என் மலர்
குழந்தை பராமரிப்பு
- சிறிய வகை கணினி விளையாட்டுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
- விளையாட்டுக்களின் வடிவங்கள் இன்றைய சூழலில் மாறி வருகின்றன.
குழந்தை பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்து விடும். அதன் பிறகு 8 வயதுக்குள் மூளை முழு வளர்ச்சியை அடைந்துவிடும். இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது மருத்துவ வல்லுனர்களின் கருத்தாகும். அதன் அடிப்படையில் கிட்ஸ் பிளே ஹவுஸ் என்று குறிப்பிடப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு வீடுகள் அமைக்கும் முறை மேலை நாடுகளில் பரவலாக இருந்து வருகிறது.
நாகரிகம் மற்றும் அறிவியல் வளர்ச்சிகளுக்கு ஏற்ப சிறு குழந்தைகளின் கற்றல் திறனும், அறிவு வளர்ச்சியும் முந்தைய காலகட்டங்களை ஒப்பிடும்போது பல மடங்கு முன்னணியில் இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கேற்ப அவர்கள் விளையாடும் முறைகள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் அவசியம். அதற்கேற்ப விளையாட்டுக்களின் வடிவங்களும் இன்றைய சூழலில் மாறி வருகின்றன.
கிட்ஸ் பிளே ஹவுஸ் எனப்படும் குழந்தைகள் விளையாட்டு வீடு மரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. அவை போன்ற பல்வேறு விளையாட்டு பொருட்கள் அடங்கிய உபகரணங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன.
பிளே ஹவுஸ் என்பது இரு வகைகளாக உள்ளன. முதலாவதாக உள்ள இன்டோர் பிளே ஹவுஸ் என்பது வீடுகளுக்கு உள் புறமாகவும், இரண்டாவதாக உள்ள அவுட்டோர் பிளே ஹவுஸ் என்பது வீட்டின் தோட்டப் பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன.
2 வயது முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் செயல்திறனுக்கு ஏற்ப அறிவுத்திறனை மேம்படுத்தி, அவர்களின் கற்பனை திறனை வளர்ப்பதும் அவசியம். மேலும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், மொழிகளை எளிதாக கற்கவும் விளையாட்டு வழியில் திறமைகளை மேம்படுத்தவும் பிளே ஹவுஸ் அமைப்பு உதவியாக இருக்கும்.
இண்டோர் பிளே ஹவுஸ்
வீடுகளின் உள்புறமாக அமைக்கப்படும் இன்டோர் பிளே ஹவுஸ் அமைப்புகளில் சிறிய படிப்பு மேசைகள், அழகான சிறு படுக்கைகள், சின்ன சின்ன பர்னிச்சர்கள் மற்றும் மினியேச்சர் இசைக்கருவிகள் போன்றவை இடம் பெறுகின்றன. அவற்றை குழந்தைகள் வெகுவாக ரசிப்பதுடன், குஷியாக அவற்றில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். சிறிய வகை கணினி விளையாட்டுகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
சின்ன ஊஞ்சல், குட்டி டேபிள், சேர்கள், சிறியதாக கிச்சன்செட், விளையாட்டு பொருட்கள், சிறிய இசைக்கருவிகள் போன்றவற்றை பிளே ஹவுஸில் அமைப்பதன் மூலம் குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை உடல் மற்றும் மன வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஆக்கப்பூர்வமாக மாற்றி அமைக்கலாம்.
அவுட்டோர் பிளே ஹவுஸ்
வீடுகளுக்கு வெளியே அல்லது தோட்டப்பகுதிகளில் அவுட்டோர் பிளே ஹவுஸ் அமைக்கும்போது அழகான குட்டி ஊஞ்சல்களை பொருத்தி குட்டிப்பசங்களின் உற்சாகத்தை அதிகமாக்கலாம். மேலும், சிறிய அளவிலான சறுக்கு விளையாட்டுகள், படிப்பு மேசைகள், மரக்கால் குதிரைகள், சிறிய படுக்கைகள், குட்டியான பர்னிச்சர் அமைப்புகள் போன்றவற்றையும் உள்ளடக்கமாக அமைக்கலாம்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் ஒன்றிணைந்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் பெற்றோர்கள் முன்னிலையில் குழந்தைகள் விளையாட்டுக்களை சேர்ந்து விளையாட செய்யலாம். அவற்றில் பெற்றோர்களும் கலந்து கொள்வது விசேஷம். உறியடி விளையாட்டு, கண்ணாமூச்சி, பாண்டியாட்டம் போன்றவற்றை பலரும் சேர்ந்து விளையாடலாம். குடியிருப்புகளுக்கு பக்கத்தில் அல்லது உள்புறமாக குட்டி பசங்களை பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டச்செய்யலாம். இவற்றின் மூலமாக செல்போன் விளையாட்டு, வீடியோ கேம் ஆகியவற்றில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவதிலிருந்து குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப இயலும்.
- குழந்தைகள் நடக்கிற பொழுது, திடீரென விழுந்து விடுவார்கள்.
- விழும் குழந்தையின் சுவாசத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்து (ஒரு வருடத்திற்குப் பிறகு) பதிமூன்று மாதங்கள் கழித்து நடக்கக் கற்றுக் கொள்கின்றனர். குழந்தைகள் தவழும் போதும், நடக்கும் போதும் எதுவும் குறுக்கே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அப்படி குழந்தை நடக்க ஆரம்பிக்கிற பொழுது கீழே விழுந்து விழுந்து தான் எழுந்திருக்கும். அதுபோன்ற சமயங்களில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
குழந்தைகள் நடக்கிற பொழுது, திடீரென விழுந்து விடுவார்கள். அப்போது அவர்கள் நிதானமற்று இருந்தார்கள் என்றால், அந்த பதட்டத்தைத் தணிக்க சிறிய அளவில் மருத்துவ உதவி கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அப்படி விழும் குழந்தையின் சுவாசத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும். நாடித்துடிப்பு எப்படி இருக்கிறது என பார்த்து மோசமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். இவை எல்லாவற்றையும் விட, பெற்றோர்களாகிய நீங்கள் முதலில் நிதானமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் கீழே விழுந்தவுடன் காது, மூக்கு அல்லது வாயில் நிறமற்ற நீர் போன்று ஏதேனும் வெளியுறினால் அதை சலைவாய் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். விரைவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். அது செரிப்ரோஸ்பைனல் திரவமாகும். இந்த திரவம் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியையே சூழ்ந்திருக்கும். இது மூளையை பாதுகாக்கும் ஒருவகை திரவம். அதனால் இந்த திரவம் வெளியேறினால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த திரவம் வெளியேறினால் தலைவலி, கண் பார்வை குறைபாடு, காது கேளாமல் போவது போன்ற பிரச்சனை வரலாம்.
