என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் வைட்டமின் ‘டி'யைப் பெறுவது கடினம்
    • முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி பெறலாம்.

    வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது.

    வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ், இதய நோய், புற்றுநோய், மல்ட்டிபிள் ஸ்கிளரோஸிஸ், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜலதோஷத்தை விரட்டுவதிலும் மன அழுத்தத்தை சமாளிப்பதிலும் வைட்டமின்-டி உதவுவதாகக் கூறப்படுகிறது.

    மற்ற வைட்டமின்களை பொறுத்தவரை நமது வழக்கமான உணவுப்பொருட்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். வைட்டமின் 'டி'யைப் பொறுத்தவரை இது கொஞ்சம் சிக்கல்தான். வைட்டமின் 'டி'யைப் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

    நமது வாழ்க்கை முறை என்பது பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் அமைந்துவிட்டது. வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு வெளியே ஒரு 20-25 நிமிடங்கள் நம் கை மீது வெயிலோ அல்லது திறந்தவெளிக் காற்றோ படும்படி இருந்தாலே போதும், வைட்டமின்-டி கிடைக்கும். மதிய உணவு நேரத்தின்போது அலுவலக வளாகத்துக்கு வெளியே சற்று நடந்துவரலாம். அதேபோல் குழந்தைகளையும் வெளியே விளையாட ஊக்குவிக்கலாம். இப்படிச் செய்யும் அதேநேரத்தில் அதிகப்படியாக வெயில் இருந்துவிடவும் கூடாது. அதனாலும் பாதிப்பு ஏற்பட நேரிடும்.

    நமது வழக்கமான உணவிலிருந்து தினசரி நமக்கு தேவைப்படும் வைட்டமின் 'டி'யைப் பெறுவது கடினம் என்பதால் காளா, சூரை, கானாங்கெளுத்தி போன்ற மீன்களைக் கொண்டு நமது தேவையைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். மூன்று காளா துண்டுகள், நமது தினசரி வைட்டமின் 'டி' தேவையில் 80 சதவீதம் பூர்த்தி செய்துவிடும். முட்டைகளிலிருந்தும் வைட்டமின்-டி பெறலாம். ஒரு முட்டையிலிருந்து ஒரு மைக்ரோகிராம் அளவில் வைட்டமின் 'டி'யை பெறலாம். மாட்டு ஈரலில் புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை மட்டுமல்ல, வைட்டமின் 'டி'யும் இருப்பதாக ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    • உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
    • மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.

    பப்பாளியின் காய் மற்றும் பழத்தைப் போலவே அதன் விதைகளும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டவை. இதில் பாலிபீனால், பிளேவனாய்டுகள், ஆன்டிஆக்சிடன்டுகள் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ஸ் அதிகம் உள்ளன. பப்பாளி விதைப் பொடியை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். இதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்ப்போம்.

    கொழுப்பைக் குறைக்கும்: பப்பாளி விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம் மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றும். இதனால் உடல் எடை குறையும். ரத்த அழுத்தம் சீராகி, இதயம் பலம் பெறும்.

    மாதவிலக்கை சீராக்கும்: பப்பாளி விதைகளில் உள்ள 'கரோட்டின்', ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்கும். இதனால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி குறையும்.

    சரும பராமரிப்பு: பப்பாளி விதையில் உள்ள சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, வயது முதிர்ச்சியால் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கும்.

    பொடுகைப் போக்கும்: உலர்ந்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முடி அடர்த்தியாக வளரும். பப்பாளி விதைகளில் உள்ள ஒலியிக் அமிலம் தலையில் பொடுகு வராமல் தடுக்கும்.

    நோய்த் தொற்றைத் தடுக்கும்: பப்பாளி விதையில் உள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பாரசைட்டுகள் மற்றும் ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

    எச்சரிக்கை: பப்பாளி விதைகளை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு குறிப்பிட்ட காலம் மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுவது சிறந்தது.

