்டுவிடும் என்பது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.
- நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
- எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.
பீன்ஸ் பல உலக நாடுகளில், பல்வேறு விதமான வண்ணங்களில் விளைகிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் பீன்ஸில் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும்.
பீன்ஸ் உங்களுக்கு பிடிக்குமா...? அது சுவையில் மட்டுமல்ல, சத்து விஷயங்களிலும் சூப்பரானது. இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…!
பேப்பேசி குடும்ப,த்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பேசில்லஸ் வல்கரிஸ். செடியில் வளரும் பீன்ஸ், கொடியில் விளையும் பீன்ஸ் வகைகள் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட பீன்ஸ்கள் குறைந்த அளவு கலோரி ஆற்றல் தரக்கூடியவை. 100 கிராம் பீன்ஸ் உடலுக்கு 31 கலோரி ஆற்றல் வழங்கும். பச்சை பீன்ஸில் நிறைய வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. எளிதில் உடலில் கலக்கும் நார்ச்சத்து நிறைந்தது.
100 கிராம் பீன்ஸில் 9 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் நார்ச்சத்து உள்ளது. ஆர்.டி.ஏ. என்பது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவை குறிப்பதாகும். நார்ச்சத்தானது பெருங்குடல் நோய் எதிர்ப்புத் தன்மையுடன் இருக்க உதவும். குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும். மேலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவையும் குறைக்கும். மிக அதிக அளவிலான வைட்டமின்-ஏ, பீன்ஸில் இருக்கிறது. லுடின், ஸி-சாந்தின், பீட்டா கரோட்டின் ஆகியவையும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. இது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், நோய் எதிர்ப்புத்திறனை வழங்கும். குழந்தைகளுக்கு நோயை உருவாக்கும் ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கலுக்கு எதிராக செயல்படும்.
பீன்ஸில் உள்ள ஸி-சாந்தின், புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவைக் காக்கிறது. பச்சை பீன்ஸ் வகைகள் ஏ.ஆர்.எம்.டி. எனப்படும் வயது முதிர்வு சம்பந்தமான வியாதிக்கு எதிராக உடலுக்கு ஆற்றல் தரும். 100 கிராம் பீன்ஸில் 37 மைக்ரோ கிராம் போலேட்ஸ் உள்ளது. இது வைட்டமின் டீ 12 உடன் இணைந்து, டி.என்.ஏ. இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பங்கெடுக்கிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக் குழாய்கள் பாதிக்கப்படாமல் காக்க உதவுகிறது. பைரிடாக்சின் எனும் வைட்டமின் பி-6, தையமின் பி-1, வைட்டமின் சி ஆகியவை பீன்ஸில் நிறைந்துள்ளது.
வைட்டமின்-சி, கிருமித் தொற்றுக்கு எதிராக உடலை காக்கக்கூடியது. ஆக்சிஜன்-பிரி-ரேடிக்கல்ஸ் உடலில் சேரவிடாமல் சுத்தமாக்குகிறது. ஆரோக்கியமான அளவில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு ரொம்பவும் அவசியமானது.
மாங்கனீசு நொதிகளின் செயல்பாட்டில் துணைக்காரணியாக செயல்படக்கூடியது. பிரிரேடிக்கல்ஸை விரட்டி யடிக்கக் கூடியது. பொட்டாசியம் தாது உப்பு செல் மற்றும் உடலில் ஈரத்தன்மைக்கு அவசியமானது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.
- மசாலா உணவை சாப்பிட்டாலும் இந்த பிரச்சனை வரும்.
- இந்த பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளது.
வழக்கமாக நாம் சாப்பிடும்போது உணவுடன் கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அது வயிற்றில் சேர்ந்து விடுகிறது. அதிலும் அவசர அவசரமாக உண்ணும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும் போது, காற்றடைத்த பானங்களை குடிக்கும்போது, அண்ணாந்து தண்ணீர் குடிக்கும்போது காற்று விழுங்கும் அளவு அதிகமாக இருக்கும்.
வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர், பச்சைப்பட்டாணி, அவரை, எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சாப்பிடும்போது செரிமானத்தின் போது அதிகமான வாயு உருவாகிறது. மசாலா பொருட்கள், வயிற்றில் தங்கி உள்ள காற்றை வெளிப்படுத்துகிறது. இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறைகள் மற்றும் சித்த மருந்துகள் பற்றி பார்ப்போம்.
