என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    • பிறந்த குழந்தையின் பார்வை மங்கலாக இருக்கும்.
    • தாலாட்டு போன்ற அந்த இசையைக் கேட்டு குழந்தை திரும்பியது

    பிறந்த குழந்தைகள் கூட அழகான முகத்தைத்தான் பார்க்க விரும்புகின்றனவாம். இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தையின் மூளையில் அழகுணர்ச்சி பதிவாகிறது.

    பிறந்த குழந்தையின் பார்வை மங்கலாக இருக்கும். இருப்பினும் 15 மணி நேரத்தில் அது, தன் தாயின் முகத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் மற்றும் பிறந்து இரண்டு நாட்களான குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தையின் முன்னால் அழகான மற்றும் அழகு குறைந்த முகங்கள் காட்டப்பட்டன. அழகு குறைந்த முகத்தை விட, அழகான முகத்தை 80 சதவீத நேரம் அதிகமாகப் பார்த்தன என்றும் சொல்கிறது அந்த ஆய்வு.

    'கவர்ந்திழுக்கும் தன்மை ஒருவரது கண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல... ஒரு குழந்தை பிறந்தது முதல், அல்லது பிறப்புக்கு முன்னரே கூட அதன் மூளையில் பதிவான விஷயம்' என்கிறது எக்ஸெடெர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு.

    அழகுணர்ச்சி மட்டுமின்றி நல்ல இசையைத் தேர்வு செய்யும் திறனும் குழந்தைகளிடம் இருப்பதாக இந்தக் குழு தெரிவிக்கிறது. ஒரு குழந்தை கேட்கும்படி நல்ல இசை ஒலிபரப்பப்பட்டது. தாலாட்டு போன்ற அந்த இசையைக் கேட்டு குழந்தை திரும்பியது! அதே சமயம் கரடுமுரடான இசையை ஒலிபரப்பியபோது குழந்தை அதை விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

    • குழந்தையின் மனதில் குதூகலம் ஏற்படும் விதமாக பேச வேண்டும்.
    • பள்ளியைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உண்டாக்க வேண்டும்.

    "நீ அடம்பிடிச்சா உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துடுவேன்", "சாப்பிடாம இருந்தா டீச்சர்கிட்ட உன்னை அடிக்க சொல்லுவேன்" என்று சேட்டை செய்யும் பிள்ளைகளை பயமுறுத்தும் பெற்றோர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அதைக்கேட்டு குழந்தை அமைதியானாலும், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் மீது அவர்கள் மனதுக்குள் வெறுப்பு மற்றும் பய உணர்வு உண்டாகும். இதனால் பள்ளி செல்வதற்கு அடம் பிடிப்பார்கள். இத்தகைய குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்று பார்ப்போம்.

    முதலில் குழந்தைகள் மனதில் பள்ளியைப் பற்றிய நேர்மறையான பிம்பத்தை உண்டாக்க வேண்டும். ''பாப்பா! நீ பள்ளிக்கூடத்துக்குப் போகப் போகிறாய், அங்கு உனக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க. அவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடலாம். நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்'' என குழந்தையின் மனதில் குதூகலம் ஏற்படும் விதமாக பேச வேண்டும்.

    உங்களுக்குத் தெரிந்தவர்களுடைய குழந்தைகளும் அதே பள்ளியில்தான் இப்போது படிக்கிறார்கள் என்றால், அவர்களை சந்திப்பது போல் உங்கள் குழந்தையை அந்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம். இவ்வாறு அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு பள்ளியின் சூழல் பழகி இருக்கும். புதிய இடம் போல தோன்றாது.

    உங்கள் குழந்தைக்கு பிடித்த புத்தகப்பை, அழகான புத்தகங்கள், கலர் பென்சில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை உடன் அழைத்து சென்று வாங்குங்கள். அவர்களுக்கானதை அவர்களே தேர்ந்தெடுக்கும்போது உற்சாகமாக பள்ளிக்கு செல்வார்கள்.

    இரவில் தூங்கச் செல்வது, காலையில் கண் விழிப்பது, காலைக் கடன்களை முடிப்பது போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும். காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு நேர பள்ளி என்றால், குழந்தைக்குப் பிடித்தமான உணவுகளை மதிய உணவாக கொடுத்து அனுப்புங்கள்.

