என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது.
    • கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள்.

    நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது.

    இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

    தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது. ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன. எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    • குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன.
    • அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான்.

    வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான் புதுப்புது ரெசிபிக்களை விதம் விதமாக செய்து கொடுத்தாலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பதில் என்னவோ வேண்டாம் என்பது தான். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய சில வழிகள் உள்ளன. எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.

    * குழந்தைகள் தேவையற்ற நொறுக்கு தீனியை அடிக்கடி உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வை பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட்ட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்கு தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.

    * குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுககம் நேரத்தில் உணவு கொடுத்தால் முழுமையாக சாப்பிடுவார்கள்.

    * குழந்தைகளுக்கு பிடித்த உணவு அளிப்பது மட்டுமல்ல குழந்தைகளை கவரும் வகையில் பல நிறங்களிலும் வடிவங்களிலும் சாப்பிடும் தட்டுகள் இருக்கின்றன. அதில் உணவு வழங்கினால் சாப்பிடும் ஆர்வம் மேலோங்கும்.

    * குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவை வெறுக்கிளார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்

    * உடலுழைப்பு ஏதுமின்றி வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடைத்து வைக்காமல் களைத்து போகும் வரை குழந்தைகளை ஓடி, ஆடி விளையாட ஆனுமதியுங்கள். உடல் களைத்து போனால் தானாக பசி எடுத்து உணவை ஆர்வமாக உண்ணுவார்கள்.

    * உணவை எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கினால் குழந்தைகளுக்கு அதன் மேல் வெறுப்புதான் உண்டாகும். அதனால் கொடுக்கும் உணவை புதுமையாகவும், அவர்களுக்கு. பிடித்த வகையில் அழகுபடுத்தியும் வழங்கலாம்.

    * எப்போதும் அவர்களிடம் ஓரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சி பேசாதீர்க்ள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்து கொள்ள நீண்ட நேரம் எடுத்து கொள்வார்கள்.

    * குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு விஷயங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்கு கூறிக்கொண்டே உணவு கொடுங்கள். இது குழந்தைகளுக்க குடும்பத்தின் மீதான அன்பை அதிகரிக்கும். கதை கேட்கும் ஆர்வத்தில் உணவையும் முழுமையாக உண்பார்கள். தவிர குழந்தைகளுக்கு மொபைல், டிவி பழக்கத்தை குறைத்து நல்ல உறக்கத்தை கொடுக்க வேண்டும். அது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    * இது போன்று சிறுசிறு யுத்திகளை கையாண்டாலே குழந்தைகளை சாப்பிட வைப்பது வெகு சுலபம்.

    • அதிக சத்தம் குழந்தைகளின் காதுக்கு எதிரி தான்.
    • அதிக காய்ச்சலாலும் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறையக்கூடும்.

    உங்கள் குழந்தையை அடிக்கடி தாக்கும் ஈ.என்.டி. பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ் வடிதல் ஏற்படும். மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்கு செல்லும் யுஷ்டெசியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நோய்த்தொற்று உண்டாவதே காரணம்.சளி இல்லாத போதும் கூட குழந்தைகளுக்கு தாங்க முடியாத காதுவலி உண்டாகலாம். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளின் காதை சுத்தம் செய்வதால் ஏற்படும் எழுச்சி எனப்படும் கட்டி, குருமி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு கடுமையான காதுவலி ஏற்படலாம். குழந்தைகளின் காது சவ்வு மிகவும் சன்னமாகவும் மிருதுவாகவும் இருக்கும். காதில் அடித்தாலோ 'சவ்வு கிழிதல்' ஏற்பட்டு நோய்த் தொற்று பரவலாம்.

    அதிக சத்தமும் குழந்தைகளின் காதுக்கு எதிரிதான். வெடி சத்தம், பெரிய மணியோசை, பட்டாசு சத்தம் ஆகியவை காதுக்கு மிக அருகில் கேட்பதால் சவ்வு கிழிதலுக்கு வாய்ப்பு உண்டு. அதிக காய்ச்சலாலும் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறையக்கூடும். பட்ஸ் பயன்படுத்தி காதில் உள்ள அழுக்கை எடுக்க முயற்சிப்பதாலும் கேட்கும் திறன் குறையலாம். காதுகளை மென்மையாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைக்கு காது வலிக்கிறது என்பதற்காக காதில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது தவறு. அந்தப் பழக்கம்கூட குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளும் வீடு அருகே விளையாடும் குழந்தைகளும் புறச்சூழல் காரணமாக அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள். சளித்தொல்லையால் அவதிப்படுவார்கள். மூக்குப்பகுதியில் நமைச்சல் போலத் தோன்றும். தும்மல், நீர் வடிதல் என சளி தன் வில்லத்தனத்தை குழந்தைகளின் மூக்கின் மீது வன்மையாகக் காட்டும். அதனால் ஏற்படும் மூக்கடைப்பு, நீர்வடிதல் போன்ற பிரச்னைகளால் சாப்பிடும் உணவை விழுங்க முடியாமல் தவிப்பார்கள்.

    தூங்கும்போதும் மூக்கடைப்பு ஏற்படுவதால் வாயால் மூச்சு விடுவார்கள். தொண்டை வறண்டு அடிக்கடி தாகம் எடுக்கும். அதனால் போதுமான தூக்கமும் உணவும் இல்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள். காது, மூக்கு, தொண்டைப் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் சளி அதிகரிக்கும்போது மூன்றிலும் நோய்த்தொற்றுப் பரவும்.சளி, நடுத்தண்டுவட வளைவு, சதை வீக்கம் மற்றும் அடினாய்டு போன்ற தொல்லைகளால் மூக்கடைப்பு உருவாகி மூச்சு விட சிரமப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு 'சில்லி மூக்கு உடைதல்' பிரச்னை ஏற்படலாம். பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது எங்காவது இடித்துக்கொண்டு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வெளிப்படும்.