    • உடல் கொழுப்பை குறைப்பதில் தேன் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
    • தேனில் உள்ள உடல்நல ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    தேன் என்பது பதப்படுத்தப்படாத இனிப்பை கொண்டது. இது நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

    தேன் என்பது உணவுப் பொருள் மட்டுமல்ல. இதில் பல்வேறு மருத்துவப் பண்புகளும் நிறைந்துள்ளன. தேனில் உள்ள உடல்நல ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

    தேனில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, பி6, கார்போஹைட்ரேட்கள், அமினோ அமிலங்கள் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. அதேசமயம் தேனில் அதிகளவிலான பாக்டீரியா, பூஞ்சை, ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே காயங்களை குணப்படுத்தவும் தேன் பயன்படுத்தப்படுகிறது. தோல், சருமங்களில் ஏற்படும் காயங்களில் தேன் தடவி வந்தால் விரைவில் குணமடையும்.

    உடல் கொழுப்பை குறைப்பதில் தேன் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. தூங்குவதற்கு முன்னால் ஒரு ஸ்பூன் தூய்மையான தேன் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையில் மாற்றத்தை உணரலாம். அதேபோல் சிறிய அளவு தேனை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

    தேன் என்பது பதப்படுத்தப்படாத இனிப்பாகும். இது நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் இதில் ஈரப்பதம் மற்றும் ஊட்டம் அளிக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. சரும துளைகளை அடைப்பதோடு மட்டுமல்லாமல் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது.

    இருமலுக்கு சிறந்த மருந்தாக தேன் உள்ளது. தேன் குடிப்பதன் மூலம் தொண்டை வலி, கரகரப்பில் இருந்து விடுபடலாம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன்னர் பாலில் தேன் கலந்து குடிப்பதன் மூலம் ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

    • இந்தக்கிருமிகள் நோயாளியின் சளியில் வெளியேறும்.
    • உடலில் இது அதிகமாகப் பாதிப்பது நுரையீரலைத்தான்.

    காசநோய் என்பது மாசடைந்த காற்று மூலம் பரவும் தொற்றுநோய். இந்த நோயை உண்டு பண்ணும் பாக்டீரியாவுக்கு 'மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' என்று பெயர்.

    உடலில் இது அதிகமாகப் பாதிப்பது நுரையீரலைத்தான். என்றாலும் குடல், தோல், எலும்பு, மூளையுறை, சிறுநீரகம், நிணநீர்த் தாரைகள் ஆகியவற்றையும் பாதிக்கும்.

    இந்தக்கிருமிகள் நோயாளியின் சளியில் வெளியேறும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்த நோய் உடனே தொற்றிக்கொள்ளும்.

    இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், மாலைநேரக் காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் எடை குறைதல், நெஞ்சு வலி, இரவில் உடல் வியர்ப்பது, எந்நேரமும் களைப்பு இருந்தால், அவை காசநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் காசநோயை 'பிரைமரி காம்ப்ளக்ஸ்' என்கிறோம்.

    குழந்தைக்கு அடிக்கடி சளியுடன் காய்ச்சல் வருவது, அடிக்கடி மூச்சிளைப்பு ஏற்படுவது, பசியின்மை, உடல் எடை குறைவது அல்லது வயதுக்கு ஏற்றபடி உடல் எடை அதிகரிக்காதது, கழுத்தில் கட்டிகள் நீடிப்பது போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

    பொதுவாக, காசநோயின் ஆரம்பத்தில் நோயாளியின் சளியில்தான் பாக்டீரியாக்கள் வெளிப்படும். ஆகவே, ஒருவரின் சளியைத்தான் முதலில் ஆராய்கிறார்கள். அதில் பாக்டீரியா இருந்தால், அதன் மரபணுவில் இருந்து டி.என்.ஏ.வை தனியாக பிரித்து எடுக்கிறார்கள். இதற்கு 'சோனிகேஷன்' எனும் டெக்னாலஜி உதவுகிறது.

    அதாவது, குறிப்பிட்ட அதிர்வெண்கள் கொண்ட கேளாஒலிகளை மரபணுவுக்குள் அனுப்பும்போது, அதிலுள்ள டி.என்.ஏ. தனியாகப் பிரிந்துவிடும். அதை பி.சி.ஆர். தெர்மல் சைக்ளர் எனும் கருவிக்குள் செலுத்தி, அதில் உள்ள மரபணுவின் வகையை கண்டுபிடிக்கிறார்கள். டி.என்.ஏ.வில் காசநோய்க் கிருமியின் மரபணு வகை இருக்கிறது என்றால், அந்த நோயாளிக்குக் காசநோய் இருக்கிறது என்று கண்டறிகிறோம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    • பல்வேறு காரணங்களால் வெண்புள்ளி வருகிறது.
    • இந்த பிரச்சனை மனச்சோர்வை தரும்.