    நீங்கள் வேலைக்குச் செல்பவர் என்றால், பள்ளி நேரம் முடிந்த பிறகு குழந்தையை யார் வீட்டுக்கு அழைத்து வருவது? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்யுங்கள். மழலையர் பாதுகாப்பகத்தில் உங்கள் குழந்தையை விடுவதென்றாலும், அதற்கு தேவையான விஷயங்களையும் முன்பே திட்டமிடுங்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு குழந்தைகளை அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டில் ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்துங்கள். பிறகு வீட்டுப் பாடங்களை செய்யச் சொல்லுங்கள். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

    அப்போதுதான் குழந்தையின் கற்றல் சார்ந்த நடவடிக்கைகள் உங்கள் கவனத்திற்கு வரும். ஒருவேளை உங்கள் குழந்தை இதற்கு முன்பு மழலையர் பள்ளி சென்று பழகி இருந்தாலும், இப்போதைய பள்ளி நேரம் அதிகம் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு பள்ளியைப் பற்றிய பயமும், பதற்றமும் ஏற்படும். அடம் பிடிக்காமல் பள்ளிக்கு சென்று வந்தாலும் திடீரென்று சில நாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அத்தகைய நேரங்களில் பதற்றமடையாமல், அவர்களை மென்மையாக அணுகி பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

    • அதிகாலையில் 5 - 7.30 மணி வரை படிப்பது மிகுந்த பலன் தரும்.
    • அதிகாலையில் படிப்பதால் பாடங்களை எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும்

    பள்ளி, ட்யூஷன், ஆசிரியர்கள், பாடங்கள் என காலையில் இருந்து அடுத்தடுத்த கல்வி நேரத்தை கடந்துவந்து சோர்வான, இறுக்கமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சரியாக படிக்க முடியாது. அதனால் மாலை நேரங்களில் எழுத்து வேலைகள் இருந்தால் அப்போது அதனை குழந்தைகளைச் செய்யவைக்கலாம். பின்னர், அவர்களின் உடம்புக்கு ஓய்வு தேவைப்படும். அதுதான், உயர்ந்த தியான நிலையான தூக்கம்.

    தூங்கி எழுந்ததும், குழந்தைகளின் மனமும் உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் முழுமையான, புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும். முந்தைய நாள் பிரச்னைகள், கவலைகள் மறந்துபோயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும் அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். நினைவில் நிற்கும்.

    இரவில் குழந்தைகள் விரைவாக தூங்கச் செல்லும்போது, காலையில் சீக்கிரமே எழுந்துவிடுவார்கள். அப்படி எழுந்து காலையில் 5 - 7.30 மணி வரை அவர்கள் படிப்பது மிகுந்த பலன் தரும். அப்படிப் படிக்கும்போது அறைக்குள், வீட்டுக்குள் முடங்கிப் படிப்பதைவிட, கிராமப்புற மாணவர்கள் வீட்டுத் திண்ணையிலும், நகர்ப்புற மாணவர்கள் பால்கனி, மொட்டைமாடியிலும் என, வெளிக்காற்று ஸ்பரிசம் பெற்றுக்கொண்டே படிக்கும்போது கிடைக்கும் புத்துணர்வு, பாடங்களை விரைவில் மனப்பாடம் செய்யவைக்கும். கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    'அறிவுக்கு மேற்கு, வெளிச்சத்துக்கு கிழக்கு, பயணத்துக்கு வடக்கு, முடிவுக்கு தெற்கு' எனச் சொல்வார்கள். அதன்படி பார்க்கும்போது, மேற்கு திசை நோக்கி அமர்ந்து படிப்பது, நல்ல நினைவாற்றலைக் கொடுக்கும். கவனச்சிதறல் இன்றி படிக்க முடியும். ன்.

    10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 8 - 10 மணிநேரம் தூங்க வேண்டும். அவர்கள் அதிகாலை 5.30 - 6 மணிபோல எழுந்து, அதன் பின்னர் படிப்பதே சிறந்தது.