    அதிக வெப்பம், வேதிப்பொருள், அடிக்கடி சளிப்பிடித்தல், குழந்தைகள் விரலால் மூக்கை நோண்டுதல் ஆகிய காரணங்களால் மூக்கின் சிறு ரத்தக்குழாய்களில் ரத்தம் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. இதைப் பார்த்து குழந்தைகள் பயப்படுவார்கள். இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

    சில நேரங்களில் தொண்டையில் ஏற்பட்ட வலியால் குழந்தை எச்சிலை விழுங்கக்கூட சிரமப்படும். டான்சில் கட்டி இன்ஃபெக்ஷனால் காய்ச்சல் ஏற்படலாம். முறையாக பதப்படுத்தப்படாத உணவுகள், குளிர்பானங்களை உட்கொள்வதாலும் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். சாலையோர குளிர்பானம், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவற்றில் கிருமி இருந்தால் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொந்தரவு செய்யும்.

    குரல்வளை மற்றும் மூச்சுக்குழாய் பகுதியில் விஷக்கிருமிகள் சேருவதால் இருமல், குரல் மாற்றம், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் குழந்தைகளின் சுவாசம் தடைப்பட்டு உயிருக்கே ஆபத்து ஆகலாம். தொண்டையில் சிறு பிரச்னை உருவாகும்போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் தீர்வு காணலாம்.

    பள்ளி செல்லும் குழந்தைகளை இந்தப் பிரச்னையிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர், ஆசிரியர் - இருதரப்பினரும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். காதிலோ, மூக்கிலோ நுழைக்கும்படியான, வாயில் போட்டு விழுங்கும்படியான பொருட்களை குழந்தைகள் கைகளில் வைத்திருக்க அனுமதிக்கலாகாது.

    காது, மூக்கில் பொருட்களை போடும் போது அடைப்பு, ரத்தம் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வாயில் போட்டு விழுங்கும் போது காசு, கொட்டை வகைகள் போன்றவை உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாயில் சென்று அடைபடும். மூச்சுக்குழாயில் சென்று அடைக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து. சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், காதுவலி, தொண்டை வலி போன்றவை வராமல் பாதுகாக்க வேண்டும்.

    ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.

    • வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.
    • வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும்.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது அவசியமான ஒன்றாகிவிட்ட இச்சூழலில், மிகவும் சவாலான ஒரு விஷயம் உண்டென்றால் அது டீன் ஏஜ் பிள்ளைகளை சமாளிப்பதுதான். தனிமைக்குடித்தனங்களால் ஏற்பட்டு விட்ட பெரியவர்களின் வெற்றிடம் பிள்ளைகளை அதிகம் தனிமைப்படுத்திவிடுகிறது.

    கவர்ந்திழுக்கும் டிஜிட்டல் உலகமோ பல வலைகளை விரித்து வைத்து, அவர்களை விழுங்க காத்திருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் நம் டீன் ஏஜ் பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எப்படி? பக்குவமாக கையாள்வது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.

    ''டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால், கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கலை. வளரிளம் பருவம் என்பது இரண்டும்கெட்டான் பருவம். சிறுவயது வரை ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் எலியும் பூனையுமாக இருப்பார்கள். வளரிளம் பருவத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அது அந்த வயதிற்கான உயிரியல் இயல்பு.

    இதன் காரணமாக அந்த வயதில் நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். தன்னிடம் இருக்கும் ஆடைகள் துவங்கி, தான் வைத்திருக்கும் சின்னச்சின்னப் பொருட்கள் கூட உயர்ந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

    தனக்கென்று ஒரு அறை இருக்க வேண்டும் தன்னுடைய அறையை இப்படி இப்படியெல்லாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் தன் நண்பர்கள் தன்னிடம் மரியாதையாக இருப்பார்கள் என்று நினைக்கக் கூடிய வயது அது.

    உடல்ரீதியான உணர்வு ரீதியான குழப்பங்கள், அச்சங்கள், கேள்விகள் எல்லாம் அவர்களுக்குள் அப்போது உச்சகட்டத்தில் இருக்கும்.

    அதுமட்டுமில்லாமல் அந்த வயதில் தான் அவர்கள் தன் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்கள் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். அதிலும் அம்மாவிடம் பிள்ளைகள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.படிப்பு, வேலை மற்றும் எதிர்காலம் குறித்தும் அவர்களுக்கு பயமும் குழப்பமும் இருக்கும்.

    இதனால் டீன் ஏஜ் காலத்தில் படிப்பு என்பதே பிள்ளைகளுக்கு மன அழுத்தம் தருவதாக இருக்கிறது. நிறைய படிக்க, எழுத வேண்டி இருக்கிறது. அத்துடன் நிறைய வேலை பளு (ப்ராஜெக்ட்ஸ், அசைன்மென்ட்ஸ்), புத்தக சுமை என கூடுதல் தொல்லைகள் வேறு. டீன் ஏஜ் என்பது அவர்களின் வாழ்வை சரியாக கட்டமைப்பதற்கான காலகட்டம். எனவே, இந்த வயதில் சரியான வளர்ப்பு முறை என்பது அவசியம்.

    வளரிளம் பிள்ளைகளை கண்காணிக்கவும் வேண்டும். அதே சமயம் அவர்கள் எதிர்பார்க்கும் சில சுதந்திரங்களை வழங்கவும் வேண்டும். பள்ளி விட்டு வந்ததும் டியூஷன் போன்ற வகுப்புகளுக்குச் செல்வார்கள். அவர்கள் எந்த நேரத்திற்கு எந்த வகுப்பிற்குச் செல்கிறார்கள். எத்தனை மணிக்கு அது முடியும் என்ற அடிப்படைத் தகவல்கள் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு போய் சரியான நேரத்திற்கு வீடு திரும்புகிறார்களா என கண்காணிக்க வேண்டும்.

    எப்போது பார்த்தாலும் வெளியே உணவுகளை வாங்கித் தராமல் எளிமையான உணவாக இருந்தாலும் வீட்டிலேயே சுவையாக செய்து தர வேண்டும். அதை அவர்கள் சாப்பிடுகிறார்களா என பார்க்க வேண்டும். ஜங் ஃபுட் எனப்படும் உணவு வகைகள் அவர்களின் உணர்வுகளை மாற்றி அமைக்கும். பிராய்லர் கோழிக்கறியும் கொடுக்காதீர்கள்.