1) மோருடன் பெருங்காயம், சீரகம், சேர்த்து குடிக்க வேண்டும்,
2) காலை-இரவு நேரத்தில் சீரகத்தண்ணீர் ஒரு டம்ளர் வீதம் குடிக்க வேண்டும்,
3) சித்த மருத்துவத்தில் அஷ்டாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு வெது வெதுப்பான வெந்நீரில் எடுக்க வேண்டும்.
காலை, மதியம் வேளைகளில் சாப்பிட்ட உடன் ஒரு குறுநடை நடந்த பின்னர் தான் உட்கார வேண்டும். இரவு சாப்பிட்ட பிறகும் ஒரு குறுநடை நடந்து ஒரு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும். இளஞ்சூடான வெந்நீர் குடிப்பது வயிறு பிரச்சினைகளுக்கு சிறந்தது. உணவில் மோர், தயிர், சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றல், கருவேப்பிலை பொடி, பிரண்டைத் தண்டு துவையல் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகளும் உள்ளன.
- கால்சியம், வைட்டமின் ‘டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
சிறுநீரகக் கற்களுக்கு சித்த மருத்துவம்: சிறுகன்பீளை, நெருஞ்சில் விதை, மூக்கிரட்டை இவைகளை பொடித்து வைத்துக்கொண்டு, அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்து, காலை, மாலை என இருவேளை குடிக்கவும். மாவிலங்கப்பட்டை, தொட்டால் சிணுங்கி, வெட்டிவேர் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
கல்லுருக்கி இலை (Scoparia dulcis) மற்றும் இரணகள்ளி இலை (Kalanchoe pinnata) போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர ேநாய் குணமாகும். சித்த மருந்துகளில், வெடியுப்புச் சுண்ணம் 50 மி.கி., நண்டுக்கல் பற்பம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை நீர்முள்ளிக் குடிநீரில் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். அமிர்தாதி சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, மாலை இருவேளை சாப்பிட வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்புமுறைகள்: விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும், பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாகுவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம், வைட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். கால்சியம் அளவில் குறைந்தால் அது ஆக்சலேட் உடன் இணைந்து கற்களை உருவாக்கும். ஆகவே, கால்சியம் நம் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும்.
இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை சிறுநீரகக் கல் உள்ளவர்கள் உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இதன் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும். வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்கவேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை திரிபலா எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- ஆரோக்கியமான மூட்டுக்கு சரியான உடல் எடை அவசியம்.
- நம் அன்றாட செயல்பாட்டிற்கு மூட்டுகள் மிகவும் அவசியம்.
வேலூர் சத்துவாச்சாரி அமுதம் ஆயுஷ் கூட்டுறவு மருத்துவமனை ஆயுர்வேத டாக்டர் சுபஸ்ரீ பியூலா, மூட்டு வலி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து கூறியதாவது:-
மூட்டுகள் எதனால் ஆனவை?
எலும்பு மற்றும் எலும்பு திசு ஆகியவற்றின் பண்புகளால் ஆரோக்கியமான மூட்டுகள் உருவாகின்றன. அதனுடன், மூட்டுகள் நரம்பு திசு மற்றும் நரம்பு மண்டலத்துடன் ஓர் முக்கிய தொடர்பை பகிர்ந்து கொள்கின்றன.
ஆரோக்கியமான மூட்டுகள் ஒருவகையான கொழுப்பு பொருளால் உயவூட்டப்படுகிறது. இது உராய்வு இல்லாத இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த செயல்முறை திசு ஊட்டச்சத்தின் செயல்முறையைப் பொறுத்தது. இது மூட்டு ஆரோக்கியத்தில் அக்னியின் பங்கை கூறுகிறது.
நமது ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் வலுவான அக்னி மற்றும் சரியான அளவிலான செரிமானம் அவசியமானது என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் அவற்றின் உடலியலை ஆதரிக்கும் அனைத்தும் திசு ஊட்டச்சத்தை நம்பியுள்ளன. இது இறுதியில் அக்னியின் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகும்.