    தோலின் எபிடெர்மிஸ் பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் என்னும் செல்கள் தோலுக்கு நிறத்தை தருகின்ற 'மெலனின்' என்ற நிறமியை உருவாக்குகிறது. இந்த மெலனோசைட்ஸ் செல்கள் மெலனின் நிறமியை உருவாக்காமல் இருக்கும் நிலையை தான் 'வெண்புள்ளி' என்கிறோம்.

    இதற்கான காரணங்கள்: உடலின் நோய் எதிர்ப்பாற்றல், தவறுதலாக சொந்த செல்களை பாதிப்படைய செய்வதால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மெலனோசைட்ஸ் மெலனின் நிறமியின் உற்பத்தியை நிறுத்துகிறது. இதை 'ஆட்டோ இம்யூன்' வகை எனக் கூறலாம். அடுத்து, வைட்டமின் பி குறைபாடுகள், தைராய்டு சுரப்பி நோய்கள், தீப்பட்ட காயங்களால் மெலனோசைட்ஸ் செல்கள் அழிவது போன்ற காரணங்களாலும் வெண்புள்ளி வருகிறது.

    இதற்கான சித்த மருத்துவம்: 1) கார்போகரிசி பசையை வெண்புள்ளி உள்ள இடங்களில் பூசி சிறிது நேரம் வெயிலில் நிற்க வேண்டும். 2) கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து காலை, இரவு ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும். 3) கரிசாலை சூரணம் 1 கிராம், இருநெல்லி கற்பம் 100 மி.கி., அயபிருங்க ராஜ கற்பம் 100 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. ஆகியவற்றை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா,

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
    • தினசரி 2 பழங்களைச்சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

    அத்திப்பழம் அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். அத்திப்பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6,8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும்.

    சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

    உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

    தினசரி 2 பழங்களைச்சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

    போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக்காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனை தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம். சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப்பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

    அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக்குணப்படுத்த மருந்தாகக்கொடுப்பார்கள். இலைகளை உலர வைத்துப்பவுடராக்கிக்கொள்ளுங்கள். இதைத்தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக்குணமாக்க இலைகளைத்தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

    • அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
    • நட்சத்திர வடிவில் இருப்பதால் இது ‘நட்சத்திரப்பூ’ என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. நட்சத்திர வடிவில் இருப்பதால் இது 'நட்சத்திரப்பூ' என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரியாணிக்கு மணம், சுவை கொடுப்பதில் இதற்கு நிகர் வேறில்லை. அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

    * இந்த எண்ணெய் சரும அழற்சி அனைத்தையும் தீர்க்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் நரம்புகளை வலுவாக்கவும் உதவும். இதில் முக்கியமாக அனெத்தோல், எஸ்ட்ராகோல், மெத்தில் சாவிகோல், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் மற்றும் லிமோனின் உள்ளன.

    * இப்பூவை பொடி செய்து ½ முதல் 1 கிராம் எடை வீதம் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை உட்கொள்ள, செரியாமை, மாந்தம், புளித்த ஏப்பம் நீங்கும்.

    * அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை குணமாகும்.

    * அன்னாசிப் பூவை வறுத்து பொடி செய்து அதனுடன் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை தலா 100 மில்லி அளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து தைலமாக காய்ச்சவும். இந்த தைலத்தை தசையில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தினால் தசை வலி குணமாகும். இந்த தைலத்தை நெற்றியில் தடவினால் மன இறுக்கத்தை போக்கும்.

    * துருக்கி, சீனா, பெர்சியா போன்ற நாடுகளில் மக்கள் செரிமானத்திற்கு இதனை பயன்படுத்துகின்றனர். இந்த மசாலா, வாயுவால் ஏற்படும் வயிற்று பிடிப்பை நீக்கும். இது பெருங்குடல் நோய் உள்ள குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.

    * குழந்தைகளுக்கு இதை தேநீர் போன்று காய்ச்சி வழங்குவதால் வாந்தி, வலிப்புத் தாக்கங்கள், பிற நரம்பியல் விளைவுகளை குணப்படுத்தும்.

    * இதில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளை கொல்லும் பயோஆக்டிவ் பொருட்கள் உள்ளன.

    * வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான சிகிமிக் அமிலம் அன்னாசிப் பூவில் உள்ளது. இது 'ஆசெல்டாமிவிர்' (டாமிபுளூ) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தாக பன்றி காய்ச்சலுக்கு தரப்படுகிறது.

    * இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளாகும். இது இதயத்தின் மென்மையான தசைகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது, திசுக்களில் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றுகிறது.

    • ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது.
    • ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்க்கலாம்.

    ஒரு மனிதனின் சராசரியான ரத்த அழுத்த அளவாக 120/80 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கீழாக செல்வது குறைந்த ரத்த அழுத்தம் என்றும், அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    செம்பருத்தி இதழ் 5, வெண் தாமரை இதழ் 5, எலுமிச்சை பழச்சாறு போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.

    சீரகம், கொத்தமல்லி போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

    வெண்தாமரை சூரணம் ஒரு டீஸ்பூன் காலை, இரவு சாப்பிடலாம்.

    சீரகம் சேர்ந்த அசைச்சூரணம் ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    இதயத்தை வலுப்படுத்த மருதம்பட்டை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை சாப்பிடலாம்.

    வெள்ளைப்பூண்டு 5 பல் எடுத்து சுட்டு அல்லது தண்ணீரில் வேக வைத்து சாப்பிடலாம்.

    தூக்கமின்மைக்கு ஒரு கிராம் கசகசாவை அரைத்து பாலில் கலந்து காய்ச்சி தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக குடிக்கலாம்.

    சின்ன வெங்காயம் 5 எடுத்து சிறு துண்டுகளாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வர பல்லாண்டு வாழலாம்.

    • வாய்ப் புண் இருந்தால் சரியாக சாப்பிட முடியாது.
    • காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    பல்வேறு உடல் பிரச்சனைகளால் வாய்ப்புண் வருகிறது. வாய்ப் புண் இருந்தால் சரியாக சாப்பிட முடியாது. குறிப்பாக சூடாகவோ அல்லது காரமாகவோ சாப்பிட முடியாது. இதிலிருந்து மீள சித்த மருத்துகள் துணைபுரியும்.

    1) திரிபலா பொடி (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)- இதை இளம் சூடான தண்ணீரில் கலந்து வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

    2) நெல்லிக்காய் லேகியம் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும், இதில் வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால் விரைவில் வாய்ப்புண் ஆறும். ஏலாதி சூரணம் -1 கிராம், சங்கு பற்பம்-200 மிகி சேர்த்து நெய்யில் சாப்பிட வேண்டும்.

    3) வெங்கார மது மருந்தை வாய்ப்புண் உள்ள இடங்களில் போட வேண்டும்.

    மேலும், காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மாதுளம்பழம், நெல்லிக்காய், சுண்டை வற்றல், மோர் , தயிர், சின்ன வெங்காயம் இவைகளை அதிகளவில் எடுக்க வேண்டும். இரவு நெடுநேரம் கண்விழித்து டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும்.

    • இன்றைய அவசர உலகில் தூக்கம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
    • சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

    தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு பெறலாம் என சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் தெரிவித்தார். வேலூரை சேர்ந்த சித்த மருத்துவரும், இம்ப்காப்ஸ் இயக்குனருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-

    நம்மில் பலர் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று உடல்மீது அக்கறை காட்டுவோம். உடல் மட்டுமல்ல, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்பது பலருக்கு தெரியவில்லை. உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக இருக்கும். அதற்கு தூக்கம் மிகவும் இன்றியமையாததாகும். இன்றைய அவசர உலகில் தூக்கம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நன்மைகளை பெற்றுத்தந்தாலும், அதன் மூலம் பலர் தூக்கமின்றி தவிக்கிறார்கள்.

    மன அழுத்தம் அதிகரித்ததன் விளைவாக தூக்கம் வருவதில் சிரமம், ஆழ்ந்த தூக்கம் வருவதில் சிரமம், தூக்கத்தின்போது இடையிடையே கண் விழிப்பது என பிரச்சினை தொடர்கிறது. தூக்கமின்மைக்கு இதுபோன்ற மனரீதியான காரணங்கள் மட்டுமன்றி தைராய்டு பிரச்சினை, அதிக ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரை நோய், ஆஸ்துமா, நடுக்கு வாதம், பெண்களை பாதிக்கும் மெனோபாஸ் காலத்துக்கு பிறகு வரக்கூடிய ஹார்மோன் மாற்றம் என பல காரணங்களை சொல்லலாம். அதிக மதுப்பழக்கம், மன உளைச்சல், மனப்பதற்றம் போன்ற காரணங்களாலும்கூட தூக்கமின்மை ஏற்படுகிறது.

    தூக்கமின்மை பிரச்சினையானது மூளைக்கு போதுமான அளவு பிராணவாயு சேமிப்பு இல்லாததால் ஏற்படுகிறது. மனித மூளையில் 400 ஆயிரம் கோடி பிராணவாயு உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. அதில் ஏற்படும் பற்றாக்குறையால்தான் தூக்கமின்மை ஏற்படுகிறது. மெலடோனின் என்ற ஹார்மோனின் உற்பத்தி இரவில்தான் நடக்கும். அதன் உற்பத்தி குறைவதால் தூக்கமின்மை ஏற்படுகிறது என்று நவீன மருத்துவம் கூறுகிறது. சித்த மருத்துவத்தில் தியானம், பிராணயாமம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் மெலடோனினை இயல்பாக உற்பத்தி செய்ய முடியும். அதற்காகத்தான் சித்த மருத்துவத்தில் உடல் நோய், உள்ள நோய் என இரண்டையும் இணைக்கும்விதமாக சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

    கீரை

    அதிலும் குறிப்பாக வில்வம், செம்பருத்தி போன்ற மூலிகைகளுக்கு அதற்கான அபூர்வ சக்தி இருக்கிறது. அமுக்கரா, சடா மஞ்சில் போன்றவற்றுக்கு தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்யும் சக்தி உள்ளது. எண்ணெய் குளியலுக்கு வாதத்தை சமநிலை செய்யும் தன்மை உள்ளது. எனவே, தவறாமல் வாரத்தில் 2 நாள் எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். ஜாதிக்காய் தூளை வெந்நீரில் கலந்து குடிப்பது, தேனில் குழைத்துச் சாப்பிடுவது மற்றும் இரவில் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிடுவது, அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து சாப்பிடுவதும் தூக்கமின்மையை போக்கும். வல்லாரை கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம், பிரம்மி நெய் பயன்படுத்தலாம். தூக்கம் வர வேண்டுமென்றால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் தூக்கமின்மை பிரச்சினைக்காக தொடர்ந்து மருந்துகள் எடுக்கக் கூடாது. தூக்கமின்மை ஏன் ஏற்பட்டது என்ற மூலகாரணத்தை கண்டறிய வேண்டும். தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களுக்கு எதனால் இந்தப்பிரச்சினை ஏற்பட்டது என்று கேட்டறிந்து மருத்துவம் செய்வது சிறந்த தீர்வு தரும்.

    மூலிகை தலையணை

    தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து விடுபட மூலிகைத் தலையணைகூட உதவுகிறது. நொச்சி இலை, வேப்பிலை, புங்கை இலை, மருதாணி இலை உள்ளிட்ட சுமார் 10 மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தலையணையில் தலை வைத்து இரவில் தூங்கினால் ஆழ்ந்த தூக்கம் வரும். குறிப்பாக இதில் சேர்க்கப்பட்டுள்ள மருதாணி இலை மற்றும் புங்கை இலை போன்றவை மனதை அமைதிப்படுத்தக்கூடியவை என்பதால் இந்த மூலிகைத் தலையணை நல்ல தீர்வு தரும். இது அல்லாமல் மருதாணிப்பூக்களை தலையணை அருகே வைத்து தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வரும். வெள்ளைப்பூண்டு பற்களை நசுக்கி தலையணை அருகே வைத்தாலும் தூக்கம் வரும். ஆக்சிஜனை அதிகம் வரவழைக்கும் தாவரங்களை நாம் தூங்கும் அறையில் வைத்தாலும் தூக்கம் வரும்.

    உடல் சூடு

    தூக்கமின்மை பிரச்சினைக்கு உடல் சூடும்கூட காரணமாக இருக்கிறது. ஆகவே, உடல் சூடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிலரது உடல்வாகு சூடு நிறைந்து காணப்படுவதால் அவர்கள் எண்ணெய் குளியல் செய்வது நல்லது. இரவு தூங்கும்போது தொப்புளில் எண்ணெய் வைத்துக்கொண்டு தூங்கினால் சூட்டைக் குறைப்பதுடன் ஆழ்ந்த தூக்கம் வர உதவும். உள்ளங்கை மற்றும் கால் விரல்களில் மருதாணியை அரைத்துப்பூசினால் உடல் சூடு குறைவதுடன் தூக்கம் வரும். இரவு தூங்கச் செல்வதற்கும் முன் பாலில் பூண்டுப்பற்களை வேக வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டாலும் தூக்கம் வரும்.

    கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடிப்பது, கசகசா துவையல் சாப்பிடுவதும் தூக்கம் வர உதவும்.

    இரவு உணவுடன் வேக வைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிடுவதும்கூட தூக்கமின்மை பிரச்சினையைப் போக்க உதவும். இதுபோன்று இன்னும் பல்வேறு எளிய முறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி தூக்கமின்மை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.
    • அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.

    ஸ்ட்ராபெர்ரியில் இருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிற மூட்டியாகவும் பயன்படுகிறது.

    நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நிறைந்திருக்கின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழம் சுவையாக இருப்பதுடன், தோலின் வறட்சியைப் போக்கும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யும் மற்றும் செல் அழிவைத் தடுக்கும் பணிகளைச் செய்கிறது. ஆம்...! அதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுப்படுத்துகிறது.

    ஸ்ட்ராபெர்ரி பழத்தில் செல் அழிவைத் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடெண்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி-6, வைட்டமின் கே, அயோடின், செலினியம் போன்ற சத்துப்பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

    ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபிளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன. இவையும், உடலை வலுவாக்குகின்றன.

    5 பழங்களில் 250 மி.லி. அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவுகளிலும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.

    இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் முகத்தில் தோன்றும் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க ஸ்ட்ராபெர்ரி, சிறப்பான மருந்து.

    • உணவுடன் சேர்த்து தண்ணீர் குடிக்கக்கூடாது.
    • தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகிறது.

    ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியமானதோ அப்படித்தான் எந்த நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது, மற்றும் இது ஊட்டச்சத்துக்களை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கடத்தி சென்று உடலை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. அதுவே நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உங்களுக்கு நீரிழப்பு, உடல் சோர்வு, தலைவலி, மலசிக்கல், சிறுநீர் பாதை நோய்த்தொற்று, மூட்டு மற்றும் தசைப் பிரச்சனைகள் போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். ஆயுர்வேதத்தின்படி தண்ணீர் எப்போது? எவ்வளவு? குடிக்க வேண்டும் என்கிற விதிமுறைகளும் உள்ளது.

    ஆயுர்வேதத்தின்படி, உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அல்லது உங்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது என்று கூறப்படுகிறது. ஒல்லியாக இருப்பவர்கள், உடல் எடை அதிகரிக்க முயற்சிப்பவர்கள் உணவு உண்ட 30 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், உடல் பருமனாக இருப்பவர்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. ஆனால் சிலர் மருத்துவர்கள் உணவுக்கு முன் தண்ணீர் குடித்தால் செரிமான கோளாறு ஏற்படும் என்றும், உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு மிக குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

    உணவுடன் சேர்த்து தண்ணீர் குடிக்கக்கூடாது, உணவுடன் ஒரு கிளாஸ் அல்லது அதற்கு மேல் தண்ணீர் குடித்தால் நமது ஜீரண திறனில் பாதிப்பு ஏற்படுகிறது மற்றும் இன்சுலினின் அளவிலும் மாறுபாடு ஏற்படும், உணவு சாப்பிடும்போது தேவைப்படும் பட்சத்தில் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கலாம் மற்றபடி உணவு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் நல்லது. எப்போதும் உணவு உண்ட ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது சிறந்தது என்று கூறப்படுகிறது, ஏனெனில் இதன் மூலம் உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்ளும். மேலும் எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், மேலும் சோர்வாக உணரும்போது தண்ணீர் குடித்தால் புத்துணர்வு கிடைக்கும்.

    ×