    பிள்ளைகள் நம்மிடம் அன்பான பார்வை, ஸ்கின் டச் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள். இதுவும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வகை. அவர்களிள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் கண்களை பார்த்து புன்னகையுடன் இன்று பள்ளியில் என்ன நடந்தது என கேட்கலாம். தலையை தடவிக்கொடுக்கலாம். தோள்களை தட்டிக் கொடுக்கலாம். அந்த அன்பு மிகுந்த நிமிடங்களுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். தங்கள் உணர்வுகளை உங்களிடம் கொட்டுவதற்காக அவர்கள் உங்கள் வரவை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.

    முக்கியமாக எந்நேரமும் தொலைக்காட்சி மற்றும் அலைபேசி என மூழ்க விடாமல், உறவினர்களுடன் பழக விட வேண்டும். நம் உறவினர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும. பக்கத்து அக்கத்து மனிதர்களுடன் பழக விட வேண்டும். அப்போது தான் இயல்பான குணங்கள் வளரும். மற்ற பிள்ளைகளுடன் விளையாட விட வேண்டும்.

    ஏதாவது விளையாட்டு வகுப்புகளில் சேர்த்து விடலாம். இதனால் அவர்களுக்கு உடல்நலம் குறித்த கவனம் வரும். மனம் வேறு சிந்தனைகளில் சிதறாது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும், சரியான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என விளையாட்டானது ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் ஒரு விஷயமாகவும் இருக்கும்.

    அதேபோல் விளையாட்டில் தோற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் ஏற்படும். வெற்றி, தோல்வி எல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்பதை உணர ஆரம்பிப்பார்கள். விளையாட்டினால் மனம் உற்சாகமடையும். இந்த வயதில் அடிக்கடி ஏற்படும் கோபம் குறையும். யதார்த்தமாக மற்றவர்களுடன் பழகக் கற்றுக் கொள்வார்கள்.

    பள்ளிகளில் ஒழுக்கத்திற்கான வகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் தற்போது நடத்தப் பெறுவதில்லை. அதனால் நாம்தான் வீட்டில் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டும். நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். எனவே, இந்த சமூகம் பற்றிய பொறுப்பு கலந்த உணர்வு இருக்க வேண்டும். இந்த சமூகம் முழுக்க பல நூறு கண்கள் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    திட்டிக் கொண்டிராமல், புலம்பாமல் அன்பாக அரவணைத்து உங்கள் அக்கறையை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதிகமாக நாம் அவர்களை பழித்துக் கொண்டே வந்தோமானால் நம்மை பழி வாங்குவதாக நினைத்து அவர்களே அவர்களை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள். ஒரு விஷயத்தைப் பேசி பேசி சண்டையிடாதீர்கள்.

    எல்லோரிடமும் அவர்களை பற்றி குறைக் கூறிக் கொண்டிருக்காதீர்கள். சதா நாம் அவர்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு சில பிள்ளைகள் தங்கள் உடலில் பிளேடால் அறுத்துக் கொள்வது போன்று தங்களை தாங்களே வருத்திக் கொள்வார்கள். சரியான அரவணைப்பு இல்லாதபோது வெளியுலகிலும் அதாவது பள்ளி, கல்லூரிகளிலும் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தற்கொலை போன்ற விபரீதமான முடிவெடுப்பார்கள்.

    பிள்ளைகளாக இருந்தாலும் அவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேளுங்கள். அதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். அவர்கள் சொல்லும் விஷயம் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். நம் பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்களும் ஒரு உயிர். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது. எனவே, அவர்களின் வார்த்தைகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் மதிப்புக் கொடுங்கள். அது மிகவும் அவசியம்.

    ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? கோபப்படுகிறார்கள்? வாதிடுகிறார்கள் என அவர்களின் பிரச்னைகளை உற்றுக் கவனித்து அலசி ஆராய்ந்து பாருங்கள். பாக்கெட் மணி என்ற பெயரில் நிறைய பணத்தை அவர்கள் கைகளில் புழங்க விடாதீர்கள்.

    நாம் வீட்டில் இல்லாமல், அவர்களை பார்த்துக்கொள்ளாமல் வேலைக்குப் போகிறோம் என்ற குற்றவுணர்வின் காரணமாக அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கி தருவது கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளித் தருவது எல்லாம் வேண்டாம். அவர்களின் எதிர்காலத்திற்காகத்தான் வேலைக்குப் போகிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

    அவர்களின் நண்பர்கள், தோழிகள் யார்? யார்? என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களின் பின்புலத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் தீய சகவாசம் அவர்களை எந்த தீய எல்லைக்கும் கொண்டு விட்டுவிடும். சில வீடுகளில் அதிகப் பாசம் காட்டுகிறேன் என்று அதிகமாக பொத்தி பொத்தி வைப்பார்கள். நாய்க்குட்டியை எந்நேரமும் தடவிக் கொடுப்பது போல செய்வார்கள். அதுவும் தவறு. அது அவர்களை சோம்பேறியாக்கலாம். கோழைகளாக்கலாம். அதனால் அவர்களையும் சில பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும்.

    வீடு என்பது நிம்மதியான விஷயம். எங்கு சென்றாலும் என் அப்பா அம்மாவை நோக்கி, வீடு நோக்கி நேரத்திற்கு நான் சென்று விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு வீட்டை உற்சாகமாக வைத்திருங்கள். குழந்தைகளை வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறை வெளியே அழைத்துச் செல்லலாம். பிள்ளைகளின் முன் பெற்றவர்கள் சண்டையிடாதீர்கள். கோபதாபங்கள் இருந்தாலும் பிள்ளைகளின் முன் கடுமையான வார்த்தைகள், விவாதங்கள் வேண்டாம். அதேபோல் அந்தரங்கமும் அப்படித்தான்.