மூட்டு நோய்களின் வகைகள்
வாதம் என்பது நம் உடலின் செயல்படும் ஆற்றல். நமது அன்றாட இயக்கங்களுக்கும், அன்றாட செயல்பாடுகளை செய்வதற்கும் மூட்டுகள் தேவை. ஆனால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு மூட்டுக்கும் அதன் உகந்த செயல்பாட்டிற்கு சீரான வாதம் அவசியம். மூட்டுகளில் உள்ள வாதத்தில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் அது பல்வேறு மூட்டு நோய்களுக்கு வழிவகுக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், கீல்வாதம், அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ். கீல்வாதம் மூட்டு வலி மற்றும் விறைப்பு ஏற்படுத்துதல் ஆகியவை ஆகும். சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், இடுப்பு மற்றும் முழங்கால்கள் போன்ற எடை தாங்கும் பாகங்களில் இது சிதைவை ஏற்படுத்தும். முடக்கு வாதம் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு அழற்சி நோயாகும். இது முதலில் மூட்டின் சினோவியம் அல்லது புறணியை குறிவைக்கிறது, இதன் விளைவாக வலி, விறைப்பு, வீக்கம், மூட்டு சேதம் மற்றும் மூட்டுகளின் செயல்பாடு இழப்பு ஏற்படுகிறது. வீக்கம் பெரும்பாலும் கைகள் மற்றும் கால்களின் மூட்டுகளை ஒரு சமச்சீர் வழியில் பாதிக்கிறது.
மூட்டுகளை பராமரிக்கும் எளிய வழிமுறைகள்
வாதத்தின் பண்புகளில் குளிர்ச்சி மற்றும் வறட்சி ஆகியவை அடங்கும். எனவே குளிர்காலத்தில், மூட்டு தசைகள் மற்றும் எலும்புகள் கடுமையான வாதத்தால் கடினமாகவும் வலியுடனும் இருக்கும். இதை எப்படி தடுப்பது? உங்கள் மூட்டுகளை சூடாக வைத்திருக்கும் ஆடைகளை பயன்படுத்துங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள், எள் எண்ணெய் அல்லது பிற மருத்துவ எண்ணெய்களை கொண்டு உங்கள் மூட்டுகளை தவறாமல் மசாஜ் செய்யுங்கள்.
நேராக நிற்பது மற்றும் உட்காருவது, உங்கள் கழுத்தில் இருந்து முழங்கால்கள் வரை மற்றும் இடுப்பு மூட்டுகள், முதுகு தசைகளை பாதுகாக்க உதவுகிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு முதுகுபையை பயன்படுத்தினால் அதை இரு தோள்களிலும் வைக்க வேண்டும். பளு தூக்கும் போது, உங்கள் முதுகை வளைப்பதற்குப் பதிலாக உங்கள் உடலில் உள்ள மிகப்பெரிய தசைகளை கொண்ட முழங்கால்களை பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியமான மூட்டுக்கு சரியான உடல் எடை அவசியம். அதிக எடையுடன் இருப்பது உங்கள் மூட்டுகளில் அழுத்தத்தை அதிகரித்து உங்கள் மூட்டுகளை சேதப்படுத்தும்.
சிகிச்சை முறை
மூட்டு நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது, உணவு, மருந்துகள் மற்றும் பஞ்சகர்மாவுடன் ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்க பரிந்துரைக்கிறோம். பொதுவாக நாம் இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் கொண்ட உணவுகளை பரிந்துரைக்கிறோம். இது உடலில் உள்ள வாதத்தை குறைக்கிறது. குக்குலு, குடுச்சி, சல்லாகி, அஸ்வங்கந்தா, மஞ்சள் போன்ற மூலிகைகளை உங்கள் உணவில் தவறாமல் பயன்படுத்தலாம். வெவ்வேறு பஞ்சகர்மா சிகிச்சைகள் மூலம் உங்கள் நோயை நிர்வகிக்க ஆயுர்வேத மருத்துவரிடம் முறையான ஆலோசனையை பெறலாம்.
ஒரு வாகனத்தின் சீரான செயல்பாட்டிற்கு அதன் பாகங்கள் மிகவும் முக்கியம். அதுபோல நம் அன்றாட செயல்பாட்டிற்கு மூட்டுகள் மிகவும் அவசியம்.
இவர் அவர் கூறினார்.