    அதிகாலை நேரம் இரைச்சல், ஆள் நடமாட்டம் என எந்தவித வெளிப்புற தொந்தரவும் இன்றி சுற்றுப்புறம் அமைதியாக இருக்கும். குழந்தைகளுக்கு முந்தைய நாள் நினைவுகள் மறந்து, உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியுடன் வேலைகளைத் தொடங்கும். மூளை வேகமாக இயங்கும். மேலும் அதிகாலை நேரம் ஆக்ஸிடோசின் (Oxytocin), சிரோடோனின் (Serotonin), டோபமைன் (Dopamine) உள்ளிட்ட பயனுள்ள ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்வதுடன், நல்ல மன அமைதியையும், நல்ல நினைவாற்றலையும் கொடுக்கும். அதனால் அதிகாலை நேரம் படிப்பதால், மிகுந்த பலன் கிடைக்கும்.

    அதிகாலை நேரம் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, ஜுஸ், பால், சத்துமாவு கஞ்சி என ஏதாவது ஒரு திரவ உணவு சாப்பிட்டுவிட்டு படிக்க அமரலாம்.

    • குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான்.
    • குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.

    குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் 'ஆரோக்கியமான குழந்தை' என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும்இருக்க வேண்டும்.

    உடல் உழைப்பின்மை, மரபியல், தவறான உணவுப் பழக்கம், அதிகமான துரித உணவுகளை உண்பது, ஹார்மோன் பிரச்சனை, அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும்.

    குழந்தையின் உடல் எடை குறைய கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல் கொடம்புளி தண்ணீர், ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம். குழந்தையின் உடல் எடை குறைய வெள்ளரிக்காய் சாலட், கிரீன் டீ 2 கப் குடிப்பது, திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர், போதுமான தண்ணீர் காலை எழுந்ததும் குடிப்பது, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் ஏற்படுத்த வேண்டும்.

    உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது.

    எடையை குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான திண்பண்டங்களை கொடுக்க வேண்டும்.

    குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்கள் உணவும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    தினமும் காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வர குழந்தையின் உடல் எடையை மிக எளிதாகவே குறைத்துவிட முடியும்.

    குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

    குறிப்பாக அதிக எடை கொண்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.
    • குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை.

    குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை. குழந்தைகள் எவ்வளவு அழகு. அதைவிட அதன் குறும்புகள் கொள்ளை கொள்ளும் அழகு. குழந்தைகள் விரும்பும் பொம்மைகளோ, நாம் குழந்தையை விரும்புவதற்கு ஈடாக உள்ள பொருளாக இருக்கிறது. ஆபத்தில்லாத பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால் குழந்தையும் மகிழும். ஆனந்தத்தை அள்ளி அளிப்பவை அந்தக் குழந்தைகள். பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.

    முதல் மூன்று மாதங்கள் : முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான்.

    உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான். அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.

    மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை : இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான். இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும். இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து. காற்றடித்த வண்ண பொம்மைகள்.

    ஓராண்டு வரை : இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும் மேலும் இப்பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும். எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான். இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்துவிட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும். நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான்.

    அவர்களை கவரக்கூடிய விளையாட்டுப் பொருட்கள்... சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக்கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.

    ஒன்று முதல் இரண்டு வயது வரை : இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். சில குழந்தைகள் அமில் பிளாக். பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி.யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும். இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதேவேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.

    • நீண்ட நேரம் உட்கார்ந்து புத்தகம் படிப்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது.
    • புத்தகம் படிப்பதற்கென்று நேரத்தை வரையறை செய்யுங்கள்.

    மாணவர்களை பொறுத்தவரை வாசிப்பு பழக்கத்தை அவசியம் பின்பற்றியாக வேண்டும். வாசிப்பு என்பது கல்வி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. தனிப்பட்ட வளர்ச்சிக்கும், அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும், நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கும், தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்கொள்வதற்கும், சொல் அகராதி மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதற்கும், சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன்களை வளர்ப்பதற்கும் வாசிப்பு பழக்கம் உதவும்.