    எல்லாவற்றிற்கும் மேல் அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். கண்காணிப்பது வேறு. நம்பிக்கை இன்மை வேறு. அவர்கள் செய்யும் எல்லா விஷயத்தையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்காதீர்கள். அதே சமயம் அவர்களை கவனித்துக் கொண்டும் இருங்கள். விட்டுப்

    பிடியுங்கள். பட்டுப்புழு வண்ணத்துப்பூச்சியாவது அழகான ரகசியமான ஒரு செயல்.

    அது போல் பல பல மாற்றங்கள் அவர்கள் மனதிலும் உடலிலும் ஏற்படும் இந்த காலகட்டம் மிக அழகானது. ஆச்சரியமானது. அவர்களை நாம் இந்த சமயத்தில் அழகாக அனுசரனையாக பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அவர்கள் நம் பிள்ளைகள் தானே. அவர்களை நாம் நேசிக்காமல் வேறு யார் நேசிப்பார்கள்.

    பெற்றவர்களாகிய நாம் அவர்களின் சின்ன சின்ன தவறுகளை நாம் பொறுத்துக் கொள்ளா விட்டால் யார் பொறுப்பார்கள். அந்த தவறுகளில் இருந்தும் அவர்களை மீட்டெடுக்க வேண்டியதும் நம் பொறுப்புதானே. நாமும் இந்த வயதைக் கடந்து வந்திருப்போம். நாமும் சில தவறுகளை புரிந்திருப்போம் அதனை உணர்ந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அன்பு செலுத்துங்கள். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள்!''

    • குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்
    • குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம். இதில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல் நோய்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    1. பல் சிதைவு:

    பல் சிதைவு என்பது இந்தியா முழுவதும் குழந்தை பருவத்தினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் பல் நோய் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஐந்து முதல் 11 வயது வரையிலான 20 சதவீத குழந்தைகளில் குறைந்தது ஒரு குழந்தையாவது சிதைந்த அல்லது அழுகும் பல் இருக்கப் பெற்று, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. பற்சிதைவு என்பது வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து இத்தகைய பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. நாம் உண்ட உணவின் துணுக்குகள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது. இவைகள் நமது பற்களின் எனாமல்லை சுரண்டி அதிக அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதில் பற்களில் உருவாகின்றன. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள், குக்கீஸ், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றினால் பற்களில் அதிக சிதைவு ஏற்படுகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், பல் சிதைவு என்பது தடுக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பற்சிதைவை சரியான பல் துலக்குதல் நுட்பங்கள் மற்றும் ஒரு பல் மருத்துவரின் முறையான சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம். மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைடு பற்பசையுடன் உங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க செய்ய வேண்டும், அதிலும் படுக்கைக்கு முன் பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    2. வாய் துர்நாற்றம்:

    இந்த வாய் துர்நாற்றம் ஹலிடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது குறிப்பிட்ட வயதினரை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த பாக்டீரியா காலனிகள் நமது வாயில் தங்கியுள்ள உணவு, திரவம் மற்றும் பிளேக் ஆகியவற்றை உண்கின்றன. அவை சாப்பிடும்போது, ஹைட்ரஜன் சல்பைடை உற்பத்தி செய்கின்றன, இதனால்தான் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. பெரியவர்களைப் போலவே, காலையில் குழந்தைகள் எழுந்தபின், துர்நாற்றம் சகஜமாக ஏற்படுகிறது. இருப்பினும், உங்கள் குழந்தையின் துர்நாற்றம் நாள் முழுவதும் நீடித்தால், அது ஒரு பெரிய சிக்கலைக் கொடுக்கும். இந்த வாய் துர்நாற்றத்தை தடுப்பதற்கு சரியான பல் சுகாதாரம் பேணுவதே சிறந்த வழியாகும். பாக்டீரியா எதிர்ப்பு மவுத்வாஷ் பயன்படுத்துவது வாய் துர்நாற்றத்தை குறைக்க உதவும், மேலும் நாக்கைத் துலக்குவது வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும்.

    3. பல் கூச்சம் :

    குழந்தைகளுக்கு ஏற்படும் மற்றொரு பொதுவான பிரச்சினை பல் கூச்சம் ஆகும். சூடாகவோ அல்லது குளிர்ந்த உணவுகள் மற்றும் திரவங்கள் ஆகியவற்றை குழந்தைகள் எடுத்துக்கொள்ளும்போது அது அவர்களுக்கு எரிச்சலையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தினால், அவர்களுக்கு பல் கூச்சம் இருப்பதை நாம் உணரலாம். சில நேரங்களில், குளிர்ந்த அல்லது சூடான காற்றை சுவாசிப்பது கூட அவர்களுக்கு வலியை ஏற்படுத்தும். பல் கூச்சம் என்பது ஒரு மோசமான அறிகுறி அல்ல என்றாலும், அவை மிகவும் கடுமையான பல் பிரச்சினையை சுட்டிக்காட்டக்கூடும்.

    4. பெருவிரல் சூப்புதல்:

    பொதுவாக குழந்தைகள் தனது பெரு விரலை வாயில் வைத்து சூப்பினேன் வழக்கமாக கொண்டிருக்கும். நிரந்தர பற்கள் வளர தொடங்கும் போது குழந்தைகள் இன்னும் பெரு விரலை சூப்பிக் கொண்டிருந்தால், அது பலவிதமான பிற சிக்கல்களை ஏற்படுத்தும். பெரு விரலை சூப்புவது சாதாரண வாய்வழி வளர்ச்சியை சீர்குலைத்து, பற்களின் சீரமைப்பு மற்றும் வாயின் மேல்பகுதி அமைப்பை பாதிக்கும். குழந்தைகளுக்கு இந்த பழக்கம் தொடர்ந்தால், உங்கள் பல் மருத்துவரைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனை பெறலாம். ஒரு அனுபவமிக்க பல் மருத்துவர் கூடுதல் உதவிகளையும், ஆதரவையும் வழங்குவார். மேலும் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த உங்கள் குழந்தையுடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த ஆலோசனையையும் வழங்குவார். இந்த ஆலோசனை வழங்குவதற்கு என சென்னையில் பல குழந்தைகள் பல் சிகிச்சை மையங்கள் உள்ளன.