தலையின் மண்டை ஓட்டில் அடிபட்டால் நான்கு விதத்தில் சோதனை செய்யப்படுகிறது.
i. குழந்தையின் மண்டை ஓட்டு எலும்பில் ஏதும் பிரச்சனையா என பார்க்கப்படுகிறது.
ii. தலையில் ஏதும் வெட்டுக்காயம் இருக்கிறதா? என பார்க்கப்படுகிறது.
iii. டையாஸ்டிக் எலும்பு முறிவு சோதனை என்பது குழந்தைகளுக்கு மட்டுமே பார்க்கப்படும் ஒன்றாகும்.
iv. கண் மற்றும் காதுகளுக்கு செல்லக்கூடிய அடிப்படை நரம்புகளும் சரிப்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் கீழே விழுந்தால் முதலில் சோதனையிட வேண்டியது அவர்கள் விடும் மூச்சு தங்குதடையின்றி இருக்கிறதா? என்பதையே ஆகும். உங்கள் குழந்தை மூச்சு விடும்போது வேகமாக விடுவார்கள் எனில் சில சமயத்தில் 10 முதல் 20 நொடி மூச்சு அடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த மாதிரி பிரச்சனைகளை பார்த்துக்கொண்டு இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வது மிக நல்லது.
கீழே விழுந்த உங்கள் குழந்தைகளின் கண்கள் வெளியில் வந்தால்... உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். தலையில் அதிர்ச்சி ஏற்படுவது என்பது மூளைக்கு அழுத்தத்தை தந்து அதிர்வலைகளை ஏற்படுத்தும். நரம்புகள் சேர்ந்து கண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதனால் கண்கள் வெளிவந்து காணப்படக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. அருகில் உள்ள மருத்துவ வல்லுனரை அணுக வேண்டியது அவசியமாகும்.
- குழந்தைகளுக்கு இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
- பெண் குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
செல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!
* தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.
* நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.
* பலதரப்பட்ட சூழல்களையும் சந்திக்க வேண்டிய இந்த உலகில், புதிய மனிதர்களிடம் எளிதாகப் பழகுவது, அதே சமயம் தன் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என பல புதிய சூழல்களை அடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள், அவற்றை தயக்கமின்றி எதிர்கொள்வதுடன், தங்கள் திறமைகளை பலரும் பாராட்டும் வகையில் வெளிப்படுத்துவார்கள்.
* பெற்றோர், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைத்து உறவுகளிடமும், நட்பிடமும் அன்பாக, எதிர்பார்ப்பு இல்லாத சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும். மேலும் பெற்றோரிடம், குறிப்பாக தன் தாயிடம் எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கான இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.
- குழந்தை பராமரிப்பு மையங்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன.
- தொடர்ந்து அழும் குழந்தைகளை பராமரிப்பாளர்கள் அடித்து துன்புறுத்துவது உண்டு.
இன்றைய நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருவதுடன் சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். திருமணமான தம்பதியில், முன்பு ஆண்கள் வேலைக்கு செல்வார்கள். பெண்கள் வீட்டை நிர்வகிப்பார்கள். ஆனால் இன்று பெருநகரங்களில் திருமணமான கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை டே கேர், பிளே ஸ்கூல் என்று அழைக்கப்படும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் சேர்த்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள்.
இதுபோன்ற குழந்தை பராமரிப்பு மையங்கள் பெங்களூரு, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தான் அதிகளவில் உள்ளன. இதற்கு கூட்டு குடும்பங்கள் என்ற வாழ்வியல் முறையை விட்டு இ்ன்றைய தலைமுறையினர் விலகி தனிக்குடித்தனத்தை தேர்வு செய்ததும், மற்றொன்று பொருளாதாரத்தை பெருக்க வேண்டும் என்று கணவன்-மனைவி வேலைக்கு செல்வதும் தான் காரணம் என்றால் மிகையல்ல. அதுதவிர சில நடுத்தர குடும்பத்தினரே, வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்வதாக கூறி, பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்க்கும் நிலையும் உள்ளது.
பெங்களூருவில் இதுபோன்ற குழந்தை பராமரிப்பு மையங்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. சுமார் 10 ஆயிரம் மையங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளை கவனித்து கொள்ளுதல், பெற்றோர் வழங்கும் தின்பண்டங்கள், உணவை கொடுப்பது என்பது சிறிய அளவிலான பராமரிப்பு மையங்களில் நடைபெறுகிறது.
கொஞ்சம் வசதியான பராமரிப்பு மையங்களில், டி.வி. வசதி, விளையாட்டு பொருட்கள், பராமரிப்பில் சிறப்பு கவனம், அவர்களே தின்பண்டங்கள், உணவு பொருட்கள் தயாரித்து வழங்குவதும் உள்ளது. இவ்வாறு வசதிக்கு ஏற்ப சொகுசு பராமரிப்பு மையங்களும் பெங்களூருவில் உள்ளன.
இதில் பெரும்பாலான குழந்தை பராமரிப்பு மையங்கள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டே கேர் மையங்கள் 2 ஆயிரம் சதுர அடி கொண்ட விசாலாமான அறையில் தான் செயல்பட வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பல பராமரிப்பு மையங்கள் குறுகிய இடத்திலேயே இயங்கி வருகின்றன. சில பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை ஒரு அறையில் அடைத்துவிடுவதாகவும், அவர்களை முறையாக கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுகிறது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள ஒரு பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர். அங்கு யாரும் இல்லை. குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது ஒரு குழந்தை, மற்றொரு குழந்தையை தொடர்ச்சியாக முகம், முதுகு என சரமாரியாக தாக்கியது. ஆனால் இதை அந்த பராமரிப்பு மையத்தினர் பார்க்கவில்லை. குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த பெற்றோர், குழந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அந்த பராமரிப்பு மையத்தினரிடம் கேள்வி எழுப்பினர். உங்களை நம்பி தானே இங்கே குழந்தையை விட்டு சென்றோம். எப்படி எங்கள் குழந்தையின் உடலில் காயம் வந்தது என்று உணர்வுப்பூர்வமாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்பிறகே பராமரிப்பு மையத்தினர், அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது தான், அந்த குழந்தையை மற்றொரு குழந்தை அடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து அந்த பெற்றோர் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சியுடன் பெங்களூரு மாநகர போலீசின் டுவிட்டர் பக்கத்தில் புகார் அளித்தனர். அவர்கள், இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த சுப்பிரமணியபுரா போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவத்தால் குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து குழந்தை பராமரிப்பு மையம் நடத்துபவர்கள், பெற்றோர்கள் என பல தரப்பட்டவர்களிடம் கருத்து கேட்டோம். அதன் விவரம் பின்வருமாறு:-
குழந்தைகளின் பாதுகாப்பு அவசியம்
சிவமொக்கா டவுன் கும்பார குந்தி பகுதியை சேர்ந்தவரும், தமிழ் பெண்கள் நல அமைப்பு நிர்வாகியுமான உமா மகேஷ்வரி கூறுகையில், வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள், வயது முதிர்ந்த பெற்றோர்களிடம் விட்டு செல்ல முடியாத நிலையில் குழந்தை பராமரிப்பு மையத்தில் விட்டு செல்கிறார்கள். முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த இதுபோன்ற மையங்கள் சிறிய நகரங்களிலும் அதிகரித்து விட்டது.
இதுபோன்ற பராமரிப்பு மையங்களில் வயதான பெண்மணி இந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டு நேரத்தோடு உணவு, தண்ணீர் வழங்கி மாலையில் பெற்றவர்களிடம் ஒப்படைத்து வருகிறார்கள். இந்த பராமரிப்பு மையத்தை விட்டு வெளியே குழந்தைகள் செல்லாத வகையில் பாதுகாப்பது இவர்களுடைய முக்கியமான கடமை. ஆனால் சில பாதுகாப்பு மையங்களில் அழும் குழந்தைகள், அடம் பிடிக்கும் குழந்தைகளை அடிப்பதும், துன்புறுத்துவதும் நாம் அடிக்கடி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து படித்து தெரிந்து கொள்கிறோம். ஒரு சில பராமரிப்பு மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. அதற்காக அனைத்து பராமரிப்பு மையங்களையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் இதுபோன்ற பராமரிப்பு மையங்கள் முறையாக அனுமதி பெற்று செயல்படுகிறதா? என்பது தெரியவில்லை. அதுபோல் அரசு விதிகளை கடைப்பிடித்து இந்த மையங்கள் செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. எப்படி இருந்தாலும் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், கண்காணிப்பையும், கூடுதல் கவனிப்பையும் மேற்கொள்வது பராமரிப்பு மையங்களை நடத்துவோரின் பொறுப்பு. அதுபோல் கல்வித்துறை அதிகாரிகளும், சமூகநலத்துறையினரும் அவ்வப்போது பராமரிப்பு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வித்துறை அனுமதி அவசியம்
பெங்களூரு ராஜாஜிநகரில் செயல்பட்டு வரும் ஜானவி குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளர் ஷில்பா கூறியதாவது:-
குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்துவதற்கு சமூக நலத்துறை, கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அவர்கள் வந்து ஆய்வு செய்வார்கள். சரியான அடிப்படை வசதிகள் இல்லையென்றால் குழந்தைகள் பராமரிப்பு மையம் நடந்த அனுமதி வழங்க மாட்டார்கள். குறிப்பாக ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்தவேண்டும் என்றால் 3 முதல் 4 படுக்கையறைகள் அளவு இடம் இருக்கவேண்டும். அதாவது 2 ஆயிரம் சதுர அடி அளவு இடம் இருக்க வேண்டும். அங்கு தனி கழிவறை, கண்காணிப்பு கேமரா, குழந்தைகளை தூங்க வைப்பதற்காக வசதி, பராமரிப்பாளர்கள் இருக்க வேண்டும்.
அதாவது கட்டாயம் ஒரு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஒருவர் (பராமரிப்பாளர் அல்லது உதவியாளர்) இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு எது நடந்தாலும் அவர்கள்தான் பொறுப்பு. தற்போது பல இடங்களில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகள் பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது. அங்கு முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை.
இதனை கல்வித்துறை அதிகாரிகள் மாதம் ஒரு முறை ஆய்வு செய்தால்போதும், அனுமதியின்றி செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையம் மூடப்பட்டுவிடும். பள்ளியுடன் சேர்ந்து செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், குழந்தைகள் மீது தாக்குதல் நடப்பது குறைவு. ஒரே அறையில் குழந்தைகளை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாக நடமாட விடவேண்டும். பெற்றோரை தவிர குழந்தைகளை வேறு யாருடனும் அனுப்ப கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் குழந்தைகள் மீதான தாக்குதல், குழந்தைகள் கடத்தலை தடுக்க முடியும். அதே நேரம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் எந்த தவறுகள் நடந்தாலும், அதற்கு அந்த பள்ளி நிர்வாகிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு இல்லை
பெங்களூருவில் பணியாற்றி வரும் கர்நாடக அரசு கல்வித்துறையின் தமிழ் வளமை அதிகாரி மெர்லின் கூறியதாவது:-
நகரங்களில் வீட்டில் கணவன்-மனைவி 2 பேரும் வேலைக்கு செல்கிறார்கள். அதனால் அவர்களின் குழந்தைகளை வீட்டில் கவனித்துக்கொள்ள யாரும் இருப்பது இல்லை. அதனால் அவர்கள் குழந்தையை குழந்தை பராமரிப்பு மையங்களில் விட்டு செல்கிறார்கள். மாலையில் வந்து குழந்தையை அழைத்து செல்வார்கள். அங்கு குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடையாது.
தொடர்ந்து அழும் குழந்தைகளை பராமரிப்பாளர்கள் அடித்து துன்புறுத்துவது உண்டு. அத்தகைய குழந்தைகளை ஏதாவது ஒரு தவறான மயக்கம் ஏற்படுத்தக்கூடிய உணவை கொடுத்து தூங்க வைக்கும் சம்பவங்களும் நடைபெறும். இத்தகைய விஷயங்கள் நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு நடைபெற்றது. ஆனால் தற்போது தொழில்நுட்பங்களின் வருகையால், பெற்றோர் எங்கிருந்தும் தங்களின் குழந்தைகளை கண்காணிக்க முடியும். குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பெற்றோர் தங்களின் பணி இடத்தில் இருந்தபடியே குழந்தைகளின் செயல்பாடுகளை பார்த்துக்கொள்ளலாம். இதனால் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு மெர்லின் கூறினார்.
சூழலுக்கு ஏற்றவாறு பராமரிப்பு
மங்களூரு நகரில் கத்ரி பகுதியில் பிளே ஸ்கூல் நடத்தி வரும் ஆசிரியை சேத்தனா கூறியதாவது:-
குழந்தைகளை வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தான் எங்களிடம் விட்டு செல்கிறார்கள். நாங்கள் அவர்களை கவனித்துக் கொள்வதுடன் பாட்டு, நடனம் சொல்லிகொடுக்கிறோம். மேலும் அவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் வழங்குகிறோம். ஒரு சில பராமரிப்பு மையங்களில் நடைபெறும் தவறுகளை வைத்து பொத்தம் பொதுவாக குற்றம்சாட்ட கூடாது. அனைத்து குழந்தைகளையும் நாங்கள் காலை முதல் மாலை வரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறோம். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை நாங்களே தயார் செய்து கொடுக்கிறோம். பெற்றோர்களும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தேவையான விளையாட்டு உபகரணங்களும் எங்கள் மையத்தில் உள்ளன. அவற்றை வைத்து குழந்தைகள் விளையாடுவார்கள். உறங்கும் நேரத்தில் உறங்க வைப்போம். கற்பிக்கும் நேரத்தில் கற்பிக்க வைப்போம். உடற்பயிற்சிகள் மனஅழுத்தமின்றி சூழலுக்கு உகந்தவாறு அந்த குழந்தைகளை பராமரித்து நாங்கள் தயார்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முறையாக செயல்பட நடவடிக்கை
மங்களூரு நகரில் கொட்டார சவுக்கியை சேர்ந்த குப்புசாமி கூறியதாவது:-
எனது மகனை குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்த்துள்ளேன். அங்கு பாதுகாப்பு என்பது குறைபாடு இல்லை. தினமும் காலை 10 மணிக்கு மகனை பள்ளியில் விட்டால் மாலை வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். மதிய வேளையில் நாம் கொடுத்து அனுப்பும் உணவை உட்கொள்ள வைக்கிறார்கள். எந்தவிதமான புகார்களும் இதுவரை இல்லை. தங்கள் வீட்டு குழந்தைகளை போன்று கவனித்துக் கொள்கிறார்கள். அதுபோல் வீடு போன்றே குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களும் அங்குள்ளதால் அது விளையாட்டு பயிற்சியும் உடற்பயிற்சியுடன் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது இந்த மையத்தின் சிறப்பு அம்சமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எது, எப்படியோ குழந்தைகளை பராமரிப்பு மையத்தினர் பெயருக்கு ஏற்ப கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது அவர்களின் கடமை. பெருகிவரும் குழந்தை பராமரிப்பு மையங்களை கல்வித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வதுடன், இதுபோன்ற குழந்தை மையங்கள் முறையாக செயல்படவும் நடவடிக்கை எடுப்பது கடமையாகும்.
- கீழ்காணும் அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான்.
- மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு.
சில குழந்தை கீழே எது கிடந்தாலும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். அதேபோல் ஆசையாக நாம் குழந்தைகளுக்கு வாங்கித் தரும் சாக்லேட் போன்றவை, சில நேரங்களில் பெரும் விபரீதத்தை ஏற்படுத்திவிடும். சாக்லேட் மட்டுமல்ல குழந்தைகள் சில நேரங்களில் காசு, ரப்பர், கோலிக்குண்டு, பாசி, ஹேர்பின், நறுக்கிய காய்கறிகள், பேனா மூடி போன்றவற்றை வாயில் போட்டு விழுங்கிவிடுவதுண்டு. அப்படி விழுங்கிவிட்டால் குழந்தைகளுக்கு என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்? இதுபற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக் கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக் கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.
குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.
கீழ்காணும் அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது.
பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும்.
வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.
ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும்.
அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.
சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.
- அடினாய்டு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது.
- சரியான சிகிச்சை அளிக்காத நிலையில் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும்.
சமீபகாலமாக குழந்தைகளுக்கு தொண்டையில் அழற்சி, குறட்டை, தூக்கமின்மை, மூக்கில் ரத்தம் வருதல் போன்ற பாதிப்புகள் காணப்படுகிறது. இதனை 'அடினாய்டிடிஸ்' (ADENOIDITIS) என்கிறார்கள்.
குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வயதினர் வரை இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பை எளிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்வது குறித்து மதுரை செல்லூர் அகிம்சாபுரம் பழனியாண்டவர் ஆஸ்பத்திரி காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணப்பன் அழகப்பன் விளக்குகிறார்.
அடினாய்டு திசுக்கள்
மூக்கின் பின் பகுதியில் காணப்படும் திசுக்களுக்கு அடினாய்டு திசுக்கள் அல்லது அடினாய்டு கோளங்கள் என்று பெயர். இந்த அடினாய்டு திசுக்கள் என்பவை மூக்கின் வழியாக நுழையும் பாக்டீரியா, வைரஸ் உள்பட அனைத்து கிருமிகளையும் தடுத்து உடலுக்குள் புகாமல் தடுக்கும் பணியை செய்கின்றன. சில நேரங்களில் இந்த அடினாய்டு திசுக்கள் தொற்றால் பாதிக்கப்படும் போது மூக்கின் பின் துவாரம் மற்றும் தொண்டையும் இணையும் இடம் பாதிப்புக்கு உள்ளாகிறது. குறிப்பாக, இது போன்ற பாதிப்பு ஏற்படும் போது தொண்டையின் மேல் பகுதியையும், நடுக்காதையும் இணைக்கும் யூஸ்டேசியன் ட்யூப் என்னும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நீர் கோர்த்து விடுகிறது. இது போல் இந்த இடத்தில் அடைப்பு ஏற்படும் போது அது காதின் சவ்வில் துளை ஏற்பட வழி வகுக்கிறது. இதுபோன்ற நிலை என்பது சுவாச பகுதி சுரப்பி வீங்கி பெரிதாகி இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
பொதுவாக, குழந்தைகளுக்கு அடினாய்டு பாதிப்பு இருக்கும் அறிகுறிகள் தெரிந்தால் அதை குழந்தைகளுக்கு உடனடியாக சரியான சிகிச்சை அளிக்க வேண்டும். அவ்வாறு சரியான சிகிச்சை அளிக்காத நிலையில் அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். காது வலியும், காதில் சீழ் வடிதல் மற்றும் காது அடைப்பும் காணப்படும். அடினாய்டு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு தூக்கத்தில் குறட்டை வரும். சில நேரங்களில் மூக்கில் இருந்து ரத்தம் வரலாம். பொதுவாக, அடினாய்டு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது. இதனால், அவர்கள் காலையில் தூங்கி எழும் போது புத்துணர்ச்சி இல்லாதவர்களாக சோம்பலுடன் காணப்படுவர். பள்ளியில் படிப்பில் கவனம் செல்லாது. உடல் எடை போதிய அளவு இல்லாமல் மெலிந்து காணப்படுவர். பல் வரிசை சரியாக அமையாமல் முன்பக்கம் உள்ள பற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும். சில குழந்தைகளுக்கு மேலுதடு உயர்ந்து காணப்படும்.
கண்டறிதல் மற்றும் சிகிச்சை
ஒரு குழந்தைக்கு அடினாய்டு பாதிப்பு இருக்கிறதா என்பதை டையாக்னாஸ்டிக் நேசல் என்டோஸ்கோப்பி பரிசோதனையில் அறியலாம். அதாவது, இந்த கருவி மூலம் அடினாய்டு திசுக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மிகத் துல்லியமாக பார்க்கலாம். இதுதவிர மென்திசு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலமும் பரிசோதித்து பாதிப்பின் அளவை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
முந்தைய காலங்களில் மருத்துவர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ள அடினாய்டு திசுக்களை தோராயமாக அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது வழக்கம். ஆனால், தற்போது அதிநவீன கண்டறிதல் கருவிகள் இருப்பதால் மிகத்துல்லியமாக அடினாய்டு திசுக்களின் பாதிப்பை கண்டறிந்து 99 சதவீதம் நீக்க முடியும். மீதமுள்ள 1 சதவீதம் திசுக்கள் தானாக சுருங்கி விடும். இந்த அடினாய்டு திசு பாதிப்பு நீக்க சிகிச்சைக்கு என்டோஸ்கோப்பி அடினாய்டு எக்டமி அல்லது என்டோஸ்கோப்பிக் கைடடு கன்வென்ஷனல் அடினாய்டு எக்டமி என்று பெயர். இதனை 'காபுலேசன் லேசர் சர்ஜரி' என்கிறோம். இந்த அதிநவீன அடினாய்டு அறுவை சிகிச்சையில் ரத்த இழப்பு இருக்காது. இது பாதுகாப்பான சிகிச்சை ஆகும்.
நோய் காரணங்கள்
இன்றைக்கு, குழந்தைகள் அதிக அளவில் நொறுக்கு தீனி உட்கொள்வது, அளவுக்கு மீறி சாக்லேட் மற்றும் சாக்லேட் சுவையுள்ள பிரவுன் சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளை உண்பது தான் முக்கிய காரணம். இது தவிர, சுவாசிக்கும் காற்றில் உள்ள கடுமையான மாசுபாடு காரணமாக ஏற்படுகிறது.
குழந்தைகளிடத்தில் அடினாய்டு பாதிப்பை தடுக்க கண்டிப்பாக குழந்தைகள் சாக்லேட் வாங்கி தருவதை பெற்றோர்களும், குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இனிப்பு வாங்கி செல்லும் விருந்தினர்களும் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்
அடினாய்டு பாதிப்புக்கு தக்க நேரத்தில் சிகிச்சை அளித்து விட்டால் அடினாய்டு காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் குறட்டை, அடிக்கடி சளி தொல்லை, காது வலி பாதிப்பு மற்றும் சோம்பல் தன்மை நீங்கி விடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து ஆரோக்கியமான குழந்தைகளாக இருப்பார்கள் என்பது உறுதி.
- குழந்தைகளுக்கு காய்களை நன்கு மசித்துத் தரலாம்.
- வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும்.
குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கிவிடும்; குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான் மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.
நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு
விளையாட்டு கவனத்தில் சரியாக மலம் கழிக்காமல் இருத்தல்
சோம்பல் உணர்வுடன் மலம் சரியாகக் கழிக்காமல் இருப்பது
கழிவறை மீதுள்ள பயத்தால் அடக்கி வைத்தல்
சரியான உணவுப் பழக்கம் இல்லாமல் இருத்தல்
எப்படிக் கண்டுபிடிப்பது?
தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாள்கள் மலம் கழிக்காமல் இருத்தல்
மலம் கழிக்கும்போது, வலி ஏற்பட்டு அழுவது
மலம் கழிக்க மறுத்து, ஆத்திரமடைவது
மலம் கழிக்க வேண்டுமென்ற பயத்தில் சாப்பிட மறுப்பது
பசியின்மை
எடை குறைவு
மலம் கழிக்கும்போது முகத்தைச் சுருக்கி முக்குவது
மலம் கழிக்க முயற்சி செய்தும் மலம் வெளியேற முடியாமல் குழந்தை அழுவது
மலம் இறுகி வெளியேறும்போது அதில் காணப்படும் ரத்தக் கசிவு
அடிவயிற்றில் வலி
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அது மலச்சிக்கலாக இருக்கலாம்.
மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்
உணவு மாற்றம் அவசியம்:
மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
முருங்கைக்காய் , தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மேற்சொன்ன காய்களை நன்கு மசித்துத் தரலாம். பற்கள் இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு மென்று சாப்பிட சொல்லி வலியுறுத்துங்கள்.
வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.
இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பேரீச்சை – 2, அத்திப்பழம் – 1 ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுக்கலாம். கேரட்டை அரைத்து சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து தரலாம். அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம். தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும். விளையாட்டு ஆர்வத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம். தினமும் தூங்கி எழுந்த பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க கொடுங்கள். இதனால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும். உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்துக்கு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம். இது குழந்தையின் செரிமானத்தைத் தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கும்.
மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சைக்கிள் ஓட்டுவது போன்ற குழந்தையின் கால்களை மெல்ல அசைக்கும் பயிற்சிகளைச் செய்ய சொல்லலாம். இவை மலச்சிக்கலைத் தடுக்கும். இதனால் தொடை தசைகள்கூட தளர்வடையும். இதனாலும் குழந்தைகள் வலியின்றி மலம் கழிக்க முடியும்.
- ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன.
- குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம்.
இருபத்தைந்து வயதானாலும் பலர் மொபைல் போனில் புது புது விசயங்களை தெரிந்து கொள்ள முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. அதேநேரம் பல் முளைக்காத சின்னஞ்சிறுசுகள் செல்போன் கேட்டு அடம் பிடிப்பதையும் செல்போனை கையில் கொடுத்தால் அமைதியாகி விடுவதையும் வீடுகள் தோறும் காண முடிகிறது. செல்லுக்கு கட்டுப்படும் குழந்தைகள் தாயின் சொல்லுக்குகூட கட்டுப்படுவது இல்லை. அந்த குழந்தைகளே செல்போனை திறந்து தேவையான கார்ட்டூன் போன்ற படங்களை பார்த்தும் ரசிக்கிறது.
அதை பார்த்ததும் 'ஆஹா... என் பிள்ளையின் ஆற்றலைப் பார்...! என்று பெருமைப்படும் பெற்றோரும் உண்டு. என் குழந்தைகள் எப்போதும் செல்போனில் தான் விளையாடும். அவனுக்கு செல்போனை கையில் கொடுத்தால் போதும் இரவில் கூட பக்கத்தில் வைத்து கொண்டுதான் தூங்குவான். 'என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும் திறந்து பார்த்து விடும். செல்போனை கையில் கொடுத்தால்தான் சாப்பிடும்..." இது தங்கள் குழந்தைகளை பற்றி தாய்மார்கள் பெருமையுடன் சொல்லும் சேதி!
ஆனால் தனது குழந்தை செல்போன் என்ற ஆக்டோ பசால் கொஞ்சம் கொஞ்சமாக வளைக்கப்படுகிறது என்பதை அப்போது உணர்வதில்லை.
ஒரு கட்டத்தில் செல்போன் பிடியில் இருந்து குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படாத பாடுபடுகிறார்கள்.
நவீன உலகில் செல்போன் மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அதை பயன்படுத்தும் விதத்தை பொறுத்து அது தரும் நன்மையை விட தீமை அதிகரித்து விடுகிறது.
உலகம் முழுவதும் செல்போன் விற்பனை செய்யும் உலக கோடீசுவரரான டிம் குக் தனது குழந்தைக்கு விளையாட செல்போன்கள் கொடுப்பதில்லை என்பதை நம்ப முடிவதில்லை.
ஆனால் குழந்தையின் ஆரோக்கியம் கருதி செல்போன் கொடுப்பது கிடையாது என்பதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று கால கட்டம்தான் பலரையும் கட்டாயமாக செல்போனுக்குள் மூழ்க வைத்தது. ஊரடங்காக இருந்தாலும் பிள்ளைகளின் படிப்புக்கு செல்போன்தான் கைகொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் செல்போன்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து கொண்டது. எனவேதான் தேவைக்கான என்ற நிலை மாறி செல்போன்களிலேயே மூழ்க வைத்து விட்டது.
குழந்தைகள் செல்போன்களின் ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்த்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பல், கண் பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் ஏற்படலாம். பேச்சு திறன் குறையும். மற்றவர்களோடு பேசும் திறன் குறையும். மற்ற குழந்தைகளுடன் இணைந்து பழகவோ, விளையாடவோ முடியாமல் தனிமைப்பட்டு விடுகின்றன.
குழந்தைகள் மட்டுமின்றி வளர் இளம் பருவ குழந்தைகள் வரை நினைவாற்றலை இழக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பில் சுமார் 60 சதவீத குழந்தைகள் 5 வயதுக்கு முன்பே ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்களாம். அதிலும் 31 சதவீதம் பேர் 2 வயதுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கி விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
குழந்தை பருவம் என்பது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மூளை செல்களை வலுப்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் ஸ்மார்ட்போன்கள் குழந்தைகளுக்கு அதிக கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் எந்நேரமும் அல்லது அதிக நேரம் போன்களில் மூழ்கி இருக்கும் போது, அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை தவிர்க்கி றார்கள்.
தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்ல, மூளை செல்களுக்கும் தீங்கு செய்ய கூடியது. அதிலும் குறிப்பாக நீலநிற கதிர்வீச்சு தொடர்ந்து கண்களில் ஊடுருவுவது, ஒருவரது விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை பாதிக்கிறது. தவிர குறுகிய கால நினைவாற்றலில் குறுக்கிடுகிறது.
இரவில் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளியேறும் புளூ ரேடியேஷன்ஸ், இது இரவல்ல பகல் என்று மூளையை நம்ப வைக்கிறது. இதனால் உடல் தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. எனவே அடுத்த நாள் தூக்கமின்றி களைப்பாகவும் எந்த வேலையையும் முழு திறனில் செய்ய முடியாமலும் ஒருவர் பாதிக்கப்படுவார்
செல்போனில் மூழ்குவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்துள்ளதால் பள்ளிகளுக்கு ஓரிரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஏன்தான் விடுமுறை விட்டார்களோ என்று நினைக்கிறார்கள்.
அமேசான் நிறுவனம் நாடு முழுவதும் 10 மாநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 2 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் 750 பெற்றோரிடம் ஆய்வை நடத்தி உள்ளது.
செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களில் மூழ்கும் போது குழந்தைகளிடம் சுறுசுறுப்பான உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதாக 90 சதவீதம் பெற்றோர்கள் தெரிவித்துள்ள னர்.
2 மணி நேரம் வரை செல்போன்களை பயன்படுத்தலாம் என்று கூறும் நிலையில் 3 மணி நேரத்துக்கும் அதிகமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
96 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு அழைத்து செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
82 சதவீதம் பெற்றோர்கள் குழந்தைகள் கவனத்தை திசை திருப்பி வேறு எந்தவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள்.
இதில், குழந்தைகள் ஆங்கிலத் திறனை மேம்படுத்த 50 சத வீத பெற்றோரும், நல்லொழுக்கம் மற்றும் சமூக பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டுமென 45 சதவீத பெற்றோரும், நட னம், பாட்டு, இசைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 36 சதவீத பெற்றோரும், கலை மற்றும் கைவினை பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற் றோரும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் என 32 சதவீத பெற்றோரும் விருப்பம் கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலமாக தெரியவந்தது' என்றார்.
- பிள்ளையுடன் பள்ளிக்கு சென்று, பள்ளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
- பள்ளி என்பது விதிகள், நேரம் மற்றும் நடைமுறைகள் உள்ள இடம்.
புதிதாக பள்ளிக்கு செல்வது என்பது குழந்தைக்கு மிகவும் கஷ்டமான விஷயமாகும். நிறைய குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போது தங்கள் பெற்றோரிகளிடம் இருந்து முதல் முறையாக நீண்ட நேரம் தள்ளி இருப்பார்கள். அதுமட்டுமல்லாது பள்ளியில் சுற்றிலும் அந்நியர்கள் உடன் இருப்பார்கள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை கையாள உங்கள் குழந்தையை மனதளவில் பள்ளிக்கு தாயார் படுத்துவது மிக முக்கியமானது.
பள்ளி என்பது விதிகள், நேரம் மற்றும் நடைமுறைகள் உள்ள இடம். இவையெல்லாம் அவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவை. பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்கார வேண்டி வரும். இதையெல்லாம் குழந்தைக்கு பரிச்சயப்பட சில காலம் ஆகும் எனினும், நீங்கள் முன்னதாகவே அவர்களை தயார் படுத்த சில வழிமுறைகளை பார்ப்போம்.
1 உங்கள் மகன் / மகளுக்கு இன்று முதல் புதிய அட்டவணை ஆரம்பிக்கப்படுகிறது என்று கூறுங்கள். அவர்கள் நேரத்துக்கு எழுந்து / உறங்க வேண்டும் என்றும், தினமும் சில மணிநேரம் பள்ளியில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் .
2 பிள்ளையுடன் பள்ளிக்கு சென்று, பள்ளியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் ஆசிரியரை பார்க்கவும்.
3 பள்ளியில் தான் சந்திக்கும் அனைவரும் தன்னை போலவே பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பார்கள் என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அங்கு புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.
4 முடிந்தால், உங்கள் குழந்தையை சக வகுப்பு மாணவன் / மாணவியுடன் சந்திக்க வையுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு பள்ளி துவங்கும் பொழுது ஒரு தோழன் அல்லது தோழி கிடைத்திருப்பர்.
5 உங்கள் குழந்தை இதற்கு முன் பால்வாடி பள்ளியில் படித்திருந்தால், தங்கள் பெற்றோரிடம் இருந்து அதிக நேரம் தள்ளி இருப்பது அவர்களுக்கு கடினமாக இருக்காது.
6 பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் - சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.
7 உங்கள் குழந்தையை சுயமாக நடந்துகொள்ள ஊக்குவியுங்கள், அதனால் அவர்களுக்கு பள்ளியில் உதவி தேவைப்படாது. உதாரணத்திற்கு, உதவியின்றி கழிப்பறையை உபயோகிக்க கற்றுக்கொடுத்தல், பாட்டில் இருந்து தண்ணீர் குடிக்க கற்றுக்கொடுத்தல் மற்றும் தங்கள் உடைமைகளை பாதுகாக்க கற்றுக்கொடுத்தல்.
8 யாரவது அவர்களின் பெயரை அழைக்கும் போது எவ்வாறு புரிந்து கொள்வது என்று கற்றுக்கொடுங்கள். ஆசிரியரிடமும் மற்ற குழந்தைகளிடமும் எவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்றுகொடுங்கள்.
9 கடைசியாக, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிங்கள். அவர்களுக்கு அது மோசமாக நாளாக இருந்தாலும், அடுத்த நாள் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஊக்கப்படுத்துங்கள். பள்ளிக்கு செல்வது மிகவும் அவசியமான ஒன்று என்று எடுத்து சொல்லுங்கள்.
- குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு.
- வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை.
சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் போன்றவை பிஸ்கெட்டில் அதிகம் இருக்கின்றன. பிஸ்கெட் தயாரிப்பின்போது அதிக வெப்பநிலையில் எண்ணெய், டால்டாபோன்றவற்றை சூடுபடுத்தும்போது உருவாகும் இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. சர்க்கரை, கொழுப்பு பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்து பழக்கப்படுத்துவது மிகவும் தவறு. சுவையாக இருக்கிறது என்பதால் 4-5 பிஸ்கெட்டுகளுக்கு மேல் சாப்பிட்டு விடுவார்கள். இதனால் வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு உண்டாகி, சாப்பாடு வேண்டாம் என்பார்கள்.
பிஸ்கெட்டின் இனிப்புச் சுவை பழகி, காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய்விடும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கும் இது முக்கிய காரணம். இதே வழியில் சாக்லெட், ஐஸ்க்ரீம் என்று இனிப்பு வகைகளையே கேட்டு அடம்பிடிப்பதும் நடக்கும். பிஸ்கெட் சாப்பிட்ட பிறகு பெரும்பாலான குழந்தைகள் வாய் கொப்புளிப்பதும் இல்லை. இதனால் பல் சொத்தை உருவாவதையும் பார்க்கிறோம்.
முக்கியமாக, குழந்தைகளின் செரிமான சக்திக்கு ஏற்ற உணவு பிஸ்கெட் அல்ல. நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மையும் பிஸ்கெட்டுக்கு இருப்பதால் மலச்சிக்கலும் எளிதில்உண்டாகும்.
வாரம் ஓரிரு முறை பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், உணவுக்கு மாற்றாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ பிஸ்கெட்டை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உடல்நலம் இல்லாதவர்கள் எந்த உணவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பிஸ்கெட் சாப்பிடுவது உடலுக்குத் தெம்பளிக்கும். அதற்காக, பிஸ்கெட்டை சிறந்த மாற்று உணவாக நினைக்கக் கூடாது. பிஸ்கெட்டுக்கு பதிலாக பழங்கள், சுண்டல், ஓட்ஸ் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிடப் பழக வேண்டும்.
எத்தனை பிஸ்கெட் சாப்பிட்டால் குறிப்பிட்டிருக்கும் சத்துகள் நமக்கு கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் சாப்பிடுவதற்கு சமம் என்றால், அதற்கு ஒரு டம்ளர் பாலே சாப்பிட்டுவிடலாம்..
- குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
- பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள். அதனை தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
குழந்தைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்:
குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
அறிவுரை வழங்குவதை தவிருங்கள்:
இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.
காது கொடுத்து கேளுங்கள்:
பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள். பெற்றோரின் பார்வையில் அவர்கள் பேசும் விஷயங்கள் சாதாரணமாக தெரியலாம். அவர்களுக்குள் எழும் சந்தேகங்களுக்கு தீர்வை முன் வைத்தால் மட்டுமே தொடர்ந்து பெற்றோரிடம் ஆர்வமாக பேசுவதற்கு முயற்சிப்பார்கள். அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவில்லை என்றால் நாளடைவில் பெற்றோரிடம் பேசும் நேரம் குறைந்து போய்விடும்.
குழந்தைகள் பேசும்போது கவனச்சிதறலுக்கு இடம் கொடுக்காதீர்கள். கண் தொடர்பு அவசியமானது. அவர்களின் கண்களை பார்த்தவாறே அவர் களின் பேச்சை ரசித்து கேளுங்கள். குழந்தைகள் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், பேச்சுக்கு இடையே குறிப்பிடுவார்கள். அதனை பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நேர்மறையான சம்பவங்களை சொல்லுங்கள்:
குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை கூறலாம். தங்கள் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான சம்பவங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளலாம். எதிர்மறையாக உணரக்கூடிய விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தாங்கள் செய்த தவறுகள், எதிர்பாராமல் நடந்த விபத்துகள், மனதை காயப்படுத்தும் கசப்பான சம்பவங்கள் போன்றவற்றை சொல்லக்கூடாது. நீங்கள் பகிரும் சம்பவங்கள் அல்லது கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.
தினமும் நேரம் ஒதுக்குங்கள்:
குழந்தைகளிடம் தினமும் பேசுவது பெரிய விஷயமல்ல. தினமும் குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளுக்காகவே ஒதுக்குவதுதான் சிறப்பானது. அந்த நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே அமைய வேண்டும். அன்றைய நாளின் செயல்பாடுகள் முழுவதையும் பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். இது குழந்தைகளுடன் வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். பாதுகாப்பான சூழலையும் உணர்வார்கள். பெற்றோர்கள் தங்களுக்கு பக்கபலமாக இருப்பதாக அகம் மகிழ்வார்கள்.
கேட்ஜெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்:
பெரியவர்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலானவர்கள் மொபைல் போன்கள், தொலைக்காட்சி அல்லது வீடியோ கேம் விளையாட்டுகளில் பொழுதை கழிக்கிறார்கள். அவை மன ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நெருக்கமான உறவுகளுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பையும் குறைத்துவிடும். எனவே கேட்ஜெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் கேட்ஜெட் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அவர்களின் கவனத்தை பதிய வைக்க வேண்டும். பெற்றோரும் அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும். இது குழந்தைகளுடன் ஆழமான பிணைப்பை வளர்க்க உதவும்.
- ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
- தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.
தந்தை...! இந்த ஒற்றை வார்த்தைக்கு உரியவரிடம் இருந்துதான் ஒவ்வொருவருக்கும் அன்பு, அறிவு, ஒழுக்கம், நல்வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் ஆகியவை கிடைக்க பெறுகின்றன. ஆம்... தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழிகேற்ப அவரது அறிவுரை, கண்டிப்பும்தான் ஒவ்வொருவருக்கும் நல்ஒழுக்கம், சிறப்பான வாழ்க்கையை பெற்றுத்தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தாய் கருவில் பத்து மாதம் சுமந்து பிள்ளையை பெற்றெடுத்தாலும் அந்த தாயையும், பிள்ளையையும் சேர்த்து தன் வாழ்நாள் முழுவதும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் சுமந்து செல்லக்கூடியவர்கள்தான் தந்தையர்கள்.
பிள்ளைகளின் பார்வைக்கு வேண்டுமானால் தங்களது தந்தை ராஜாவாக இல்லாமல் போகலாம். ஆனால் தந்தையானவர்களுக்கு தங்களது பிள்ளைகள் என்பவர்கள் இளவரசியாகவும், இளவரசனாகதான் தெரிவார்கள். அதனால்தான் ஒவ்வொரு தந்தையும் தான் கஷ்டப்பட்டதுபோல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று எண்ணுகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களது வலி, சோகத்தையும் மறந்து பிள்ளைகளின் சந்தோஷமே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படி தன் பிள்ளைக்காக எது நல்லது, கெட்டது என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்யும் தந்தையர் கடவுளுக்கும் நிகரானவர்கள் என்றே வர்ணிக்கப்படுகிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய்-தந்தையருக்கு பிறகுதான் கடவுளும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். அதனால் தாய்-தந்தையரை மதித்து நடக்காமல், முதுமையில் அவர்களை தவிக்கவிட்டுவிட்டு நீங்கள் எவ்வளவு நல்லகாரியங்கள் செய்தாலும் அது பிரயோஜனம் அற்றவைதான். தாய்-தந்தையர் இருக்கும்போது அவர்களை கவனிக்காமல் பின்னர் வருத்தப்படுவதில் எந்த பயனும் இல்லை. எனவே, ஒவ்வொருவரும் தங்களது தாய்-தந்தையரை மதித்து நடக்க வேண்டும்.
அந்த வகையில்அன்னையர்களுக்கு போல் தந்தையருக்கும் ஒரு தினம் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன்னை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனோரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்ஸ் என்பவர் 1910-ம் ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளை தந்தையர் தினமாக அறிமுகப்படுத்தி கொண்டாடினார். இதைதொடர்ந்து அமெரிக்க அரசு ஜூன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக அறிவித்து கொண்டாடியது.
இதுவே பின்னாளில் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு பரவி தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாட்டம் நாள் வேறுபட்டு காணப்பட்டாலும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஜூன் மாத 3-வது ஞாயிற்றுக்கிழமைதான் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, தந்தையர் தினமான இன்று ஒவ்வொருவரும் தங்களது தந்தையரை மதித்து கவுரவித்து கொண்டாடுங்கள்.