    கற்பனை கதைக்களம் கொண்ட நாவல்கள், திரில்லர் கதைகளை படிக்கும் மாணவர்களிடம் மொழித்திறன் மேம்பட்டிருப்பது ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய புத்தகங்களை படிப்பது அடுத்து நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஆர்வத்தை தூண்டும். சம்பந்தப்பட்ட மொழியை புரிந்து கொள்வதற்கும் உதவும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் பிள்ளைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கும் பிரிட்டிஷ் கவுன்சில் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அது பற்றி பார்ப்போம்.

    * நீண்ட நேரம் உட்கார்ந்து புத்தகம் படிப்பது பலருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பொறுமையும் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கங்களை படிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு பக்கங்களாக படிக்க தொடங்கலாம். பின்பு படிப்படியாக பக்கங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

    * வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறை விருப்பமான விஷயங்களை படிப்பதுதான். அது புனைக் கதையாகவோ, சுய சரிதையாகவோ, சிறுகதையாகவோ இருக்கலாம். உங்களுக்கு பிடித்தமான துறை சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க தொடங்கலாம். உங்கள் கவனத்தை ஈர்க்கும், உங்களை படிக்கத் தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கவும். அது சார்ந்த புத்தகங்களை தேடிப்பிடித்து படிப்பது இயல்பாகவே வாசிக்கும் ஆர்வத்தை தூண்டிவிடும்.

    * புத்தக கிளப்புகள், வாசிப்பு குழுக்களில் சேருவது வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கு உதவும் மற்றுமொரு சிறந்த வழிமுறையாகும். அவை புத்தகங்களை விமர்சனம் செய்யவும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், ஒருமித்த சிந்தனை கொண்ட புத்தக ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல்களுக்கு ஆளாகிறார்கள். அதனை தவிர்க்க எந்தவொரு இடையூறும் இல்லாத அமைதியான இடத்தை தேர்வு செய்யவும். அது வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * வாசிப்புக்கு தொந்தரவு தரக்கூடிய மின் சாதனங்களை அணைத்து வைக்கவும். அலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தியும் கவனச்சிதறலை உண்டு பண்ணும்.

    * புத்தகம் படிப்பதற்கென்று நேரத்தை வரையறை செய்யுங்கள். அந்த நேரம் நெருங்கியதும் 'இது படிக்க வேண்டிய நேரம்' என்பதை மூளைக்கு உணர்த்தும் வழக்கத்தை உருவாக்குங்கள்.

    * வாசிப்பு சுவாரசியமாக இருக்க வேண்டுமே தவிர அது வேலையாக இருக்கக்கூடாது. நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக அமர்ந்து வாசிக்கும் பழக்கத்தை தொடரலாம். திரைப்படம் பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே செல்வது போன்ற பழக்கங்களுக்கு மாற்றாக அந்த நேரத்துக்குள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தால் அதற்கு பரிசு வழங்கும் வழக்கத்தை பின்பற்றலாம். அது வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க உதவும்.

    • பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள்.
    • ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது

    டிஜிட்டல் யுகம், குழந்தைகளுக்கு பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கிறது. பள்ளி பருவத்திலேயே நிறைய குழந்தைகள், கண் கண்ணாடிகள் அணிந்து உலா வருகிறார்கள். கண் சம்பந்தமான விஷயத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம், ஸ்மார்ட்போன் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்குகிறது, குழந்தைகளின் பார்வை குறைபாட்டை எப்படி கண்டறிவது, போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கிறார், யமுனா தேவி. கண் அறுவை சிகிச்சை நிபுணரான (போக்கோ ரெப்ராக்டிவ் சர்ஜன்) இவர் சென்னையில் மேற்படிப்பு முடித்து விட்டு, தற்போது கோவையில் பயிற்சி செய்து வருகிறார்.

    இயல்பை விட எல்லாவற்றையும் மிக அருகில் வைத்து பார்ப்பது, படிப்பது, டி.வி.யை மிக நெருங்கி நின்று பார்ப்பது, நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீரென படிக்கமுடியாமல், நல்ல மதிப்பெண் பெற முடியாமல் தவிப்பது, கண்களில் நீர் கசிவது, தலைவலி, சிவந்த கண், கண் உறுத்துவதாக கூறி அடிக்கடி தேய்ப்பது போன்றவற்றை கண் பாதிப்பிற்கான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம்.

    ஸ்மார்ட்போன், இன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் கைகளில், ஸ்மார்ட்போன் சர்வசாதாரணமாக தவழ்கிறது. உணவு ஊட்ட, பொழுதுபோக்கு காரணங்களுக்காக பெற்றோர்களே இதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் கூடுதலாக 'அட்வாண்டேஜ்' எடுத்து கொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். இது பலவிதமான கண் பாதிப்புகளை உண்டாக்கும். கண்களில் நீர் வறட்சி (dry eyes), கண் எரிச்சல், தலைவலி, கண் வலி, கண் சோர்வு, கண் சிவப்பு (ரெட்-ஐ) போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும். அதனால் குழந்தைகளை கண்காணித்து, போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, வருடாந்திர பரிசோதனைக்கு அழைத்து செல்லவேண்டும்.

    • பல் சிதைவு என்பது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
    • பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது.

    பல் சிதைவு என்பது இந்தியா முழுவதும் குழந்தை பருவத்தினருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். இது நீண்ட கால பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் பல் நோய் தடுப்பு மையங்களின் அறிக்கைப்படி, ஐந்து முதல் 11 வயது வரையிலான 20 சதவீத குழந்தைகளில் குறைந்தது ஒரு குழந்தையாவது சிதைந்த அல்லது அழுகும் பல் இருக்கப் பெற்று, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.

    பற்சிதைவு என்பது வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து இத்தகைய பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. நாம் உண்ட உணவின் துணுக்குகள் பற்களுக்கு இடையில் சிக்கிக் கொள்வதால் பெரும்பாலான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இத்தகைய பாக்டீரியாக்கள் ஒட்டும் தன்மை உடையதாக பற்களில் தங்கிவிடுகிறது.

    இவைகள் நமது பற்களின் எனாமல்லை சுரண்டி அதிக அளவில் பாதிப்பை உருவாக்குகிறது. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எளிதில் பற்களில் உருவாகின்றன. குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள், குக்கீஸ், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றினால் பற்களில் அதிக சிதைவு ஏற்படுகிறது.

    இதில் நல்ல செய்தி என்னவென்றால், பல் சிதைவு என்பது தடுக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. பற்சிதைவை சரியான பல் துலக்குதல் நுட்பங்கள் மற்றும் ஒரு பல் மருத்துவரின் முறையான சிகிச்சை முறை ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

    மருத்துவரால் அங்கீகரிக்கப்பட்ட புளோரைடு பற்பசையுடன் உங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்துலக்க செய்ய வேண்டும், அதிலும் படுக்கைக்கு முன் பல் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

    • அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை
    • சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம். பெற்றோர்கள் இதனை கடுமையாக போராடி ஜெயிக்கத் தான் வேண்டும். நல்ல முன் மாதிரிகள் தேவை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் விட சிறந்த முன் மாதிரிகள் யார் இருக்க முடியும். எனவே அவசியமின்றி செல்போனில் மூழ்குவதனை பெற்றோர்கள் தவிர்த்தாலே போதும். பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் நம்மால் கொண்டு வர முடியும். இவ்வளவு நேரம் விளையாட்டு, இவ்வளவு நேரம் செல்போன் என எதனையும் முறையாக வரையறுத்து அதனை பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாதே எனக் கூறும் பொழுது இதனைச் செய் என்ற மாற்று வழியையும் காட்ட வேண்டும். சாப்பிடும் பொழுது செல்போனை பயன்படுத்தக் கூடாது. உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    அன்றாடம் நல்ல முன் மாதிரிகள் குழந்தைகளின் கண் எதிரே தேவை. நல்ல பழக்க வழக்கங்கள் தேவை. இவைகள் இல்லாத பொழுது மனிதன் மனம் போன போக்கில் போய் கொடூர தவறுகள் செய்பவனாகிறான். தேவையா? சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    ஆம், நாம் தானே இதனை சரி செய்தாக வேண்டும். கீழ்கண்ட முறைகளை முயற்சி செய்து பார்ப்போம். முதலில் குழந்தைகள் திருந்த வேண்டும் என்றால் அவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துகின்றார்களா?

    * செல்போனை பார்க்காமல் இருக்கின்றார்களா?

    * 20 நிமிடம் உடற்பயிற்சி செய்கின்றார்களா?

    * 20 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்கின்றார்களா?

    * அன்றைய நாளின் வேலைகளை குறிப்பெடுத்து செய்கின்றார்களா?

    * காலையில் குளிக்கின்றார்களா?

    * காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்கின்றார்களா?

    * உண்மையில் நீங்கள் சிறந்த பெற்றோர்தான். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?

    * குறிக்கோள் இருக்க வேண்டும்.

    * உயர்வான, பண்பான குறிக்கோள்கள் வேண்டும்.

    * கடினமாய் உழைக்க வேண்டும்.

    * செய்யும் வேலையினை, படிக்கும் படிப்பினை விரும்பி செய்ய வேண்டும்.

    * படிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, நண்பர்கள் இவைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * தகுதியானவர்களிடம் இருந்து அறிவுரை பெற வேண்டும்.

    * உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * அவர்களின் மூலதனம் அவர்களின் மூளைதான். இது தெரிந்தால் அவர்கள் மனம் கண்ட கேளிக்கைகளில் மூழ்காது.

    ரத்த உறவுகளை கொல்லும் குடும்ப உறுப்பினர்கள், பாலியல் தொல்லையால் சிறுமிகளை நாசமாக்கும் சிறுவர்கள் என பயங்கரமான செய்திகளை அன்றாடம் கேள்வி படுகின்றோமே இவை அனைத்துமே மனம், புத்தி இவைகளின் கோணல்கள்தான் காரணமாகின்றன. இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இது கண்டிப்பாய் ஒரு மனிதனுக்கு நிம்மதி தராது. மாற்றுவோம். அவரவரால் ஆன முயற்சியினை செய்து மாற்றுவோம். இளைய சமுதாயத்தினரின் மன நலத்தினை ஆரோக்கியமாக மாற்றுவோம். இது இல்லாமல் உடல் நலம் மட்டுமே என்பது ஓட்டை பானையில் அமிர்தம் ஊற்றுவதற்கு சமம். எனவே முயற்சிப்போம்! மாற்றுவோம்!!

    • குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல.
    • பெற்றோரும் குழந்தைகளை மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம்.

    குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

    குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல. அதனால் அவர்களை பெற்றோரும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம். குழந்தைகளை எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க, அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு, எது சரி? எது தவறு? என்பதை சரியான முறையில் சொல்ல வேண்டும்.

    குழந்தைகளின் தேவைகள் என்னவென்று புரிந்துகொண்டு, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

    'இந்த விஷயத்தை செய்யாதே' என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. உனக்கு காய்ச்சலாக இருக்கிறது. அதனால், ஐஸ்க்ரீம் இப்போது சாப்பிட வேண்டாம். காய்ச்சல் குணமானவுடன் ஐஸ்க்ரீம் நானே வாங்கித் தருகிறேன். சரியா? என்பதுபோல் அவர்களுக்குப் புரிய வையுங்கள். அதுதான் சரியான வழிமுறை.

    குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் தாய், தந்தை இருவருமே குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

    குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.

    குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.

    'பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் கடுமையான முறையில் நடந்துகொள்கிறார்கள்.

    • குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும்.
    • குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    குழந்தைகள் எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு பெற்றோரிடமும், பெரியவர்களிடமும் பதில்கள் இருக்காது. அதை சமாளிப்பதற்காக பலர் குழந்தைகளை கேள்வி கேட்க விடாமல் அடக்கி விடுவார்கள்.

    இது தவறான அணுகுமுறை என்று உளவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். குழந்தைகளின் கேள்விகளுக்கு பெரியவர்கள் நிதானமாக பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தயக்கம் இல்லாமல் கேள்விகள் கேட்டு, தங்களது ஆளுமைப் பண்பை வளர்த்துக் கொள்வார்கள். பெற்றோர் பதில் அளிக்கத் தயங்கும் சில கேள்விகளை குழந்தைகள் கேட்கும்போது, அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    பிறப்பு மற்றும் இறப்பு: குழந்தைகள் அடிக்கடி பெற்றோரிடம் கேட்பது, "நான் எப்படி பிறந்தேன்? அல்லது ஒருவர் இறந்தால் என்ன நடக்கும்?" என்பதுதான். இந்த கேள்விகளை பல பெற்றோர்கள் தவிர்க்க நினைப்பார்கள். ஆனால், குழந்தைகளுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய வாழ்வியல் விஷயங்களில் இதுவும் ஒன்று. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய கருத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு அணுகுமுறையை ஏற்படுத்த வேண்டும். பிறப்பும், இறப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மற்றும் அடிப்படை வாழ்க்கை சுழற்சி என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும்.

    உடற்கூறியல்: அறிமுகமானவர்கள் மற்றும் பிற பாலினத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் உயரம், எடை, நிறம் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் குறித்த கேள்விகளை குழந்தைகள் அடிக்கடி கேட்பார்கள். இதற்கு விளக்கப் படங்கள், கதைகள் மற்றும் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற திரைப்படங்களைப் பயன்படுத்தி, பாலினம் பற்றிய கருத்தை எளிமையாகவும், அறிவியல் ரீதியாகவும் தெரிவிக்கலாம். இந்த வகையில், குழந்தைகளுக்கு எழும் பல சந்தேகங்களுக்கான தீர்வுகளை எளிதாக புரிய வைக்க முடியும்.

    மதம்: குழந்தைகளுக்கு அதிக சந்தேகம் எழும் விஷயம் கடவுள், மதம், சம்பிரதாயங்கள் பற்றியதுதான். இது சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது பல பெற்றோருக்கு சவாலானதாக இருக்கும். இந்தியா போன்ற பன்முக கலாசாரம் கொண்ட நாட்டில், குழந்தைகளுக்கு பல்வேறு மத பின்னணியைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பார்கள். அவர்களை சமமாக பாவிக்கும் வகையில், கதை சொல்லி புரியவைக்கலாம். அடிப்படை மத நூல்கள் மூலம் ஒவ்வொரு மதத்தின் தனித்துவத்தைப் பற்றி பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். இருப்பினும், இதில் 'மனிதநேயம்' என்பதைத்தான் முதலில் போதிக்க வேண்டும். குழந்தைகள் அனைவரையும் சமமாகவும், அன்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதை கற்பிப்பது அவசியம்.

    நிதி: வளர்ச்சியின் ஆரம்பத்தில், குழந்தைகள் பல்வேறு சமூகப் பின்னணியில் உள்ள நபர்களைச் சந்திக்கின்றனர். சாலையில் யாசகம் கேட்கும் நபர்கள் முதல் செல்வந்தர்கள் வரை, பலவிதமான பொருளாதார சூழலில் வாழும் நபர்களை பார்க்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கேள்வி கேட்கும்போது, யாரையும் ஏற்றத்தாழ்வுடன் அணுகாமல், சமநிலை நோக்குடன் அணுகச் செய்யும் வகையில், பதில் அளிக்க வேண்டும்.

    • ஸ்பிட் அப் பிரச்சனையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.
    • அதிகமாக உணவுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

    சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்ட பிறகு, பால் குடித்த பிறகு என வாந்தி எடுக்கும் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்னை ஏன் ஏற்படுகிறது? தடுக்க வழிகள் இருக்கிறதா? விளக்கமாகப் பார்க்கலாம்.

    ஸ்பிட் அப் என்பது 0-1 வயது குழந்தைகளுக்கு பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை. வயிற்றில் உள்ளவை ஏப்பம் மூலமாக, வாய் வழியாக வெளியேறுவது. கை குழந்தைகள் தாய்ப்பால் குடித்த பின் குழந்தைகள் 'ஸ்பிட் அப்' செய்வார்கள். இது இயல்பான விஷயம், குழந்தைகள் பொதுவாக ஏப்பம் விடும்போது சிறிதளவு ஸ்பிட் செய்வது சாதாரணமான விஷயம்தான். குழந்தை வளர வளர இந்த ஸ்பிட் அப் பிரச்சனைத் தானாக சரியாகிவிடும்.

    10-12 மாத குழந்தைகளாக வளரும்போது தானாக குழந்தைகள், இந்த ஸ்பிட் அப் பிரச்சனையிலிருந்து வெளி வருவார்கள். ஸ்பிட் அப் பிரச்சனையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.

    மிகவும் இயல்பற்ற நிலையில், வலுகட்டாயமாக ஸ்பிட் அப் அல்லது வாந்தி எடுப்பதைத் தொடர்ந்து செய்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்லுங்கள். குழந்தை பால் குடிக்கவோ உணவு சாப்பிடவோ அவஸ்தை பட்டால் நிச்சயம் நீங்கள் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

    குழந்தைக்கு கொடுக்கும் உணவைக் கொஞ்சம் திக்காக, கெட்டியான கூழ் வடிவில் கொடுக்கலாம். அதிகமாக உணவுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை நிறைய முறை கொடுக்கலாம். குழந்தை ஏப்பம் விட வசதியாக, சாப்பிட்ட பின் லேசாக முதுகைத் தட்டுங்கள். உணவு உண்ட பிறகு, அமைதியான, பாதுகாப்பான, நிமிர்ந்த நிலையில் 20-30 நிமிடங்கள் குழந்தையை வைத்திருங்கள்.

    வாந்தி, குமட்டலைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

    இங்கு சொல்லப்படும் கைவைத்தியங்கள் குழந்தைகளுக்கு ஏற்றது. இது கொடுக்கலாமா அது கொடுக்கலாமா குழப்பிக் கொள்ளாமல் எது கொடுத்தாலும் சரியான அளவில் மருந்தாகக் கொடுக்கும் போது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது. மருந்தை அளவாகத் தருவதில் தவறில்லை.

    லேசான வெஜிடபிள் சூப், கிளியர் சூப், ஜூஸ், கஞ்சி, கூழ் போன்ற திரவ உணவுகள் அதிகமாகக் கொடுக்கலாம். எந்த உணவு கொடுத்தப் பின்னும் உடனடியாகப் படுக்க வைக்க கூடாது.

    சின்ன துண்டு இஞ்சியை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறில் சிறிது தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். இஞ்சியும் தேனும் செரிமானத்துக்கு உதவும்.

    வாந்தி, குமட்டலை தீர்க்க புதினாவுக்கு சிறப்பான ஆற்றல் உண்டு. ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை எடுத்து, அரைத்து, ஜூஸ் எடுக்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவைக்காக, சிறிது தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்தாலும் வாந்தி, குமட்டல் பிரச்சனை இருக்காது.

    வயிற்றின் இயக்கத்தை சீராக்குவதில் பட்டை சிறந்தது. குமட்டல், வாந்தி ஆகிய தொல்லைகளை நீக்கும். பட்டை டீ தயாரிக்க, ஓரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பட்டை தூள் போட்டு, கொதிக்க விட்டு நிறுத்தி விடலாம். இதைக் குடிக்க வாந்தி, குமட்டல் இருக்காது.

    அரிசி வடித்த கஞ்சி தண்ணீரைக் குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் நிற்கும்.

    ஏலம் விதைகளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து, அந்த பவுடரை சிறிதளவு குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் பிரச்னை இருக்காது.

    பட்டை டீ தயாரித்தது போலவே கிராம்பு டீ தயாரித்து, சுவைக்குத் தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

    பட்டை டீ, கிராம்பு டீ போல சோம்பு டீ தயாரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு 4-5 வேளை ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

    ஒரு ஸ்பூன் வெங்காய சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு. இதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை கொடுக்கலாம். வாந்தி, குமட்டல் தொல்லை வராது.

    சீரகத்தை வறுத்து பவுடராக்கி கொள்ளுங்கள். குழந்தைக்கு குமட்டல், வாந்தி வருவது போல பிரச்சனை இருக்கும் போது, சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் சீரக பவுடரைக் கலந்து அந்தத் தண்ணீரை ஒரு ஸ்பூன் அளவுக்கு அரை மணி நேரம் இடைவெளி விட்டு கொடுத்து வாருங்கள். மேலும் சீரக பவுடருடன் ஒரு சிட்டிகை பட்டைத் தூள், தேன் குழைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைக்கு தரலாம்.

    ×