    5. பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள்:

    ஈறு நோய் அல்லது ஈறு அழற்சி என்பது திசுக்களின் அழற்சி காரணமாக ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வாய் வழி மற்றும் பல் சுகாதாரம் மற்றும் பிளேக் கட்டமைப்பால் ஏற்படுகிறது. மேலும் இது தொடர்ந்தால் எலும்பு பாதிப்பு மற்றும் பல் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது . பற்களின் அடிப்பகுதியில் பிளேக் மற்றும் டார்டார் வைப்புக்கள் உருவாகும்போது, அவை ஈறுகளை பாதிக்கத் தொடங்குகின்றன. ஈறு அழற்சியின் ஆரம்ப கட்டங்களில், ஒரு குழந்தையின் ஈறுகள் பெரும்பாலும் வீங்கி, சிவப்பு நிறத்தில் இருக்கும், மேலும் அவை பற்களிலிருந்து விலகி, மிதந்த பின் எளிதில் இரத்தம் கசியும். ஈறு நோயினால் வாய் துர்நாற்றம் மற்றும் குழந்தையின் வாயில் எப்போதும் ஒரு மோசமான சுவை இருக்கும். ஈறுகளில் ஏற்படும் நோய்களை எளிதாக தடுக்க முடியும். தினசரி இரண்டு முறை சரியான முறையில் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல் மற்றும் முறையான பல் மருத்துவர் ஆலோசனை பெறுதல் போன்ற எளிய வழிமுறைகளால் இதனை தவிர்க்கலாம்.

    6. ப்ரூக்ஸிசம்:

    பற்களை ஒன்றோடு ஒன்று தேய்ப்பது ப்ரூக்ஸிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் பள்ளி வயது குழந்தைகளிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக திகழ்கிறது. 10 குழந்தைகளில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பற்களை தேய்க்கவும் அல்லது பற்களை எடுக்கவும் செய்வார்கள். சில நேரங்களில் ஒரு குழந்தை தானாகவே ப்ரூக்ஸிஸத்தை உருவாக்குகிறது, ஏனெனில் அவற்றின் மேல் பற்கள் அவற்றின் கீழ் பற்களுடன் சீராக இருப்பதில்லை. இதனால் சில நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு பற்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் குழந்தைகள் வலியின் விளைவாக பற்களை தேய்ப்பார்கள். பொதுவாக ப்ரூக்ஸிசத்திற்கு என எந்த தனிப்பட்ட சிகிச்சையும் தேவையில்லை. குழந்தைகள் வளர்ந்து வரும் போது இந்த பிரச்சனை தானாக தற்போது. இருப்பினும் இந்த பழக்கம் தொடர்ந்தால், அது படிப்படியாக பற்களை சேதப்படுத்த கூடும். இதன் விளைவாக கடுமையான பல் வலியும் ஏற்படக்கூடும்.

    7. கேங்கர் சோர்ஸ் :

    கேங்கர் சோர்ஸ் என்பது சிறிய வகை புண்கள் ஆகும். இந்த புண்கள், வாயினுள், ஈறுகளில் அல்லது நாக்கில் உருவாகும். பொதுவாக, இந்த புண்கள் ஒரு சிவப்பு எல்லையால் சூழப்பட்ட சாம்பல் அல்லது வெள்ளை மையத்தைக் கொண்டு இருக்கும். காய்ச்சல் கொப்புளங்கள் மற்றும் சளி புண்கள் ஆகியவற்றிலிருந்து கேங்கர் புண்கள் முற்றிலும் வேறுபட்டவை. இவை பொருள் குழந்தைகளிடமிருந்து மற்றொரு குழந்தை பரவாது. பெரும்பாலும் இவை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் தானாக மறைந்து போய்விடும். இதனால் ஒரு குழந்தைக்கு தண்ணீர் குடிப்பதையும், உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த புண்கள் தனியாகவோ, கூட்டாகவோ ஏற்படலாம். இந்த புண்கள் உருவாக காரணமாகும் காரணிகளாக கீழ்க்கண்டவற்றை கொள்ளலாம்.,

    1.டயட்

    2.மன அழுத்தம் அல்லது அதிர்ச்சி

    3.அலர்ஜி

    4.ஊட்டச்சத்து குறைபாடுகள்

    5. தொற்று.

    8. குழந்தைகளின் பற்கள் இழப்பு :

    பல குழந்தைகளுக்கு, முதலில் தானாக விழும் பல் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அப்படி தானாக பல் விழுந்த அந்த இடத்தில் விரைவில் புதிய ஒரு பல் வருகை தரக்கூடும், மேலும் குழந்தைகளின் சிறிய "குழந்தை பல்" விரைவில் "வளர்ந்த பற்களால்" மாற்றம் பெற்றுவிடும். பல் இழப்பு என்பது வளர்ச்சியின் இயற்கையான கட்டமாகும். முதல் இழந்த பல் பொதுவாக நடுத்தர முன் பற்களில் ஒன்றாகவே இருக்கும். இது பொதுவாக ஆறு வயதில் ஏற்படக்கூடும். ஒரு குழந்தை 10 முதல் 12 வயது வரை இருக்கும் வரை மோலர்கள் இழக்கப்படுவதில்லை, மேலும் பெரும்பாலான குழந்தைகள் 13 வயதிற்குள் 28 நிரந்தர பற்களின் முழு தொகுப்பையும் பெற்று விடுகிறார்கள். பல குழந்தைகளுக்கு, அவர்களின் முதன்மை அல்லது "குழந்தை" பற்களை இழக்கும் போது அதிக வலி ஏற்படுவதில்லை. இருப்பினும் அது வெளியேற மறுத்தால் அல்லது குழந்தைகளுக்கு அதிக வலியை ஏற்படுத்தினால், உங்கள் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    9. ஒன்றின்மேல் ஒன்றாக வளரக்கூடிய முதன்மை பல்:

    சில நேரங்களில் ஒரு குழந்தைக்கு தானாக வேண்டிய முதன்மை பல் விழாமல் போகலாம். அப்படி ஒரு முதன்மை பல் விழாவிட்டால், அதன் அடியில் இருக்கும் நிரந்தர பல் அதே இடத்தில் முளைத்து வர முயற்சிக்கும். இதன் விளைவாக, ஒரு இடத்தில் இரண்டு பற்கள் இருக்கக்கூடும். அல்லது, மற்ற பற்கள் அதைச் சுற்றி தளர்த்தப்படுவதால் ஒரு குழந்தையின் பல் பல ஆண்டுகளாக திடமாக இருக்கலாம். இந்த நிகழ்வுகளால், குழந்தைக்கு முதன்மையானதை மாற்றுவதற்கு நிரந்தர பல் இருக்காது, எனவே முதன்மை பல் வாயிலிருந்து வெளியே விழாது. இந்த வகை பற்களுக்கு, ஒரு பல் மருத்துவர் முறையாக சிகிச்சை அளித்து முதன்மை பற்களை அகற்றுவார், இதனால் நிரந்தர பல் போட்டி இல்லாமல் வளரும் வாய்ப்பு உருவாகிறது. பற்கள் முழுமையாக வெளிவந்தவுடன் எந்தவொரு தவறான வடிவமைப்பையும் சரிசெய்ய பிரேஸ்களைப் பயன்படுத்தலாம்.

    10.டென்டல் அன்க்ஸியிட்டி:

    டென்டல் அன்க்ஸியிட்டி என்பது நேரடியாக பல் ஆரோக்கியத்துடன் தொடர்புப்படுத்தப்படவில்லை என்றாலும் ஒரு குழந்தையை அடிக்கடி பல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் அவர்களுக்கு ஒருவித பயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர்கள் முறையான பராமரிப்பு முறைகளை தெரிந்து கொள்ள முடியாமல், பற்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை அறிந்து கொள்ளமுடியாமல், ரூட் கேனல், பல் பிடுங்குதல், மற்றும் அவசர பல் சிகிச்சை ஆகியவற்றை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை போக்க தலைசிறந்த பல் மருத்துவ நிபுணர் ஆல் மட்டுமே முடியும். ஒரு சிறந்த குழந்தைகள் பல் மருத்துவ நிபுணர், மருத்துவ சிகிச்சையளிக்கும் அறைக்குள், குழந்தைகளுக்கு பல் மருத்துவத்தை பற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் விதத்தில் கட்டமைப்புக்களை செய்திருப்பார். சென்னையில் குழந்தைகளுக்கு என தனியாக பல் மருத்துவம் வழங்கும் சிகிச்சை மையங்கள் அதிக அளவில் உள்ளன.

    • உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை.
    • மூளைக்கு ஊட்டமளிக்கும்.

    உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்தமானது உலர் திராட்சை. இவை குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

    உணவுகளிலிருந்து பெற முடியாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உலர்திராட்சை மூலம் குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    உலர் திராட்சையில் அதிக அளவு கலோரி, குளுக்கொஸ் மற்றும் பிரக்டோஸ் கொண்டுள்ளது. இது எடையை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் குழந்தையின் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதால் நினைவாற்றல் மேம்படும். மூளைக்கு ஊட்டமளிக்கும். செரிமானத்தை ஊக்குவிக்கும்.

    காய்ச்சலின் போது உலர்ந்த திராட்சை ஊறவைத்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

    உலர் திராட்சையை குழந்தைகளுக்கு எப்போது கொடுக்கலாம்?

    குழந்தைகள் உணவை மெல்ல தொடங்கும் போது அல்லது 8 மாத காலத்துக்கு பிறகு உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம். சிறிய குழந்தைக்கு கொடுக்கும் போது உலர் திராட்சையை ஊறவைத்து கூழ் போல் மசித்து கொடுக்கலாம்.

    நாள் ஒன்றுக்கு 1 டீஸ்பூன் அளவு சாறு கொடுக்கலாம். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்கும் போது ஒவ்வாமை உண்டாகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    • தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.
    • ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு.

    மாண்டிசேரி எனப்படும் மழலை ஆசிரியர் பயிற்சி பற்றியும், இதன் முக்கியத்துவம் பற்றியும் சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

    * மாண்டிசேரி கல்வி முறை

    மரியா மாண்டிசேரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டிசேரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டிசேரி பள்ளி மற்றும் மாண்டிசேரி ஆசிரியர்களின் நோக்கம். இது சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி முறை. வெகுசுலபமாகவே, கற்றுக்கொள்ள முடியும்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி

    10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் வரை மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற முடியும். 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ இன் மாண்டிசேரி பயிற்சியும், பிளஸ்-2 படித்தவர்கள், அட்வாண்ஸ்ட் மாண்டிசேரி படிப்பும் படிக்கலாம். இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற விரும்புபவர்கள் அடிப்படை மற்றும் அட்வாண்ஸ்ட் பயிற்சிகளை பெற்று, ஆசிரியர் தகுதி பெறலாம்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பணி

    நன்கு வளர்ந்த குழந்தைகளை கையாள்வதை விட, மழலைகளை கையாள்வது கொஞ்சம் கடினமானது. சவாலானது. வழக்கத்தை விட நிதானமும், பொறுமையும் அவசியம். இதோடு, தினந்தோறும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு குழந்தைகளை வழிநடந்த முடியும் என்று எண்ணுபவர்கள், மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெறலாம்.

    * வேலைவாய்ப்பு

    நகர்ப்புறங்களில் மாண்டிசேரி பள்ளிகள் அதிகமாகவே தென்படுகின்றன. 'பிளே ஸ்கூல்' போன்றவற்றிலும், மாண்டிசேரி பயிற்சி முடித்திருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இயல்பான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், மாண்டிசேரி பயிற்சியின் மூலம் அவர்களது திறனையும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், மாண்டிசேரி பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

    * எப்படி வேறுபடுகிறது?

    வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் முதன்மையாக இருப்பார். அவர் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு மாண்டிசேரி கல்விமுறையில் குழந்தைகள் முதன்மையாக இருப்பர். ஆசிரியர் பின்னணியில் இருந்து அவர்களை வழிநடத்துவார். இதில் மனப்பாட முறை கிடையாது. யோசனை செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றாக கவனித்து (Observe) தானே கற்று கொள்வதால் ஆழ் மனதில் (subconscious) பதியும். கரும்பலகை முறை கிடையாது. பார்த்து எழுதும் முறையும் கிடையாது. எல்லாமே செயல்முறை கல்வியாகவே கற்றுக்கொடுக்கப்படும்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.

    ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன.

    எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    வீட்டுக்கு சென்றால் தாயுடன் நேரம் செலவழிக்க, வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி பொதுவான கல்வி முறைக்கும், மாண்டிசேரி கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதேபோல, இவை அனைத்தையும் கையாள்வதிலும் சிரமங்கள் உண்டு.

    * சிறந்த பயிற்சி

    இப்போது மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பல இடங்களில் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கீகாரம் பெற்ற, முன் அனுபவம் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறுவது, திறமையை வளர்த்து கொள்ளவும், சுலபமான பணிவாய்ப்பு பெறவும் வழிவகுக்கும்.

    * கட்டணம்

    பயிற்சி நிறுவனங்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். அதிகபட்சம், ரூ.20 ஆயிரத்திற்குள், ஒரு வருடத்திற்குள் பயிற்சியை முடித்துவிடலாம்.

    • பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும்.
    • சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். ரசாயனம் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும்போது, சருமத்துக்கு அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். சில தலைமுறைகள் வரை, பிறந்த குழந்தைகளின் சரும பராமரிப்புக்கு வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து பயன்படுத்தினார்கள்.

    மசாஜ் செய்வதற்கும், சருமப் பொலிவை அதிகரிப்பதற்கும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை உபயோகப்படுத்தினார்கள். இவை குழந்தையின் மென்மையான சருமத்தை பூப்போல் பாதுகாக்கும். சருமப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, இயற்கையான நிறத்தை மெருகேற்றும். இந்தக் குளியல் பொடி செய்முறை பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் ரோஜா இதழ்கள் - 100 கிராம்

    ஆவாரம் பூ - 50 கிராம்

    துளசி இலை - ஒரு கைப்பிடி

    வேப்பிலைக் கொழுந்து - ஒரு கைப்பிடி

    பச்சைப் பயறு - 300 கிராம்

    சிவப்பு சந்தனம் - 50 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி

    கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் (ஆண் குழந்தையாக இருந்தால் இதைத் தவிர்க்கவும்)

    தரமான பொருட்களை வாங்கவும். பூக்கள் மற்றும் இலைகளை தனித்தனியாக சுத்தப்படுத்தி நன்றாக உலர வைக்கவும். பச்சைப் பயறு மற்றும் கஸ்தூரி மஞ்சளை ஒரு மணி நேரம் வெயிலில் காயவைக்கவும். பின்னர் அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

    இந்தப் பொருட்களை அரைப்பதற்கு முன்பாக அரை கிலோ பச்சரிசியை கொடுத்து மாவாக அரையுங்கள். இயந்திரத்தில் இதற்கு முன்பு ஏதேனும் காரத்தன்மை கொண்ட பொருளை அரைத்திருந்தாலும் அல்லது அசுத்தங்கள் இருந்தாலும் நீங்கி குளியல் பொடி சுத்தமானதாக இருக்கும். இந்தப் பொடியை சலித்துப் பயன்படுத்துவது நல்லது. பிறகு சுத்தமான காற்றுப் புகாத பெரிய பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைக்கவும். சிறிது பொடியை, சிறிய டப்பாவில் போட்டு தினசரி பயன்படுத்திக்கொள்ளலாம். 2 அல்லது 3 மாதத்துக்கு ஒரு முறை அரைத்தால் போதும்.

    பயன்படுத்தும் முறை: சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வைக்கும் போது இந்தப் பொடியை நீரில் குழைத்துக் குழந்தையின் உடலில் தடவி, மென்மையாக கைகளால் தேய்த்துக் குளிக்க வைக்கலாம். முகத்துக்கும் பயன்படுத்தலாம். மசாஜ் செய்யாதபோதும் இதை நீரில் குழைத்துப் பயன்படுத்துங்கள்.

    நன்மைகள்: ரோஜா இதழ் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். பச்சைப் பயறு, பச்சரிசி ஆகியவை சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையாக்கும். ஆவாரம் பூ, துளசி மற்றும் வேப்பிலை மூன்றும் கிருமிநாசினியாக செயல்படும். மஞ்சள், குழந்தையின் உடலில் இருக்கும் தேவையற்ற முடியை உதிரச் செய்யும். சிவப்பு சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

    • ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் இவை எல்லாம் குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
    • பால் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும்.

    குழந்தைகள் வளர்ச்சி என்பது முக்கியமான ஒன்று. வயதிற்கு ஏற்ப வளர்ச்சி இருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வயது முடிவில் இருந்தே வளர்ச்சியின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும்.

    வளர்ச்சிக்கான காரணங்களில் முதல் இடம் வகிப்பது மரபுவழி..பெண் குழந்தைகள் அப்பா வழி உடன் பிறந்தவர்கள் போல் இருப்பார்கள். ஆண் குழந்தைகள் தாய் மாமன் போல் இருப்பார்கள் என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அடுத்தது உணவு பழக்கம், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் இவை எல்லாம் குழந்தையின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.

    பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகிறார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.

    அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.

    எந்தெந்த உணவுகள் வளர்ச்சிக்கு உதவுகிறது?

    பால்

    பால் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டும். பாலில் அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்து உள்ளது. பால் சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அப்போது மாற்று உணவாக பாலில் இருந்து கிடைக்கும் பன்னீர், தயிர் இவற்றை கொடுத்து பழக்கலாம்.

    பச்சை காய்கறிகள்

    பீன்ஸ் அதிகமாக எடுக்கும் போது எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்.முட்டைகோஸ் சாப்பிட்டால் நெட்டையாக வளரலாம்.இதர காய்கறிகள் அனைத்தும் உணவில் சேர்ப்பதை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே பழக்கப்படுத்த வேண்டும். நாவில் சுவை அரும்புகள் வளர்வதற்கு முன்பே அனைத்து காய்கறிகள் கொடுத்து பழக்கி விட வேண்டும். குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட ஊக்கப்படுத்த வேண்டும்.

    கீரைகள் மற்றும் பயறு வகைகள்

    கீரைகள் பல விதங்களில் நமக்கு பயன்படுகிறது. குறிப்பாக முளைக்கீரை குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.அதே போல் பயறு வகைகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.சாயங்கால சிற்றுண்டி சுண்டல், வாரம் இரு முறை கொடுக்கலாம்.

    முட்டை

    உயரமாக வளர முட்டை எடுத்து கொள்வது சிறப்பு. இது புரதச்சத்து நிறைந்தது. குழந்தைகளின் இதர வளர்ச்சியிலும் இது பங்கு அளிக்கிறது. உங்கள் குழந்தைக்கு பிடித்த வகையில் முட்டையை சமைத்துக் கொடுக்கலாம்.

    கேரட்

    கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது உடலால் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. கேரட்டை உணவில் சேர்ப்பது உடல் கால்சியத்தை மிகவும் திறமையாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது எலும்பு மறு உருவாக்கத்தை பாதித்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. சாலட்களில் கேரட்டைச் சேர்க்கவும் அல்லது உங்கள் குழந்தைகளுக்கு புதிய கேரட் சாறு தயாரித்து நீங்கள் கொடுக்கலாம்.

    • உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும்.
    • பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.

    பிறந்த குழந்தை 1 வயது முதல் பருவமடையும் காலம் வரை ஒவ்வொரு வருடத்திலும் 2 அங்குலம் வரை வளர்கிறார்கள். பருவ வயதுக்கு பிறகு தான் ஆண்டுக்கு 4 அங்குலம் வரை வளர்ச்சி அடைகிறார்கள். பதின்ம வயதை அடைந்த ஆணும், பெண்ணும் பூப்படைந்த பின்னும் வேகமாக வளரும் காலம் இது.

    அதனால் தான் பிள்ளை வளர்த்தி காலத்தை முன்னோர்கள் குழந்தை பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், வளரும் பருவத்தில் உயரத்தில் ஒரு வளர்ச்சியும், பூப்படையும் பருவத்தில் ஒரு வளர்ச்சியும் அதைத் தொடர்ந்து பிள்ளை பேறுக்கு பிறகு ஒரு வளர்ச்சியும் என்று சொல்வார்கள்.

    * பெண் குழந்தைகள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம். உயரம் அதிகரிக்க மற்றுமொரு சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல பலனை கண்கூடப் பார்க்கலாம்.

    * ஆண் குழந்தைகள் பார் என்று சொல்லப்படுகிற ஹேங்கிங் செய்யலாம். இது உடலை ஸ்ட்ரெச் செய்ய உதவும் சிறந்த பயிற்சி ஆகும். இது உடல் முழுதையும் ஒரே இணையாக ஸ்ட்ரெச் செய்ய உதவுகிறது.

    * கூடைப்பந்து விளையாட்டை தினமும் பயிற்சி செய்து வரலாம்.

    * அதிக அளவில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அதிக தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    * சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * நீச்சல் பயிற்சி செய்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது உடல் மொத்தமும் நன்கு விரியும், ஸ்ட்ரெச் ஆகும். இது சீராக உயரமாக உதவும். ஆனால், தினமும் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்...

    * நேராக நின்று கொண்டு பின் குனிந்து கால் பெருவிரல் தொடும் பயிற்சி உதவும். இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.

    குழந்தைகளை வெயிலில் விளையாட செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும். கால்சியம் நிறைந்த உணவு பொருள்களை உடல் எடுத்துகொண்டாலும் அதை உடல் உறிஞ்சுகொள்ள வைட்டமின் டியின் உதவி தேவை.

    எதுவாக இருந்தாலும் உயரம் நம் முன்னோர்கள் ஜீன்களின் படி இருக்கும். இதெல்லாம் ஒரு முயற்சிக்காக.

    • அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.
    • பெண் குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்.

    பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய, சொல்லிக்கொடுக்கக் கூடாத விஷயங்கள் உள்ளன. அதில் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது.

    * ஆண் குழந்தைக்கு, பெண் குழந்தையைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்த உடன், மூத்த பெண் குழந்தை மீது கவனம் குறைந்துபோகும் சூழலுக்கு இடம் தரக் கூடாது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை வாய் வார்த்தையாகச் சொல்லாமல், அதனை அவர்களே உணரும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு இருக்க வேண்டும். மேலும், மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * 'எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.

    * கிரிக்கெட், ரோபாட்டிக்ஸ், கராத்தே என்று தனக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை பெண் குழந்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது, 'அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று. இன்றைய உலகில் ஆண்களுக்கானது என்று எந்தத் துறையும் இல்லை. அவர்கள் விரும்பும் துறை எதுவாக இருந்தாலும், அதில் அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. 'ஆண், பெண் பாகுபாடற்ற சமுதாயத்தில் உன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என ஊக்கம் கொடுக்க வேண்டும்.

    * ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.

    • குழந்தைகளுக்கு மூக்கில் 'நீர்க்கோப்புச் சதை' வளர்வதுண்டு.
    • மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது.

    குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பதை பார்த்து இருப்போம். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, மூக்கில் புண் உண்டாகி, ரத்தக்கசிவு ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும்.

    அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு ரத்தம் வரலாம்.

    குழந்தைகளுக்கு மூக்கில் 'நீர்க்கோப்புச் சதை' வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் 'அண்ணச்சதை' வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் வடியும்.

    இதுபோக படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் பெரியவர்களுக்கும்கூட மூக்கிலிருந்து ரத்தம் வடியும். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது.

    குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தால், மூக்கில் ரத்தம் வடியும். கோடையில் மூக்கின் உட்பகுதிகள் வெப்பத்தால் உலர்ந்து, சவ்வுகளில் விரிசல் ஏற்படும். இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம். அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், `இது சாதாரண சில்லுமூக்குத் தொல்லைதான்' என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து உரிய சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ×